எஸ்.சங்கரநாராயணன்

ரவணனுக்கு நினைவு திரும்பியபோது தொடைவரை காலை வெட்டி எடுத்திருந்தார்கள்.
வேறு வழியில்லை. வலது கால் அத்தனைக்கு சேதமாகியிருந்தது. அவனே தடுமாறி நடந்து உருண்டு தவழ்ந்து, எப்படியெல்லாம் முடியுமோ அத்தனை போராட்டங்களுக்குப் பின், வரும் வழியில், கண்டெடுக்கப் பட்டிருந்தான். மீட்பு ஹெலி பார்த்ததும், அடடா, அவனுக்குத்தான் என்ன உற்சாகம்.
அவன் மீட்கப்பட்டான். அதற்குள், காலில் குண்டு பாய்ந்த இடம் நீலம் பாரித்து அழுக ஆரம்பித்திருந்தது. ஒரு கெட்ட வாசனை வந்தது. வாந்தி வரும் போலிருந்தது. அவன் எட்டு நாளாய்ச் சாப்பிட்டிருக்கவில்லை. எட்டுநாள் என்பதே உத்தேசக் கணக்கு தான். நாள் தேதி கிழமை அனைந்தும் மறந்திருந்தான். காலமே உறைந்து கிடந்தது அங்கே. உணவு எடுக்கவும் இல்லை. அதனால் வாந்தி எடுக்கவும் தெம்பு இல்லை. திணறலாய் இருந்தது. உணவு கையிருப்பில் இருந்தது தீர்ந்து போயிருந்தது. ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே பத்திரப்படுத்திக் கொள்வான். தண்ணீர் கிடையாது. பனியே தண்ணீர். குளிரோ உடலை வாட்டியெடுக்கிறது. கடுமையான ஜுரம். எழுந்து கொண்டால் உடலே வெடவெட வென்று அதிர்ந்தது. கண்ணையே திறக்க முடியாமல் அப்படியே பாதி மயக்கம், பாதி நினைவாய்க் கிடந்தான். தானாகவே கண்ணயர்ந்து விடுவான். பிறகு தானாகவே விழிப்பும் வரும். பதட்டமாய் இருக்கும். ஜுர வேகத்தில், முனகிக் கொண்டு கிடந்தான்.
கண் நிறையப் பீதியுடன், மேலே அதோ ஹெலி என்று பார்த்ததும் உடலெங்கும் பரவசம் வெட்டியது. இருக்கிற சக்தியெல்லாம் திரட்டி அந்தப் பிரதேசமே அதிர ஒரு சத்தமெடுத்தான். கிறுக்குப் பிடித்த நிலை அது. உன்மத்த நிலை... ஹெலி வந்திறங்கி அவனைத் தொட்டுத் தூக்கிய நேரம் அவனிடமிருந்து வலி தாளாததோர் அலறல் எழுந்தது. தூக்கியவனின் எலும்புக் குருத்துக்குள் குளிரெடுத்தது. அத்தோடு சரவணன் மயக்கமாகிவிட்டான்.
கால் வெட்டி எடுக்கப்பட்டது சரவணனுக்குத் தெரியாது. வலி மெல்ல உள்ளிருந்து குக்கர் ஆவி போல விநாடிக்கு விநாடி உச்சம் கொண்டு வெடித்து விடுவது போல அவனைப் பாடாய்ப் படுத்தியது. உடம்பையே பாம்பாய்ச் சுருட்டி விரித்தது வலி. படுக்கையை, கால் கட்டுக்களைப் பிய்த்தெறிய ஆவேசம் கொண்டான். அலறினான்.
நர்ஸ் வந்து, வலி வரும்போது அலறாமல் கடித்துக் கொள்ள, அவனுக்கு ரப்பர் துண்டு தந்தாள். தாள முடியாத வலி இருப்பது நல்லது. நரம்புகள் வேலை செய்வதின் அடையாளம் அது... புன்னகை செய்கிற அவளை ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது.
