சீதாயணம்
எஸ். சங்கரநாராயண்ன

ராமச்சந்திரையருக்குப் பின், வீட்டு நிர்வாகம் பெரிய பிரச்சனையாகி விடும் போலிருந்தது. என்ன மனுஷன், என்ன ஆகிருதி. வில்வண்டியில் அவர் பயணம் போகிற கம்பீரம் என்ன, கையில் தகதகக்கிற கங்கணமென்ன, விரலின் நவரத்தின மோதிர ஜ்வலிப்பென்ன, அதை ஆட்டியாட்டி, அதிர்கிற குரலில் அவர் இடுகிற, கட்டளைகள் என்ன...
வண்டிக்காரன் இருக்கிறான் என்றாலும் மாதங்கியைப் பார்க்கப் போகிறதனால் தனியே போவார். உயரமான காங்கேயம் காளைகள். பாய்ச்சலில் சூரப்புலிகள். ஏறி உட்கார்ந்து வாலைத் தொட்ட க்ஷணம் சிலிர்த்துச் சினந்து முன்னால் பாயும். ராமச்சந்திரையர் வண்டி என்கிற சலங்கைச் சத்தம் வீதி முனைவரை கேட்கும்.
கூடத்தில் பெரிய ஊஞ்சல். பெரிய மனுஷாள் என யார் வந்தாலும் உட்கார நாற்காலிகள் கிடக்கும். நடுவே அந்த ஊஞ்சல். அதுதான் அவரது யதாஸ்தானம். அவர் வரும்வரை எல்லாரும் காத்திருப்பார்கள்.
காலை நித்தியப்படி நியதிகளை முடித்துவிட்டு வந்து ஊஞ்சலில் அமர வயல் கணக்கு, ஊர்ப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, அரசியல் என்றெல்லாம் தனித்தனி வியாகூலங்கள் நடந்தேறும்.
லலிதா உள்ளே அவர் கண்ணசைவுக்குக் காத்திருப்பாள். அவரது முகக்குறிப்பை அவள் அறிவாள். அவர் பேச்சை அறிவாள். முதல் வார்த்தையே அவர் அங்கே விவாதிக்கிற விஷயம் நோக்கி எந்த காயை எப்படி நகர்த்தப் போகிறார் என்கிற குறிப்புச் சொல்லிவிடும். உள்ளே காலை பூஜை நடந்து கொண்டிருக்கிற போதே தேடி ஆள் வர ஆரம்பித்திருப்பார்கள். அவள் வருகிறவர்களை முகமன் கூறி வரவேற்று, அந்தஸ்துப்படி உள்ளேயோ வெளியே ரேழியிலோ அமரப் பண்ணிவிட்டு வந்து, அவரது பூஜை அனுஷ்டானங்களுக்கு அனுசரணை செய்தபடியே தகவல் சொல்ல வேண்டும்.
நடேச குருக்கள் இன்னிக்கு நம்ம மண்டகப்படின்னு ஞாபகப் படுத்திப் போனார்... நெல்லளக்க உத்தரவு தரணும்னு சம்சாரி தாக்கல் அனுப்பியிருக்கான்... புதுசா ஒரு உரக்கம்பெனி விளம்பரப் படம் போடறாளாம். ராத்திரி வந்து நீங்களும் கலந்துக்கனும்னு கூப்ட வந்திருக்கா..
பூஜை செயல்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தாலும் ம்... போட்டு, தலையாட்டி கேட்டுக் கொள்வார். பூஜை முடிக்குமுன்  யார் யார் கிட்ட என்னென்ன பேசணும்னு தனியே மனக்கணக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
*
ராமச்சந்திரையர் வண்டியில் வேகமெடுத்து வந்து கொண்டிருந்தவர்... கண்ணகி கோயிலாண்டை இருட்டு தெரியாமல் குப்புறக் குடைசாய்ந்து விழுந்தார். மன்னிச்சுக்கோ என்கிறாப் போல. கடக்கென்று இடுப்பெலும்பில் சரியான அடி. முனகக் கூட முடியவில்லை. காலையில் ஆட்கள் ஓடிவந்து தூக்கி... ஆவென அலறி மயக்கமானார்...
