18 09 2014
அன்னம் விருது
பெறும் எம்.ஜி. சுரேஷ்

எஸ். சங்கரநாராயணன்
(இலக்கிய வீதியால் படிக்கப்பட்ட தகுதியுரை)

எம்.ஜி. சுரேஷின் நாவல்கள் நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோருகின்றன. ‘சோதனை முயற்சி நாவல்‘ என்றாலே வாசிக்கச் சிக்கலானது என்ற பிம்பத்தைத் தன் இயல்பான கதை கூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும் வண்ணப் பொலிவுடன் மிளிரவைத்தவர் இவர். பின் நவீனத்துவம் என்ற எதிர் கோட்பாட்டை தனது எளிமையான உரையாடலின் மூலம் தெளிவான புரிதலுக்கு வழிவகுத்தவர் சுரேஷ்.  இவரது எழுத்தை மத்திம எழுத்து என்று வகைப்படுத்தலாம். தீவிர எழுத்தைப் போல் மூச்சுத் திணற வைக்காத, அதேசமயம், வணிக எழுத்தைப் போல் வீரியம் நீர்த்துப் போகாத எழுத்து இவருடையது. எழுத்தின் பயன் வாசிக்க சுவாரஸ்யமானதாகவும், கடைசிவரை வாசகனைக் கூட்டிச் செல்கிறதாகவும் இருக்க வேண்டும், கடைசி வாசகனையும் அது சென்றடைய வேண்டும், என்பது இவரது கோட்பாடு.
1971ஆம் ஆண்டு இவரது முதல் எழுத்து தீபம் இதழில் பிரசுரமானது. அதுமுதல் தொடர்ந்து கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், திறனாய்வு, இலக்கியக் கோட்பாடுகள் என்று இவரது இலக்கியப் பணி நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வருகிறது.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1981 ஆம் ஆண்டு வெளியானது. அதைப்பற்றி கணையாழி இதழ் ‘இலக்கிய ஆர்வம் மிகுந்த ஓர் இளம் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. மிக விரிவான தளம். தீவிரம் மிகுந்த சம்பவங்கள்’ என்று குறிப்பிட்டது. இந்து ஆங்கில நாளிதழ் ‘பேனாவில் ஒரு பூந்தோட்டம்’ (Garden in a pen) என்று புகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து இவரது மூன்று குறுநாவல்கள் - ‘விரலிடுக்கில் தப்பிய புகை’, ‘தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக்கூடுகள்’, ‘கான்க்ரீட் வனம்’. ஆகியன வெளியாயின. க.நா.சு ‘கான்க்ரீட் வனத்தைப் பற்றித் தனது முன்னுரையில், ‘எம்.ஜி.சுரேஷின் நடையும் பாஷையும் அவருக்கே சொந்தமானவையாக இருக்கின்றன. பாரதியாருடையதைப் போல் தெளிவாகவும், வேகத்துடனும் வலுவுடனும் காணப்படுகின்றன. புதுமைப்பித்தனிடம் உள்ள சிடுக்கு முடிச்சுகளோ, ஜெயகாந்தனிடம் உள்ள கொள்கைக் குதிரையேறுதலோ இவரிடம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு க.நா.சு அவ்வப்போது வெளியிடும் இலக்கியவாதிகளின் பட்டியலில் எம்.ஜி.சுரேஷின் பெயரும் சேர்ந்து கொண்டது.
தொண்ணூறுகளில் பின் நவீனத்துவம் என்ற சொல்லாடல் தமிழுக்கு அறிமுகமாயிற்று. ஆல்பர்ட், தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, நாகார்ஜுனன், நோயல் ஜோஸப் இருதயராஜ், க. பூரணசந்திரன், அ.மார்க்ஸ் போன்றோர் தமிழில் பின் நவீனத்துவம் சார்ந்த உரையாடலைத் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ரவிக்குமார், பொ. வேல்சாமி, ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா போன்றோர் பின் நவீனவாதிகளாக அறிமுகமானார்கள்.
அப்போது பின் நவீனத்துவம் என்பது தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற மாதிரி இருந்தது. நாகார்ஜுனன் பின் நவீன மதகுரு போல் தன்னைக் கருதிக்கொண்டு பிறரிடம் ஹிட்லர் போல் நடந்து கொண்டார். ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா பொன்றோர் பின் நவீனத்துவம் என்பது குடும்பக் கலைப்பு, பாலியல் புரட்சி, ஓரினப்புணர்ச்சி என்று அறிவித்தனர். அ. மார்க்ஸ், ந. முத்துமோகன் போன்றோர் பின் நவீனத்துவத்தை மார்க்ஸீயத்தின் விடுபட்ட கண்ணியாகப் புரிந்து கொண்டனர்.
தான் உள்வாங்கிக் கொண்ட விஷயத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் புனைகதைகள் வாயிலாக வெளியிட எம்.ஜி.சுரேஷ் விரும்பினார். அவரது ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்‘ என்ற நாவல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. காலச்சுவடு இதழ் ஒழுங்கு செய்த தமிழ் இனி 2000 மாநாடு வெளியிட்ட மலரில், ‘இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த ஐம்பதாண்டுகளில் வெளியான பத்து சிறந்த நாவல்களில் ஒன்று அட்லாண்டிஸ் மனிதன்’ என்று ஆவணப்படுத்தி உள்ளது. அந்த நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது.
