நாலு விரற்கடை
எஸ்.சங்கரநாராயணன்
 *
நேற்றே செல்வராஜிடம் போய்ச் சொல்லிவிட்டு வந்திருந்தாள். “வீட்டுக்கே வந்திட்டியா?” என்றான் அவன் எரிச்சலுடன். அவள் திரும்பவும் அவனைப் பார்த்து ஒரு பலவீனமான புன்னகையை வீசினாள். “அதான்... பாத்து செய்யி செல்வா. ரொம்ப கஷ்டம்...” அப்பவும் செல்வராஜ் “வீட்டுப் பக்கம் வராதே” என்றான். பின் அவளைப் பார்த்து இரக்கப் பட்டாப் போல “நாற்பது நாற்பத்தியஞ்சுன்னா வேண்டாங்கறாங்க மாலதி. நான் என்ன செய்யட்டும்?” என்றான். “நீ ஏன் வயசச் சொல்றே?” என்று சிரித்தாள், நகைச்சுவையாகப் பேசுகிற பாவனையில். அவனும் விடாமல் “நான் சொல்ற வயசே, கம்மியாத்தான் சொல்றேன்...” என்றான். உண்மையில் அவளுக்கு இன்னும் வயசு நாற்பதே தாண்டவில்லை. ஆனால் வறுமை உடலை நெகிழ்த்தி அயர்ச்சி காட்டியது. சிறு பவுடர் என்கிற அலங்காரங்கள் கூட ஒட்டவில்லை. அவள் புடவை கட்டினால் கொடிக்கம்பத்தில் கொடி போல் இருந்தது.
அவன் பேசுகிறதைப் பார்த்தால் நல்ல வார்த்தை சொல்வான் என்று தோன்றவில்லை. யாரிடமும் இரந்து இப்படி கேட்டுநிற்பது அவளுக்குப் பிடிக்காது. ஆனால் காலம் திரும்பத் திரும்ப அவளை அப்படித்தான் மண்டியிட வைத்தது. புருசங்காரன் நாலு வருசம் முன்னால் அவளை விட்டு ஓடிப்போனான். மேஸ்திரி வேலை என்று அவன் வெளியூர் போகிற வழக்கமும் உண்டு. அங்கே யாராவது பெண்ணோடு சிநேகமாகி யிருப்பான். இவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டு அவன் ஓடிப்போனான். போன் பண்ணிப் பார்த்தாள். அவன் எடுக்கவில்லை. பிறகு போன் எண்ணையே மாற்றிக் கொண்டுவிட்டான். அத்தோடு சனி விட்டது என நினைத்தானா தெரியவில்லை.
வீடு கூட்டிப் பெருக்குதல், வீட்டோடு வேலைக்காரி என்றான வேலைகள் அவளுக்கு அமையவில்லை. குழந்தையை யாரிடம் விட்டுவிட்டுப் போக முடியும்? எவ்வளவு நேரம் விட்டுவிட்டுப் போக முடியும்? வேலைக்குப் போகிற இடத்தில், குழந்தையைக் கூட்டி வராதே, என்று கண்டிப்பாகச் சொல்கிறார்கள். போன இடத்தில் அவர்கள்வீட்டுக் குழந்தை எதாவது சாப்பிட்டால் இது பார்த்துக்கொண்டே நிற்கிறது. அவர்களுக்கு எரிச்சலாய் இருந்தது அது. இருந்த கஷ்டத்தில் ஏதொவொரு கெட்ட நேரம், சபலம்... ஒரு வீட்டில் மோதிரம் திருடி, மாட்டிக் கொண்டாள். அத்தோடு வீட்டுவேலை என்று அவளை அழைக்க யாருமில்லை.