கொந்தளிப்பு அடங்க ரெண்டு நாளானது. வலியைப் பொறுத்துக் கொள்கிற கட்டுப்பாடு வந்தது மெல்ல. மனசில் மெதுவாய் நிஜம் உறைத்தது. அடாடா, இங்கே வந்து சேர்ந்த நாள் முதலாய் நான் ஒரு மிருகம் போலவே நடந்து கொண்டிருக்கிறேன். என் காலைச் சரியான நேரத்தில வெட்டி எறிந்து என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள் இவர்கள். இவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறேன்... வெட்கமாய்ப் போயிற்று. மறுமுறை நர்ஸ் வந்தபோது அவள் கையைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான். அப்போதும் புன்னகைத்தாள் அவள். காயத்தைப் பஞ்சால் ஒற்றுவது போன்ற புன்னகை.
உலகம் ஆயுதங்களால் அல்ல, புன்னகைகளால் ஆளப்படுகிறது. இதுநாள் வரை நான் என்னைப் பற்றியே கவலைப்பட்டு, என் பிரச்னையையே பெரிதுபடுத்தி அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். என் இழப்பையே நான் உணர்ந்து திகைத்துக் கொண்டிருந்தேன். நடந்தவை எதிர்பாராதவையே. வருத்தத்துக்குரியவையே... என்றாலும் இன்னும் வாழ ஏராளமாய் மிச்சம் உள்ளது.
குனிந்து தனது வெட்டப்பட்ட கால் பகுதியைப் பார்த்தான். கால் வெட்டப்பட்ட உணர்வே இல்லை. கால் இருப்பதாகவும், விரல்கள் வரை வலிக்கிறதாகவுமே உணர்ச்சிகள் மூளையில் பதிவு பெற்றன. மனம் இன்னும் காலை எடுத்ததைப் பதிவு செய்ய மறுத்தது.
முதுகுப் பக்கம் படுக்கையை உயரவாக்கில் சற்று சாய்த்து வசதி செய்து தந்திருந்தாள் நர்ஸ் ஜுலி. அதென்னமோ கிறித்தவர்களும், மலையாளிகளுமே எங்கும் எங்கெங்கிலும் நர்ஸ் வேலைக்கு வருகிறார்கள். அதற்கான அபரிதமான பொறுமை அவர்களிடம் இருக்கிறது.
படுக்கையோடு கட்டிக் கிடந்தான் அவன். நர்ஸால் ஆட்டுவிக்கப்படும் குழந்தை போல அவன் கட்டுப்பட்டுக் கிடந்தான். நான்கே நாளில் அவனிடம் ஏற்பட்ட அந்த மாற்றங்கள் ஜுலிக்கும், இதர மருத்துவர்களுக்கும் திருப்தி தந்தன. டாக்டர் தாராகூட கொஞ்சம் கவலையுடன், “அத்தனை சிரமத்துடன் வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று மென்மையாகச் சொன்னாள். ஆனால் பிறகு இவன் தூக்கத்தில்கூட அரற்றவே இல்லை.
ஆ. இதுதான் சண்டை, என நினைத்துக் கொண்டான். சண்டையில் அவன் முதல் அனுபவம் இது. டேராடூனில் பயிற்சி முடிந்து ஆறேழு மாதத்தில் எல்லையில் அவன் தேவைப்பட்டான். மற்றெந்த சிப்பாயையும்விட அவனுக்கு அதில் தனி உற்சாகம் இருந்தது. இந்த ஒரு நிலைமைக்காக மட்டுமே நான் தயார் செய்யப்பட்டேன் – எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இளமையின் காட்டாற்று வேகம். கோபம். தினவு... சரி, நாம் யார் நிரூபிப்போம். சிங்காரிக்கு அவன் எழுதிய கடிதத்தில் அந்த ஆவேசம் இருந்தது. நம்மை அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். நம் பொறுமையைத் தவறாகக் கணித்துவிட்டார்கள் – என்றெல்லாம் மனைவிக்கு எழுதியது... இப்போது வேடிக்கை போலிருந்தது.
சிங்காரிக்கு தகவல் தெரிந்திருக்கும். அவளிடமிருந்து கடிதம் இந்த வாரம் வரலாம்.... எல்லைப் பகுதியில் வாரம் ஒரு நாள் கடிதம் வரும். எத்தனை உற்சாகமான நாள் அது. அத்தனை சிப்பாய்களும் பூரித்துத் திரிவார்கள். அழுகையும் சிரிப்புமாக அவர்கள் கடிதங்களைச் சிலபோது பரிமாறிக் கொள்வதும் உண்டு. அவனுக்கு அது பிடிப்பதில்லை. புகைப்படம்கூட பர்சில் அவன் வைத்துக் கொள்ள மாட்டான். அதான் நெஞ்சிலேயே இருக்கிறாளே, பிறகென்ன, என்றிருக்கும்.
