short story விடுபட்ட கண்ணிகள்

விடுபட்ட கண்ணிகள் எஸ். சங்கரநாராயணன் டா க்டர் வர ஏழு மணி ஆகிவிடும். என்றாலும் ஆறு மணியில் இருந்தே நோயாளிகள் குழும ஆரம்பித்து விடுவார்கள். ஊரில் பிரபல டாக்டர். அதிலும் மன நல மருத்துவர். கொடுத்துச் சிவந்த கர்ணன் கை, என்பார்கள். இது வாங்கிச் சிவந்த கை. தினசரி அத்தனை கூட்டம். வெளியே வண்டி நிறுத்த இடம் இல்லை. டாக்டர் வீடு என்று யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. வீட்டு வாசலைப் பார்த்தாலே தெரியும். அரசியல்வாதி வீட்டு வாசல் போலவே. இங்கேயும் ஏமாளிகளின் கூட்டம். டூவீலர்கள், கார்கள் என அணிவகுப்பு. நடந்து வருகிற ஆட்கள் குறைவு. அந்தவகை ஆட்களுக்கு இப்படி ராஜவைத்தியம் கட்டுப்படி ஆகிறதில்லை. பணம் இல்லாதபடியால் இப்படி நோயாளிகளாக ஆனவர்கள் உண்டு. அது தனிக்கதை. பக்கத்து வீட்டுக்காரி பட்டுப்புடவையை, வியர்வை காயட்டும், என கொடியில் உலர்த்தி யிருந்தாள். யாரும் கவனிக்கவில்லை, என அதைப் பத்த வைத்த கேசுகள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வைத்தியத்துக்கு வருவர். பலர் வரார். ஆனால் மத்தவர்களைப் பைத்தியமாக்கி டாக்டரிடம் அவர் அனுப்புவார். அவர்களுக்கு டாக்டர் கமிஷன் கொடுப்பாரா தெரியாது. ...