செல்வராஜை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தது யார் நினைவில்லை. அவளைமாதிரிப் பெண்கள், இந்தமாதிரி, புருஷனால் திடீரென்று நிர்க்கதியாக விடப்பட்டவர்கள் எப்படியோ வப்பாட்டிகளாக, ரெண்டாந் தாரமாக அல்லது கள்ளக் காதலிகளாக செட் ஆகி விடுகிறார்கள். அவள் கணவனுக்கும் இப்படியொரு பெண் மாட்டி யிருக்கலாம். முதல் தடவையாகக் காதலிப்பதை விட இது அவர்களுக்கு சுலப சாத்தியமாக இருந்தாப் போலிருந்தது. அவளுகளுக்கு மாத்திரமல்ல, அந்த ஆம்பளைகளுக்கும் தான். தப்பு என்றாலும் தப்பானதே நிறையப் பேருக்கு வேண்டியும் இருக்கிறது. அதைத் தப்பு என்று தப்பு  செய்யாதவர்கள், தப்பு செய்ய லாயக் இல்லாதவர்கள் சொல்லித் திரிகிறார்கள். உலகம் அப்படி. இதில் குறைசொல்ல ஏதும் இல்லை. குறைசொல்லி விலகிப் போய்விடத் தான் முடிகிறது. அவளைப் போலொத்தவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே விலக்கி வைக்கப் பட்டவர்களாய் இருக்கிறார்கள். சதா பசியுடனும், ஆதங்கத்துடனுமாய் இருக்கிறது வாழ்க்கை. இதில் என் வயிற்றில் பிறந்து தொலைத்த அந்தக் கலாவதி... அவளைப் பற்றி என்ன சொல்ல?
நாலாவது படிக்கிறாள் கலாவதி. அரசுப் பள்ளிக்கூடம். மதிய உணவு போடுகிறார்கள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று குறைப் படுகிறாள். இங்கே சாப்பிட எதுவுமே இல்லை. குறைப் படுகிறவளுக்கு என்ன பதில் சொல்ல என்று மாலதிக்குத் தெரியவில்லை. வீட்டில் இருக்கிற கஷ்டத்துக்கு அவளுக்கே யாராவது மதிய உணவு என்று போட்டால் நல்லது. பசி உள்மீனாய்த் திடீர் திடீரென்று துள்ளியது. சற்று அயர்ந்தாப் போலிருக்கும். பிரசவத்துக்குத் தயாரான குழந்தை போல உள்ளே ஒரு எத்து விடும் அவளை. திடுதிப்பென்று கண் இருண்டு உலகமே காணாமல் போய்விடும். பிறகு மெல்ல சாக்கடைக் கலங்கல் கலங்கி தெளிவு மீளும். அதுவரை என்ன நடக்கிறது என்றே புரியாத கிறுகிறுப்பு தட்டும். நடக்கையில் ஆளையே கீழே சரிக்கிற மயக்கம் தந்தது பசி.
ஒருநாள் வாய்ப்பு அமைந்தால் அதைவைத்து அடுத்த எத்தனை நாள் முடியுமோ ஓட்ட வேண்டி யிருந்தது. டாஸ்மாக் பக்கத்தில் மயங்கிய இருள் வேளைகளில் அவளே மயக்கமாய், பசியுடன் நிற்பாள். காத்திருப்பாள். உஷாரான பெண்டாட்டிகள் டாஸ்மாக்குக்கே வந்து கணவனை, வேட்டி நெகிழ்வதைச் சரிசெய்து தாங்கிப் போனார்கள். வேட்டி நெகிழ்தல் மாலதிக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வல்லதாய் இருந்தது. அதை அந்த பதிவிரதைகள், பெண்டாட்டிகள் ஒருவேளை அறிந்திருந்தார்களா தெரியாது.
சில சமயம் சின்னப் பிள்ளைகள் அமைவார்கள். கேட்ட தொகைக்குப் பேரம் பேசாமல் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் கடைசியில் கையில் இருப்பதைத் தருவார்கள். அவர்களோடு மல்லுக்கட்டுவது பெரும் பாடு. ரொம்ப இரக்கப் பட்டாப் போலப் பேசிவிட்டு கடைசியில் எல்லாம் மறந்து எழுந்து போய்விடுவார்கள். வாழ்க்கை கொடுக்கிற லட்சியப் பேச்சு எல்லாம் மறந்தே போய்விடும் அவர்களுக்கு. அவர்களுக்கே நல்ல வேலை கிடைக்காத அல்லாட்டத்தில் இருந்தார்கள். குடி முதலிய கெட்ட பழக்கங்கள் அவர்களுக்கே இருந்தன. இதில் அவள் அவர்களுக்கு போதை போல இன்னொரு கிக். அவ்வளவுதான். லட்சிய வெங்காயம் எல்லாம் எங்கே வந்தது அங்கே?