அவன்மேல் அவள் உயிரையே வைத்திருந்தாள். அவன் ஊருக்குத் திரும்பும் போதெல்லாம் எத்தனை வக்கணையாய்ச் சமைத்துப் போடுவாள். சிங்காரித்துக் கொள்வாள்... எங்காவது வெளியே போனால் ஊரே அவர்களைப் பார்த்து கண் விரித்தது... வீட்டுக்கு வந்ததும் கணவனை உட்கார வைத்து அவசரமாய்ச் சுற்றிப் போட்டாள். “உங்க நடையே தனி அழகு... மிலிட்டரி நடை. அதான் அவ அவ கண்ணு போடறாளுக.” அவன் சிரிப்பான்.
கால் எடுக்கப்பட்டுவிட்டது. பெரும் துரதிர்ஷ்டமான விஷயம்தான். இப்போது இப்படி ஊர் திரும்பவே யோசனையாய் இருந்தது. அட இதை அவள் எப்படித் தாங்கிக் கொள்வாள் என்று அனுமானிக்க முடியவில்லை. பரிதவித்து தந்தி வந்த நாள்முதல் தனியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள்.
உடனே அவனுக்கு ஊர் வேட்கை எழுந்தது. “அழாதே சிங்காரி... நான் பிழைத்து விட்டேன் அந்த மட்டுக்கு...” என்று கண்ணைத் துடைத்துவிட வேண்டும் போலிருந்தது. எனக்குக் கால் போய்விட்டது... இருந்தாலும் நீ இருக்கிறாய் உதவிக்கு. உன்னைவிட இந்தக் கால் பெரிதல்ல... என்றெல்லாம் மனசுக்குள் பேசிக் கொண்டு, என்னென்னமோ யோசித்துக் கொண்டு படுத்திருந்தான்.
ஊரில் செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும். சண்டையில் அவன் காணாமல் போன விவரம் அறிந்த போதே, அந்தத் தந்தி வந்த போதே அவள் மயக்கம் போட்டு விழுந்திருப்பாள். எப்படி அவளை சமாதானப் படுத்தினார்களோ? அவனுக்கு உடம்பு சரியில்லை என்றேகூட அவள் படும் பாடு சகிக்க வொண்ணாதது...
“எப்ப நான் ஊர் திரும்ப முடியும் டாக்டர்?” என்று ஆர்வமாய் அவள் முகத்தைப் பார்க்கிறான்.
“அதுக்குள்ளயா? காயமே இன்னும் ஆறல்ல...” என்று டாக்டர் தாரா சிரித்தாள். “பெண்டாட்டி ஞாபகம் வந்திட்டதா?” சிரிக்கும் போது அவள் கண்கள் என்னமாய் மலர்கின்றன... அடிக்கடி அவளைச் சிரிக்க வைக்க வேண்டும் போலிருந்தது.
“அந்த மட்டுக்குத் தப்பிச்சிட்டிங்க, உயிருக்கு ஆபத்து இல்லாம, அதைப் பாருங்க” என்றாள் தாரா.
“இனி புண் பூரணமா ஆறி, செயற்கைக் கால் பொருத்தி, உங்களுக்கு நடக்கச் சொல்லிக் கொடுத்து, பழக்கி அனுப்பணும்...”
அது சரித்தான், என்று தலையாட்டிக் கொண்டான். போர் விதவைகள் மறுவாழ்வு சங்கத்தில் இருந்து மலர்க்கொத்து தந்து பார்த்துவிட்டுப் போனார்கள். நிறையப் பேர் சின்ன வயசுப் பெண்கள், என்று பார்க்க மனசுக்குக் கஷ்டமாய் இருந்தது. அவர்கள் விரைவில் அவன் குணமடைய வாழ்த்துச் சொல்லிச் சிரித்த போது அந்தச் சிரிப்புக்குள்ளும் ஆழமாய் ஒரு சோகம் இருந்ததை நரம்பில் அதிர்வுடன் உணர்ந்தான்.
