‘பேசும் புதிய சக்தி’ பெப்ருவரி 2020 இதழில் வெளியானது


ஆத்ம திருப்தி
எஸ்.சங்கரநாராயணன்

வனுக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது. அத்தனைக்கு விரும்பி புத்தகம் வாசித்தவனும் அல்ல. தவிரவும் பரமேஸ்வரனுக்குத் தமிழே தகராறு. தகராறுக்கு எந்த ர முதல், எந்த ற பிந்தி என்பதே தெரியாது. ஆங்கிலத்தில் அவனைப் படிக்க வைத்தார் அப்பா. வாழ்க்கையில் அவரைவிட அவன் ஒரு படியாவது முன்னேற வேண்டும், என்பதை லட்சியமாகக் கொண்ட அப்பா. அப்பாவின் ஒற்றைச் சம்பாத்தியத்தில், அவன் தலையெடுத்து அவரை நிமிர வைக்க வேண்டும், என மெனக்கிட்டார். அவனது உடைகள் அவர்கள் வீட்டில் மற்ற யாரையும் விட அதிக விலையுள்ளவை. அவனுக்கு வீட்டில் சலுகைகள் அதிகம். ரேஸ் குதிரையில் பணங் கட்டுவதைப் போல இருந்தது அவரது கரிசனம். ஒவ்வொரு தேர்வு முடிவும் அவருக்கு ஒரு ரேஸ் முடிந்தாப் போல இருந்திருக்கலாம்.
பரமேஸ்வரனுக்கு அப்பாவின் கவலை தெரிந்தது, என்பது நல்ல விஷயம். காதலிக்க ஆசை இருந்தும் அவனுக்கு அப்பாவின் லட்சியங்கள் அதைவிடப் பெரிதாய்த் தெரிந்தது. அந்த வயதில் அவனவன் பெத்தவர்களுக்கு அறிவில்லை, என்று காலரை உயர்த்தி விட்டுத் திரிகிறான். மத்த அப்பா அம்மாக்கள் அவரவர் பிள்ளைகளை அதிக வசதியுடன் வைத்திருப்பதாகவும், எனக்கு வாய்ச்சது மாத்திரம்... என்றும் பெருமூச்சு எடுத்தான். பரமேஸ்வரனுக்கு இப்பவும் அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை உண்டு.
அவனது பள்ளி நாட்களிலேயே கவனித்திருக்கிறான். அப்பா சனி ஞாயிறுகளில் வீட்டில் தங்குவது இல்லை. எதாவது கூட்டம் சந்திப்பு என்று கிளம்பி விடுவார். உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு அனுமதி வாங்கி, அதில் ஒரு வகுப்பை வாச்மேனிடம் சொல்லி திறக்க வைத்து, ஞாயிறு சனி மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார்கள். தலைமையாசிரியரும், அந்தப் பள்ளியின் தமிழாசிரியரும் கவிதைகள் எழுதினார்கள். சிலாட்கள் வெத்திலை பாக்கு பழக்கம் கொண்டவர்களாகவும், சிலாட்கள் கவிதை எழுதும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
சில நாட்களில் அவர்களே அப்பாவைப் பார்க்க என்று வீட்டுக்கே வருவார்கள். அப்பா அவர்களை மாடிக்கு அழைத்துப் போவார். அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் தெரியாது. அவன் படிக்கும் ஆங்கிலவழிப் பள்ளி அல்ல அது. என்றாலும் தமிழாசிரியரின் பெண் ஒருமாதிரி அவனைப் பார்த்து... சிரிக்கிறாளா, இல்லையா என்று அவனுக்கு இன்னும் தெளிவு வரவில்லை. உண்மையில் காதலிப்பதா வேணாமா என்று அவளுக்கே இன்னும் தெளிவு வராதிருக்கலாம்... அதற்குள் அந்த விவகாரம் வந்துவிட்டதா வீடு வரை என்றிருந்தது. அப்பா இறங்கி வந்தபோது அவர் முகம் இறுக்கம் தளர்ந்திருந்தது. அவனுக்கு அது ஆசுவாசம் தருவதாய் இருந்தது.
அப்பாவின் நண்பன் ஒருவன் எழுத்துக் கிறுக்கு உள்ளவன். அப்பா சொன்ன வார்த்தை அது. அவர் ஒரு பத்திரிகையில் வேலையில் சேர்ந்தார். கிறுக்கு முத்தி யிருக்கலாம். அவரும் இம்மாதிரி சந்திப்புகளில் அப்பாவைப் பார்க்க என்று வந்து மொட்டைமாடிக்குப் போனார். புத்தருக்கு போதி மரத்தடி என்கிறார்கள். இவர்களுக்கு மரம் கிரம் எல்லாம் கிடையாது. மொட்டைமாடி. அவ்வளவே... அவர் பத்திரிகையில் வேலை பார்ப்பதில் மத்த நண்பர்கள் எல்லாருக்கும் அவரையிட்டு ஒரு வாயைப் பிளந்த ஹா இருந்தது. அது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனாலேயே அவர் அடிக்கடி அங்கே விஜயம் செய்தார். வீட்டில் கிடைக்காத மரியாதை அங்கே அவருக்குக் கிடைத்திருக்கலாம். நண்பர்கள் மத்தியில் அவருக்கு தேநீர் உபசாரம் கட்டாயம் கிடைத்தது. ஒரு சிகெரெட்டைப் பற்ற வைத்தபடி ஜிப்பாவை மேலே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு எப்பவுமே சொல் அழுத்தத்துடன் எதாவது அவர் பேசினார். திடீர் திடீரென்று ஆவேசப் பட்டார். நாடு இருக்கும் நிலை அவரை எப்பவுமே அப்படி பதட்டமாய் வைத்திருந்தது போலும். தன்னால் தான் உலகத்துக்கு விடிவுகாலம் என நினைக்கிறாரோ என்னவோ.
