முற்றுப்பெறாத ஓவியம்
எஸ்.சங்கரநாராயணன்
 *
ரவணனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இது எதிர்பாராதது அல்ல. ஐ. ட்டி துறை என்றாலே, அதுவும் நல்ல சம்பளத்தில் வேலை என்று அமர பெங்களூரு அல்லது ஹைதராபாத் என்றுதான் இந்தியாவில் நிலைமை. இந்த நாளை அம்மா எதிர்பார்த்திருந்தாள். அவன்அப்பாவின் கடைசிச் சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம். இதுவும் அம்மா எதிர்பாராதது அல்ல.
இன்ட்டர்வியூ என்று கல்லூரிக்கே வந்து ஆளெடுத்தார்கள். நான்காம் ஆண்டு கடைசி செமிஸ்டர். முதலில் நுழைவுத் தேர்வு. மதியத்துக்கு மேல் நேர்முகத் தேர்வு. அலுவலகத்தில் இருந்து உணவு இடைவேளையில் அம்மா பேசினாள். காலையில் எப்படிப் பண்ணினே? ஆன்லைன் டெஸ்ட். தேறி யிருந்தான். மதியம் நேர்முகத் தேர்வு. 120 பேர் எழுதியதில் பத்துப் பேருக்கு தான் நேர்முகத் தேர்வுக்கு வந்தது.
“அதெல்லாம் நீ ஜெயிச்சுருவேடா...”
“அதெப்பிடிம்மா?”
“ஏன்னா, நீ என் பிள்ளை. என்னைமாதிரி... புத்திசாலி,” என்றாள். அவன் ஜெயிப்பது அவளுக்கு, தானே ஜெயிக்கிற மாதிரி, என்று தோன்றியது. “சாப்பிட்டியாடா?” என்று அடுத்த கேள்வி... மகன்கள் உலகெங்கிலும் ஒரே மாதிரி அமைவது இல்லை. ஆனால் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்... என புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சரவணன்.  
அப்பா ஒரு விபத்தில் இறந்து போனார். அந்த ட்டூ வீலர், அவர் ஓட்டிப் போனது. அதைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அப்போது அவனுக்கு வயது பதிமூன்று பதினாலாக இருக்கலாம். விவரம் தெரிந்தும் தெரியாததுமான வயசு. அவனது முதல் திகைப்பு அம்மா இந்தக் காலகட்டத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறாள், என்பதாக இருந்தது. அப்பா பார்த்துவந்த வேலை அவளுக்குக் கிடைக்கும். படித்திருக்கிறாள் என்றாலும் வேலைக்கு என வெளி யிறங்காதவள். தவிரவும் பணத்தின் பின்னாடி ஓட வேண்டாம்... என்பதாக அம்மாவின் நிதானம் அவனுக்கு எப்பவுமே ஆச்சர்யமான விஷயம். தாலிக்கொடி தவிர மோதிரம் நெக்லேஸ் என்று அநாவசிய நகைகள் அணியாதவள். எளிய பருத்திப் புடவைகளே அவளுக்குப் பாந்தமாய் இருந்தது.  அப்பாவும், அம்மா வேலைக்குப் போக வற்புறுத்தவில்லை. என் சம்பளத்தில் உன்னால் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமானால், எனக்கு சரிதான்... என்பதாக அவர் சொன்னார். ஆனால் அம்மா படித்த படிப்பு வீணாகிறதே... என்கிறதாக அவருக்கு மனத்தாங்கல் இருந்தது. “நீங்கன்னாப்ல படிச்ச படிப்புக்கான வேலையா பாக்கறீங்க? கெமிஸ்ட்ரி படிச்சீங்க. அக்கவுண்ட்ஸ் பாக்கறீங்க?” என்று அம்மா சிரிப்பாள்.
அம்மா எப்போது சிரித்தாலும் அவள் உள்ளூற யோசிக்கிறாள் என்பதாக அது மனசில் படும். அம்மா பிபிஏ படித்தவள். ஒரு அவசரப் பிரச்னை என்றாகிறபோது அம்மா சட்டென ஒரு தீர்வு தருவாள். ஆச்சர்யமான அம்மா. அவனுக்கு தன் சிறு வயதில் தனக்கு நடந்த ஒரு ஆபரேஷன் நினைவு வந்தது.
