
எதற்காக எழுதுகிறேன்? எம்.ஜி.சுரேஷ் * நீ ங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்?’ இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? ‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல. சரி, நான் என்னதான் சொல்லட்டும். எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்...