ஊஞ்சலைக் கழற்றிவிட்டு ஹாலின் ஓரமாய்க் கட்டில் போட்டு அவரைக் கிடத்தினார்கள்.
எத்தனை வைத்தியம் பார்த்தும் நிலைமை சீரடைவதாய் இல்லை; வயதென்ன சீர் செய்கிற வயதா? இந்த வயதுக்கு இந்த இயக்கமே ஜாஸ்தி இல்லையோ?
நிர்வாகம் ஸ்தம்பித்து, மூத்த பிள்ளை யக்ஞராமன் பொறுப்பு பெற்றுக் கொண்டான். நெளிவு சுழிவுகளை அப்பாவோடு அத்தனை விருத்தியாய், கூட இருந்து அவன் பழகிக் கொள்ளவில்லை. அவன் அளவுக்குச் செலவுப்பாடுகள் ஓடிகொண்டிருந்தது. அது போதும் என்றிருந்தது. கல்யாணமும் ஆகி ஒரு பெண்குழந்தை அவனுக்கு.
லலிதாவுக்கு நான்கு குழந்தைகள் யக்ஞராமன், யோகேஸ்வரன், மகேஸ்வரி, கடைக்குட்டி மகாதேவன். இதில் யோகேஸ்வரனின் கவனமெல்லாம் ஊரெல்லை தாண்டி, அவன் பட்டணத்திலே மேல்படிப்பு என்று போய், தன்பாட்டை அங்கேயே அமைத்துக் கொண்டான். மகேஸ்வரியை சிதம்பரத்தில் கொடுத்திருக்கிறது. கடைக்குட்டி இப்போதுதான் ஹைஸ்கூல் வாசிக்கிறான். அவள்பாடு கழியணும்.
·        
நேற்று பேராவூரணி வயல்க் குத்தகையில் யக்ஞராமனுக்கும் சம்சாரிக்கும் விவகாரமாகிவிட்டது. கோபம் வந்தால் யக்ஞராமனுக்கு வாயில் இன்ன வார்த்தை வருமென்று சொல்ல முடியாது. நேரா அடிதடி ரகளை என்று திரிகிறவன். பஞ்சாயத்து, நிர்வாகம் என்று வந்துவிட்டால் சில சமயங்களில், எதிராளிக்கு முகக்குறிப்பைக் கூடக் காட்டாமல் வேலைசெய்ய வேணாமோ? படபடத்தாப்ல ஆயிடுத்தா?
கூலி கூட்டிக்கேட்டு தகராறு ஆரம்பித்திருந்தது. இருதரப்பும் வார்த்தை முற்றிப்போய், நாலு அன்னாடங் காய்ச்சிகள் முன் ரசபாசமாகி, தான் அசிங்கப்பட்டு விட்டதாய் யக்ஞராமன் கூசிப்போய் வந்தான்.
“காளிங்கா... வண்டியைக் கட்டு” என்றாள் லலிதா. ராமச்சந்திரையரே புருவம் உயர்த்தினார். லலிதா அவர் அருகில் வந்தாள். “நீங்க மனசுல ஒண்ணும் சிரமப்பட வேண்டாம். பேசாம ஓய்வெடுங்கோ...” மடிசார்க் கட்டுடன் அவள் வண்டியேறி உட்கார்வதை எல்லாரும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்.
சம்சாரிகள் அத்தனை பேரும் ஓடோடி வந்தார்கள். யக்ஞராமனின் பைக் சத்தம்தான் அவர்கள் எதிர்பார்த்தது... வண்டியில் இருந்து லலிதா இறங்கினாள்.
களத்தில் நெல்லடி முடித்து கூளம் தனியே தானியம் தனியே கிடந்தன. பெரிய வைக்கோல் போரை சட்டென்று விலக்கிப் பார்த்தாள். அடியே தானியங்கள் பரத்தியிருந்தன. “இதுக்குத் தனிக் கணக்கா...” என்று திரும்பி குத்தகைக்காரனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “எல்லாத்தையும் ஒண்ணாப் போடுங்கோ. நேரமாறது...”
“அவர்காலம் முடிஞ்சாச்சின்னு யாரும் அதைரியப்பட வேணாம். உங்க மேல அவா வெச்சிருந்த மட்டு மரியாதை நேக்குத் தெரியும்...” என்று எல்லாருக்கும் பொதுவாய் வணக்கம் சொன்னாள். அதற்குள் ஒருவன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். எங்கிருந்தோ நாற்காலி வந்தது.
லலிதா நெல்லளக்கிற மரக்காலைப் பார்த்தாள். “நானே மரக்கா கொண்டு வந்திருக்கேன். காளிங்கா?” என்று கூப்பிட்டாள். கூட்டம் வாயடைத்துப் பார்த்தது. குத்தகைக்காரன் திகைக்கிறான்.
யாரோ அவளுக்குக் குடை பிடிக்கிறார்கள். அநாவசியப் பேச்சு இல்லை. விறுவிறுவென்று காரியங்கள் நடந்தன. நெல்லைக் குவித்து சாணிவட்ட அடையாளம் போட்டு வேலை முடிந்ததும், வேலையாட்களுக்கு அறுப்புச் சம்பளம் என்று நெல்லளப்பு. எல்லாருக்கும் கூட ஒரு மரக்கால், ரெண்டு மரக்கால் என்று கேளாமலே விழுந்தது. அவரவர் முகத்திலும் எத்தனை சந்தோஷம். லலிதாவைப் பூரிப்புடன் கும்பிடுகிறார்கள் அவர்கள். “ஏமாத்தறது குத்தம். அது முதலாளியானா என்ன, தொழிலாளியானா என்ன?” என்று புன்னகைத்தாள் லலிதா.
“ஆஹா” என்றார்கள் அவர்கள்.
·        
அடுத்த நாலைந்து நாளில் ஊரெல்லாம் அவள் பேச்சுதான்.
ராமச்சந்திரையருக்கு ஆச்சரியம். அவரே பல சந்தர்ப்பங்களில் விவகாரத்தை முற்ற விட்டுவிட்டுத் திணறியிருக்கிறார். லலிதா அவர்வாயில் காபியை ஊற்ற ஊற்ற தொண்டைக்குள் இதமாய் இறங்கியது காபி. வழக்கத்தைவிட மகசூல் அதிகம் என்பதே அவரைப் புருவம் உயர்த்த வைத்தது. இடதுகையால் தலையணை அடியில் துழாவினார். “சிரமப்படாதீங்கோ...” என்று அவர் தலையை வருடிக் கொடுத்தாள் லலிதா.
அவர் தலைமாட்டில் இருந்து சாவியெடுத்து அவள்கையில் கொடுத்தார். அவர் கண்கள் ஆனந்தத்தில் அழுதன. “ஐயோ, இதென்னன்னா குழந்தை மாதிரி...” புடவையால் அவரது முகத்துத் துளிகளை ஒற்றியெடுத்தாள்.
பழையபடி கூடத்தில் ஊஞ்சல். கிளிச்சத்தம் கேட்கிறது. நவராத்ரி கொலு போல, பார்க்கிற ஜனங்கள் “ஈஸ்வரி” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். சதா புன்னகைத்த முகம். ஒரு சொல் சுடுசொல் இல்லை. கருணை ததும்பும் கண்கள். வந்தவரை உபசரணையாய் வணங்கி வரவேற்கிற பாங்கு. உபசரிப்பாய்ப் பேசுகிற தோரணை. இதையெல்லாம் எங்கே வைத்திருந்தாள் இத்தனை நாள்?
கணக்குப்பிள்ளையேகூட நோட்டைப் பார்த்துத்தான் புள்ளிவிவரம் பேசுவான். ம்... ம்... என்று தலையாட்டிக் கொண்டே வருவார் அவர். அவளிடம் எல்லாவற்றிலும் இருந்தது மனக்கணக்கு. போன வருடம் என்ன நிலைமை, இந்த வருடம் லாபமா, சுணக்கமா? சுணக்கம் என்றால் எப்படி நிவர்த்தி செய்வது... எப்படியெல்லாம் சிந்திக்கிறாள் இவள்? யக்ஞராமனே அயர்ந்து போனான். அம்மாவிடமே யோசனைகள் கேட்க ஆரம்பித்திருந்தான் அவன்.
