short story விடுபட்ட கண்ணிகள்

விடுபட்ட 
கண்ணிகள்
எஸ். சங்கரநாராயணன்
  
டாக்டர் வர ஏழு மணி ஆகிவிடும். என்றாலும் ஆறு மணியில் இருந்தே நோயாளிகள் குழும ஆரம்பித்து விடுவார்கள். ஊரில் பிரபல டாக்டர். அதிலும் மன நல மருத்துவர். கொடுத்துச் சிவந்த கர்ணன் கை, என்பார்கள். இது வாங்கிச் சிவந்த கை. தினசரி அத்தனை கூட்டம். வெளியே வண்டி நிறுத்த இடம் இல்லை. டாக்டர் வீடு என்று யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. வீட்டு வாசலைப் பார்த்தாலே தெரியும். அரசியல்வாதி வீட்டு வாசல் போலவே. இங்கேயும் ஏமாளிகளின் கூட்டம். டூவீலர்கள், கார்கள் என அணிவகுப்பு. நடந்து வருகிற ஆட்கள் குறைவு. அந்தவகை ஆட்களுக்கு இப்படி ராஜவைத்தியம் கட்டுப்படி ஆகிறதில்லை.
பணம் இல்லாதபடியால் இப்படி நோயாளிகளாக ஆனவர்கள் உண்டு. அது தனிக்கதை. பக்கத்து வீட்டுக்காரி பட்டுப்புடவையை, வியர்வை காயட்டும், என கொடியில் உலர்த்தி யிருந்தாள். யாரும் கவனிக்கவில்லை, என அதைப் பத்த வைத்த கேசுகள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வைத்தியத்துக்கு வருவர். பலர் வரார். ஆனால் மத்தவர்களைப் பைத்தியமாக்கி டாக்டரிடம் அவர் அனுப்புவார். அவர்களுக்கு டாக்டர் கமிஷன் கொடுப்பாரா தெரியாது.
நகரத்தில் பெரிய டாக்டர். பெரிய கிளினிக். குண்டாக ஆக ஆக உள்ளே நுழைய வாசல் தடுக்கிறது என வீட்டை இடித்துக் கட்டுவார்கள், என கிண்டல் செய்வார்கள். ஒரே வருடத்தில் கட்டடம் பெருகி, மேலே மேலே உயர்ந்தது. கிளினிக் படுக்கை வசதியுடன் நோயாளிகளை வரவேற்றது. மன அமைதி தருகிற அளவில் சாம்பல் வண்ணம் பூசிய சுவர்கள். வெறுமே மருத்துவமனை என்பதைவிட, கூடச் சேர்த்து ஆராய்ச்சி மையம், என்று பேரை மாற்றிக் கொண்டால், பேர் மட்டும் மாறினால் போதும், அரசாங்கத்தில் அதிக சலுகை கிடைக்கிறது. பேரையும் மாத்தியாகி விட்டது. (நியூமராலஜி, நேமாலஜி எல்லாம் இதுவரை வந்துட்டதே!) என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் இவர்கள்? வர்றாட்களிடம் எவ்வளவு துட்டு இருக்கிறது, என்கிற ஆராய்ச்சி போல.
கனக தாரை. பண மழை. கன்சல்டிங் ஃபீசே அறுநூறு. அவரைப் பார்ப்பதுவும் லேசுப்பட்ட காரியம் அல்ல. சில நாட்கள் வெளியூர், வெளிநாடு என்று கிளம்பி விடுவார். முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பெருந் தனக்காரர்களை அவர் வெளியூர் போய்ச் சந்திக்கிறார். உள்ளூரில் பார்க்க விரும்பினால், பார்க்க வருகிறதாகப் பேர் முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். இது தவிர அவர் எழுதும் மருந்துகள் தனிக் கணக்கு. ஆயிரக் கணக்கு. அதற்கு மருந்துக்கம்பெனியிடம் இவர் கமிஷன் பெறுகிறார். மருந்துக்கம்பெனி ஆட்களை அவர் சனி மாலைகளில் மாத்திரம் சந்திக்கிறார். சனிக்கிழமையன்று வெவ்வேறு மருந்துக்கம்பெனி சிபாரிசுதாரர்கள் அங்கே டை கட்டிக்கொண்டு வியர்வை வழிய டாக்டரைப் பார்க்க என வந்து ஒருமணி நேரம், ரெண்டுமணி நேரம் காத்திருப்பார்கள்.
