எனக்கு வயதாகி விட்டது


எனக்கு வயதாகி விட்டது
வேக வேகமாக மாறி வரும் உலகம். எலக்ட்ரானிக் உலகம். மின்னணு சாதனப் பொருட்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. துவைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை…
இது நாம் பார்த்த உலகமா? நமது வேலைகள் என மனிதன் செய்ய எதுவுமே இல்லையா?
2
கண் முன்னே நம் குழந்தைகள் நம்மை விட பெரும் பணம் ஈட்டுகிறார்கள். செலவுகளும் அவ்வளவில் பெரும் வீச்சாய் இருக்கிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் உலகம். இதுகுறித்து நாம் சொல்ல எதுவும் இருக்கிறதா? அவர்களின் அந்த, பணக்கார உலகம், நமக்கு அது விளங்குகிறதா?
3
ஜக்கி வாசுதேவ் சொல்கிறார். நாம் சின்ன வயசில் ஆசைப்பட்டு இழந்ததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்க வேண்டாம். அது நாம் தோற்றுப்போன உலகம். அதை நாம் அவர்களிடம் திணிக்க முற்பட்டால், நம் தோல்வியை குழந்தைகள் சட்டெனக் கண்டு கொள்வார்கள்.
4
நம் குழந்தைகள் நம் அடையாளங்களுடன், நம் குடும்ப அடையாளங்களுடன், நம் கலாச்சார அடையாளங்களுடன்… இதெல்லாம் சரியாக வந்திருக்கிறதா? ஒரு நிர்ப்பந்த அடிப்படையில் நாம் அதைக் கொண்டுவர முயல்வது சாத்தியமா? உலகம் சுருங்கிவிட்ட காலம். பிள்ளைகள் பல நாடுகளில் பரவி வருகிற இந்தக் காலகட்டத்தில்… இதில் வரும் முரண்களை எப்படி சமாளிப்பது? இந்த முரண்கள் நாமே வரழைத்துக் கொண்டவை என்கிற குரலைச் சமாளிப்பபது எப்படி?
5
உன் குழந்தை முட்டாள் என்றால் உன் பணம் அவனுக்குப் பயன்படாது. அவனே அழித்து விட்டு வெறுங் கையுடன் நிற்பான்.
உன் குழந்தை புத்தசாலி என்றால், உன் பணம் அவனுக்குத் தேவையே இல்லை. அவன் உன் பணத்தை எதிர்பாரக்க மாட்டான்.
பணம் சம்பாதித்து, என் பிள்ளைக்கு என சேர்த்து வைக்கிறது பற்றி யோசனையாக இருக்கிறது.
6
குழந்தைகசளின் இளமைப் பருவத்தை மிரட்சியற்றுக் கழிக்கவும், படிப்புக்கும் தவிர பணத்தால் வேறு நன்மை என்று எதுவும் இருக்கிறதாகத் தெரியவில்லை.
அநேக இடைஞ்சல்கள். அதில் சந்தேகம் என்ன இருக்கிறது?
7
எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, தேவைகளைக் குறைத்துக் கொண்ட வாழ்க்கை. அதுவே எனக்கு அழகாய்த் தோன்றுகிறது. ஒதுங்குதல், தனிமைப் படுதல் அல்ல. அது ஒரு தன்னிறைவு நிலை. மகிழ்ச்சி என்கிற சமுத்திர ஒரம் அல்ல. நடுக் கடல் அமைதி அது. அதன் ஆழம் வசிகரம்.
8
பிறக்கையில் அடையாளம் அற்று தானே இந்த பூமிக்கு வந்தோம். அடையாளம் அற்று இறந்து விட்டால் என்ன? காக்கை குருவி பாம்பு தெருநாய் உட்பட எந்த விலங்கும் மரணத்தை கூட்டாக அனுபவிப்பது இல்லை. மரணத் தருவாயில் ஒதுங்கி மறைந்து கண்ணில் படாமல் தனித்துப் போகின்றன. மனிதன் இந்த மரணத்தைப் பற்றி இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா?
9
என் குழந்தைகளின் சிரிப்பில் நான் என்னையே காண்கிறேன். அவர்கள் வசதிகள், வாய்ப்புகள்… இவை என் ஆசைகள். அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்கிற என் ஆசை அது.
10
இருபத்தி ஐந்து வயதில் அவன். ஐம்பத்தி ஐந்து எனக்கு. இ,ந்த இடைப்பட்ட முப்பது ஆண்டுகளின் என் வலி, போராட்டம், இதையெல்லாம் நான் கடந்து வந்ததைப் பற்றி அவன், என் மகன், ஏன் கவலைப்பட வேண்டும்? அவன் உலகம் வேறு. அவன் கவலைப்படவில்லை என்பதை நான் எளிமையோடு புரிந்து கொள்ள முடியாதா?
11
தன் அறிவுக்கும் தர்க்கத்துக்கும் கவரப்பட்ட பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்கிற காலம் இது. இதில் பணம் தற்செயலாக உள்ளே வருகிறது. என்றாலும் அது முக்கியமாகத் தெரியவில்லை. ஆனாலும் சாதி, மத இடையூ
றுகள் உள்ளமுங்கி விட்டதாகவே படுகிறது. நான் இதை ஏற்றுக் கொண்டால் தான் என்ன?
12
படித்த மருமகள் என்றால் அவள் கை ஓங்கியிருப்பதை நான் ஏன் புரிந்து கொள்ள, ஒத்துக்கொள்ள மறுக்க வேண்டும்?
13
என் குழந்தைகளை சுதந்திரத்துடன் வளர்ப்பதை நான் விரும்புகிறேன். என்றால் அதில் என் சுதந்திரம் பறிபோகாத உள் கவனம் இருக்கத் தானே செய்கிறது?
சுதந்திரம் அழகு. எனக்கான, தனியே அவரவர்க்கான உலகம், வாழ்க்கை, அனுபவம்… நானும் என் குழந்தைகளும் இதை உணர்ந்தே வாழ்வது நல்லது தானே?
நான், எனது வாழ்க்கை. என் மகன் சார்ந்த அவனது வாழ்க்கை அனுபவங்களுடனும் நான் பயணித்தால்… எனக்கு அறிமுகமாகிறது ஓர் உலகம் அல்ல. இரண்டு. இது நல்ல விஷயம் அல்லவா? என் எல்லைகள் இன்னும் விரிந்து கொடுக்கவில்லையா அப்போது?
* * *

storysankar@gmail.com
91 97899 87842


Comments

Popular posts from this blog