“நீங்கள் விரும்பினால் உங்கள் மனைவியை எங்கள் செலவில் அழைத்து வந்து உங்களுக்கு ஆறுதலாய் அருகில் இருக்கச் செய்ய முடியும்...” என்று ஒருத்தி இந்தியில் சொன்னாள். “நல்லது. வேண்டாம்...” என்றான் அவசரமாய். சாதாரணமாகவே சிங்காரிக்கு ஆஸ்பத்திரி என்றால் தலைசுற்றும். அதிர்ச்சிகளுக்கு ஏற்றவளே அல்ல அவள்.
அதிலும் இங்கே... அவன் சுற்று முற்றும் பார்க்கிறான். எங்கும் காயம் பட்ட வீரர்கள். கட்டில்கள் நிரம்பி வழிகின்றன. கை போனவர்கள். கால் இழந்தவர்கள். ஐயோ ஒருவன் கண்களைச் சுற்றிக் கட்டுப் போட்டிருக்கிறது. கண் மீளுமா தெரியவில்லை... நேற்றுத்தான் வந்தான் அவன். அவனுக்கு என் நிலைமை பரவாயில்லை.
இந்தக் காட்சிகளை சிங்காரி தாளமாட்டாள். தினம் தினம் புதுசு புதுசாய் ஆட்கள் வந்திறங்கிக் கொண்டேயிருக்கிற இந்தப் பரபரப்பில், பேரும் ஊரும் பாஷையும் தெரியாமல்... இங்கே வந்து, அழுதழுது என்னையும் பயமுறுத்திவிடுவாள். “ரொம்ப நன்றி. அவளுக்கு இங்கே வசதிப்படாது...” என்றான் அந்த இளம் விதவையிடம்.
“ஏன்? நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... இட வசதிகூட எங்கள் பொறுப்பு” என்கிறாள் அவள்.
“நீங்கள் ரொம்ப அருமையானவர். நன்றி” என்று கைகூப்பினான்.
சிங்காரிக்கு ஒரு கடிதம் போட்டான். எழுத அவனால் முடியவில்லை. கையெங்கும் சிராய்ப்புகள் இன்னும் ஆறவில்லை. இங்கே வந்து பத்து நாளாயிற்று. சிராய்ப்புகள் காயவே நாளாகும் போலிருந்தது. இனி கால் குணமாகி... மாதங்கள் எடுக்கலாம், என்றிருந்தது.
அந்த விதவைகளில் ஒருத்தி – ஈஸ்வரியாம். அவள் கணவன் கேப்டன் என்றும், நான்கு நாள் முன்புதான், போரில் இறந்து போனான் என்றும் சரவணன் அறிந்தான். அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு குனிந்து அவன் சொல்லச் சொல்ல அவள் எழுதத் தயாராய்க் காகிதத்துடன் உட்கார்ந்திருந்தது பிரமிப்பாய் இருந்தது. எனக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்தால், சிங்காரியால் தாள முடியாது... எத்தனை சுருக்காய் இவள் பிற ஜவான்களுக்கு உதவ தன்னை இணைத்துக் கொண்டுவிட்டாள், என்று ஆச்சரியமாய்ப் பெருமையாய் இருந்தது.
மனைவிக்கான கடிதத்தை இன்னொரு பெண், அதுவும் இளம் பெண் – விதவை – அவள் மூலம் எழுதுவது சங்கடமானது. துயரகரமானது. கேப்டனுடன் தனது நினைவுகளை அவள் மீட்டிக் கொண்டபடியே எழுதுவாளோ? அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அதுபற்றி அவள் அலட்டிக் கொள்ளாதது அவளது பெருந்தன்மை.
அது ஒரு சம்பிரதாயக் கடிதம். அலுவலக அளவில் உனக்குத் தந்தி கொடுத்திருப்பார்கள். எனக்கு வலது காலைத் தொடை வரை எடுத்துவிட்டார்கள். என்ன செய்வது... ஆரம்பத்தில் திகைப்பாய்த்தான் எனக்கும் இருந்தது. அதுபற்றி வருந்த வேண்டாம். நீ தைரியமாய் இருக்க வேண்டும். விரைவில் நான் திரும்பி வந்து விடுவேன். இங்கே எனக்கு நன்றாக வைத்தியம் பார்க்கிறார்கள். நல்லபடியாக கவனித்துக் கொள்கிறார்கள்... ‘பிரத்யேக நல விசாரிப்புகள்’ என்றெல்லாம் எழுதக் கூச்சமாய் இருந்தது. ‘அவ்வளவுதான்’ என்றான் தயக்கமாய். “உங்கள் உதவி மகத்தானது” என்று கைகூப்பினான்.