ராமச்சந்திரையர் காலம் முடிந்தது. எத்தனை பெரிய கூடம் அது. அப்படியொரு ஜனக் கூட்டம். கூடத்தில் குண்டூசி விழ இடம் இல்லை. பக்கத்தூரில் இருந்தெல்லாம் பிரமுகர்கள் நிரம்பி வாசலில் நாற்காலிகள் அமர்க்களப் பட்டன. தெருவடைத்துப் பந்தல். சம்சாரியெல்லாம் அழுகிறார்கள். என்னதான் கண்டிப்புக்கார மனுசனாய் இருந்தாலும், குணத்தில் ஐயர் தங்கம். பிறத்தியார் கஷ்டம் பொறாதவர். பசி என்றால் பைக்குள் கைவிட்டு வந்த காசை அள்ளித் தருவார். கண்ணில் திரைவந்து ஆபரேஷன் முடித்ததில் எப்போதும் பட்டைக் கண்ணாடி மறைப்பு. ஒளித்திரை. சிரிக்கிற ஒரு பல் தங்கப்பல். அவரது சாவு ஊர்த்துக்கமாக இருந்தது.
அவள் உள்ளே அலமந்துபோய் அமர்ந்திருக்கிறாள். அழுது களைத்தமுகம். நகைகளைக் களைந்த முகத்தில் சிறு பொட்டு. என்றாலும் அந்த முகத்தில்தான் எத்தனை சாந்தம். மன உறுதி. எதையும் தாங்கும் இதயம் அது, என்று தெளிவாய்க் கிடந்தது முகம். அடக்கமாய்ப் போர்த்தியிருந்தாலும் யானையின் கம்பீரம் தெரிந்தது அவளிடம். அசாத்தியப் பொறுமையும் நிதானமும் தெரிந்தது.
·        
கூடத்தில் உறவு ஜனம் மொத்தமும் குழுமி யிருந்தார்கள். மகேஸ்வரியின் கணவன் பஞ்சாட்சரம்தான் பேச்சை ஆரம்பித்தாற் போலிருந்தது. அவள் எப்படியும், யாராவது ஆரம்பிப்பார்கள், என்று எதிர்பார்த்திருந்தாள் என்றாலும், அவனிடமிருந்து முதல் குரல் வரும், அதும் இத்தனை சீக்கிரம் வரும்... என எதிர்பார்க்கவில்லை.
யக்ஞராமனை நடுவே அமர்த்தி அவன் மகளுடன் கொஞ்சிக் கொஞ்சி எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். உபசரணைகள் அவளுக்கு தாராளமாய்க் கிடைத்ததில் ரேவதி முகத்திலும் சந்தோஷம்.
அம்மா உள்ளறையில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா காரியம் முடிஞ்சாச்சிடா, இனிமே நீ தான் அம்மாவை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும்” என்றான் மகேஸ்வரியின் புருஷன். யக்ஞராமன் தலையாட்டினான். “அப்பா இருந்தவரை அவர் நமக்கு ஒரு குறையும் வைக்கலை...” என்றான் யோகேஸ்வரன் பின்பாட்டு போல. “அதிலென்ன சந்தேகம்...” என்றான் யக்ஞராமன்.
“நீயும் எங்களை விட்டுற மாட்டே... நம்பாத்ல யாரும் அப்டியில்லைன்னு வெய்யி... இருந்தாலும், நாமளும் பெரியவளாயாச்சி. அவா அவா பாட்டை பாத்துக்கற வயசும் பொறுப்பும் இருக்கு. நமக்குன்னு குழந்தைகள் தனி வாழ்க்கைன்னு அவா அவா சக்கரம் வேறாயிட்டதோல்யோ...”
