
பொன்கூரை வேய்ந்த வானம் எஸ்.சங்கரநாராயணன் *** அ ப்பா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டார். சந்திரசேகரன். மணி ஏழரை தாண்டி விட்டது. வெளியே போன பத்மராஜன் இன்னும் வீடு திரும்பவில்லை. அப்பா வந்தவுடன் அவனைத்தான் கேட்பார். பெற்றவளுக்குக் கவலையாய் இருந்தது. பிள்ளைக்கு ரெண்டுங் கெட்டான் வயது. பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். காலம் அப்படி. அத்தோடு, இந்தக்காலப் பிள்ளைகளுக்கு நம்மைவிட வெளி உலகம் தெரிகிறது… என நினைத்தாள் அவள். மைதிலி. அம்மா. பையனைப் பற்றி அத்தனை கோபிக்கிறார் இவர். “எல்லாம் நீ கொடுக்கிற இடம்…” என்பதாகக் கத்துகிறார். இவருக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது தெரியவில்லை. அது தன் வார்த்தை மதிக்கப் படவில்லை என்கிற ஆத்திரம். எங்கே போகிறான், என்று அவனும் சொல்லிவிட்டுப் போகலாம். என்றாலும் தோளுக்கு வளர்ந்த பிள்ளை வெளியே இறங்கும்போது விசாரணை தொனியில், எங்க போறே? எப்ப வருவே… என்றெல்லாம் கேட்பது பாந்தமாய் இல்லை. இவனும் சற்று அப்பாசொல் கேட்கலாம். அல்லது கேட்பதாக சிறிது பாசாங்காவது செய்யலாம். அவனும் கண் சிவக்க பதில் பேசுகிறவனாய் இருந்தான். அவளுக்கு அவனை ஆதரித்து...