
2006ம் ஆண்டின் சிறந்த நாவல் நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 15 மனிதர்கள் கடலில் வலைவீசி மீன் பிடிக்கப் போனால், கடல் அலைவீசி மனிதனைப் பிடிக்க ஊருக்குள் வந்திருந்தது. இது அலை வலை. நீர் வலை. மதங்கொண்ட யானைபோல, அலை முட்டிஇழுத்த ஜோரில், பிய்ந்தும் நைந்தும் பயன்படாதுபோன பொருட்களை உதறி, தூ என அலட்சியத் துப்பல் துப்பி விட்டு, கடல் மீண்டும் திரும்பிப் போனாப் போல. கடலின் ஆக்ரோஷத்துக்கு எதுதான் தப்பித்தது... மரங்களே பெயர்த்தெடுக்கப் பட்டு மிதக்கின்றன. எத்தனை மனித உடல்கள், கட்டில்கள், பீரோக்கள், வீட்டு சாமான்கள், பெட்டிகள்... என்று திறந்தும் திறக்காமலும் கரைகளில் கிடக்கின்றன. கடலில் அடித்துப் போயிருக்கின்றன. வரதட்சிணைக் கொடுமைக்கார மாப்பிள்ளை போல. ஊர் மறுபடி அவலஊளையுடன் விழித்துத் தன்னிலை திரும்புகிறது. எங்கெங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தம். மரண ஓலம். வலியின் அழுகை. இழப்பின் புலம்பல். துயரத்தின் பைத்தியக்கார கையறு நிலை. கடல்கரை ஓரம் குழந்தைகளை, தத்தம் பிரிய உறவினர்களை, அவர்கள் தேடித் திரிகிறார்கள். கிளிஞ்சல்கள் தேடி அலையும் விளையாட்டு கண்ட கரைகள், இப்போ...