
கப்பல் எஸ்.சங்கரநாராயணன் இ ரவு பத்து மணியளவில் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்புவான் சேது. சற்றே குளிரான தெருக்கள். வண்டி குப்பையைச் சிந்திக்கொண்டே போனாற்போல வெளிச்சம் இடைவெளி விட்டுலிட்டு சிதறிக் கிடக்கும். பெரும்பாலும் அரவம் இராது. அந்த அமைதிக்கு தைரியப்பட்டு பாம்போ, பெருச்சாளியோ தெருவில் குடுகுடுவென்று ’ஓடும். தனிமை மறக்க எதும் பாட்டு பாடிக்கொண்டே போவான். பாட்டு என்றால் பாட்டு மாத்திரம் அல்ல. சில சமயம் விசில் கிளம்பும் வாயில் இருந்து. பாட்டைவிட விசில் என்றால் உற்சாகம் ஒரு அவுன்ஸ் அதிகம்தான்… அந்தக்காலப் படங்களில் பொம்பளையாள் பாட கூட ஆண் விசிலடிப்பதாக வெல்லாம் பாடல்கள் வந்தன. ஹா ஹா… அன்னிக்கு நம்ம அழகுசுந்தரம் மாணிக்கவாசகத்தை வழியில் பார்த்திருக்கிறான். இவன், அழகுசுந்தரம், மாணிக்கவாசகம்… எல்லாரும் பள்ளிக்கூடம் ஒன்றாய்ப் படித்தவர்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவருன்னு வசனத்துக்குத் தப்பாமல் நண்பர்கள் பாதிப்பேர் சென்னை ஒதுங்கி விட்டார்கள். கெட்டும் பட்டணம் சேர், என்பார்கள். மாணிக்கவாசகத்திடம் அழகுசுந்தரம் உற்சாகமாக “டேய் நம்ம சேது தெரியுமாடா? சித்திரை வீதி? அவனும் இங்கதான...