
‘பேசும் புதிய சக்தி’ பெப்ருவரி 2020 இதழில் வெளியானது ஆத்ம திருப்தி எஸ்.சங்கரநாராயணன் அ வனுக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது. அத்தனைக்கு விரும்பி புத்தகம் வாசித்தவனும் அல்ல. தவிரவும் பரமேஸ்வரனுக்குத் தமிழே தகராறு. தகராறுக்கு எந்த ர முதல், எந்த ற பிந்தி என்பதே தெரியாது. ஆங்கிலத்தில் அவனைப் படிக்க வைத்தார் அப்பா. வாழ்க்கையில் அவரைவிட அவன் ஒரு படியாவது முன்னேற வேண்டும், என்பதை லட்சியமாகக் கொண்ட அப்பா. அப்பாவின் ஒற்றைச் சம்பாத்தியத்தில், அவன் தலையெடுத்து அவரை நிமிர வைக்க வேண்டும், என மெனக்கிட்டார். அவனது உடைகள் அவர்கள் வீட்டில் மற்ற யாரையும் விட அதிக விலையுள்ளவை. அவனுக்கு வீட்டில் சலுகைகள் அதிகம். ரேஸ் குதிரையில் பணங் கட்டுவதைப் போல இருந்தது அவரது கரிசனம். ஒவ்வொரு தேர்வு முடிவும் அவருக்கு ஒரு ரேஸ் முடிந்தாப் போல இருந்திருக்கலாம். பரமேஸ்வரனுக்கு அப்பாவின் கவலை தெரிந்தது, என்பது நல்ல விஷயம். காதலிக்க ஆசை இருந்தும் அவனுக்கு அப்பாவின் லட்சியங்கள் அதைவிடப் பெரிதாய்த் தெரிந்தது. அந்த வயதில் அவனவன் பெத்தவர்களுக்கு அறிவில்லை, என்று காலரை உயர்த்தி விட்டுத் திரிகிறான். மத்த அப்ப...