ஒரு 1100 மொபைல் வைத்திருந்தாள். பேச மாத்திரம் செய்யலாம் அதில். வருகிற சின்னப் பிள்ளைகளே இந்தக் காலத்தில் ஆன்டிராய்ட் போன் அது இது என்று வைத்திருந்தார்கள். அசந்தால் அவர்கள் அதிலேயே ஆபாசப் படங்களும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையே இப்போது திசைதிரும்பி விட்டது. பிட் படங்கள்... என்று அந்தக் காலத்தில் தியேட்டர்களில் காட்ட என்று ஒரு ஆம்பளைக் கூட்டம ரகசியமாய்க் கூடும். ஊரில் அன்றைக்கு பிட் படம் காட்டப்போகும் சேதி பரவி ரகசியமாய் மக்கள், பெரியாம்பளைகள் திரையரங்கத்தில் சேர்வார்கள்... என்று கேள்விப் பட்டிருந்தாள். எல்லாரது உள்ளங் கைக்கும் வந்து விட்டன பிட்டுப் படங்கள்.
அந்தத் திருப்தியிலேயே அவளைப் போன்றவர்களின் வாய்ப்புகள் இல்லாமலாயிற்று. குறைந்து போனது.
பலசரக்குக் கடை அண்ணாச்சி நல்ல மனுசன் தான். கல்லாவில் நெற்றி நிறைய விபூதியுடன் பவித்ரமாய் உட்கார்ந்திருப்பார். மனசுதான் சபல மனசு. அதனால் தான் அவளுக்கு அவசரம் என்று கடன் தருகிறார். அதையும் சொல்ல வேண்டும். அரிசி என்றோ பழைய காய்கறி என்றோ அவரிடம் கேட்டு நிற்பாள் மாலதி. வேறு வாடிக்கையாளர் இருந்தால், கடன் கேட்டு வந்தவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். அவசரப் பட முடியாது. அவமானங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளப் பழகியாக வேண்டி யிருந்தது. பசி என்றோ, பணத்தேவை என்றோ, வெளியே தேடி யிறங்கினால், பணம் கிடைக்கும், பசி அடங்கும் என்று எந்தவொரு நிச்சயமும் உத்திரவாதமும் இல்லாதிருந்தது. அழக்கூட முடியாத தன்னிலை தனக்கே வெறுப்பாய் இருந்தது. அழ வேண்டுமானால் ஆறுதல் சொல்ல யாராவது வேண்டி யிருக்கிறது. ஆறுதல் கிடைக்காத போது அழவும் பிடிக்கவில்லை. அண்ணாச்சி கடையில் கூம்பு வடிவப் பொட்டலத்தில் அரிசி வாங்கிக் கொள்ளும்போது அவர் கைகள் ஒன்றும் தெரியாத பாவனையில் அவளைச் சீண்டின. என்றாலும் அண்ணாச்சி அதற்கு மேல் தைரியம் இல்லாதவர். அவரை ஓரிரவு, என்று அழைக்க முடியாது. அது அவரது கௌரவப் பிரச்னை. ஆகா, நான் அப்படியாப்பட்ட ஆளா என்று முகம் சிவந்துவிடும். ஊரில் பாதிப்பேர் இப்படி பயத்திலேயே நல்லவர்களாக நடமாடுகிறார்கள். வாய்ப்பு வரும்போது அவர்கள் தங்களைக் கட்டாயம் நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