அவனது சிறுநீர்க் குழாய்க்கு மேல் எதோ நரம்பு, இரத்த நாளாமா நினைவில்லை, ஓடி அவன் ஒண்ணுக்குப் போகும் தோறும் வலி கண்டது. ஒண்ணரை இரண்டு வயது வரை ஒண்ணுக்குப் போகும் போதெல்லாம் அழுவான். மருத்துவரிடம் காட்டியபோது சிறு ஆபரேஷன் பண்ணி சரிப்படுத்தி விடலாம் என்றார்கள். ஆபரேஷன் தியேட்டரில் அவனுக்கு மயக்க மருந்து தந்தாலும் அவன் மயக்கமடைய வில்லை. திமிறிக் கொண்டிருந்தான். அவனை நர்ஸ்கள் இரண்டு பேர் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஒருமணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து அவனைத் துவாலையில் சுற்றி எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஒடிவந்தாள் அம்மா. அவனைப் பூவாய் வாங்கிக்கொண்டு “அம்மா இருக்கேன்டா... தூங்கு” என்றாள். கண்ணீர் உறைய உடனே தூங்கிப்போனான்.
அதன்பின் ஒரு பதினைந்து பதினாறு மணி நேரம் அவன் ஒண்ணுக்குப் போகவே இல்லை. போனால் வலிக்கும் என்றே உள்ளூற பயந்து போகாமலேயே இருந்தான். அப்போது அம்மா செய்த உபாயம்... அம்மா அவனைக் கூட்டிப்போய்  பாத்ரூமில் நிறுத்தினாள். தண்ணீர்க் குழாயில் இருந்து நீரை மிக மெல்லிசாகச் சொட்ட விட்டாள். அவன் குழாயில் இருந்து மெல்லமாய் தண்ணீர் சொட்டுவதைப் பார்த்துக் கொண்டே யிருந்தான். அவனால் மேலும் அடக்க முடியவில்லை. சர்ர் ரென்று குதிரை அவிழ்த்துக் கொண்டு கிளம்பினாப் போல...
என்னவோ கர்நாடகாவில் காவிரிக்குத் தண்ணீர் திறந்து விட்டாப் போல... எல்லாரும் சிரித்தார்கள்.
பரவால்லியே, டாக்டருக்கே ஐடியா குடுப்பே போலுக்கே, என அம்மாவைப் பாராட்டினார் அப்பா. அப்பாவுக்குப் பின் அவர்சார்ந்த அக்கவுண்ட்ஸ் துறையில் அவள் அமர அவள் படிப்பு, பிபிஏ உபகாரமாயிற்று.
அவனுக்குப் படித்த படிப்புக்கான வேலை கிடைத்தது, என்பதில் அவளுக்குத் திருப்தி.
அம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வில்லை. அவளிடம் மறுமணம் பற்றிப் பேச அவன் விரும்பினாலும் வயது காரணமான தயக்கம் இருந்தது. முதலில் அப்பாவின் விபத்து தந்த அதிர்ச்சி, யாருக்குமே இப்படி குரூரமான சாவு வரக் கூடாது அல்லவா, அதில் இருந்து அவள் மீண்டுவர வேண்டி யிருந்தது. அவன் முன்னால் அவள் அழமாட்டாள். அப்பாவின் இழப்பைப் பற்றி, பெரிதும் துவண்டாப் போல அவள் காட்டிக் கொள்வதே இல்லை, என்ற நிலையில் அவனால் அவளுக்கு இன்னொரு கல்யாணம் என்று பேச்செடுக்க வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது.
அம்மாவின் ஆசைகள் என்னென்ன... என அவன் அறிந்துகொள்ள விரும்பினான். அப்பாகாலம் முடிந்தது, என்பதற்காக அவள் தன்னைச் சுருக்கிக் கொண்டாளோ, என அவனுக்குக் கவலை. இதெல்லாம் மூடு மந்திரமாகவே இருக்கிறாப் போலாச்சு. காலமும் கடந்து அவன் கல்லூரிப் படிப்பும் முடித்து இப்போது வேலைக்கும் வெளியே கிளம்பி விட்டான்.
அப்பாகாலத்துக்குப் பிறகு அவள், அப்பாவும் அம்மாவுமாய்த் தன்னை வரித்துக் கொண்டாப் போலிருந்தது.  பெண்களுக்கு, குழந்தை பிறந்த உடனேயே ஒரு ரசவாதம் வந்து அவர்கள் முழுக்க அம்மாக்களாக உருமாறிப் போகிறார்கள். ஆண்களுக்கான வெளியுலகம் அவர்களுக்குத் தெரியாது. அதுவும் வேலைக்குப் போகாத பெண்களுக்குத் தெரிவது இல்லை. அதுபற்றி அவர்கள் அக்கறைப் பட்டதும் இல்லையோ என்னவோ.