“ம். நீங்கள் தேவையான உதவிகளைக் கேட்கலாம். அமைதியாய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண குணமடைந்து விடுவீர்கள், வாழ்த்துக்கள்.” அவள் போய்விட்டாள்.
அவனை ஐசியூவில் இருந்து வெளிப்படுக்கைக்கு மாற்றிவிட்டார்கள். ஐசியூ அவர்களுக்குத் தேவைப்பட்டுக் கொண்டேயிருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் அந்த ஆஸ்பத்திரி பரபரப்பாகவே இருந்தது.
சாதாரண நாளிலேயே அப்படித்தான். போர், நிலைமையை இன்னும் உக்கிரமாக்கி இருந்தது. சாவுகள் சகஜமாக இருந்தன. சாவுகள் நிகழ நிகழ, பக்கத்துப் படுக்கைக்காரன் – அவனைவிட முக்கியமாய், அவனது குடும்பத்தாரின் பயம் அதிகரித்தது... நிச்சயமாய் சிங்காரி வர வேண்டாம் என்று உறுதி செய்து கொண்டான்.
எல்லைப் படையினருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ரேடியோ பாடல்களை ஒலிபரப்பியது. எல்லா மொழிகளிலும் பாடல்கள் இருந்தன. இடையிடையே போர் நிலவரம் பற்றி உற்சாகமான செய்திகள் சொன்னார்கள். எல்லையில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை பாதிப் பகுதிக்கு மேல் மீட்டாகிவிட்ட தகவல் அறிந்து சரவணன் சந்தோஷப்பட்டான். காதருகே ரேடியோ வைத்துக் கொண்டு கண்மூடிப் படுத்திருப்பது ஓரளவு இதமாய் இருந்தது.
செய்திகள் வாசிக்கும்போது அந்த வார்டே பரபரத்தது. சிப்பாய்களும் அவர்களின் உறவினர்களும் பரபரப்படைந்தார்கள். கூடி நின்று கொண்டார்கள். காணாமல் போனவர்கள், காயம் பட்டவர்களின் பெயர்கள், உயிரிழந்த ஜவான்கள் பட்டியல், என்று வாசிக்கும் தோறும் அங்கே பெரும் அமைதி நிலவியது. தனக்குத் தெரிந்தவர்கள் பெயர்கள் வரும் போதெல்லாம் அவர்களிடையே விதவிதமான உணர்ச்சிகள் அலையோடின. இப்படித்தான் ஊரிலும் இருக்கும், என நினைத்துக் கொண்டான்.
5120 மீட்டர் சிகரத்தைப் பிடிக்கிற முயற்சியில்தான் சரவணன் காயம் பட்டிருந்தான். சிகரம் மீட்கப்பட்ட விவரத்தை அவன் கேட்டு அறிந்து கொண்டான். எப்போதும் படுத்துக் கிடப்பது அலுப்பாய் இருக்கும். கால் செயலிழந்தது பரவாயில்லை... கைகளுக்கும் வேலை இல்லை. மூளைக்கும் வேலை இல்லை. யாரிடமும் கலகலப்பாய்ச் சிரித்துப் பேசிப் பழகியவனும் அல்ல அவன்.
கண்ணை மூடி என்னவாவது யோசித்துக் கொண்டு கிடப்பான். ஊரில் கிடந்தால் இப்படி ஆசுவாசமாய்க் கிடக்க முடியாது. யாராவது வந்து பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். அட இவள் அழுகையை எப்படி சமாளிப்பது, என்று திகைப்பாய் இருக்கும். அவன் பூரணமாய்க் குணமானபின் ஊருக்குப் போக முடிவு செய்தான்.