டை கட்டினாலே கேவலம் என்றாகி விட்டது மருத்துவ உலகத்தில். அவர்கள் கையில் டாக்டருக்கு சிறப்புப் பரிசு என எதாவது வைத்திருப்பார்கள். ஒரே சமயத்தில் இரண்டு ரெப் டாக்டரைப் பார்க்க வந்து உட்கார்ந்தால் என்ன ஆகிறது? இவன் அவன்பரிசையும் அவன் இவன்பரிசையும் ஓரக்கண்ணால் பயத்துடன் பார்க்கிறான். இவனைவிட அடுத்த அவனின் பொதிவு பெரிசாய் இருக்கிற திகில் அவர்களுக்கு எப்போதும் உண்டு.
எழுதும் மருந்துகள் பரிசின் அடிப்படையில், கமிஷன் அடிப்படையில், வேறு சில பிரத்யேக கவனிப்புகள் அடிப்படையில், டாக்டரால் பரிந்துரை பெறுகின்றன. பரிசு தந்தால் சி-பாரிசு. தவிரவும் அந்த சிபாரிசுதாரன், அவனுக்கு ஒரு மாதத்தில் இவ்வளவு துட்டுக்கு மருந்துகளைப் போணி பண்ண வேண்டும், என்கிற கட்டாய இலக்கு, நிர்ப்பந்தம் இருக்கிறது. அதில் குறைந்தால் வேலையே கூட போய்விடும் அபாயம் உண்டு. இரத்தத்தில் சிவப்பணுவே குறைந்து போனாப்போன்ற அபாயம் இது. அந்த பயத்தில் அவர்களே கிறுக்குத்தனமான கிறுகிறுப்புடன் பரபரவென்று தெருவில் அலைந்தார்கள். அவர்களுக்கே வைத்தியம் பார்த்தால் தேவலை.
இவர்களின் பிரத்யேக கவனிப்புகளால், நல்லா இருந்த டாக்டர்களே கெட்ட பழக்கங்களுக்கு, சில கெட்ட சகவாசங்களுக்குக் கூட பழகிக் கொண்டார்கள். என்னென்னவோ கதைகள் காதில் விழுகின்றன. வளர்ச்சி இல்லாத வீக்கம் என்கிற நிலை. கட்டி. அறுத்தெறிய வேண்டிய கட்டி இது.
என்ன? கேள்வி. புரிகிறது. நோயாளியின் தேவை என்ன? ச். அதைப்பற்றி என்ன? யார் அதைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். சனங்களுக்குப் பிரச்னை வந்தால் கோவில் உண்டியலில் பணம் போடுகிறார்கள். உடம்புக்கு வந்தால் டாக்டரிடம் பணம் தருகிறார்கள். சர்வரோக நிவாரணி எது? கோயிலா? டாக்டரா? ரெண்டும் இல்லை. சர்வரோக நிவாரணி, பணம்! பணம் இருந்தால் கிட்டத்தில் சாமி தரிசனம். டாக்டரும் வந்து கையைப் பிடித்துப் பார்ப்பார்.
அந்த, ஆராய்ச்சி மையம், என பெயர்ப்பலகை மாற்றிய அமர்க்களம் போலவே, அடிக்கடி மருத்துவ மாநாடுகள் வேறு நடக்கும். முக்கிய மருத்துவர்கள் அதில் பங்கேற்று சிறப்புரைகள். மாநாட்டுக்கு வர இலவச விமான டிக்கெட்டுகள், தங்குமிட வசதி, மகா உணவு, தவிர கேளிக்கைக்கான சகல ஏற்பாடுகளும் உண்டு. ச்சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! வா. நீட்டு! சியர்ஸ்!
யார் செலவு? மருந்துக்கம்பெனிக் காரன்தான். சரி. இதுக்கெல்லாம் அவர்களுக்குத் துட்டு? எல்லாவற்றையும் நோயாளிகள் தலையில் கட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு. அதற்காக, மருத்துவர்களை சரிக்கட்டி விடுகிறார்கள்.
டாக்டர் எழுதித் தந்த மருந்தை, மூணு மாதம் என்றால் முழுசாய் மூணுமாச அளவுக்கு வாங்கிச் செல்லும் குடும்பங்கள் உண்டு. தங்கள் இரத்த உறவான நோயாளி மேல் கொண்ட பாசமாய் அக்கறையாய் இதை அவர்கள் உணர்கிறார்கள். கவனிப்பு பராமரிப்பு எல்லாம் வீட்டுக்குள். இது? நாலு பேர் முன்னால் அவர்கள் பாசத்தைக் காட்டுவது என்றால் இப்படி அவர்கள் செய்தாக வேண்டும். அவர்களுக்காக இது செய்வது நமது கடமை. செய்யாவிட்டால் பாவம்.