அப்பா இல்லாத கவலையே தெரியாமல் அவனை அவள் பார்த்துக் கொண்டாள். அந்த ஆதுரத்தில் அம்மாவின் கவலைகளை அவன் சட்டைசெய்யாமலேயே வளர்ந்து விட்டதாக லேசான வெட்க உணர்வுக்கு அவன் இப்போது ஆட்பட்டான். இதுநாள் வரை அம்மாவைப் பிரிந்ததே யில்லை. இப்போது வேலைநிமித்தம் அவர்கள் பிரிய வேண்டி வந்தது. அம்மாவை இனி வேலைபார்க்க வேண்டாம், என்றுவிடலாமா என்று கூடத் தோன்றியது. அட அம்மாவிடம் பாசம் என்பதாக என்ன ஒரு சுயநலமான சிந்தனை... என்றும் உடனே தோன்றியது.
கேட்டால் அம்மா சிரிப்பாள்... அவள் சிரிப்புக்குப் பின்னால் நிறைய மர்மங்கள் இருக்கும். அது ஆதங்கமான சிரிப்பாக நாம் உணர முடியாத அளவு அவளுக்குள் கடல் ஒன்று உறங்கிக் கொண்டிருக்கிறது. அம்மாவை முற்றும் யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது... என்று தோன்றியது.
திலகா காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவளது அப்பாஅம்மாவுக்கு அந்தக் காதல் பிடிக்கவில்லை. நல்ல அழகு அம்மா. அப்பா, அவளைப் பார்க்க, கறுப்பு தான். ஆனால் ‘அவர்கள்’ குடும்பத்துக் கறுப்பு அது. இதுகுறித்து விசனப்பட ஏதுமில்லை தான். சட்டென அவர்கள் இருவரையும் பார்க்க, அவளது அப்பாஅம்மாவுக்கு, ஒரு பொருத்தமின்மை தட்டியதோ என்னவோ? வேறு சாதி என்றானதில் அவர்கள் முகம் சுளித்திருக்கலாம். சாதிப் பெருமை, சாதி அடையாளங்கள், சடங்குகள் ஒரு வாழ்க்கையை முழுமையாக ஆக்குகின்றன... என அவர்கள் நம்பி யிருக்கலாம்.
அம்மா கல்யாணம் ஆகிப் போனால் எந்த மாதிரி சடங்குகளில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்? தங்கள் வழக்கங்களை விட்டுக் கொடுத்துவிட நேரிடுமே... என்பதில் அவர்கள் ஆயாசப் பட்டார்கள்... என்பதாக அவன் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அம்மாவழி சொந்தங்களை சந்தித்ததே இல்லை. அவர்களோடு பழகிக் கொள்ளவே வாய்ப்பு இல்லாமலாயிற்று. அம்மா அதை விரும்பவில்லை. தன் குடும்பம் சார்ந்த பேச்சுக்களை அவள் தவிர்த்தாள். அந்தக் காலங்களை தனக்குள்ளேயே அழித்துக் கொண்டிருந்தாள் அவள், என்று தோன்றியது. ஆகவே அதுசார்ந்து அவனும் தன்னார்வங்களைச் சுருக்கிக் கொள்ள நேர்ந்தது.
“பெங்களூரிலா?” என்று அம்மா கேட்டாள். தொலைபேசியில் தான் என்றாலும் அம்மா யோசிப்பதாகத் தெரிந்தது. “ஆமாம்மா. ஏன்?” என்றான். “சரி. ஒண்ணுமில்லடா... எப்பிடியும் நீ வேலைன்னு போனா என்னைப் பிரிய வேண்டி யிருக்கும். நான் இதை எதிர்பார்த்தேன்...” என்றாள். என்றாலும் அது அல்ல காரணம், என்று அவனுக்குத் தோன்றியது.
