
மாயபிம்பம் அமர்நாத் (நாவலின் பகுதி) • 'ப்ரணவ்! இந்த வாரத்துக்கு என்ன?” 'என் ஜெர்மன் பாடத்தில் வந்த ஒரு கவிதை. ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கற்பனை. படித்தவுடனே பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்தேன்.” 'எங்கே, காட்டு!” அவன் நீட்டிய காகிதத்தில். வாழ்க்கைக் கட்டங்கள் அரும்புகட்டி மலர்ந்து வாடும் பூக்கள் முதுமையைத் தேடிப்போகும் இளமை ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் ஜனனம். ஒரு பருவத்தின் அறிவும் பெருமையும் தொடர;ந்து நம்முடன் வருவது நியாயம் இல்லை. நிகழ்காலத்துடன் பிரிவு எதிர;காலத்தின் வரவேற்பு. நாளை புதிய வார்ப்புகள், புதிய இணைப்புகள். ஒவ்வொரு ஆரம்பமும் ஒரு ஜாலம். அதுவே வாழ்க்கையின் சுவாசம். பழகிவிட்ட இல்லம் நமக்குச் சிறை. தினசரி வழக்கங்கள் கைகால் விலங்குகள். நிரந்தரம் நம்மைக் கட்டிக்காக்கும் காவல். வீட்டுக்கு வெளியே கைநீட்டி அழைக்கும் முடிவற்ற தொடுவானம், அதோ! ஒரு கட்டம் அதில் அடுத்த கட்டத்தின் நுழைவாயில் வழிகாட்ட பிரபஞ்ச சக்தி. பரிச்சயங்களுக்கு விடைசொல்லி பயணத்தைத் தொடர ஏன் தயக்கம்? இறப்பும் ஒரு...