வாழ்த்துரை

மக்களும் கலையும் எஸ். சங்கரநாராயணன் அ றிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த சிறப்பு அரங்கில் வாழ்த்துரைக்க என்னை அழைத்தது எனக்குப் பெருமை தரும் விஷயம் ஆகும். வாழ்க்கையில் இருந்து கலை பிறக்கிறது. கலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. என்றால் அது மற்ற பௌதிகப் பிரதிபலிப்புகளைப் போல அல்ல. கலையானது காலத்தை, மனிதனின் உள்ளப் பாங்குகளை, சந்தர்ப்ப சூழல்களை யெல்லாம் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. முக்காலத்தையும் கலை உணர்த்தி நிற்கிறது. நேரடியாகவோ குறிப்பாகவோ. நிகழ்காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ அது பேசலாம். ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு கலை மனிதனை, எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த வல்லதாய் இருக்கிறது. ஒரு ரயில்வே ஊழியனைப் போல, தண்டவாளம் அமைக்கும் பணியை அது, தொடர்ந்து செய்ய அலுத்துக் கொள்வதே இல்லை. கலை என்பது முரண். முரண் என்பது கலகம். கலகம் என்றால் பெரும் பொருள் கொள்ள வேண்டும் என்பது இல்லை. மாற்றுக் கருத்தே கலகத்தின் முதற்படி, அடிப்படை அல்லவா? ஒரு விஷயம் பற்றி ஒரு கருத்து உள்ளத்தில் கிளர்த்தப்படும் போது, அதை மற்றவர்கள் மனங் கொள்ளும் வித...