
Published in ‘Kaaninilam’ - quarterly புல் எஸ். சங்கரநாராயணன் ஊ ராட்சி ஒன்றியக் கட்டடம் எப்பவுமே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக வாசல் பரபரத்துக் கிடக்கும். கையில் குழாய் போல பேப்பரைச் சுருட்டியபடி யாராவது காத்திருப்பார்கள். பத்து தலை ராவணன் போன்ற அகல எடுப்பான கட்டடம். உச்சியில் பெரிதாய் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதியிருக்கும். காம்பவுண்டுச் சுவர் கோட்டு மீசை வைத்தா மாதிரி முன் எடுப்புக்கு மாத்திரம். சினிமாவில் இப்படிதான் செட்டு போடுவார்கள். முன்பகுதிக்கு மாத்திரம்ஞ் அதுவே சிதிலமடைந்து செங்கல் தெரிந்தது. சில இடங்களில் பிளவு விட்டு அதன் இடுக்கு வழியே செடி வெளியே எட்டிப் பார்த்தது. மூக்கு மயிர்கள் போல. தாண்டி சிறிது குழிவான பகுதியில் ஆலமரம் ஒன்று. விழுதுகள் பரவிய பெரிய மரம். ஊருக்கே அடையாளம் அது. அதுகொள்ளாத பறவைகள். பறவைகள் மரங்களை வளர்க்கின்றன. மரங்கள் பறவைகளை வளர்க்கின்றன. ஊரில் நிறைய ஆல மரங்கள். பெயரே ஆலங்கொட்டில். வாயிலில் பெயருக்கு ஒரு கிராதி இரட்டைக் கதவு. எப்பவோ திறந்தது மூடப்படவே இல்லை. கதவின் இரும்பைச் சுற்றி மண் மேடுதட்டி இறுகிக்கிடந்தது. இ...