
நாலு விரற்கடை எஸ்.சங்கரநாராயணன் * நே ற்றே செல்வராஜிடம் போய்ச் சொல்லிவிட்டு வந்திருந்தாள். “வீட்டுக்கே வந்திட்டியா?” என்றான் அவன் எரிச்சலுடன். அவள் திரும்பவும் அவனைப் பார்த்து ஒரு பலவீனமான புன்னகையை வீசினாள். “அதான்... பாத்து செய்யி செல்வா. ரொம்ப கஷ்டம்...” அப்பவும் செல்வராஜ் “வீட்டுப் பக்கம் வராதே” என்றான். பின் அவளைப் பார்த்து இரக்கப் பட்டாப் போல “நாற்பது நாற்பத்தியஞ்சுன்னா வேண்டாங்கறாங்க மாலதி. நான் என்ன செய்யட்டும்?” என்றான். “நீ ஏன் வயசச் சொல்றே?” என்று சிரித்தாள், நகைச்சுவையாகப் பேசுகிற பாவனையில். அவனும் விடாமல் “நான் சொல்ற வயசே, கம்மியாத்தான் சொல்றேன்...” என்றான். உண்மையில் அவளுக்கு இன்னும் வயசு நாற்பதே தாண்டவில்லை. ஆனால் வறுமை உடலை நெகிழ்த்தி அயர்ச்சி காட்டியது. சிறு பவுடர் என்கிற அலங்காரங்கள் கூட ஒட்டவில்லை. அவள் புடவை கட்டினால் கொடிக்கம்பத்தில் கொடி போல் இருந்தது. அவன் பேசுகிறதைப் பார்த்தால் நல்ல வார்த்தை சொல்வான் என்று தோன்றவில்லை. யாரிடமும் இரந்து இப்படி கேட்டுநிற்பது அவளுக்குப் பிடிக்காது. ஆனால் காலம் திரும்பத் திரும்ப அவளை அப்படித்தான் மண்டியிட வைத்த...