இந்த பாவனையில் டாக்டர் தன் பங்களிப்பைச் செய்கிறார். மருந்துகள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. மருந்துகள் மாதக் கணக்கில் வாங்கிச் செல்லப் படுகின்றன. எவ்வளவு செலவு? பணம்? இதெல்லாம் அத்தியாவசியச் செலவு தானே? அதற்காக வங்கிகள், அவசரத் தேவை என்றால் செலவழிக்க என்ற பாணியில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் விநியோகம் வந்தாயிற்று. வங்கிக்காரன், அவன் பிழைக்க இது ஒரு வழி. எத்தனை வேண்டுமானாலும் அதில் இழுத்து எடுத்துக் கொள்ளலாம். பிறகு திருப்பிப் போட வேணிடும். செலவு செய்யத் தொடர்ந்து பழக்கப் படுத்தும் உத்தி. கையில் பணம் கொண்டு போனால் பத்தாத நிலை என்று வருகிறது உண்டு. கைக்காசுக்குள் செலவுகள் முடிந்து போகின்றன அநேகத் தரம். இப்போது? கார்டுதானே? கூட கொஞ்சம் அதிகம் ஆனால், அவசரத்துக்குப் பாதகம் இல்லை, என எல்லாரும் நினைக்கிற காலம். நமக்கு அவசரம் எப்போதும் வந்து கொண்டே இருக்கிறது ஏனோ.
இப்போது எல்லாத்துக்கும் விளம்பரம் வேறு. பள்ளிக்கூடம், பொறியியல் கல்லூரி, அட இழவே, மருத்துவமனைகள் கூட விளம்பரம் செய்கின்றன. ரியல் எஸ்டேட் காரர்கள் போடுவது போல, சுடுகாட்டுக்கு மிக அருகில், என்று போடுவார்களா? எல்லாத்துக்கும் விளம்பரம். கையைக் கழுவ விளம்பரம் போடுகிறார்கள். இல்லாவிட்டால் இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் தேவை எப்படி வரும்? எல்லாமே அதிதமாகி விட்டது. கட் அவ்ட் கலாச்சாரம். பேனர்கள். ஃபிளக்ஸ்கள். அரசியல் கட்சிகள் உட்பட. இத்தனை அரசியல் கட்சிகள் எதற்கு? ஏன்? ஏப்படி முளைக்கின்றன? அவனவன் காரணமே இல்லாமல் கண் சிவந்து பரபரத்துத் திரிகிற காலம். மன நல மருத்துவமனைகள் (மற்றும் துட்டு ஆராய்ச்சி மையங்கள்!), அதைப்போலவே, ஆகவே, அதிகம் ஆகத்தான் செய்யும்.
வாடிக்கையாளர்கள் வசதிக்காக கிளினிக் எதிரிலேயே மருந்துக் கடையும் உண்டு. அது வாடிக்கையாள் வசதியா, மருந்துக்கடைக்காரன் வசதியா, டாக்டரின் வசதியா? அட மூணுந்தான். டாக்டர் மருந்து எழுதும் தாளின் கீழேயே அந்த முகவரியும் அச்சிட்டு, அவனே வழங்கி விடுகிறான். கோவிலுக்கு இப்படி கொடையளித்தால் உபயம் என்று போடுவார்கள். இங்கே அப்படிப் போட முடியாது. காரணம், அவள் கடவுள். அவர் கோபப்பட மாட்டார். விட்டுவிடுவார். இவர்? இவர் மனுசர். விட மாட்டார். கோப்ப் படுவா-ர்.
தவிரவும் அவர்வழியே எவ்வளவு வியாபாரம் அவனுக்கு ஆகிறது, அதைக் கணக்கு வைத்து அவனும் மாதாமாதம் கமிஷன் தருகிறான். சில சமயம் டாக்டரே மருந்துக் கடையும் வைத்துக் கொள்கிறார். அதற்குத் தன் சொந்தத்தில் இருந்து யாராவது அசட்டுப் பையனை வியாபாரம் பார்க்க என ஊரில் இருந்து கூட்டி வந்து அவர் வைத்துக் கொள்வார். செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல். இது? போலியோ வந்த கிளை. என்றாலம¢ புண்ணியக் கணக்கு தான்...