எதையும் காட்டிக் கொள்ளாத அம்மா. என்னதான் நெருக்கமான அன்பைக் காட்டிக் கொண்டாலும் சட்டென விலகிக் கொள்ள வல்லவள். அவள் உலகம் அது. அந்தரங்கமான உலகம். அதை அவளைத் தவிர யாரும் அறிந்துகொள்ள முடியாதிருந்தது. அப்பாவுக்கு அவள் ஒரு புதிர்தான். சில தெளிவுகள் தீர்மானங்கள் அவளிடம் இருந்தன. மகனிடம் பாசமும் அதேசமயம் கண்டிப்பும் காட்டிய அம்மா. அவளிடம் கேள்விகள் கேட்க முடியாது என்பது அல்ல. பதில் சொல்வதும் சொல்லாததும் அவள் இஷ்டம். அவள் கையில் இருந்தது அது.
ஒரு போத்தலின் தொட முடியாத உட்பக்கம் அவள் இதயம்!
அவளது அப்பாஅம்மா பற்றிய செய்திகள் அவனிடம் இல்லை. இப்போது, தான் வேலைக்கு என்று வெளியே இறங்கிவிட்ட சூழலில் அவனுக்கு ஏனோ அவர்களைச் சந்திக்க ஆவல் ஏற்பட்டது. அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. இதுகுறித்து அம்மாவிடம் கேட்கவோ சொல்லவோ வேண்டாம் என்றிருந்தது. நான் பெரிய பையன்... என்று தனக்கே சொல்லிக் கொண்டான். அம்மா அரவணைப்பில் தூங்கிய சரவணன்... என்று கூடவே நினைப்பு வந்தது. இருக்கட்டும், அது ஒரு காலம்...
வேலை என்று வெளியே இறங்கிய பின் நான் இன்னும் என் சிறகுகளை விரிப்பேன். அவனது அப்பாவழி சொந்தங்களை அதிகம் அறிந்து கொண்டிருந்தாலும் அத்தனை நெருக்கமாய் அவர்கள் இழைந்து வரவில்லை. அம்மாவழி தாத்தா பாட்டி... அவர்களை அறிந்து கொண்டால் என்ன? அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும், அட அதையும் பார்த்து விடுவோம்... என்றிருந்தது.
பெங்களூரா, என்று அம்மா அவனுக்கு வேலை கிடைத்த போது கேட்டது அவனுக்கு நினைவு வந்தது. அதன் பதில் அவனுக்கு பெங்களூரில் கிடைத்தது. அவனது கம்பெனி ‘ரிப்ளிங்.’ கோரமங்கலாவில் அலுவலகம் அதற்கு. அந்த வளாகத்தில் இருந்த இன்னொரு கம்பெனியில் இருந்து அவனுக்குப் புதிதாய் சிநேகம் கிடைத்தது. ராமச்சந்திரன். தமிழ் ஆள் என்பதையும் மீறி, ராமச்சந்திரன் ஓர் உற்சாகமான மனுசன்.
“சரவணன்?”
“ஆமாம்” என்று புன்னகையுடன் அவன் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான்.
“ஐம் ராமச்சந்திரன்...” எனப் புன்னகைத்தவனை அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது. அவன் தமிழ் பேசியதா, அந்த அறிமுக எளிமையா தெரியவில்லை. வேறெதாவது கூட இருக்கலாம்.
“எப்பிடி இருக்கு பெங்களூரு?”
சில மதிய வேளைகளில் அவனுடன் போய்ச் சாப்பிட்டான் சரவணன். வேலைசார்ந்த விஷயங்கள் தவிர வேறெதும் அவர்கள் பேசிக்கொள்ள வில்லை. எதும் தமிழ்ப்படம் சனி ஞாயிறுகளில் அவனுடன் போய் வந்தான். சரவணன் ஒரு நண்பனுடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தான். கன்னட நண்பன். அவனிடம் விளையாட்டு போல கன்னடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தான் சரவணன். அவனும் தமிழ் பேச முயற்சி செய்வது... ரெண்டு பேருக்குமே வேடிக்கையான பொழுதுபோக்காயிற்று.
ஒருநாள் ராமச்சந்ததினும் வந்து அவனது அறையைப் பார்த்தான். அன்று அவனுடன் சதுரங்கம் ஆடினான் சரவணன்.
கிளம்பும்போது உரிமையுடன் “வீட்டுக்கு வா சரவணா...” என்றான் அவன் ஒருமையுடன். அந்த எளிமையும் பிடித்திருந்தது. அதில் அன்பு இருந்தது. “பை எனி சான்ஸ், உங்களுக்கு என்னை முன்னமே தெரியுமா?” என்று கேட்டான் சரவணன். அவன் புன்னகைத்தான். தலையாட்டினான். ஆனால் பதில் சொல்லவில்லை.
