
சீதாயணம் எஸ். சங்கரநாராயண்ன ரா மச்சந்திரையருக்குப் பின், வீட்டு நிர்வாகம் பெரிய பிரச்சனையாகி விடும் போலிருந்தது. என்ன மனுஷன், என்ன ஆகிருதி. வில்வண்டியில் அவர் பயணம் போகிற கம்பீரம் என்ன, கையில் தகதகக்கிற கங்கணமென்ன, விரலின் நவரத்தின மோதிர ஜ்வலிப்பென்ன, அதை ஆட்டியாட்டி, அதிர்கிற குரலில் அவர் இடுகிற, கட்டளைகள் என்ன... வண்டிக்காரன் இருக்கிறான் என்றாலும் மாதங்கியைப் பார்க்கப் போகிறதனால் தனியே போவார். உயரமான காங்கேயம் காளைகள். பாய்ச்சலில் சூரப்புலிகள். ஏறி உட்கார்ந்து வாலைத் தொட்ட க்ஷணம் சிலிர்த்துச் சினந்து முன்னால் பாயும். ராமச்சந்திரையர் வண்டி என்கிற சலங்கைச் சத்தம் வீதி முனைவரை கேட்கும். கூடத்தில் பெரிய ஊஞ்சல். பெரிய மனுஷாள் என யார் வந்தாலும் உட்கார நாற்காலிகள் கிடக்கும். நடுவே அந்த ஊஞ்சல். அதுதான் அவரது யதாஸ்தானம். அவர் வரும்வரை எல்லாரும் காத்திருப்பார்கள். காலை நித்தியப்படி நியதிகளை முடித்துவிட்டு வந்து ஊஞ்சலில் அமர வயல் கணக்கு, ஊர்ப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, அரசியல் என்றெல்லாம் தனித்தனி வியாகூலங்கள் நடந்தேறும். லலிதா உள்ளே அவர் கண்ணசைவுக்குக் காத்திருப்பாள். அவரத...