வந்தவனும், வரும்போது அசடா இருந்தவன் இப்போது காலப் போக்கில் தேறி விடுகிறான். டாக்டர் சீட்டில் எந்த மருந்தாவது இல்லை என்றால், மாற்று மருந்து அவனே தொலைபேசியில் டாக்டரிடம் தெரிவிக்கிறான். அவர் மருந்தை மாற்றி எழுதுவதும் உண்டு. சில சமயம் அவர் எழுதாமல் இவனே மாற்று மருந்து தருவது, அதுவும் உண்டு. (சில சமயம் அதில் நோயாளி நோய் குணமாகி விடுவதும் உண்டு.)
நோயாளியின் தேவை என்ன? அட அப்பவே ஒரு தடவை இதே கேள்வி கேட்கப் பட்டது. திரும்பியும் கேட்பதா? கூறியது கூறல் குற்றம். அதே பதில், இன்னொரு முறை வேண்டாம். அதுவும் கூறியது கூறலே.
சில சமயம் பார்க்க வருகிற நோயாளி, அல்லது வரவழைக்கப்படுகிற நோயாளி... அவனோ அவளோ வர மறுக்கிறார்கள். "எனக்கு ஒண்ணும் இல்ல. நான் நல்லா இருக்கேன். உனக்குத்தான் பைத்தியம். நீ வேணாப் போ..." பிடிவாதமாய் அவர்கள் மறுக்க, பிடிவாதமாய் அவர்களை இங்கே அழைத்துக்கொண்டு வரவேண்டி யிருக்கும். நடுத்தெரு நாடகம். மாடு முரண்டி, காலை ஊனி அப்டியே தம் கட்டி நிற்கும். கயிற்றை வம்பாடு பட்டு இழுத்துக் கொண்டு மாட்டுக்காரன். தெருக்காட்சியின் ஒரு பக்கம் அது. இன்னொரு பக்கம். இது.
நோயாளியை அமுக்கி ஆட்டோவில் டாக்சியில் ஏற்ற வேண்டும். தெருவில் போகிறவர் சினிமா ஷுட்டிங் என்றோ, கற்பழிப்பு என்றோ தப்பாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆக, ஆட்டோ, டாக்சி என உபரி செலவுகளுக்குக் குடும்பம் தயாராய் இருக்க வேண்டும். அந்த ஆட்டோக்காரர்கள் டாக்சிக்காரர்கள் டாக்டரிடம் கமிஷன் பெறுவார்களா? அதுவும் தெரியாது.
"டாக்டர் குணசேகரன்..."
"பைத்திய டாக்டரா?"
"இல்ல."
"இல்லியா?"
"பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்."
"சர்த்தான். அதான் நானும் சொன்னேன். ஏறிக் குந்து. அந்தாளைத் தெரியாமல் எப்படி? இந்த ஏரியா ஆட்டோக்காரன் எல்லாருக்குமே அங்கதான சவாரி?"
அட இவங்கதான் டாக்டருக்குக் கமிஷன் தருவாங்க போல!
"ஏறுடி..."
"நா வர்ல!"
"பாப்பாவுக்கு என்னாச்சி? லவ் ஃபெய்லீரா?"
பகல் வேளைகளில் காலை ஒரு தரம் டாக்டர் வருவார். மேலே சில நோயாளிகள். அப்பிடி ஒரு வாக்கிங். நோயாளிகளின் உறவினர்கள் அவரைக் கண்டதும் சட்டென மலர்வார்கள். தெய்வம் நடந்து வருமா? வரும். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே. "எப்பிடித் தூங்கினார்? இப்ப எப்பிடி இருக்கு?" என்றெல்லாம் அவரது கேள்விகள் அமையும். பில்லோ எகிறிக் கொண்டிருக்கும். "எப்ப டிஸ்சார்ஜ் டாக்டர்?" என பயந்து பயந்து அவர்கள் கேட்பார்கள். "அதை நீங்களே முடிவு பண்றதா?" என்றது தெய்வம்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. தெய்வம் நின்று கொல்லும். அன்றே கொல்லாது.
வெறும் காய்ச்சலுக்கு அட்மிட் ஆனார் ஒருத்தர். டாக்டர் பில்லைப் பார்த்துவிட்டு சீரியசாகி விட்டார்!
இன்னொரு கதை கூட உண்டு. இவர் எலும்பு வைத்தியர். முட்டியில் ஆபரேஷன் என ஒரு மாது அட்மிட் ஆயிருந்தார். அவளுக்கு பயம். ''எனக்குச் சரியா வந்துருமா டாக்டர்?'' என்றாள். டாக்டர் புன்னகை செய்தார். ''கவலைப் படாதீங்கோ. ஆபரேஷன் முடிஞ்சி நீங்க திரும்ப வீட்டுக்கு நடந்தே போவீங்க.'' அந்தப் பெண்மணிக்குக் கவலையாகி விட்டது. ''பஸ் சார்ஜ் கூட மிஞ்சாதா டாக்டர்?'' என்றாள் அவள்.
நோயாளிகள் குறைய, படுக்கை காலியாவது என்பது கவலைக்குரியது. அது பதட்டத்தைத் தரும். புதிதாய்ப் படுக்கைக்கு ஆள் தேட வேண்டியிருந்தது. ஒரு கிளினிக் நிர்வாகம் என்பது யானையைக் கட்டி தீனி போடுவது போல. பசி பசி என்று அது அரற்றியபடியே இருக்கும். கும்பகர்ணப் பசி அதற்கு. பகாசுரப் பசி. எதுவும் கிடைக்கா விட்டால் உன்னையே, அதாவது டாக்டரையே அது சாப்பிட்டு விடும். அவர் தன் வீட்டுக்கு நடந்தே போகிறாப்ல ஆயிரும்.
தவிரவும், காலிப் படுக்கைகள்... டாக்டரின் பிராபல்யத்தைக் குறைத்து விடாதா?
உயிருக்குப் போராடும் தாத்தாவை அருகே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டி. அவர் உடம்பு மேலும் மேலும் மோசம் ஆனது. டாக்டர் பதறினார். நோயாளி இறந்து விடக் கூடும். அருகில் கவலையே உருவாய்ப் பாட்டி. தாத்தாவைப் பார்த்து நிலைகுலைந்தாள் பாட்டி. டாக்டர் அடுத்த படுக்கையைத் தயாராய் வைத்திருக்கச் சொல்லிவிட்டுப் போனார்.
*
மருத்துவமனைகளில் இது வேறு வகை. மன நலம். வாழ்க்கை, அது நியதிகளால் ஆனது. நம்பிக்கைகளால் ஆனது. தர்ம நியாய கட்டுக்கோப்பு சார்ந்த நிர்ணயங்கள் அதற்கு உண்டு. மாத்தி யோசிக்க சாமானியனுக்கு அதிகாரம் இல்லை. உரிமை இல்லை. இதில் மாற்றி யோசிப்பவனை சமூகம் பயத்துடன் பார்க்கிறது. அவன் மனநிலையைப் பரிசீலிக்கிறது.
காலையில் மாலையில் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தால் தனியே ஒரு விசிட்டுக்கு இவ்வளவு என்று காசு. மார்கழி பஜனை, உஞ்ச விருத்தி எடுத்து, கிராமங்களில் வீடு வீடாய்ப் போய் அரிசியும் தட்சிணையும் சேகரிப்பார்கள். இது நவீன பஜனை, படுக்கை படுக்கையாய் வசூல். வெளியே எழுந்து ஓடப் பார்க்கிற நோயாளிகளைப் பிடிக்க ஆட்கள் இருக்கிறார்கள். (ஏய் எங்கய்யா ஓடறே? துட்டு குடுத்துட்டு ஓடு.) அந்த நோயாளிகளைத் தூக்கமருந்து ஊசிகள் போட்டு, மனம் அமைதியடையும் என்று தொடர்ச்சியாய் உறங்க வைத்தார்கள்.
தூக்க மாத்திரைகளின், மன நல மாத்திரைகளின் தொடர் பயன்பாட்டில் உடலின் கதி மாறிப் போனது. பிற்காலங்களில் தூக்க மாத்திரைகள் இல்லாமல் தூங்க முடிகிறது இல்லை. மருந்து ஒருநாள் தவறினால் கூட உடம்பு பதறுகிறது. எதோ இழந்துவிட்டதாக உடல் உள்சுருங்குகிறது.