1100 ஒலித்தது. அது ஒலித்து ஒருவாரம் ஆயிற்று. ரீசார்ஜ் செய்யாமல் அவளால் யாருக்கும் அவுட்கோயிங் பண்ண இயலாதிருந்தது. அவசரம் என்றால் யாருக்காவது மிஸ்டு கால் தந்து அவர்கள் திரும்ப அழைக்க காத்திருந்தாள். குறித்திருந்தாள். அழைத்தது செல்வராஜ். “என்ன பண்ணிட்டிருக்கே?” அவன் அழைத்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “சும்மாதான். சொல்லுங்ணா” என்றாள் உற்சாகமாக. “பிக்னிக் ஓட்டல்...” என்றான். “சரிங்ணா” என்றாள். அங்கே கீழே உணவு விடுதியும் இருந்தது. பெரும்பாலும் வெளியூர் ஆட்கள் வந்து தங்குவார்கள். இருந்த பசிக்கு சாப்பாட்டு ஓட்டல் விடுதி என்கிறதே ஆசுவாசமாய் இருந்தது. “நல்லபடியா நடந்துக்க. திருப்பியும் பார்ட்டியே கூப்பிடறாப்ல...” என்றான் அக்கறையாய். பல சந்தர்ப்பங்களில் அவளைக் கூப்பிடாமல் அவனிடம் வேறு பெண்ணையும் கேட்பார்கள். இந்தத் தொழிலில் இதெல்லாம் சகஜம் தான். “நீ சொல்லணுமாண்ணா?” என்றாள். “சரி. ரிசப்ஷன்ல சொல்லுவாங்க. உன்னை அவங்களுக்குத் தெரியும்ல?” என்று கேட்டான். “நல்லாத் தெரியும்” என்றாள். “கிளம்பறேன் இப்பவே” என்றாள். “தேங்ஸ்ணா” என்று அவள் சொல்லுமுன் வைத்து விட்டான். ரிசப்ஷன் ஆட்களை அவளுக்குத் தெரியும். சில சமயம் அவர்களே கூட, இவன் இல்லாமல் அவளை அழைப்பது உண்டு.
இப்படி வெளியே கிளம்ப என்று, இருந்ததில் சுமாரான ஒரு புடவையைத் தனியே தயாராய் வைத்திருந்தாள். நைட்டி களைந்து புடவைக்கு மாறிக் கொண்டாள். எண்ணெய் பாட்டிலில் கீழே சிறிது எண்ணெய் இருந்தது. உள்ளங்கையில் குத்தி அந்த எண்ணெயைக் கையில் பரப்பித் தலையில் தேய்த்துக் கொண்டாள். முகம் கழுவி வாயைக் கொப்பளித்தாள். தலைவாரிக் கொண்டபோது ஆங்காங்கே நரைமுடிகள் கலவரம் தந்தன. அதற்கு என்ன அவசரம் தெரியவில்லை. உற்சாகமும் நம்பிக்கையுமாய் அவள் கிளம்பினாள். அந்த அனுபவம்... அது அவளுக்கு உற்சாகமானதாய் இருக்காது என்பது தெரியும். பொதுவாக உடல்ரீதியான காம இச்சைகள் அதிகம் உள்ளவர்கள் தாம் இப்படி வேறிடத்தில் வேறு பெண்ணைத் தேடுவார்கள், என்று தோன்றினாலும் வரும் நபர்கள் அப்படி பெரும்பாலும் அமைவது இல்லை. கிழவர்கள். ஆண்மைக்குறைவு உள்ளவர்கள். ஆண்மையற்றவர்கள்... என்று எதோவொரு பலவீனத்தில் வீழ்ந்து பட்டவர்களே அதிகம் வருகிறார்கள். தங்கள் தேவைகளை மனைவியிடம் சொல்ல முடியாதவர்களோ, மனைவியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் தோற்றுப் போனவர்களோ தான் அவர்கள். தோற்றுப்போன ஆத்திரம் அவர்களில் இருந்தது. இங்கே அவர்கள் நடந்துகொள்ளும் விதம், அந்த அதிகார தொனி அதை அவளுக்குச் சொல்லிக் காட்டியது. அவர்கள் மனைவியிடம் புறமுதுகு இட்டு ஓடி வந்தவர்கள்.
