
அமுதசுரபி தீபாவளி மலர் 2021 அலையுறக்கம் எஸ்.சங்கரநாராயணன் அ வர் பெயர் ரத்தின சபாபதி. அவர் பெயர் அவருக்குத் தெரியாது. அதாவது தன் பெயரையே அவர் மறந்து போயிருந்தார். பெயர் என்று இல்லை. அவருக்கு என்னதான் நினைவில் இருந்தது? யாருக்குமே அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. மனைவி சாமுண்டீஸ்வரி. அவள் முகம் அவருக்குத் தெரிந்திருக்கலாம். பெரிதாய் அதைத் தாண்டி அவளுக்கு அவர் மனதில் அடையாளங்கள் இல்லை. அறிவு தாண்டி, பிடரிப் பக்கம் இருக்கும் சிறுமூளை, முகுளத்தின் இயக்கம் மாத்திரம் அவரிடம் செயல் பட்டதா ஒருவேளை? மனதையே தொலைத்து விட்டாரோ அவர்? பள்ளி வயதில் ஒரு சிறுகதை வாசித்திருக்கலாம். ஒரு ஈ, அதற்குத் தன் பெயரே மறந்து விடும். அது ஒரு கன்றுக் குட்டியிடம் போய், தன் பெயர் என்ன என்று கேட்கும்… கொழு கொழு கன்றே, கன்றின் தாயே, தாயை வளர்த்த ஆயா.. இப்படி ஒவ்வொருத்தரிடமாக அந்த ஈ, தன் பெயர் என்ன, என்று கேட்டுத் திரியும். கடைசியில் ஒரு கழுதைதான் அதைப் பார்த்து ஈஈஈ… என்று இளிக்கும். உடனே அதற்கு தன் பெயர் ஞாபகத்துக்கு வந்துவிடும், என்று கதை. அந்தக் கதையை ரத்தின சபாபதியும் பள்ளி வயதில் அறிந்திருப்பார்...