மின் கம்பிக் குருவிகள்

எஸ். சங்கரநாராயணன்
 ரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது.
எதனால் எழுதுகிறேன்?
அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுஙகற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரிமாணக் காட்சி என பரந்து விரிந்து கிடக்கிறது, ஒரு வானம் போல. சமுதாயம் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் கட்டமைத்த ஒரு கற்பனை வடிவம். மனித உயிர் சிரஞ்ஜீவியாக வாழ அவாவுறுகிறது. குறைந்த பட்சம் பாதுகாப்பாக வாழ அது ஆவேசப்படுகிறது. அதை அலட்சியமாக, சம்பவங்களின் இடிபாடுகளில் மாட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இதற்கு வாழ்வில் ஒரு கூட்டு அமைப்பு, ஒழுங்கு, நியதிகள் என அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன்.. இந்த ஒழுங்கற்ற மொத்தத்தில் சிறு ஒழுங்கைப் பிரித்து தன் ராஜ்ஜியத்தை அவன் அமைத்துக் கொள்கிறான். எதிர்பாராத ஒரு ஆபத்தைச் சமாளிக்க, தன்னால் தனியாக அலலாமல், ஒரு மனிதக் கூடடமாக என்றால் வேலை எளிது, என்பது அவன் துணிபு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வேறு வேறு நபர்கள் தருகிறார்கள். மானுடம் வெல்க. மிருகம் மாருதம் ஆனது கிடையாது. மனிதம் மானுடம் ஆகி விட்டது.
மேலதிக ஒழுங்குகளை அவன் வரையறை செய்துகொண்டபோது, அதற்கான கணக்குகளில், இந்த ஒழுங்கு சார்ந்த கலை வடிவம் தன்னைப் போல சித்தித்தது அவனுக்கு. வாழ்க்கையைக் காரண காரியங்களுக்கு உட்படுத்துகிற அவனது பிரியத்தில், இந்த கலை ஒழுங்குகள் அவனைக் கவர்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றைத்தான் அவன் வாழ்க்கையில் லட்சியப்படுத்துகிறான். ஒழுங்குகள் சார்ந்த உலகத்தில் மரண பயம் இல்லை. மரணத்தை மீறி வாழ்க்கை சார்ந்து அவனுக்கு நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது என்கிறது கலை. எடுத்துச் சொல்கிறது கலை. அவனது மனசின் விழைவு அது.
ஆனால் கலை என்பது என்ன? கலை எப்படித் தோன்றியது?
கலை என்பது அடிப்படையில் முரண். ஒரு கருத்துக்கு நீட்சி என்றோ, மாற்று எனறோ உதிக்கும்போது அங்கே பரிமாற்றம் நிகழ்கிறது. எது சரி எது தவறு போன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. கலை அதற்கு ஏற்பாடு செய்கிறது. நல்லது நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும். இதுவரை இருந்தது அகன்று வேறு, சரி எனப் படும் ஒன்று, மேல் மட்டத்துக்கு, புழக்கத்துக்கு வருகிறது. கலை ஒரு முரண் சார்ந்த வழியில் மேலதிக உன்னதம் நோக்கி மனிதனை வழி நடத்துகிறது.
அதோ, என்கிறது கலை.
ஒரு நல்ல பாடல் கேட்கிறோம். மனசின் இருட்டு, அல்லது கவலை மெல்ல மேகம் விலகுவதாக உணர்கிறோம். கலையின் ஒழுங்கு, அந்த உள்மனச் சிதறலைத் திரும்ப சமப்படுத்த முயல்கிறதாக நமக்கு அமைகிறது. ஒரு பிரச்னை. அதைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. கலை, புனைவு என்கிற வடிவம் வேறொரு பிரச்னையை எடுத்துப் பேசுகிறது. அதற்கான தீர்வு அதில், அந்தப் புனைவில் நேரடியாகவோ உட்பொருளாகவோ காட்டப் பட்டிருக்கும். அல்லது விவாதிக்கப் பட்டிருக்கும். வேறொரு பிரச்னையை அங்கே விவாதித்திருக்கலாம். நம் பிரச்னை என்ன? அதன் தீர்வு நோக்கி நம்மை எப்படி சமப்படுத்திக் கொள்கிறோம்… என கலை சிந்தினைகளைத் தருகிறது. அது சொன்ன தீர்வை ஒட்டியும் வெட்டியும் இப்படியும் அப்படியுமாய் கலை ஊடாடுகிறது.
மின கம்பிக் குருவிகள்.
எதனால் எழுத வந்தேன் தெரியாது. ஆனால் ஒழுங்குகளுக்கும், ஒழுங்கற்ற சம்பவங்களுக்கும் ஒரு ஒத்திசைவைத் தர கலை முயல்வதை நான் அவதானிக்கிறேன். கட்டாயம் மனிதனுக்கு அது தேவையாய் இருக்கிறது, என்பதை உணர்கிறேன். எனக்கு அது தேவை.
இந்த சமூகத்தில் நான் ஓர் இடத்தில் பணி செய்கிறேன். எனக்கு அந்த வேலை அத்தனை உவப்பாய் இல்லை. ஒருவேளை வேறொரு இடத்தில் நான் இன்னும் சிறப்பாக இயங்க முடியுமோ என நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதைவிட ஒரு நல்ல மனைவி திடைத்திருக்கலாம், என்று சில சமயம் தோன்றுகிறது. நான் பிறந்த ஊர், என் குடும்பம்… எல்லாம் சார்ந்து எனது அதிருப்திகளை நான் கவனிக்கிறேன். அமைதல், புண்ணியம், விதி என்றெல்லாம் மனசு ஊசல் ஆடுகிறது. யாருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது, என்று தான் உலகம் அமைந்திருக்கிறது. அல்லது, இல்லாத ஒன்றுக்குக் கை நீட்டுவதே மனசின் எடுப்பாக இருக்கிறது. இன்றை விட நாளை மேலாக இருக்க வேண்டும் என மனசு வேண்டுகிறது. அப்படியானால் இருக்கிற இருப்பில் ஒரு மனம் திருப்தி கொண்டு அடங்கவிட முடியாது.
மேலான வாழ்க்கை பற்றிய ஒரு கற்பனையைக் கலை ஊக்குவிக்கிறது.
நான் எனக்கு உகந்த பிரதேசங்களில் பயணிக்க என் கலை எனக்கு, ஒரு படைப்பாளனாக வெகு உதவி. இந்த வாழ்க்கை, இது எனக்கு அமைந்தது. என்றால், நானாகத் தேர்ந்து கொண்ட என் எழுத்து, அதில் எனக்கான ஒரு வாழ்க்கையை, உன்னதத்தை நான சிருஷ்டி செய்து கொள்வேன். அதில் எனக்கு வாயத்தது இது என்கிற, இன்னொரு தலையீடு இல்லை. ஏமாற்றங்கள் சாத்தியமே இல்லை.
நான் என் எழுத்தை நேசிக்கிறேன். கலைஞர்கள் பிறப்பது இல்லை. அப்படியெல்லாம் அதித நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கலைஞனாக உருவானவன். இந்த வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்காத அமைதி, திருப்தி எனக்கு நான் கலைஞனாக ஈடுபாடு காட்டுகையில் எனக்கு வாய்க்கிறது.
ஆகா, இதைக் கைமாற்ற முடியுமா?
அதனால் எழுதுகிறேன்.

என் கதைகள் அதை உறுதி செய்கின்றனவா? செய்ய வேண்டும். இது என் அவா.
***
நன்றி பதாகை மின்னிதழ்
91 97899 87842 storysankar@gmail.com

Comments

Popular posts from this blog