அந்த வாரம் சிங்காரியின் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. சேதி கேட்டு சிங்காரி துடித்துப் போனதாகவும், உண்ணாமல் உறங்காமல் தவிக்கிறதாகவும் எழுதியிருந்தார். பாவம் இந்த வயதான காலத்தில் அவர்தான் இதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. பெண்ணை நினைத்தாலே அவர் மனம் கசிந்தது. எந்த விஷயத்தையும் அவள் அப்பாவிடம் மறைத்ததேயில்லை. எதொண்ணுத்துக்கும் அவரிடம்தான் யோசனை கேட்பாள்.
அவர் கடிதம் ரொம்ப வருத்தப்பட வைத்துவிட்டது. காயம் பற்றிய நிலவரத்தை – உண்மையைச் சொல்லுங்க மாமா. நாங்க உங்கள நம்பித்தான் இருக்கிறோம், என்று சிங்காரியும் எழுதியிருந்தாள். அவளையே நேரில் பார்ப்பது போலிருந்தது அவனுக்கு.
உணர்வுபூர்வமான சிறு உலகம் அது. அதுவும் அவனுக்கு வேண்டித்தான் இருந்தது. போர்க்களத்தில் பொங்கியெழும் தூசியில், திடும் திடும் என்று விழும் குண்டுகளின் உலகம் அவள் அறியாதது. கரப்பான் பூச்சிக்கே அவள் பயப்பட்டாள்... தவளைக்குப் பயப்பட்டாள். ஹா, ஹா, அவளுக்குப் பேய் பிசாசு பற்றிய பயங்களும் அதிகம்... அவனுக்குச் சிரிப்பாய் இருக்கும்.
சிலருக்கு சும்மாவாச்சும் அழுது அரற்றுவது பிடிக்கிறது. சிங்காரி அந்த வகை... இப்போது அவளைச் சமாளிக்க முடியாது. என்னை நேரில், அதுவும் செயற்கைக் காலோடு, அல்லது தோள்க் கட்டைகளோடு பார்த்தால்... அவனால் அதை யோசித்தே பார்க்க முடியவில்லை.
அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்திருக்கலாம், என்றிருந்தது. அவள் மனசு சற்று அதில் திரும்பும். எதற்கும் வழியில்லாமல் இந்த சோகத்தை அவள் வாழ்நாள் பூராவும் சுமந்து திரிய வேண்டியிருந்தது.
இப்போது கையால் பிடித்து எழுத ஓரளவு முடிந்தது. தான் தெம்பாய் இருப்பதாகவும் விரைந்து குணமாகி வருவதாகவும் சரவணன் எழுதினான். என்னைப் பற்றி நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடாது, என்றும், உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டான். சற்று வெட்கத்துடன், அன்பு முத்தங்கள், என்று எழுதியபோது, தனக்கே சிரிப்பு வந்துவிட்டது.
அகில இந்திய வானொலியில் ஊரிலானால் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாட்டுக்கு முன்னால் விரும்பிக் கேட்ட நேயர்கள் பேர் சொல்வார்கள் – எப்பவாவது அதில் விராலிமலை சரவணன், என்கிற மாதிரி பேர் சொன்னால், சிங்காரி சிரிப்பாள். “நீங்களா எழுதிப் போட்டது?” என்று கிண்டலடிப்பாள். அவளது சிரிப்பு அவனுக்கு ஆச்சரியமாய் இருக்கும். இப்போது அவன் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது.
செய்திகளில், இறந்துவிட்ட வீரர்களில் ஒரு பெயராக “விராலிமலை சரவணன்” என்று ஒரு பெயர் சொன்னார்கள். எந்தப் படை தெரியவில்லை.
இது எந்தப் பக்க விராலிமலை தெரியவில்லை.
அன்றிரவு அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது, ஊரில் இருந்து தந்தி வந்தது.
“தந்தியா, எனக்கா?” என்று பதட்டமாய் வாங்கினான். சிங்காரியின் அப்பா தந்திருந்தார்.
“உங்கள் கடிதம் இப்போது, தாமதமாக வந்தது. அதற்குள் வானொலிச் செய்தி கேட்டு, சிங்காரி பதறிப் போனாள்... சிங்காரி நேற்றிரவு மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டாள்.
சத்தம் வராதிருக்க அவசரமாய் ரப்பர் துண்டை எடுத்துக் கடித்தான்.
நன்றி தாமரை மாத இதழ்
(யுத்தம் - சிறுகதைத் தொகுதி)
storysankar@gmail.com
91 9789987842

Comments

Popular posts from this blog