
அலுவலர் (நன்றி கல்கி வார இதழ்) எஸ். சங்கரநாராயணன் சி த்திரவேல் இன்றைக்கு பதவி ஓய்வு பெறுகிறார். வந்துவிடும் வந்துவிடும் என்று காத்திருந்த நாள், வந்தே விட்டது! உலகம் அதுபாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் தனக்குதான் வாழ்க்கை ஓய்வுபெறும் நாளைநோக்கி நாள்நாளாய்க் குறைகிறாப் போலவும் அவருக்கு இருந்தது. தினசரி கண் விழிக்கையிலேயே, இன்னும் எத்தனை நாள் இருக்கு, என்கிற யோசனையைத் தவிர்க்க முடியவில்லை. அட வரும்போது வரட்டும், என இருக்க முடியாமல் அலுவலகத்தில், ஓய்வுக்குப் பின்னான பென்ஷன் சார்ந்த விவரங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டே யிருந்தார்கள். ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தாள் தாளாய்க் கையெழுத்திட்டுக் கொடுத்தார். திடீரென்று தான் அலுவலகத்தில் நிறைய வேலை செய்கிறாப் போலிருந்தது! மனைவியுடன் சேர்ந்து ஆறு புகைப்படங்கள் தந்தார். அவர்காலத்துக்குப் பின் ஓய்வூதியம் அவளுக்கு வரும். அவளும் வேலைக்குப் போகிறாள். தனியார் கம்பெனி. இவரைவிட மூணுவயசு தான் இளையவள். புகைப்படத்தைப் பார்த்தார். அவள் முதுமை அடைந்த மாதிரியே தெரியவில்லை. சதை வரம்பு மீறாமல், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாப் போல...