
Short story / iruvatchi pongal malar 2023 அவரவர் கடவுச்சொல் எஸ்.சங்கரநாராயணன் பி ரியம்வதா அலுவலகம் கிளம்பினாள். இடுப்புவரை காட்டும் நிலைக் கண்ணாடியில் முன்னே நின்று ஒருமுறை நேர்ப் பார்வை, பிறகு பக்கவாட்டு நோட்டம் பார்த்துக் கொண்டாள். புடவை ‘ஃப்ளீட்ஸ்’ அலைமடிப்புகளை ஒழுங்கு செய்து கொண்டாள். உதட்டுச் சாயம் தீற்றியது கலைந்து விடாமல் கவனம் பண்ணிக் கொண்டாள். புடவைதான் அவளுக்குப் பிடிக்கும். கஞ்சிபோட்ட மொடமொடப்பான பருத்திப் புடவைகள் வயதுக்கு ஏற்ற கௌரவத்தை, கம்பீரத்தை… மரியாதையையும் தருகின்றன. அவளுக்கு என்னவோ சுடிதாரை விட புடவை ஒரு பெண்ணுக்குப் பாந்தமாய் அமைவதாக ஒரு ‘இது.’ ஒரு வயது தாண்டியபின் சுடிதாரும் நைட்டியும் உவப்பனதாய்ச் சிலருக்குத் தோன்றுவது இல்லை. பெர்ஃபியூம் எடுத்து கையைத் தூக்கி உட்புறம் அடித்துக் கொண்டாள். அந்த அறையே வாசனை வியூகம் வகுத்தாற் போல இருந்தது. முகத்தில் பவுடர் அளவு அதிகமா… என ஒரு சரிபார்ப்பு. மேல்நெற்றியில் இந்திரா காந்தி சாயலில் மேல்முடி மாத்திரம் இரண்டு முடி நரை விட்டுவி...