அவரிடம் இருந்து அப்பாவுக்குக் கவிதை எழுதும் ஆசை வந்திருக்கலாம். அவரது நண்பரான தமிழாசிரியர் மணக்கரைமைந்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு மரபுக் கவிதை பாணியிலேயே கவிதைகள் புனைந்தார். ஊரில் எந்த விசேஷம் என்றாலும், யாருக்காவது அறுபதாங் கல்யாணம், இல்லை முதல் கல்யாணம் என்றாலுங் கூட, கட்டாயம் அவர் இருமனம் கலந்த திருமண வாழ்வு - என்ற ரெடிமேட் வார்த்தைகளில் ரெடிமேட் கவிதைகள் எழுதினார். கேட்டவுடன் கவிதை தரும் ஆசுகவி என்கிற பிரமை அவருக்கு இருந்தது. மால்களில் அவன் பார்த்திருக்கிறான். துட்டு போட்டால் ஒரு டம்ளர் சரியான அளவில் குளிர்பானம் கொட்டும் யந்திரங்கள். அதைப்போல.
மரணக்கவிதை கூட அவர் எழுதி யிருக்கிறார். அதில் அப்படியே பேரை மாற்றி நாளை அவருக்கே பயன்படுத்தலாம்... என்கிற ரெடிமேட் கவிதை.
நாட்டில் நடக்கும் அநீதிகள், சாதிப் பிரச்னை எல்லாவற்றைப் பற்றியும் சதா சிந்தித்தபடி இருந்தார் அவர். மணக்கரைமைந்தன். பிரச்னைக் கவிதைகளுக்கு எப்பவுமே சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக அவர் நம்பினார். அவரது சமூக அக்கறை தனி கவனம்பெறத் தக்கது என நம்பினார். அற்காகவே பிரச்னைகளுக்காக அவர் காத்திருந்தார். தினசரி செய்தித்தாள் வாசிக்கையில் அவர் இதில் எதைப் பற்றி இன்றைக்குக் கவிதை எழுதலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுவார். இதுல எதும் லாப நோக்கில்லை. சும்மா ஒரு ஆத்ம திருப்தி... என்பதாக அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டார். இல்லாட்டின்னாப்ல இந்தக் கவிதைக்கு நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள்.
சனி ஞாயிறு இலக்கியக் கூட்டங்களைத் தவற விடுவது இல்லை அப்பா. கூடவே அந்த மணக்கரைமைந்தனும். அதில் அவர் கவிதை வாசிக்கவும் தவறுவது இல்லை. தன் மாணாக்கர் சிலரையும் இந்தக் கவிதை சாகரத்தில் ஈடுபடுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். அவர்களையும் தவறாமல் இலக்கியக் கூட்டங்களுக்கு வரச் சொன்னார். அவர்கள் வந்து தவறாமல் அவர் கவிதை வாசிக்கையில் கை தட்டினார்கள்.
எப்படிக் கவிதை எழுதக் கூடாது, என்று அவரிடம் அப்பா கற்றுக் கொண்டிருக்கலாம். என்றாலும் கூட்டத்துக்கு ஏற்கனவே ஆள் சேராத நிலையில் தமிழாசிரியரும் அவரது மாணாக்கர்களும் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தார்கள் போலும். தமிழாசிரியருக்கு பெண் இல்லாமல் ஆண் குழந்தை பிறந்திருந்தால் அந்த மாணாக்கர்களும் கூட்டத்தைத் தவிர்ப்பார்களா யிருக்கும். அந்தப் பையன்கள் அவர் சொல்லாமலேயே காதல் கவிதைகள் புனைய ஆரம்பித்திருந்தார்கள். அவரிடம் அதைக் காட்டினால் ஒரு அப்பாவாக அவருக்கு அதுவே சமுதாயப் பிரச்னைக் கவிதையாக இருந்திருக்கும்.
