
மின் கம்பிக் குருவிகள் எஸ். சங்கரநாராயணன் ஒ ரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது. எதனால் எழுதுகிறேன்? அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுஙகற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப...