
விளக்கின் நிழல் எஸ்.சங்கரநாராயணன் ச ரவணனுக்கு நினைவு திரும்பியபோது தொடைவரை காலை வெட்டி எடுத்திருந்தார்கள். வேறு வழியில்லை. வலது கால் அத்தனைக்கு சேதமாகியிருந்தது. அவனே தடுமாறி நடந்து உருண்டு தவழ்ந்து, எப்படியெல்லாம் முடியுமோ அத்தனை போராட்டங்களுக்குப் பின், வரும் வழியில், கண்டெடுக்கப் பட்டிருந்தான். மீட்பு ஹெலி பார்த்ததும், அடடா, அவனுக்குத்தான் என்ன உற்சாகம். அவன் மீட்கப்பட்டான். அதற்குள், காலில் குண்டு பாய்ந்த இடம் நீலம் பாரித்து அழுக ஆரம்பித்திருந்தது. ஒரு கெட்ட வாசனை வந்தது. வாந்தி வரும் போலிருந்தது. அவன் எட்டு நாளாய்ச் சாப்பிட்டிருக்கவில்லை. எட்டுநாள் என்பதே உத்தேசக் கணக்கு தான். நாள் தேதி கிழமை அனைந்தும் மறந்திருந்தான். காலமே உறைந்து கிடந்தது அங்கே. உணவு எடுக்கவும் இல்லை. அதனால் வாந்தி எடுக்கவும் தெம்பு இல்லை. திணறலாய் இருந்தது. உணவு கையிருப்பில் இருந்தது தீர்ந்து போயிருந்தது. ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே பத்திரப்படுத்திக் கொள்வான். தண்ணீர் கிடையாது. பனியே தண்ணீர். குளிரோ உடலை வாட்டியெடுக்கிறது. கடுமையான ஜுரம். எழுந்து கொண்டால் உடலே வெடவெட வென்று அதிர்ந்தது. கண்ண...