கணேசனுக்கு இந்த வாழ்க்கையின் சம்பிரதாய அபத்தம் அலுப்புத் தட்டி யிருக்கலாம். வாழ்க்கை என்பது அத்தனை உற்சாகமான சமாச்சாரம் அல்ல. ஒற்றைச் சம்பளம். சாண் ஏற முழம் சறுக்குகிறது. ஒரு செலவைச் சமாளிப்பதற்குள் அடுத்தடுத்து செலவுகள் வரிசையில் நின்றன. குழித்த உள்ளங்கையுடன் கோவில் பிரசாத வரிசையில் போல அவை நிரப்பப்படக் காத்திருந்தன. இந்தமாதிரி பிரச்னைக்குப் பின்னான ஓட்டத்தில் வாழ்க்கை சார்ந்த பெரும் அவநம்பிக்கை அவரைச் சூழ்ந்தது. இந்நிலையில் அவருக்கும் ஆத்ம திருப்தி தேவைப் பட்டிருக்கலாம். அப்பா கவிஞர் ஆனதின் பின்னணி தெரியவில்லை. நடந்து போய்க் கொண்டே யிருக்கையில் பக்கத்து ஆள் சட்டென சந்தில் ஒதுங்கி ஒண்ணுக்கு அடித்தால், தன்னைப் போல நமக்கும் கன்னுக்குட்டி முட்டித் தள்ளி விடுகிறது... கவிதை எழுதுவதும் அதுபோலவா, என்று யோசித்தான் பரமேஸ்வரன்.
ஒருநாள் மாடியில் இருந்து அந்த நண்பர்கள் கலகலவென்று சிரித்தபடி இறங்கி வந்தார்கள். பள்ளிக்கூடம் விட்டாப் போலிருந்தது. அந்த பத்திரிகைக்காரர், துரை. சீனிவாசன் என்பது அவர் பெயர் து. சீனிவாசன் என்பது யாரோ அவரைக் காரித் துப்புகிறாப் போலப் பட்டதோ என்னவோ. “அப்ப போயிட்டு வரேன் கணேசபாரதி” என்று விடைபெற்றுக் கொண்டார். அப்பா கைகூப்பி அமெரிக்கையாய் வணக்கம் சொன்னார். அவர்கள் போனதும் அவன் அப்பாவிடம் கேட்டான்.
“கணேசபாரதியா?”
அப்பா தலையாட்டினார்.
“நீங்களா?”
அப்பா புன்னகைத்தார்.
ராமநாதன் மணக்கரைமைந்தன் என ஆனால், கணேசன் ஆகக்கூடாதா? புனைப்பெயர் என்பது பாத்திரத்தைப் புளி போட்டுத் துலக்கினாற் போல அவர்களுக்கு ஒரு பளபளப்பைத் தருகிறது. புதுச்சட்டை மாட்டிக் கொண்ட உற்சாகம் அது.
கவிதை எழுத எப்படி வருவது தெரியவில்லை. அப்பா நிறையப் புத்தகங்கள் வாசித்தார். அவர் எதோ பரிட்சைக்குப் படிக்கிறாப் போலிருந்தது. கவிதைக்கும் தேர்வு என வைக்கிறார்களோ என்னவோ. அதன் சிலபஸ் அப்பாவுக்கு எப்படிக் கிடைத்ததோ தெரியாது. சில ராத்திரிகளில் அவன் படித்துக் கொண்டிருப்பான். அப்பா பக்கத்தில் உட்கார்ந்து தீவிர யோசனையில் இருப்பார். அல்லது இங்குமங்குமாக கர்ப்பமான பூனை போல் நடப்பார். திடீரென்று நிற்பார். பரபரப்பாவார். பிரசவ வலி அது. வெள்ளைக் காகிதம் மேசையில் தயாராய் இருக்கும். பிரசவ அறைக் கட்டிலின் வெள்ளை பெட்ஷீட் அது. ஒரு வரி எழுதுவார். பரவால்லியே, என அவன் நினைத்தால் உடனே தலையாட்டி மறுப்பார். அந்த வரியை அடித்து விடுவார். அவர் வைத்த தேர்வில் அவரே ஃபெயிலாகி விட்டாப் போல.
குதிக்கும் தவளை
அறியுமோ
நிலா மிதக்கும் குளம்
அதில் என்ன சொல்ல வருகிறார் அப்பா என்று அவனுக்குப் புரியவில்லை. இதை எழுத ஒரு இருபது முறை இப்படி அப்படி நடந்து இந்த வரிகளை அடைந்திருந்தார் அப்பா. காலையில் உப்பு புளி பிரச்னைகள் பயமுறுத்தும் போது தவளையும் நிலாவும் குளமும் அவருக்கு யோசனையில் வந்திருக்கலாம். இப்ப ஊரில் குளமே இல்லை. தூர்ந்து மேடுதட்டிக் கிடக்கிறது. தவளைகளும் இல்லை.
இந்த விஷயங்கள் எல்லாம் கவிதை என்றால் தேவையோ என்னவோ. அவனுக்கு என்ன தெரியும். அந்த துரை. சீனிவாசன், பத்திரிகைக்காரர், அவரைப் பற்றி அப்பா சொன்னாரே. அவருக்கே இப்போது எழுத்துக் கிறுக்கு பிடித்து விட்டதோ என்றிருந்தது. மேலே பாடத்தைப் படிக்க ஆரம்பித்தான். அப்பாவைத் திரும்பிப் பார்த்தபோது அவர் தன்னைத் தானே ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அம்மா இறந்தபின்னும்
வந்து காத்திருக்குது
சன்னலோரக் காகம்
அவன் அப்பாவைப் பார்த்தபடியே போய் காகத்தை விரட்டிவிட்டு சன்னலைச் சாத்தினான். அவனது பாட்டி இறந்துபோய் பத்து வருடம் ஆகிறது. அவளுக்காக காகம் வந்து காத்திருக்க வாய்ப்பே யில்லை.
அப்பா இக்காலங்களில், இந்த நாலைந்து வருடத்தில், பரவலாக முன்னேறி யிருப்பதாகவே பட்டது அவனது பார்வையில். ஒரு சுமாரான கவிதையையே அவர் திறமையாக நன்றாக உரக்க வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளியில் நடக்கும் பாரதி பாசறை கூட்டங்களில் அவர் உரையாற்றினார். அதற்கு சொந்தச் செலவில் உள்ளங்கை யகல நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்தார். சிறப்புரை - கவிக்கொண்டல் கணேசபாரதி. அவரது அலமாரியில் நிறைய இப்படி நோட்டிஸ்கள், ஞாபகார்த்தமாகச் சேர்த்து வைத்திருந்தார். பெயரை அச்சில் பார்ப்பது தனி சுகம் தான் போல.
இப்போது கணிசமான கவிஞர்கள், ஆண்கள், பெண்களும் கூட அங்கே தேறி யிருந்தார்கள் என்று தோன்றியது. சிறப்பு நாட்கள் என்று அவர்கள் கவியரங்கம் வைத்தார்கள். மார்ச் 8 மகளிர் தினம். கவியரங்கத் தலைப்பு - பெண் அன்றும் இன்றும் - குழந்தையாக, சிறுமியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக... என் ஐந்து பேர் கவிதை பாட பாகம் பிரித்துக் கொண்டார்கள். இதில் குழந்தையாக என்று பெரியவர்களும், பாட்டியாக என்று ஒரு கல்லூரி மாணவியும் கவிதை வாசிப்பது என்று நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிக் கொண்டார்கள். இப்படி இப்போது பாசறையின் இலக்கியச் சந்திப்புகளுக்கு இக்காலத்தில் ஒரு நோக்கும் போக்கும் வந்திருந்தது. வருடத்துக்கு ஒருமுறை கவிஞர் ஒருவருக்கு பாரதி பாசறை சார்பில் பொங்கல் விழாவில், ‘கவிக்கொண்டல்’ என்று விருதும் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவுக்கு ஊர்ப் பிரமுகர் ஒருவர் பெரும் நன்கொடை வழங்கி விட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா அன்று வாழைமரம் நட்டு, ஷாமியனா போட்டு, மதிய உணவு கூட ஏற்பாடு செய்ய முடிந்தது.
முதல் கவிக்கொண்டல் விருதை தலைமையாசிரியர் அடக்கத்துடன் பெற்றுக் கொண்டார்.
கல்லூரி என்று பரமேஸ்வரன் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்தான். மாதம் ஒருமுறை மாத்திரமே இங்கே வந்துபோக முடிந்தது அவனுக்கு. அதற்கே செலவுக்கு யோசிக்க வேண்டி யிருந்தது. அப்பாவின் தனிச் சம்பளம். இப்போது இலக்கியத்துக்கும், விழா நோட்டிஸ், பொன்னாடை என்று செலவாக ஆரம்பித்திருக்கலாம். ஆனாலும் அப்பாவிடம் ஒரு நிமிர்வு வந்திருந்தது. பேச்சில் ஒரு கம்பீரம். எல்லாம் அறிந்த பாவனையான புன்னகை. அந்தப் பகுதியில் அவர் இப்போது பிரமுகர்.
அவரது கவிதைகள் சில பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருந்தன. அந்த துரை. சீனிவாசன் அவரிடம் பத்திருபது கவிதைகள் வாங்கிப் போய் ஒன்றிரண்டு வெளியிட்டான். உடனே அதை அப்பா முகநூலில் பகிரவும் செய்தார். இக்கால கட்டங்களில் அப்பா தனது மொபைலில் முகநூல் பார்க்க ஆரம்பித்திருந்தார். மொபைலிலேயே தமிழில் தட்டச்சு செய்வதை அறிந்து கொண்டிருந்தார்... என்பதை அவன் ஆச்சர்யத்துடன் கவனித்தான். பொன்னாடை அவர் போர்த்துகிற அல்லது அவருக்கு யாராவது போர்த்துகிற படங்களை அதில் அதிகம் அப்பா ஷேர் செய்து கொண்டிருந்தார். அவனும் முகநூலில் அப்பாவின் நட்பு வட்டத்தில் இருந்தான்.
அவருக்கு, அவர் கவிதைகளுக்கு தவறாமல்  லைக்குகள் வந்தவண்ணம் இருந்தன. அவனுக்கு அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் லைக் போட்ட பின்பே அப்பாவின் பதிவை வாசித்தான். நிறையப் பேர் அப்படிச் செய்தும் இருக்கலாம். அதில் அப்பாவை ரசித்தவர்கள் பெயர்களை அவன் பார்த்தான். பத்து இருபது லைக்குகள். நன்றிக்கடனாக அவர்களது பதிவுகளை அவன் போய்ப் பார்த்தபோது அங்கே ஏற்கனவே அப்பா வந்து போயிருந்தார். லைக் விழுந்திருந்தது அப்பாவிடம் இருந்து. இது அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. அவரது கவிதை ஒன்று பத்திரிகை ஒன்றில் வெளிவந்தது இங்கே முகநூலில் பகிரப் பட்டிருந்தது. அந்தப் பத்திரிகை உதவியாசிரியருக்கு நன்றி என்று அப்பா அவர்பெயர் போட்டு குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெயரில் எதுவும் முகநூல் கணக்கு இருக்கிறதா என்று ஒரு எதிர்பார்ப்புடன் பரமேஸ்வரன் தேடிப் பார்த்தான். இருந்தது. அவரின் பதிவைப் பார்த்தான். நன்றியுடன் அதை வாசிக்காமல் லைக் போட்டான். பிறகு அதில் விழுந்திருந்த மற்ற லைக்குகளைப் பார்த்தான். அப்பாவின் பங்களிப்பும் இருந்தது.
கவனமாகப் பார்த்தால், பத்திரிகையாசிரியரின் பதிவுக்கு அப்பா லைக் போட்டிருந்தார். அப்பாவின் பதிவுக்கு பத்திரிகையாசிரியர் லைக் இடவில்லை... என்று தெரிந்திருக்கும்.
பத்திரிகைக்காரர்கள் முகநூலில் இருந்தால் அப்பா தவறாமல் அவர்களை நட்பு பிடித்துக் கொள்கிறாரோ என்னவோ? அல்லது அப்பாவின் கவிதையின் தரம் பார்த்து அவர்களே வலிய வந்து, நட்பு அழைப்பு தந்து, அப்பாவுடன் சேர்ந்து கொண்டார்களோ? ஆனால் அப்பாவின் கவிதைகளுக்கு இப்போது எப்படியோ மவுசு வந்திருந்ததாகத் தான் தோன்றியது.
ஒரு தேடல் போன்ற சாயல் இருந்தது அப்பாவிடம். ஒருவேளை அது அவரது தேடலாகவும் இருக்கலாம்.
வானத்துப் பறவைக்கு
ஏது திசை
இந்தக் கவிதைக்கு நூறுக்கு மேல் லைக் வந்திருந்தது அப்பாவுக்கு. அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது. வாவ், என்று ஜி ஐ எஃப், ஈமோஜி எல்லாம் விழுந்திருந்தன. அப்பாவுக்கும் அவரது சகாக்களுக்கும் எத்தனை ஃபேக் ஐடிக்கள் இருக்கிறதோ, என் நினைத்து தலையை உதறிக் கொண்டான். சேச்சே நாமே அப்பாவை சந்தேகப் படுவதா? அப்பா எந்தப் பதிவை இட்டாலும் முதல் லைக்காக அவரே லைக் போட்டு விடுகிறார். அதையும் கவனித்தான் அவன்.
அவனுக்கு முகநூல் போரடித்தது. அதில் பொய்கள் அதிகம் உலவுகின்றன. லைக் பிரியர்கள் ஒரு பக்கம். காசு வாங்கிக் கொண்டு எந்த அரசியல் கட்சிக்காவது, தலைக்காவது, நடிகருக்காவது வால் பிடித்து அடுத்தவரை மட்டந் தட்டி அதிகப் பதிவுகள். குழு சார்ந்த இயக்கங்கள் அவனை ஆயாசப் படுத்தின. அவன் முகநூல் பக்கம் வருவதைக் குறைத்துக் கொண்டிருந்தான். அப்பாவுக்கு அது தெரிந்தது. அவரது பதிவில் லைக் ஒன்று குறைந்ததை அவர் கவனித்திருக்கலாம்.
பிறகு அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது. மும்பை வரை அவன் போனதே கிடையாது. நல்ல வேலை என்றால் ஊரைவிட்டுத் தள்ளித்தான் போக வேண்டும் போல. அப்பாவுக்கு அவனைப் பிரிவதில் வருத்தம் தான். என்றாலும், இங்க ஊர் சரி கிடையாதுப்பா. இங்க ஒருத்தன் முன்னேறணும்னா இந்த ஊரை விட்டு வெளியே போகணும்... என்றார். அவனுக்கு அது புரியவில்லை. தலையாட்டினான். கைநிறைய அவன் சம்பளம் வாங்குவது அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
அந்தமுறை அவன் ஊருக்கு வந்தபோது வீட்டுவாசலில் போர்டு இருந்தது. கவிக்கொண்டல் கணேசபாரதி. யார் விட்ட தவறு தெரியாது. ரெண்டு சுழி ன். கவிக்கொன்டல். நல்லவேளை கவிமென்டல் என்று எழுதாமல் போனான்.
அப்பாவும் கொஞ்சம் சதை போட்டிருந்தார். கட்டம் போட்ட சட்டையெல்லாம் மாறி இப்போது வெள்ளைக்கு வந்திருந்தார். இலக்கிய வாழ்க்கை என ஒரு ரிஷி போல வாழ்ந்து வந்தாப் போலிருந்தது. தலைக்கு மை போடுகிற ரிஷி. தற்போது அவர் பட்டிமன்றங்களுக்கு கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்க ஆரம்பித்திருக்கிறாரோ என்னவோ. அவன் வந்திருந்தாலும் மாலையானால் அவர் வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியே கிளம்பி விட்டார். அவரை நம்பி வெளியே இலக்கியப் பணிகள் காத்திருந்தன. அவனும் வீட்டுக்குக் கணிசமான அளவில் பணம் அனுப்ப ஆரம்பித்ததில் அவர் இன்னும் உற்சாகப் பட்டிருந்தார். மொட்டைமாடியில் தனியாக ஒரு அறை கட்டிக் கொண்டிருந்தார். அவரது எழுத்து அறையாக அது இருந்தது.
“அப்பா இதுவரை எத்தனையோ கவிதை எழுதிட்டே இல்லப்பா...” என அவன் ஆரம்பித்தான். அக்குள் பக்கம் வாசனைப்புட்டியால் பிஸ்க்கியபடியே அவர் அவன்பக்கம் திரும்பி புன்னகைத்தார். “ஏம்ப்பா உங்க கவிதைப் புத்தகம் ஒண்ணு நாம கொண்டுவந்தா என்ன?” சட்டென அவர் முகம் மாறியது. அவருக்கே அவன் அப்படிக் கேட்டது ஆச்சர்யமாகி விட்டது. அட இந்த யோசனை எனக்கு ஏன் தோணவில்லை, என அவர் நினைத்திருக்கலாம். ஏனோ தயங்கி யிருக்கிறார். அவருக்கே அதில் பயம் இருந்ததோ என்னவோ. இப்போது அதுவும் பையனே முன்னின்று அதைக் கொண்டு வரலாம் என்கிறான்... “அப்டின்றே?” என்றார் கவிக்கொண்டல். அவருக்கு வெளியே கிளம்ப மனசே இல்லை. உள்ளே குதிரை ஒன்று எழுந்துகொண்டு மணலில் இங்குமங்குமாய்ப் புரண்டது.
அன்று இரவு வெகுநேரம் வரை அவர் மாடியில் தன்னறையில் இருந்தார். அநேக இரவுகள் அவர் மாடியேறினால் அங்கேயே படுத்துக் கொள்கிறார், என்றாள் அம்மா. தன் பழைய கவிதைகளை யெல்லாம் எடுத்து எடுத்து தேர்வுசெய்து கொண்டிருந்தாரோ என்னவோ. பிறகு படுக்கையில் படுத்தாலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. அதிகாலை சீக்கிரமே எழுந்து கொண்டார். கீழறையில் அவன் எழுந்துகொள்ளும் வரை அவர் காத்திருக்க வேண்டி யிருந்தது. அவன் எழுந்ததும், ‘‘கிழக்கு என்பது திசை அல்ல’’ என்றார் புன்னகையுடன். “என்னப்பா?” என்றான் விளங்காமல். “தலைப்பு...” என்றார் பெருமையுடன். அதுதான் அவனுக்கு விளங்கவில்லை.
“ஒரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி, அது அதுஅல்லன்னுட்டா கவிதையாப்பா?”
“அப்டின்னா?” என்று கேட்டார் கணேசபாரதி.
“இரவு என்பது இருள் அல்ல. அதுமாதிரி...”
“இதுகூட நல்லாருக்கே?” என்றார் அப்பா. “நீ யாரு? கவிக்கொண்டலோட பிள்ளையாச்சே?” என்றார். அவனுக்கு இன்னும் குழப்பமாகி விட்டது.
புத்தகம் தயாரான வேகம் ஆச்சர்யமானது. அவர்களது பாரதி பாசறையில் முதலாவதாக அவர்தான் கவிதை நூல் வெளியிடப் போகிறார். மற்றவர்களுக்கு இன்னும் தைரியம் வரவில்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு இனி இதே வேலை வரலாம். இப்போதெல்லாம் புத்தகம் லே-அவ்ட் செய்யவும் ஆள் இருக்கிறார்கள். டிஜிட்டலாக ஐம்பது நூறு பிரதிகளும் அச்சடித்துக் கொள்ளலாம்.
பாசறையிலும் நிறைய மாற்றங்கள். தமிழாசிரியர் தலைமையில் அதில் சிலபேர் தனித்துப் போய் ‘வாசகர் அரங்கம்’ என்று அமைப்பு ஏற்படுத்தி வேறொரு பள்ளிக்கூடத்தைப் பிடித்திருந்தார்கள். இதில் இருந்து தனியே போகக் காரணம் என்ன தெரியவில்லை. அப்பாவிடம் கேட்க அவனுக்கு யோசனையாய் இருந்தது. அப்பாவே வேறு பாசறையில் இருந்து இந்த பாரதி பாசறைக்கு வந்திருக்கவும் கூடும்.
புத்தகம் தயாரான அன்று அப்பாவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி. அட்டைப்படத்தில் ஒரு குருவி பூவில் தேன் அருந்துவதாகப் படம் வரைந்திருந்தது. கீழே அவர் பெயர். கவிக்கொண்டல் கணேசபாரதி. அச்சுப்பிழை இல்லாமல் மூணு சுழி. விழாவுக்குப் பேச என்று தவறாமல் கவிச்சிகரம் துரை. சீனிவாசன். இந்தக் குழுவில் சில பேர். தமிழாசிரியர் வேறு குழுவுக்குப் போய்விட்டார். அவருக்கும் கவிச்சிகரத்துக்குமே தகராறு போல. அவரே வேண்டாம் என்றுவிட்டார். ஒரு சிறு பத்திரிகை எழுத்தாளன், அவனே பதிப்பகமும் வைத்து நடத்துகிறான். அவனது இதழில் எழுத அப்பா பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலிக்கவில்லை. இம்முறை அவனைப் பேச அழைப்பது என்று முடிவு செய்தார் அப்பா. அலைபேசியில் விஷயம் சொல்லாமல் வரும் தகவல் சொன்னார். “சரி வாங்க” என்றான் மேன்மைக்கவி. போய் தன் புத்தகத்தை அவன் கையில் கொடுத்தார் புன்னகையுடன். “கிழக்கு என்பது திசையல்ல. பரவால்லியே?” என்றான் அவன். அப்பா கொண்டு வந்திருந்த பொன்னாடையைப் போர்த்தினார். “நீங்க புத்தகம் வெளியிட்டிருக்கீங்க. எனக்குப் பொன்னாடையா?” என்றான் அவன். “வெளியீட்டு விழாவுக்கு வரணும் சார் நீங்க. மாட்டேன்னு சொல்லிறப்டாது. நீங்க வந்தா எனக்கு கௌரவம்” என்றார் கவிக்கொண்டல். ”ஆமாம். நீங்க கட்டாயம் ஒத்துக்கணும்...” என்றார் கூடப் போயிருந்த கவிச்சிகரம். சிறிது பிகு பண்ணிக்கொண்டு அவன் ஒத்துக் கொண்டான். “மனசுல தோணறதைப் பேசுவேன். நீங்க...” என அவன் பேசியதை மறித்து ”ஆகா. உங்க கருத்து வேணும்.அதானே முக்கியம்?” என்றார் கவிக்கொண்டல்.
மேன்மைக்கவி வர ஒத்துக் கொண்டதே அந்தப் பகுதியின் மற்ற கவிஞர்களுக்குப் பொறாமை. சும்மா இல்லை. கையில் கனமான ஒரு தொகை கேட்டான் அவன். அப்போது கூடப் போயிருந்த பரமேஸ்வரன் “சரிங்க அதைப் பத்தி என்ன. நீங்க போக வர கால் டாக்சி போட்டுத் தந்திறலாம். அதெல்லா நாங்க நல்லாப் பண்ணுவோம்” என்றான். அப்பாவுக்காக இதைக் கூடச் செய்யாமல் எப்படி, என்று இருந்தது அவனுக்கு.
விழா ஏற்பாடுகள் வேகப் பட்டன. ஒரு ஏ சி அரங்கம். கையகல அல்ல, டெமி சைஸ் நோட்டிஸ்கள் வண்ணத்தில். அதைப் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டார் அப்பா. லைக் அள்ளிக் கொண்டார். ‘கிழக்கு என்பது திசை அல்ல.’ அப்பன்னா கிழக்கு என்பது என்ன? புத்தகம் வாங்கி வாசித்தால் தான் தெரியும் போல. அப்பாவின் சந்தோஷம் அவனுக்கு முக்கியமாய் இருந்தது. ஒருநாள் முன்னதாகவே விடுப்பு எடுத்துக்கொண்டு பரமேஸ்வரன் வந்திருந்தான். வாசலிலும் உள்ளே விழா அரங்கத்திலும் பேனர் கட்டுவது போன்றவற்றில் பரபரப்பாக உதவிகள் செய்தான்.
தமிழாசிரியரைப் பேச அழைக்கா விட்டாலும் ஒரு பல்கடிப்புடன் அவர் இந்த விழாவுக்கு வந்திருந்தார். இப்போது அவன் நல்ல வேலையில் இருந்த நிலையில் அவரது பெண் லதா, அவளும்கூட வந்திருந்தாள், இவனைப் பார்த்து சகஜமாய்ப் புன்னகை செய்தாள். எதோ கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அழகாகத் தான் இருந்தாள். பேசும்போதெல்லாம் சிரித்தாள். சிரிக்கும் போதெல்லாம் ஒரு நளின அசைவில் காது குண்டலங்களை ஆட்டினாள்.
விழாவில் கணேசபாரதியின் புத்தகத்தை விட மேன்மைக்கவியைப் பற்றியே எல்லாரும் புகழ்ந்து தள்ளினார்கள். அடுத்து அவர்கள் அழைத்தால் அவன் பேச ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவனம் இருந்தது அந்தப் பேச்சில். அப்பாவுக்கு எத்தனை ரசித்தது அவர்களின் பேச்சு என்று தெரியவில்லை. அப்பாவைப் பார்ப்பதா, அந்தப் பெண் லதாவைப் பார்ப்பதா என்றே அவனுக்குப் போராட்டமாய் இருந்தது. துரை. சீனிவாசன் அப்பாவைத் தாங்கிப் பிடிப்பது போல உரத்த குரலில் பேசினார். இருநூறு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து ஐம்பது பேர் வந்திருந்தார்கள். ஐந்தரை என்று போட்டு ஆறரைக்குக் கூட்டம் ஆரம்பித்தாலும் அதே கதிதான். சரி இருக்கிறாட்கள் கலைந்து போய்விடாமல் கூட்டத்தை ஆரம்பித்தார்கள். அப்பாவின் அலுவலக நண்பர்கள் அவருக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். வளைத்து வளைத்து புகைப்படங்கள். நிகழ்ச்சியை அப்படியே முகநூலில் யாரோ லைவ் போட்டிருந்தார்கள்.
கடைசியாக மேன்மைக்கவி பேசினான். தடதடவென்று எதுகை மோனை அடுக்கி தமிழை வணங்கினான். சிறிது இடைவெளி விட்டு கூட்டத்தை அளவெடுக்கிறாப் போலப் பார்த்தான். அப்பாவைப் பார்த்தான். பிறகு “கவிதை என்றால் என்ன? கவிதையைக் கவிதையாக ஆக்குவது எது?” என நிறுத்தினான். “இது கவிதையா?” என்றான். திரும்ப நிறுத்தினான். பாராட்டிப் பேசப் போகிறானா, திட்டப் போகிறானா... என்றே விளங்கவில்லை யாருக்கும். அவனே அதைத்தான் யோசிக்கிறானாய் இருக்கும். பிறகு சடசடவென்று மழைபோன்ற ஆவேசத்துடன் அப்பாவின் வரிகளை வாசித்து வாசித்துக் கிழி கிழியென்று கிழித்தெடுத்தான். பரமேஸ்வரனுக்கே பயமாகி விட்டது. இலக்கியக் கூட்டங்கள் என்று அவன் போனதே இல்லை. இப்படி எதிரி பாவனையுடன் ஆவேசமாக ஒரு பேச்சை அவன் கேட்டதே யில்லை. கூட்டத்தில் அத்தனை அமைதி. தானே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு ஆசுவாசமாகி அமர்ந்தான் மேன்மைக்கவி.
ஏற்புரை என எழுந்தார் அப்பா. அவனுக்குப் பாவமாய் இருந்தது. ஆனாலும் அவர் தன்னை மதித்து விழாவுக்கு வந்ததற்கு மேன்மைக்கவிக்கு நன்றி சொன்னார். அடுத்த தொகுப்பு என்று வரும்போது தன் கவிதைகள் மேலும் செழுமையுறும் என்று நம்புவதாகச் சொன்னார். அவனுக்குத் தான் அப்பாவைப் பார்க்க என்னவோ போலிருந்தது. இதன் பிறகும் அப்பா இன்னொரு தொகுப்பு கொண்டு வருவாரா சந்தேகம் தான். கொண்டு வந்தால் விழா எடுப்பாரா, சந்தேகந்தான். விழா எடுத்தாலும் மேன்மைக்கவியை அழைக்க மாட்டார். அதில் சந்தேகமில்லை.
விழா முடிந்து அவர்களுக்கு இரவு உணவு பற்றி அப்பாவிடம் கேட்டான். “அதெல்லா இழுத்து விட்டுக்காதே”  என்றார் அப்பா. இத்தனை திட்டிப் பேசிட்டு... இவனுகளுக்குச் சாப்பாடு வேறயா, என்று அவர் நினைத்திருக்கலாம். கால் டாக்சி வர மேன்மைக்கவி எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஏறிப் போய்விட்டான். தமிழாசிரியர் வந்து அப்பாவுக்குக் கை கொடுத்தார். நிகழ்ச்சியில் அப்பா மூக்குடை பட்டதில் அவருக்குத் திருப்தியா தெரியவில்லை.
அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அப்பாவின் சந்தோஷத்துக்காகத்தான் அவன் இத்தனை மெனக்கிட்டது. இப்படி எதிர்மறையாக அது முடிந்துவிட்டது. அப்பாவே இப்படி ஆகலாம் என்று தான் புத்தகம் வெளியிடாமல் தவிர்த்தாரோ என்னவோ. அவன் யோசித்தபடியே பார்த்தான். லதா அவனை நோக்கி வந்தாள். “அப்பா கவிதைல்லாம் படிப்பீங்களா? உங்களுக்கு கவிதைல இன்ட்ரஸ்ட் உண்டா?” என்று கேட்டாள். எதோ பெர்ஃபியூம், அவளது அருகாமை அவனுக்குப் பிடித்திருந்தது. பிறகு பையில் இருந்து சில காகிதங்களை எடுத்து அவனிடம் காட்டினாள். “நானும் கவிதைல்லாம் எழுதுவேன்” என்றாள் அவள். “மணக்கரைமைந்தன் உங்க அப்பா. உன் புனைப்பெயர் என்ன?” என்று சிரிக்காமல் கேட்டான் பரமேஸ்வரன்.
*
storysankar@gmail.com
91 97899 87842 / whatsapp 944 501 6842

Comments

Popular posts from this blog