
சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ் அர்த்தநாரிஸ்வரி எஸ். சங்கரநாராயணன் இ டது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது. எழுந்த ஜோரில் குதிரையின் வேகம் பெறுகிறார்கள் பெண்கள். இப்பவாவது பரவாயில்லை, ஷில்பா வளர்ந்து விட்டது. தன் காரியம் தானே பார்த்துக் கொள்ள துப்பு வந்தாச்சி. இல்லாவிட்டால் காலையில் அவளை எழுப்பி பல் தேய்த்து விடுவது முதல் அம்மா கூடநிற்க வேண்டும். இப்போது ஷில்பா ஏழாவது படிக்கிறாள். பதின்வயதுப் பருவம். மெல்ல மொட்டு ஒன்று விரிவதை உணர்கிற பருவம் அது. காலையில் ஷில்பாவ...