நர்ஸ் என ஒருத்தி. வேறு ஆஸ்பத்திரியில் பகல் வேலை முடித்து இங்கே மாலையானால் வருகிறாள். மாலை கன்சல்டேஷனில் உதவி. இது வேறு மாதிரி இடம். வேறு மாதிரி நோயாளிகள். ஒரு திடகாத்திரமான ஆள் உதவி என இருக்கிறான். சோஷியல் ஒர்க்கர், என்பது அவனது பணியின் நாமதேயம். முரண்டு பிடிக்கிற நோயாளிகளைப் பிடித்து தன் இறுக்கத்தில் வைத்துக் கொள்வான் அவன்.
டாக்டர் நோயாளியை சோதிப்பார் அப்போது. கெட்ட வார்த்தை வசைகள், கண்ணாடியைப் பிடுங்குதல்,  என நோயாளி என்ன வேணுமானாலும் செய்யும். சில சமயம் அறையே கூட அவர் வாங்க நேரலாம். சோஷியல் ஒர்க்கர் கவனமாய் நோயாளியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். டாக்டர் அவன் சம்பளத்தை பாக்கி வைக்க முடியாது. பேஷன்ட்டை அவன் நெகிழ்த்தி விட்டால் அவர் நிலைமை என்ன?
தொலைபேசியில் விசாரிக்கிறாட்களுக்கு பதில் சொல்லி, பேர் எழுதி, வரும் ஆட்களை வரிசையாக உள்ளே போக அனுமதித்து... இத்யாதி வேலை செய்ய ஒரு இளம் பெண் வருகிறாள். வந்து ஒருமாதம் தான் ஆகிறது. வேறு வேலை எதுவும் கிடைக்குமா என அவள் தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த வேலையில் யாருமே ரொம்ப காலம் தங்குவது இல்லை. நோயாளிகள் அவர்களைக் கலவரப் படுத்துகிறார்களோ என்னமோ?
வரும் கேசு ஒண்ணொண்ணும் ஒரு விதம். ஒரு ரகம். சில பேஷன்ட்டுகளை அப்பாவோ அம்மாவோ, தனக்கு தான் டாக்டரைப் பார்க்க வேண்டும், என அழைத்து வருவார்கள். அதை நம்பி அதுகளும் கூட வந்து புன்னகையுடன் உட்கார்ந்திருக்கும். டாக்டர் அழைக்கும் அவர்களின் முறை, "நெக்ஸ்ட் நீங்கதான்" என்பாள் உதவியாளினி.
அப்பா எழுந்து கொண்டார். பெண்ணை "நீயும் வா" என்று உள்ளே அழைத்தார். "நான் எதுக்கு?" என்றாள் அவள். "டாக்டர் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார். உன்னை விசாரிச்சார்..." இந்தத் தூண்டில்களில் சிலது விழும். சிலது விரைச்சிக்கும். "உனக்கு உடம்பு சரியில்லைன்னால் என்னை ஏன் பாக்கணும்?" என விரைக்கும் கேசுகளும் உண்டு. ரொம்ப விரைத்தால், மாடியில் படுக்கை காலியாக எதும் இருந்தால், டாக்டர் சேர்ந்துகொள்ளச் சொல்வதும் உண்டு. மருந்தின் தாக்கத்தில் தூக்கம்.
சில கேசுகள் டாக்டர் வேணாமென்றாலும் வந்து எதிரே உட்காரும். ‘‘நான் வேணா அட்மிட் ஆயிக்கவா?’’ என அதுவே யோசனை சொல்லும். ‘‘தலையெல்லாம்... ஒரே பாரமா இருக்கு’’ என்றபடி, அதுவே மருந்து பேர் எல்லாம் சொல்லி, ‘‘போட்டுக்கவா?’’ என்று கேட்கும். படபடவென்று விடாமல் பேசிக் கொண்டே போய் திடீர்னு நிறுத்தி ‘‘ம். நான் எங்க விட்டேன்?’’ என்று கேட்கும். ‘‘நீ எங்கம்மா விட்டே. விடாமப் பேசிட்டுத்தானே இருக்கே’’ என்பார் டாக்டர்.
இந்த சோஷியல் ஒர்க்கருக்கு இன்னொரு பணி இருக்கிறது. புதிய நோயாளிகள் வந்தால் அவர்களை விஸ்தாரமாகப் பேட்டி கண்டு குறிப்புகள் எழுதி டாக்டரின் முன்னே அவன் வைப்பான். அதைப் பார்த்தபடியே புதிய நோயாளியிடம் டாக்டர் கலந்துரையாடுவார். "என் வீட்டுக்காரர் என்னைக் கொல்லப் பார்க்கிறார் டாக்டர்" என பதட்டமாய் ஆரம்பிக்கும் பெண். அவளை டாக்டரிடம் அழைத்து வந்திருப்பதே அந்தக் கணவன் தான். டாக்டர் அவனைப் பார்த்து "கொஞ்சம் வெளில வெய்ட் பண்ணுங்க" என்பார் புன்னகையுடன்.
