
காலக்கனல் எஸ்.சங்கரநாராயணன் • ‘இ லக்கிய வீதி’ இனியவன் மறைந்து போனார். ஜுலை இரண்டாம் நாள் இரவு அவருக்கு விடியவே இல்லை. எழுபதுகளின் இறுதி, எண்பது துவக்கத்தில் விநாயகநல்லூர் வேடந்தாங்கலில் இருந்து இலக்கியப் பறவைகளை வரவேற்று ஒன்றிணைக்கும் முயற்சியாக இலக்கிய வீதி பெரும் புகழுடன் விளங்கியது. இளம் எழுத்தாளர்களின் எழுச்சிப் பாசறை அது. அந்தப் பட்டறைவாசிகளில் நானும் ஒருவன். இது எனது பெருமை. இலக்கிய வீதி சார்பாக மாதம்தோறும் இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை தேர்வு செய்யப்பட்டு ஆண்டு இறுதியில் தனி சிறுகதைத் தொகுப்பாக வெளியாகும். ஐந்தாறு வருடங்கள் இப்படி தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. ஓரு வருடத்தில் என் கதையும் அதில் இடம் பெற்றது. பிற்காலங்களில் சென்னை கம்பன் கழகத்தின் செயல்வீரராக அவர் சிரமேற்றுக் கொண்டார் என்றபோதிலும், தகுதிசால் இலக்கிய முகங்களுக்கு இலக்கிய வீதியின் ‘அன்னம்’ விருது மாதந்தோறும் வழங்கி மகிழ்ந்ததைக் குறிப்பிட வேண்டும். புதிய புதிய ஆற்றல்களைக் கண்டறிந்து ஊக்குவித்து பாராட்டி புன்னகையுடன் க...