யக்ஞராமன் “சரிதான்” என்றான் வெற்றிலையை எடுத்துக்கொண்டே பேச்சின் பீடிகை, போக்கு அவனுக்குள் விக்கினாப் போல இருக்கிறது.
உடம்பே வணங்காத மகேஸ்வரி எல்லாருக்கும் காபி எடுத்துக்கொண்டு போனதில் லலிதாவே அயர்ந்து போனாள். அம்மாவைப் பார்த்து மகேஸ்வரி புன்னகைக்கிறாள். “எல்லாரும் சுமுகமா ஒண்ணா உக்காந்து தன்மையாப் பேசிண்டிருக்கறது எத்தனை நன்னாயிருக்கு, இல்லியாம்மா?”
யோகேஸ்வரனும், பஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைக்குட்டி மகாதேவன் வந்து அம்மாவருகே உட்கார்ந்து கொள்வதை எல்லாரும் பார்த்தார்கள். “வாழ்க்கைல எல்லா மேடு பள்ளமும் அப்பா பார்த்திட்டா...” என்கிறான் யோகேஸ்வரன். கண்ணகி கோவில் மேடு மாத்திரம் தெரியவில்லை அவருக்கு... என்று மனசு சட்டென்று வேடிக்கை காட்டியது லலிதாவுக்கு.
“என்ன... நம்ப மகாதேவனுக்கு இன்னும் ஒரு வழி அமையவில்லை.” எனும்போது பஞ்சுவுக்கு குரல் கம்மிவிட்டதை ரசித்தாள். யக்ஞராமன் பேசக்கூட முடியாமல் உட்கார்ந்திருந்தான்.
“இனியும் நான் இப்படி அடிக்கடி வந்து போயிண்டிருக்கிறது முடியடலைடா அம்பி” என்கிறான் யோகேஸ்வரன். “என் கதை ஒருபக்கம் இருந்தாலும், நம்ப மாப்ளை பாரு... கடையப் பெரிசு பண்ணிண்டு திகைக்கிறார். என்ன இருந்தாலும் நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு... விட்டுக் குடுத்திறப்டாது. இல்லியா?”
லலிதா மெல்ல எழுந்து ஊஞ்சலில் போய் அமர்கிறாள். “யோகா..” என்று இதமாய்க் கூப்பிட்டாள் அம்மா. “நீ என்னதான் மெட்ராஸ் அது இதுன்னு அலைஞ்சிண்டிருந்தாலும் அம்மாவை விட்டுக் குடுத்திறப்டாதுடா...” என்கிறாள். அவள் குரல் நெகிழ்ந்தொலிக்கிறது. “ஐயோ அம்மா, அப்டில்லாம் மாட்டேம்மா...” என்கிறான் யோகேஸ்வரன்.
“மாப்ளை நீங்களும்தான்...”
“நிச்சயமா நிச்சயமா...”
“இது அவர் வாழ்ந்த பூமி. அவர் கால்பட்டு, அவர் நிர்வாகம் பட்டுப் பொலிஞ்ச ஸ்தலம். வெறும் மண்ணா இது? நம்ம கோயில். புரியறதா?”
அவர்கள் ஒருவரை யொருவர் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.
கடைக்குட்டி மகாதேவனுக்கு அழுகையே வந்துவிட்டது. வந்து ஊஞ்சலில் அம்மாமடியில் படுத்துக் கொண்டான். லலிதா அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.
“என் காலம் கழியறவரை நாம எல்லாரும் ஒத்துமையா சிரிச்சிண்டு வளைய வந்திண்டிருக்கணும். அடிக்கடி பார்த்துக்கணும். பேசிக்கணும்... நல்லது கெட்டதுக்கு கூடிக்கணும். பிரியறது சுலபம். சேர்றது கஷ்டம். புரியறதா?”
யாரும் பேசவில்லை.
“குழந்தைகள் பசியா இருக்கும். இலை போடலாம் ரேவதி!” என்று கூப்பிட்டாள் லலிதா
***

91 9o7899 87842

Comments

Popular posts from this blog