இந்த மாதிரி பயங்களில் காவல் துறை, நீதித் துறை, டாக்டர்கள் என மக்கள் உதவி கோருகிறார்கள். எங்கேயுமே அவர்களுக்கு உதவி கிடைக்கிறதா என்ன? பெரும்பாலும் அவர்கள் கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
கொள்ளையாய் கன்சல்டிங் ஃபீஸ். ஆயிரக் கணக்கில் மாத்திரைகள். வாங்கி வந்தால் இதுகள் சாப்பிட ஒரு முரண்டு. சில சமயம் பாலில், சாப்பாட்டில் கலந்து அதைத் தரவேண்டி யிருக்கிறது. மாத்திரை சாப்பிடாமல் இரவு தூங்கவும் முடியாமல் அவர்கள் குடும்பத்தாரை முரண்டினார்கள். இவர்கள் தூங்க அவர்களுக்குத் தர வேண்டி வந்தது தூக்க மாத்திரை!
*
அந்த உதவியாளினிக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவள் பார்த்தவரை, அங்கே வரும் நோயாளிகளில் கல்யாணம் ஆன கேசுகளும் உண்டு. கல்யாணம் ஆகாத கேசுகளும் உண்டு. கல்யாணம் ஆனவர்களுக்குக் கல்யாணம் ஆனது பிரச்னையாகவும், கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் ஆகாததே பிரச்னையாகவும் இருப்பதை அவள் ஓர் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
காலத்தின் முடிச்சுகள் விசித்திரமானவை தாம். அன்றைக்கு ஒரு பையன். அவனைப் பார்த்தால் நோயாளி என்றே சொல்ல முடியாது. அப்பாகூட வந்திருந்தான். அப்பா தான் பேஷன்ட் என நினைத்திருந்தாள். ஏற்கனவே வந்திருந்தார்கள். நோயாளி விவரக் காகிதங்களைப் பார்த்தாள். பேஷன்ட் பெரியவர் அல்ல. அவனே. அவளுக்குப் பாவமாய் இருந்தது.
யாருக்கும் என்ன பிரச்னை என்று அவள் பார்ப்பது இல்லை. அது நல்லதே அல்ல, என நினைத்தாள். அப்படி எதையாவது இந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு நம் மன வியாகூலங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நமக்கு இருக்கிற பிரச்னையே போதும் என நினைத்தாள். ஆனாலும் தற்செயலாக அந்தப் பையனை கவனித்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல கவனத்தைத் திருப்பிக் கொண்டாள். என்றாலும் அவன் அவளையே பார்க்கிறான் என்று உள் குறுகுறுப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது.
மெல்ல தன் கேபினை விட்டு அவள் வெளியே வந்தபோது அந்தப் பையன் சட்டென்று எழுந்து கொண்டான். அவன் அப்பா "பாலாஜி, எங்க போற?" என அவனை நிறுத்த முயன்றார். என்ன தோணியதோ அவன் விறுவிறுவென்று அவளைப் பார்க்க வந்தான். சத்தம் கேட்டு அவள் திரும்பினாள். அவனைப் பார்த்தாள். "என்ன?"
"ஒண்ணில்ல."
"என்ன வேணும் சொல்லுங்க."
அவன் சற்று தயங்கி "நீங்க... நடிகை ரக்ஷனா மாதிரியே இருக்கீங்க" என்றான். "எனக்கு ரக்ஷனாவைப் பிடிக்கும்" என்றான். அவள் அவனையே பார்த்தாள். "சரி" என்றாள். "உங்களுக்கு என்ன வேணும்?"
அவன் மௌனமாக நின்றான். "என்ன வேணும்?" என திரும்பவும் கண்ணை உருட்டிக் கேட்டாள். அவன் அவளையே பார்த்தான். "போய் உட்காருங்க" என்று கையை நீட்டி அவன் இருக்கையைக் காட்டினாள். அவன் தோள் சட்டெனத் தளர்ந்தது. அப்படியே சோர்வடைந்தாப் போலத் திரும்ப அப்பா அருகே போனான்.
"நாம வீட்டுக்குப் போலாம்ப்பா."
