
நன்றி ‘சங்கு’ காலாண்டிதழ்/சிறுகதை புரவிக்காலம் எஸ். சங்கரநாராயணன் கௌ டில்யன் (சொந்தப் பெயர் சங்கரராமன்.) நாளைக்குள் அடுத்த அத்தியாயம் தர வேண்டும். சரித்திரக் கதை என்று பெயர் சொன்னாலும், பாண்டியன் என்றோ பல்லவன் என்றோ அவர் சொல்வது ஒரு கால அம்சம் சார்ந்ததே தவிர, அரசர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் காரியம் ஆற்றினார்கள். குதிரையில் அவர்கள் ஏறிவிட்டால் அதை மெதுவே ஓட்டிச் செல்வார் எவரும் இல்லை. அவர்களது படையில் பெரும் மல்லர், வில் வித்தகர், தேர் ஓட்டிகள் இருந்தார்கள். என்றாலும் வீர விளையாட்டுப் போட்டி என்று வரும்போது அரசர் அவர்களையே ஜெயித்தார். சனங்கள் அரசரை மெச்சி பூரித்து ஆர்ப்பரித்தார்கள். போர் என்றபோது இந்தத் தளபதிகள் முன்னே சென்றார்கள், என்பது விசித்திர முரண். கௌடில்யன் சரித்திரக் கதை மாத்திரமே எழுதி வந்தார். அவரது புதிய தொடர்கதை ஆரம்பிக்கிறது, என அறிவிப்பு வந்தாலே அந்த இதழின் விற்பனை அதிகரிக்கிறது. காரணம் அவர் எழுதும் சரித்திரக் கதைகளில் சரித்திரத்தை விட சிருங்கார ரசமே மேலோங்கி நிற்கிறது. வாசகர்கள் அவற்றை வாசித்து ஹா என வியந்து பிரமித்தார்கள். அவர் எழுதும் கதைகளின் அரசிகள்...