
Short story நன்றி குமுதம் தீராநதி செப்டம்பர் 2017 ILLUSTRATION jeeva மூன்று கோ ர்ட் ஊருக்குத் தள்ளி இருந்தது. அத்தனை பெரிய அத்துவான வெளியில் தனியே ஒரு கட்டடம். ஏரிக்குள் லாரி லாரியாய் மண் அடித்து மேடாக்கிக் கட்டியிருந்தார்கள். இரவு ஏழரை எட்டுக்கு மேல் நடமாட்டம் வற்றி விடும். அத்தனை பெரிய மைதானமே ஜிலோன்னு கிடக்கும். அதென்னவோ வெள்ளைக்காரன் யோசனை, அரசாங்கக் கட்டடங்கள் என்றால் செவேல்னு இருக்கிற சம்பிரதாயம். தூரத்தில் இருந்து பார்க்க அந்தக்கால கேவா கலர் திரைப்படம் போல. அலிபாபா நாற்பது திருடர்கள்… இது திருடர்களை விசாரிக்கிற இடம். கோர்ட். நீள வராந்தாக்கள். பத்திருபது அறைகள். வழக்குகள் நடைபெறும் ஆறு ஏழு அறைகள். சிவில் கோர்ட். கிரிமினல் கோர்ட். ஃபேமிலி கோர்ட், என வர்க்கங்கள். ஒவ்வொரு வராந்தாவின் மூலையிலும் எர்கூலருடன் ஜில்லென்ற தண்ணீர். தம்ளருக்கு சங்கிலி போட்டிருக்கும். நோட்டிஸ் போர்டு. கண்ணாடிக்குள் அந்த வாரம் எந்தெந்த வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன என பட்டியல். அதன்படி எல்லாருக்கும் சம்மன் அனுப்பி யிருப்பார்கள். அறைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்தால் நீதிபதி அமரும் மேடை. ம...