"ஏண்டா? டாக்டரைப் பார்க்கவேணாமா?"
"வேணாம்ப்பா."
"ஏன்டா?"
"வேற டாக்டரைப் பார்க்கலாம்ப்பா" என்றான் அவன். அழுது விடுவது போல அவன் உதடுகள் துடித்தன.
"வேற ஆஸ்பத்திரிக்குப் போகலாம்" என்று சொல்கிறானா? "வேற ரிசப்ஷனிஸ்ட்டைப் பார்க்கலாம்" என்று கூட அவன் நினைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
இன்னொரு பெண். சும்மா போய்த் தண்ணியைத் தண்ணியைக் குடித்தாள். அஞ்சே நிமிஷம். அம்மாவைக் கூட்டிக் கொண்டு பாத்ரூம் போய் வந்தாள். வந்த ஜோரில் தண்ணீர் குடித்தாள். "போதுண்டி" என்றாள் அம்மா. "தாகமா இருக்கும்மா." அவள் இன்னொரு தம்ளர் தண்ணீர் பிடித்துக் குடிக்க ஆரம்பித்தாள். அவள் முறை வருவதற்குள் எத்தனை முறை தண்ணி குடிப்பாளோ. எத்தனை முறை பாத்ரூம் போவாளோ தெரியாது.
சில சமயங்களில் மேலே வார்டில் இருந்து அலறல் சத்தம் கேட்கும். கட்டிலைக் கிடுகிடுவென்று அசைக்கிற நாராச ஒலிகள் கேட்கும். மேலே வார்டுக்கு என்று தனி சோஷியல் ஒர்க்கர்கள் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் எப்படியோ அந்தச் சத்தம் அடங்கி விடும். எதும் ட்ரான்குலைசர் ஊசி போட்டிருக்கலாம். அவசரம் என்றால் நர்ஸ் டாக்டரோடு பேஷன்ட் பற்றி அலைபேசியில் பேசுவாள். டாக்டர் சொன்னபடி பேஷன்ட்டை நர்சே கவனித்துக் கொள்வாள்.
டாக்டரின் ஒரு பையன். அவனும் டாக்டருக்குப் படித்தவன் தான். அதே துறைதான். பெரியவருடன் எப்பவும் அவனும் கூட வந்து தொழில் கற்றுக் கொண்டான். டாக்டர் காலத்துக்குப் பின் நிர்வாகம் என்று அவனிடம் தான் வரும் என்றிருந்தது.
*
ஆறு மணிக்கு ஆரம்பித்த கூட்டம் நேரம் ஆக ஆக ஜே ஜே என்று பெருகியது. டோக்கன் நாற்பது நாற்பத்து ஐந்து என்று எகிறியது. நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது, என்பதே அவளுக்குத் தலைசுற்றலாய் இருந்தது. இத்தனை கவலைகளையும் டாக்டர் தன் மூளையில் ஏற்றிக் கொண்டால் அவர் கதி என்ன? பயமாய் இருந்தது அவளுக்கு. இத்தனை களேபரங்களும் ஆனபின், இரவு பத்தரை பதினொன்று ஆகிவிடும் அவர் வீடு அடைய. அப்புறம் அவரால் சாப்பிட முடியுமா, என்றிருந்தது.
வெளியே டாக்டரின் காரோசை கேட்டது. எல்லாரும் சட்டென ஒரு பரபரப்புக்குள் வந்தார்கள். அவள் டாக்டரைப் பார்த்தாள். பெரிய கோட்டு. வெள்ளைச் சிறகுகள் அசைய வந்தார். ரெண்டு பக்கமும் மேல் கீழ் என பெரிய பெரிய நான்கு பைகள். பணம் என்னவோ அவள் தான் வாங்கிக் கணக்குக் கொடுப்பாள்.
முதல் டோக்கன் நபர் எழுந்துகொண்டான். டாக்டர் அறைக் கதவுப் பக்கம் போய் நின்றான். அவரது கையில் கேஸ் ஃபைல். கனமான, பேப்பர் அடைத்த ஃபைல். எத்தனை வருடமாக வருகிறானோ? இன்னுமா இவன் நோய் தீரவில்லை, என்று இருந்தது. இன்னுமா இவன் டாக்டரை நம்புகிறான் என்று இருந்தது.
*
storysankar@gmail.com 91 97899 87842

நன்றி – பேசம் புதிய சக்தி மார்ச் 2016 இதழ்

Comments

Popular posts from this blog