
manalveedu - may 2017 வெ யி ல் எஸ். சங்கரநாராயணன் எ ழுத்தாளர் கலிங்கமித்திரன் இறந்து போனார். வயதானவர்தான். இதற்கு மேல் நாம் உலகத்தில் செய்ய எதுவும் இல்லை, என்கிறாப் போலத்தான் அவருக்கும் இருந்தது. இதுவரைக்கும் தான் என்ன செய்தோம், அதுவே தெரியவில்லை. மூப்பெய்தி அலுத்திருந்தார். எதுவுமே அழுத்தமாக அவர் மனதில் பதியவில்லை. மகிழ்ச்சி, துக்கம்… என எதிலுமே அவர் ஒட்டாத நிலைக்கு வந்திருந்தார். உடலும் மனசும் அதன் ‘எலாஸ்டிக்’ தன்மையை, பொங்குதல் மீண்டு சுருங்குதல்களை இழந்துவிட்டிருந்தன. நாட்கள் அவற்றின் வீர்யத்தை இழந்திருந்தன. கதைகள் எழுத முடியவில்லை. எழுத எதுவுமே இல்லாதிருந்தது. வயது அவரைக் காலிப் பாத்திரமாக ஆக்கி இருந்தது. சாவு வந்துவிட்டால் தேவலாமாய் இருந்தது. எப்போது வரும் தெரியவில்லை. எவ்வளவு தான் காத்திருப்பது. வாழ்வுக்குக் காத்திருப்பதில் ஓர் அர்த்தம் இருந்தது. எதிர்பார்ப்பு இருந்தது. சாவு? அதற்காகவா காத்திருப்பது? வேறு வழியும் இல்லை. இப்போது எழுத்தாளர்கள் எல்லாரும் கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். திருத்தங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்ய கணினி மகா வசதி. அவர் கையால் தான் எழுத...