
நன்றி திண்ணை இணைய இதழ் 16 08 2020 மூட்டம் எஸ். சங்கரநாராயணன் இ ரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல மூங்கில்தொட்டி வியாபாரிக்கும், சின்ன மூங்கில் குச்சிகள் கேட்டிருப்பார்கள். விலைக்கு வாங்கிப்போய் பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்தால் பாதி விலைக்கு கடையிலேயே எடுத்துக் கொள்வார்கள். நாலைந்து நாளாகவே ஊரில் ஒரு இறுக்கம் வந்திருந்தது. யாரோ இந்துக் கடவுளை இழிவாக எதோ பேசி விட்டார்களாம். அது அடிக்கடி நடப்பது தான். ஆனால் இந்த முறை அதற்கு எதிர்ப்பு பெரிசாகி விட்டது போல. போராட்டம் என அவர்கள் முதல் அடி எடுத்து வைக்க, இது அதற்கு எதிரடி. பேச்சுரிமை வேண்டும், கருத்து சுதந்திரம் வேண்டும்... என்று நாளை போராட்டம். நல்ல பேச்சுரிமை போங்க, என நினைத்துக் கொண்டார் மணவாளன். பிடிக்காவிட்டாலும் அவர்களது ஆர்ப்பாட்ம் அவருக்கு வேலை தந்தது. மோசமான மாணவன் ஆசிரியரிடமே டியூஷன் படிப்பது இல்லையா, அதை...