ஆனால் அவளுக்கு, அவளைப் போன்றவர்களுக்கு அவர்கள் தானே முக்கியம். மோசமாய்ப் படிக்கும் மாணவன் ஆசிரியரிடம் டியூஷன் படிக்கிறான்... அவ்வகையில் ஆசிரியருக்கு உபகாரம் செய்கிறான் அல்லவா? அதைப் போலத்தான் இதுவும். ஆனாலும் வயதான கிழவர்களைச் சந்திக்கையில் பாவமாய் இருக்கிறது. இன்னும் வாழ்வின் இந்தச் சிறு வட்டத்தைக் கூடக் கடக்காமல் சிரமப் படுகிறவர்கள் அவர்கள். கால காலத்துக்கும் சதா தோல்வி பற்றிய யோசனையே அவர்களை விழுத்தாட்டி யிருக்கலாம். காலங் கடந்த பின்னும் அவர்கள் தோல்விகளிலேயே உழல்கிறாப் போல ஆகிப் போகிறது. இன்னும் எனக்கு இளமைத் தினவு இருக்கிறது... என்கிறதாக அவர்கள் போலிப் பெருமை கொள்ளலாம். யாரிடம் அதை நிரூபிக்க வேண்டும்? யார் கேட்டார்கள் உன்னைக் கேள்வி? அவர்களுக்குள்ளேயே ஒரு திகைப்பு இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் கிழவர்களால் பண ஆதாயம் அதிகம். அதையும் சொல்லியாக வேண்டும். குறைந்த வேலைக்கு அதிகக் கூலி என்பது அப்போது தான். இயங்குகிற நிலை தாண்டி நம்மை இயங்கச் சொல்கிற கிழவர்கள். அட எங்களிடமே முதல் கட்டமாக அவர்கள் தோற்றுப் போகிறார்கள். அது அவர்களின் விதி. பல கிழவர்கள் அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விடுகிறார்கள். அவள் தூங்க முடியாமல் உடைகளை அணிந்துகொண்டு எழுந்து வெளியே போவாள்.
ஒரேநாளில் இரண்டு மூன்று தடவை அவள் தேவைப் பட்ட காலம் ஒன்று இருந்தது. எல்லாமே அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள். ஒரே லாட்ஜிலேயே சில சமயம் அப்படி வாய்ப்புகள் அமைவதும் உண்டு. வாடிக்கையாளரின் பல்வேறு வயசில் தனித் தனி அனுபவங்கள் அவை. எதிர்பாராத அனுபவங்கள். சிலது காரியத்தில் கண்ணாய் இருக்கும். பேச்சே பேசாது. இப்படி, அப்படி... என்று உத்தரவுகள் போடும். நீ யாராய் இருந்தால் எனக்கென்ன? என் தேவை ஒரு பெண்ணுடம்பு, என்கிற அலட்சியம். அவசரம். யாரிடமோ நிரூபிக்க வேண்டியவற்றை இங்கே வந்து அவர்கள் நிரூபிப்பதாக... ம், தங்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். அ, என ஒரு நினைப்பு வெட்டியது அவளை. நான் ரொம்ப செயிச்சிட்டாப் போலவும்... வர்றவனைக் கிண்டல் செய்தாகிறது.
இது தோல்வியும் தோல்வியும் சந்திக்கும் இடம்... என்று நினைத்துக் கொண்டாள்.
சிலது காணாதது கண்டாப் போல சிரித்து வழியும். நிறையப் பேசும். உன் பேரேன்ன?... இந்து, என்றாள் மாலதி. எந்தூரு உனக்கு. மதுரைப் பக்கம் கல்லுப்பட்டி. தெரியுமா, என்பாள். அவ்வப்போது வாய்க்கு வந்த பேர். வாய்க்கு வந்த ஊர். எம் பெண்டாட்டி செத்துட்டா... என இங்கே வந்து ஒருத்தன் கதறினான். அவளுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. என்னால அவளை மறக்க முடியல்ல, என்கிறான். அப்ப ஏன் இங்க வந்தான் தெரியவில்லை. “நான் கிளம்பட்டா?” என்றாள். “இல்ல இரு” என்கிறான். அவனை ரொம்ப நல்லவன், பாவப் பட்டவன், என நான் சொல்ல வேண்டும், என்று எதிர்பார்த்தானா தெரியவில்லை. அப்புறம் அவனிடமே சொன்னாள். “எனக்கும் புருசன் இல்ல... என் சின்ன வயசிலயே செத்திட்டாரு” என்று சொன்னாள். “அடுத்த தடவை என்னையே கூப்பிடுங்க...” என்று அவனிடம் போன் நம்பர் தந்துவிட்டு வந்தாள். அப்புறம் அவன் பேசவேயில்லை.