ராமச்சந்திரன் அவனது அம்மா திலகாவின் தம்பி. இவனுக்கு மாமா உறவு. ராமச்சந்திரனின் வீட்டுக்குப் போன பின்தான் அந்த விவரங்கள் தெரிந்தன அவனுக்கு. அவன், ராமச்சந்திரன் பெங்களூருவில் இருப்பதை ஒருவேளை அம்மா அறிந்திருக்கலாம்... என்று தோன்றியது. அதுபோலவே ராமச்சந்திரனும் அக்கா பற்றி, சரவணன் பற்றி தகவல்களைத் தேடிப் பெற்றிருக்கவும் கூடும். என்றாலும் அவன் அம்மாவழி உறவுக்காரர்கள் என்று யாரும் அவன் வீட்டுக்கு வந்து சரவணன் பார்த்தது இல்லை.
தாத்தா பாட்டி மதுரையில் இருந்தார்கள். அது சரவணனுக்கே தெரியும். ராமச்சந்திரனுக்குத் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கல்யாணப் பத்திரிகை வந்த நினைவு இல்லை. அல்லது அம்மா அதை மறைத்திருக்கலாம். ராமச்சந்திரன் வீட்டுக்கு சரவணன் போயிருந்தபோது தாத்தா பாட்டியும் பெங்களூரு வந்திருந்தார்கள். சரவணனே எதிர்பாராத சந்திப்பு அது. அவனுக்கு அப்படியொரு சந்திப்பு நடைபெறுவதில் ரொம்பக் காலமாகவே ஆர்வம் இருந்தது. என்றாலும் இந்தத் திடீர் நிகழ்வு அவனை நெகிழ்த்தி விட்டது.
ராமச்சந்திரனின் வண்டியில் போய் இறங்கினார்கள். சிவாஜி நகரில் இருந்தான் ராமச்சந்திரன். முதலில் கதவைத் திறந்து அவர்களை வரவேற்றது பத்மினி. ராமச்சந்திரனின் மனைவி. பின்னாடியே முண்டா பனியன் அணிந்த பெரியவர் ஒருவர் எழுந்து வந்தார். அவரைப் பார்த்ததுமே அவனுக்கு மீண்டும் அந்த நெருக்க உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கே.
“உங்க அப்பாவா?” என்றான் சரவணன்.
“ஆமாம்...” என்ற ராமச்சந்திரன் புன்னகையுடன் “உங்க தாத்தா...” என்றான்.
“வா சரவணா...” என்று அவர் பின்னாலிருந்து குரல். பாட்டி. சரவணனுக்கு சிலிர்த்தது. கைகூப்பி அப்படியே நின்றான். கண்ணில் நீர் கோர்த்து விட்டது. இந்தக் கணங்களில் வார்த்தைகளுக்கு அவசியமே இல்லை. அழுகை வந்தது. விக்கி விக்கி அழலாம் போலிருந்தது. அவனை அணைத்துக் கொண்டார் ரத்தினம்.
பாட்டி போய்க் காபி கலந்தாள்.
“ராமு சொன்னான்... நீ வேலைக்கு இங்கியே வந்திட்டேன்னு... அதான்... இந்த முறை உன்னைப் பார்க்கன்னே தான் பெங்களூர் வந்தோம்” என்றார் ரத்தினம்.
காலம் அவர்களை அவர்களது இறுக்கத்தைத் தளர்த்தி யிருக்கலாம். வயது ஆனது கூட அவர்களை மாற்றி யிருக்கலாம். ராமச்சந்திரன் அவர்களை நெகிழ்த்தி யிருக்கலாம். “உன்ட்டேர்ந்து ஒரு எதிர்பாராத அதிர்ச்சி நான் எதிர்பார்த்தேன் ராமு. ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை...” என்று சிரித்தான் சரவணன்.
அவனது குழந்தை மகேஸ்வரி சரவணனோடு அப்படி ஒட்டிக் கொண்டது. மற்றவர்களோடு அவன் பேசவே விடவில்லை அது. ஒரே கோலாகலமும் சிரிப்புமாக அமைந்து விட்டது அதற்கு. குழந்தைகளுக்கு எப்பவுமே வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தபடி இருக்க வேண்டும். அப்பா அம்மா திட்ட மாட்டார்கள். இஷ்டப்படி ஆட்டம் போடலாம்.
