
எச்சம் மற்றும் இனி அமர்நாத் ம ன்னிக்கவும். நூல்கண்டின் நூலை நுனியில் பிடித்து இழுப்பது போல, மையக்கருத்தை வெளிக் கொண்டுவரும் கட்டுரை இல்லை இது. மூன்று நான்கு நூல்கள் ஒரு சிக்கலில் பின்னியிருக்கின்றன. சிக்கலை எடுத்து அவற்றை ஒரே நீளத்தில் சேர்த்து முடிச்சுப் போடவேண்டிய கட்டாயம். • நாம் இப்போது வரலாற்றின் மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இது பல சரித்திரக்கதைகளில் படித்து அலுத்துப்போன வசனம். ஆனாலும் அது இப்போது முழுக்க முழுக்க உண்மை. நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் பரிமாணங்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவற்றின் தீர்வுகளும் எளிதானவை அல்ல. ‘லெகஸி’ என்பதற்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை எச்சம். திருவள்ளுவர் பயன்படுத்திய பொருளில், நாம் விட்டுச்செல்லும் பொருட்கள். நெருங்கிய பேரன் பேத்திகளுக்கு மட்டும் இல்லை. அடுத்த, அதற்கு அடுத்துவரும் தலைமுறைக்கு. பெங்களூர் அல்லது மயாமி ரியல் எஸ்டேட்டும், ஸ்விஸ் வங்கியில் பணமும் அவர்களுக்கு எவிவிதத்திலும் உதவாது. • ‘ஒரு மாதம் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழ வேண்டும். ஒரு புத்தகம் மட்டுமே எடுத்துப் போகலாம். அது எது?’...