
சிறுகதை - நன்றி சங்கு இலக்கிய இதழ் அவ்ட் ஆஃப் சிலபஸ் எஸ். சங்கரநாராயணன் • ஊ ரில் இருந்து தகவல் வந்தது. நாச்சியார் அம்மாள் மரணம். எங்கள் அம்மாவின் அம்மா அவர். இத்தனை வருடமாக அவர்களோடு எங்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை. எந்தத் தொடர்பும் கிடையாது. அப்பாவை அம்மா கல்யாணம் செய்துகொண்டது அவர்கள் யாருக்கும் சம்மதம் இல்லை. அம்மா வேறு சாதி. அப்பா வேறு சாதி. வேண்டாம் என்று அம்மாவீட்டில் மகா பிடிவாதம். அம்மா அசரவில்லை. எதிர்ப்புகளை அவள் அத்தனை உறுதியுடன் சமாளித்தாள். “நான் தற்கொலை செய்துக்குவேன்னு எல்லாம் பயப்படாதீங்க. மாட்டேன். ஆனால் வேற யாரையும் கல்யாணங் கட்ட மாட்டேன்” என்றாள் அம்மா. அத்தனை உக்கிர காளியாய் வீட்டில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் விமலா. அதை பிறகு மொட்டைமாடியில் எனக்கு சோறு ஊட்டிவிட்டபடியே சொல்லும்போது அத்தனை சிரிப்பு அவளுக்கு. தனக்குள் அந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டு வெளியே அதன் பிரகாசத்தைக் கசிய விட்டாள் அம்மா. அம்மா ஒரு வைர மூக்குத்தி அணிந்திருப்பாள். அவள் சிரிக்கும்போது அவள் முகமெல்லாம் பொலியும். இன்னும் சிரிக்க மாட்டாளா என்றிருக்கும் எனக்கு. இப்போது நான் வளர்ந்த ப...