“எப்பிடி இருக்கா உங்கம்மா?” என்று கேட்டார் ரத்தினம். “பரவால்ல. பிள்ளைய நல்லா தான் வளர்த்திருக்கா” என்று தன்னிடமே போலச் சொல்லிக் கொண்டார். “அவ ஒரு முடிவு பண்ணினா பண்ணினது தான். பிடிவாதக்காரி. அவ ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை...  நாங்க உங்களைப் பார்க்க வந்தா, அவ எப்பிடி எடுத்துப்பான்னு எங்களுக்கே பயம் உண்டு...”
“அம்மா கோபப்பட்டால் அதுல ஒரு நியாயம் இருக்கும் தாத்தா...” என்றான் சரவணன். தலையாட்டியபடி பெருமூச்சு விட்டார் ரத்தினம்.
“அம்மாவப் பத்திச் சொல்லுங்க தாத்தா...” என்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான் சரவணன். மகேஸ்வரி உடனே வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டது.
திலகா ரொம்ப தத்ரூபமா படம் வரைவாள்... என்று கேள்விப் பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. “என்னை, உங்க பாட்டியை, நம்ம வீட்டு மாட்டை, கிணற்றடியைன்னு அவ வரைஞ்சது இன்னும் ஊர்ல இருக்கு. அவ டிராயிங் மாஸ்டர் இப்ப கூட வீட்டுக்கு வந்தால் அவளைப் பத்தி நாலு வார்த்தை பேசிட்டுப் போவார்...” என்றார் தாத்தா. கல்யாணத்தோடு அவற்றை யெல்லாம் அவள் ஏறக்கட்டியது ஏன் தெரியவில்லை. முற்றிலும் வேறு வாழ்க்கை என அம்மா தன்னை மாற்றிக் கொண்டாளா? அந்த ஆவேசம் ஏன் தெரியவில்லை.
அப்பாவிடம் அவள் கொண்ட காதலின் வலிமை அது... என்று இருக்கலாம்.
அன்றைக்கு ராத்திரி தாத்தாவைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான் சரவணன்.
கிளம்பும்போது எல்லாருமாக அவன் மொபைலில் ஒரு செல்ஃபி. அவனது மொபைலில் இருந்த திலகா படத்தையும் எல்லாருக்கும் காட்டினான்.
அடுத்தமுறை ஊருக்குப் போனபோது ஒரு வண்ணங்களின் பெட்டியும் தூரிகையும் வாங்கிப் போனான் சரவணன். கெட்டி அட்டைக்காகிதங்கள் கூடவே.
“என்னடா இது?”
“படம் வரையப் போறேம்மா...”
“நீயா?” என்று சிரித்தாள் அம்மா. “உனக்கு என்ன தெரியும்?”
“கத்துக்கலாம்னு பாக்கறேன்...” என்றபடி அந்தக் காகிதங்களை எடுத்து மேசையில் வைத்தான். வண்ணப் பெட்டி. கூடவே சிறு கிண்ணம். தண்ணீர் நிரப்பி அதைத் தூரிகையில் தொட்டு வண்ணங்களைக் குழைத்து...
அம்மா அதையெல்லாம் வேடிக்கை போலப் பார்த்துக் கொண்டே யிருந்தாள்.
“என்னம்மா பாக்கறே?”
“உனக்குப் படம் வரையத் தெரியுமா?”
“நான் உன் பிள்ளைம்மா...” என்றான் சரவணன் சிரித்தபடி.
“ஊர்ல தனியா போரடிக்குதா... அதான் இப்டி எதாவது...”
வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவே அவனுக்குத் தெரியவில்லை. அம்மா எல்லாம் தள்ளி நின்று பார்த்தபடி யிருந்தாள்.
அந்த முறை நான்கு நாட்கள் ஊரில் தங்கி யிருந்தான். அசட்டுப் பிசட்டென்று அவனது ஓவியத் தீற்றல்களை அவள் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.
“சரவணா?”
“என்னம்மா?”
“வா. இப்பிடி உக்காரு...”
அவனை உட்கார வைத்து அவளே வரைய ஆரம்பித்தாள்.
அவனுக்கு சிறு வயதில் தனக்கு நடந்த ஆபரேஷன் நினைவு வந்தது.
*

Comments

Popular posts from this blog