ஆணுக்கு நிறையப் பெண்களின் தொடர்பு என்பது கௌரவமாகவும், அதேசமயம் பெண்ணுக்கு நிறைய ஆண்களின் தொடர்பு என்பது அவமானமாகவும் கருதுகிறது இந்த சமூகம். இது ஆண்களின் உலகம். இங்கே பெண்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேவலப் படுத்தப் படுகிறார்கள். மாலதி பளிச்சென்று குங்குமம் வைத்துக் கொண்டாள். குனிந்து கண்ணாடி பார்த்தாள். ஸ்நோ தீர்ந்திருந்தது. இருந்தால் கொஞ்சம் முகத்தை மென்மையாய்க் காட்டும். பரவாயில்லை, என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். வாராயோ தோழி வாராயோ, என யார் அவளை படுக்கையறைக்கு அனுப்பி வைக்கப் போகிறார்கள். போகிற வழியில் பூ கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். செலவுதான். புதுப் பூ தலையில் இருப்பது நல்லம்சம் எனக் கொள்ளப் படுகிறது.
பசித்தது. இதுவரை தெரியாத பசி. யோசனையில் தெரியாத பசி. இப்போது கிளம்பும்போது பசியெடுத்தது. ஓட்டலில் சில சமயம் பார்ட்டியே சாப்பிட வாங்கித் தந்துவிடும். பாட்டிலைக் காட்டி “நீ குடிக்கறதுண்டா?” என்று கேட்டவர் உண்டு. குடிப் பழக்கம் என்று இல்லாவிட்டாலும் அவளுக்கு அதன் ருசி தெரியும். சில பேர் குடிக்கிறயா என்று கேட்கும்போதே அவள் மறுக்க வேண்டும் என எதிர்பார்த்து, அவள் வேண்டாம் என்பதில் திருப்தி கொள்வார்கள். சில பேர் கூடக் குடித்தால் தான் சந்தோஷப் படுவார்கள். அப்படியே தன் வாயில் ஊற்றிக் கொண்டு அவருக்கும் ஒரு வாய்... சந்தோஷப் படுவார்கள். மனைவியிடம் எதிர்பார்க்க முடியுமா இதெல்லாம்?
வர்ற மாப்ளை எப்பிடி தெரியவில்லை. இளவட்டமா வயசாளியா தெரியாது. பசி... அதைப் பற்றி என்ன. காலில் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். பிக்னிக் ஓட்டலுக்கு பத்தடி தள்ளி பஸ் நிற்கும். அடுத்த தெருவில் பஸ் ஏறிக்கொண்டாள். குறுகுறுவென அவளை ஆர்வத்துடன் பார்த்த ஆண் சமூகத்தை இன்றைக்கு சட்டை செய்யவில்லை. சில நாட்களில் பசி முற்றி அந்த ஆம்பளைகளில் யாராவது வேட்டையில் சிக்குவார்களா, என்று தூண்டில் போட நேர்ந்து விடுவதும் உண்டு. பாதி ஆண்கள் கோழைகள். ஆசை இருக்கும். பஸ் விட்டு இறங்கினாலும் பின்னாலேயே வருவார்கள். திரும்பிப் பார்த்தால் சட்டென முகம் திருப்பி படபடப்புடன விலகிப் போய் விடுவார்கள். அத்தனை உழைப்பும் வீணாகிப் போகும். இன்று அவளுக்கு தேடல் என்று இல்லை. பேசாமல் கண்மூடிக் கொண்டாள். பசித்தது. என்ன இன்றைக்கு இப்படிப் பசிக்கிறது தெரியவில்லை. கிளம்பும்போதே இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். கரபுர என்று விநோதமாய் வயிறு சத்தங் கொடுத்தது. அநேகத் தரம் பசியைத் தாக்குப் பிடித்து கலவி முயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாள். அந்த உச்சகட்ட அவனது பரபரப்பில் அவளுக்கு மயக்கமாய் இருக்கும். அதைப் பாதி ஆம்பளைகள் தங்கள் வெற்றி என்று கொண்டாடிக் கொள்வார்களாய் இருக்கும். எல்லாருக்கும் உள்ளே ஆவேசம் இருக்கிறது. காயம் இருக்கிறது. அது தணிய வேண்டும். இப்படியே முள்க் கீய்ச்சலுடன் எத்தனை நாள் அலைவது?
பிக்னிக்கில் ரிசப்ஷனில் குமாரவேல் இருந்தான். அவள் வருவதை அவன் தெரிந்து வைத்திருந்தான். “எப்பிடி இருக்கே?” என்று கேட்டான். “ம்” என்றாள். “மாடிக்கு ஒரு பிரியாணி அனுப்பறியா குமாரு?” என்றாள். “துட்டு?” என்று கேட்டான். சில சமயம் வாடிக்கையாளர் தராமல் முரண்டு பிடிப்பது உண்டு. “அது பாத்துக்கலாம்...” என்றாள். அவன் பிரியாணி சொல்வானா தெரியவில்லை. “301” என்றான் குமாரவேல். லிஃப்ட் இருந்தது. மூன்றாவது தளம் அடையும் போது பசியில் சிறிது தள்ளாடியது. இன்னிக்குச் சமாளிக்க முடியுமா என்றே தெரியவில்லை. பண விஷயத்தில் அவன், செல்வராஜ் கெட்டி. பேமென்ட் அவன் வாங்கிக் கொள்வான். எவ்வளவு என்றே தெரியாது. அந்த மொத்தப் பணமும் இவளுக்கு வருமா, அவன் கமிஷன் எவ்வளவு என்பதே தெரியாது. சரி. ஏதோ அவன் நம்மை நினைவு வைத்திருந்து கூப்பிட்டானே, அதைச் சொல்ல வேண்டும்... மெல்ல சற்று தயங்கித் தள்ளாடி 301 நோக்கி நடந்தாள்.
கதவு தாழிடப் படாமல் இருந்தது. மெல்ல கதவைத் தள்ளினாள். உள்ளே ஒரு நடுத்தர வயது நபர். “எஸ்?” என்றார். அவள் ஒன்றும் சொல்லாமல் நின்றாள். “உள்ள வா” என்றார் அவர். சிறிது பரபரப்பாக இருந்தார். அவசரமாய்க் குளித்திருந்தார் உடம்பெங்கும் பவுடர் அடித்திருந்தார். நெஞ்சுக் காடெங்கும் புசு புசுவென்று மயிர்ப் பயிர். ஒரு மைனர் செய்ன் தொங்கியது. நல்ல பசையுள்ள ஆசாமியாக இருக்கலாம். சில பேர் இப்படி வசதி வாய்ப்பு உள்ளவர்கள், கூட ஒரு பிரியாணிச் செலவைப் பெரிதுபடுத்த மாட்டார்கள், என்று நினைத்தாள். “நான், ஒரு செகன்ட்... குளிச்சிட்டு வந்திரவா?” என்றாள். அவருக்கு அது பிடித்திருந்தது, அந்தக் கேள்வி. தலையாட்டினார். “ரிசப்ஷன்ல சொல்லி... ஒரு பிரியாணி...” என்றாள். அதற்கும் தலையாட்டினார். நல்ல பார்ட்டிதான்.
குளித்து வெளியே வந்தவள் பிரியாணி பார்சலைப் பார்த்தாள். அவள் பசி அதிகரித்தாப் போலிருந்தது. அப்படியே துண்டுடன் அமர்ந்து பிரியாணியைச் சாப்பிட்டாள். இருந்த பசிக்கு அபார ருசியாய் இருந்தது. அந்த ஓட்டலில் பிரியாணி பிரசித்தம் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சாப்பிடும் வரை அவருக்குப் பொறுமை இல்லை. அவசரமாய் எழுந்து கிட்டே வந்தார். அவளது துண்டை உருவி வீசினார். உனக்கு ஒரு பிரச்னை, எனக்கு ஒரு பிரச்னை... உன் பிரச்னைக்கும் என் பிரச்னைக்கும் இடையே தூரம் நாலு விரற்கடை... என நினைத்துக் கொண்டாள். பிரியாணி சாப்பிட்ட விரலை வாயில் வைத்துச் சப்பினாள். அவர் அவளைப் பார்த்துச் சிரித்தார்.
*
pesum puthiya sakthi - nov. 2019
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842

Comments

  1. உனக்கு ஒரு பிரச்னை, எனக்கு ஒரு பிரச்னை... உண்மையில் அவனுக்கு ஒரு பசி , அவளுக்கு ஒரு பசி . தீர்ந்தால் சரி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog