
இல் அறம் Short story – நன்றி குங்குமம் வார இதழ் எஸ். சங்கரநாராயணன் வீ ட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று...