
முற்றுப்பெறாத ஓவியம் எஸ்.சங்கரநாராயணன் * ச ரவணனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இது எதிர்பாராதது அல்ல. ஐ. ட்டி துறை என்றாலே, அதுவும் நல்ல சம்பளத்தில் வேலை என்று அமர பெங்களூரு அல்லது ஹைதராபாத் என்றுதான் இந்தியாவில் நிலைமை. இந்த நாளை அம்மா எதிர்பார்த்திருந்தாள். அவன்அப்பாவின் கடைசிச் சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம். இதுவும் அம்மா எதிர்பாராதது அல்ல. இன்ட்டர்வியூ என்று கல்லூரிக்கே வந்து ஆளெடுத்தார்கள். நான்காம் ஆண்டு கடைசி செமிஸ்டர். முதலில் நுழைவுத் தேர்வு. மதியத்துக்கு மேல் நேர்முகத் தேர்வு. அலுவலகத்தில் இருந்து உணவு இடைவேளையில் அம்மா பேசினாள். காலையில் எப்படிப் பண்ணினே? ஆன்லைன் டெஸ்ட். தேறி யிருந்தான். மதியம் நேர்முகத் தேர்வு. 120 பேர் எழுதியதில் பத்துப் பேருக்கு தான் நேர்முகத் தேர்வுக்கு வந்தது. “அதெல்லாம் நீ ஜெயிச்சுருவேடா...” “அதெப்பிடிம்மா?” “ஏன்னா, நீ என் பிள்ளை. என்னைமாதிரி... புத்திசாலி,” என்றாள். அவன் ஜெயிப்பது அவளுக்கு, தானே ஜெயிக்கிற மாதிரி, என்று தோன்றியது. “சாப்பிட்டியாடா?” என்று அடுத்த கேள்வி... மகன்கள் உலகெங்கிலும் ஒரே மாதிரி அமைவது இல...