
தீ யி னா ற் சுட்ட மண் எஸ். சங்கரநாராயணன் உலகநாதன் ரொம்ப நிதானமான மனுசன். ஊர் எல்லையில் இன்றைக்கும் அவர் வடித்த பொம்மை, ஐயனார் உருவச்சிலை இருக்கிறது. அடேடே அந்தக் கண்களின் உக்கிரம், கையில் வீச்சரிவாள், ஒரே வீசு. எதிராளி தலை துண்டாத் தெறிச்சி விழும்… என்று பயமுறுத்துகிற அளவில் இருக்கும். இத்தனை நிதானமான மனுசன் வாலிபப் பிராயத்தில் வேகமும் பரபரப்புமாய் வளைய வந்திருப்பார் என்று தோன்றியது. எல்லாம் அலையடங்கி இப்போது நிதானப் பட்டிருந்தது. அவர் ஞாபகமாய் இன்னும் ஊரில் எத்தனையோ சுடுமண் சிற்பங்கள். குதிரைகள். மான்கள். ஆடுகள். மாடுகள்… அவற்றின் வண்ணக் குழைவுகளே ஆச்சர்யப் படுத்தும். மேல்சட்டை போடாமல் ஆனால் முண்டாசு கட்டாமல் பார்க்க முடியாத கிராமத்து மனுசனுக்குள் ஒரு கலைஞன் இருந்து அவரை உசுப்பி ஆட்டுவித்துக் கொண்டிருந்தான் போலும். சிறு போகம் விளைய சாப்பாட்டுக் கவலை எதுவுங் கிடையாது. கோடையோவெனில் வாசல் வேப்ப மரத்தடிக் காற்றில் படுத்துக் கொண்டபடியே என்னமாச்சும் பாட்டு எடுப்பார். அந்தக் கால பாகவதர் பாட்டு. வெறும் கேள்வி ஞானம்தான். சுருளி எப்பவாவது வந்தால் மரக்காலைத் தட்ட தாளமும...