நான்காவது நாவல் 37. இந்த நாவல் எட்டயபுரம் பாரதியார் நினைவுப்பரிசைப் பெற்றது ஐந்தாவது நாவலான ‘யுரேகா என்றொரு நகரம்’ தமிழ்ச்சூழலில் பரவலான கவனத்தைப் பெற்றது.
இவரது ஐந்து நாவல்களுமே சோதனை முயற்சிகள் எனலாம். க்யூபிஸம், தன்பெருக்கி, தோற்ற நிலை மெய்ம்மை, போன்ற வடிவங்களில் இந்த நாவல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இன்று இவை அனைத்துமே தமிழின் முக்கியமான பின் நவீன நாவல்களாக எல்லோராலும் அடையாளப்படுத்தப் படுகின்றன. 37 என்ற நாவலுக்கு உயிர்மை இதழ் திருச்சியில் விமர்சனக் கூட்டம் நடத்தியது. அப்போது அங்கு பேசிய நோயல் ஜோஸப் இருதயராஜ் 37 நாவல் ஒரு பின் நவீன தமிழ்ப் பிரதி என்று குறிப்பிட்டார். எம்.ஜி.சுரேஷை அமெரிக்கப் பின் நவீன எழுத்தாளரான கர்ட் வானேகட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
      பிற்காலங்களில் ‘பின் நவீனத்துவம் என்றால் என்ன? என்ற நூலை எம்.ஜி.சுரேஷ் எழுதியபோது, ‘இந்த நூல் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் வந்திருந்தால் பின் நவீனத்துவம் பற்றிய குழப்பம் இல்லாமல் போயிருக்கும். தமிழ்ச் சிந்தனைப் போக்கில் ஒரு மாற்றம் இருந்திருக்கும்’ என்று சுந்தரராமசாமி பலரிடம் குறிப்பிட்டார். ’பின் நவீனத்துவம் என்றால் என்ன’ என்ற நூல் ஏலாதி இலக்கிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
      தமிழ் சினிமாவில் இருக்கும் இலக்கிய ஆர்வலர்கள் கண்களில் எம்.ஜி. சுரேஷ் பட்டதன் விளைவாக அவரது சினிமாப் பிரவேசம் நிகழ்ந்தது.
      திரைப்பட இயக்குனர்கள் சக்தி-கண்ணன், சந்தானபாரதி, தங்கர் பச்சான், எஸ்.பி. ஜனநாதன் போன்றோர் இவரோடு தொடர்பு கொண்டனர். இதனால் இவர்களது படங்களில் கதை விவாதங்களில் கலந்து கொள்ளவும், தொடர்ந்து அந்தப் படங்களில் உதவி இயக்குநர், அஸோஸியேட் இயக்குனர் போன்ற வாய்ப்புகளும் கிடைத்தன. இளையபாரதி இயக்கிய ’தென்பாண்டிச்சிங்கம்’, சவீதா இயக்கிய ‘வேரில்லாத மேகங்கள்’, ‘என் கண்ணின் பார்வை அன்றோ’  போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
      இவரது இலக்கிய சேவையை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு இவர் மகளுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க இலவச இருக்கை வழங்கி கௌரவித்தது. மத்திய அரசு இவரை திரைப்பட சான்றிதழ் வழங்கும் துறையில் (central board of film certification) ஆலோசகராக நியமித்தது.
2001ஆம் ஆண்டு பன்முகம் என்ற பெயரில் வெளி வந்த ஒரு காலாண்டு இதழுக்கு ஆசிரியராக இருந்தார். ஐந்தாண்டு காலம் வெளி வந்த அந்த இதழ் தீவிர இலக்கியம், பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.
எம்.ஜி. சுரேஷின் படைப்புகளை  முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக மாணவர்கள் எடுத்து வருகின்றனர்.. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திருமதி சர்மிளாதேவி என்பவரும், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு மனோ மோகன் என்பவரும் எம்.ஜி சுரேஷின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
எம்.ஜி. சுரேஷ் இதுவரை 22 நூல்கள் வெளியிட்டுள்ளார். புனைவிலக்கிய வாதியாகவும், கட்டுரையாளராகவும், விமரிசகராகவும் தனித்தனியாக முக்கியத்துவம் வாய்ந்த, கவனம் பெறத்தக்க படைப்பாளி எம்.ஜி. சுரேஷ். உலக இலக்கியப் போக்குகளை உற்று கவனித்து தமிழில் அதன் சாத்தியப்பாடுகளை ஓயாது சிந்தித்தும், அதைப்பற்றி கட்டுரைகளாகவும், புனைவாகவும் தொடர்ந்து தமிழ் வாசகர்களை கவன ஈர்ப்பு செய்து வருகிறார் அவர். தான் இயங்கும் அத்தனை துறைகளிலும் இப்படி முத்திரை பதித்த வேறு எழுத்தாளர் இல்லை.
 இவருக்கு அன்னம் விருது வழங்கி கௌரவிப்பதில் இலக்கிய வீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் பெருமை கொள்கின்றன.

·       

Comments

Popular posts from this blog