எச்சம் மற்றும் இனி
அமர்நாத்

ன்னிக்கவும். நூல்கண்டின் நூலை நுனியில் பிடித்து இழுப்பது போல, மையக்கருத்தை வெளிக் கொண்டுவரும் கட்டுரை இல்லை இது. மூன்று நான்கு நூல்கள் ஒரு சிக்கலில் பின்னியிருக்கின்றன. சிக்கலை எடுத்து அவற்றை ஒரே நீளத்தில் சேர்த்து முடிச்சுப் போடவேண்டிய கட்டாயம்.
நாம் இப்போது வரலாற்றின் மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.  இது பல சரித்திரக்கதைகளில் படித்து அலுத்துப்போன வசனம்.  ஆனாலும் அது இப்போது முழுக்க முழுக்க உண்மை. நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் பரிமாணங்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவற்றின் தீர்வுகளும் எளிதானவை அல்ல. 
‘லெகஸி’ என்பதற்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை எச்சம். திருவள்ளுவர் பயன்படுத்திய பொருளில், நாம் விட்டுச்செல்லும் பொருட்கள். நெருங்கிய பேரன் பேத்திகளுக்கு மட்டும் இல்லை. அடுத்த, அதற்கு அடுத்துவரும் தலைமுறைக்கு. பெங்களூர் அல்லது மயாமி ரியல் எஸ்டேட்டும், ஸ்விஸ் வங்கியில் பணமும் அவர்களுக்கு எவிவிதத்திலும் உதவாது. 
‘ஒரு மாதம் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழ வேண்டும். ஒரு புத்தகம் மட்டுமே எடுத்துப் போகலாம். அது எது?’ என்பது ஒருவரின் மனதை அளக்கும் கேள்வி. ஷேக்ஸ்பியரின் நாடகத் தொகுப்பு, பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களையும் ஒன்று என வைத்துக்கொண்டால்)... இதேபோல் சிக்கன விமானப்பயணத்தில் ஏழு கிலோ சாமான்கள் (பையையும் சேர்த்து). சீப்பு, இரண்டு செட் ஆடைகள்... நெருப்போ நீரோ விழுங்க இருக்கும் வீட்டில் இருந்து எவற்றைக் காப்பாற்றுவது? பாஸ்போர்ட், நிச்சயதார்த்தப் புடவை...
இவை எல்லாமே நம் தேர்வுகளை, காலம் இடம் பொருட்களின் குறுகிய வரையறைக்குள் அடக்கி வைக்கின்றன.
மனித குலத்தின் தற்போதைய நெருக்கடி நிலமை திடீரென்று முளைக்கவில்லை. பின்னணியில் இருந்த பல பிரச்சினைகள் -  மக்கள்தொகைப் பெருக்கம், காடுகளின் ,அவற்றில் வசிக்கும் உயிரினங்களின் மறைவு, சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகள் - ஐம்பது ஆண்டுகளில் சிறுகச் சிறுக தீவிரம் அடைந்திருக்கின்றன. அவற்றின் தொடக்கம் எது என்பதில் அறிஞர்களிடையே கருத்துபேதம் நிறைய. கற்களின் உதவியால் பத்து பதினைந்து பேர் கூட்டாகச்சேர்ந்து தங்களைவிட பலமடங்கு பெரிய மிருகங்களைக் கொன்று அழித்ததா? இல்லை, குறிஞ்சியிலும் (மூங்கில் அரிசியையும் வேட்டையாடிய விலங்குகளையும் சாப்பிட்டு) நெய்தலிலும் (கடலில் சென்று மீன்பிடித்து) வாழ்ந்த மக்கள் மருதத்துக்கு குடிபெயர்ந்து பண்ணைகளை உருவாக்கியதா? 
நம் கதைக்கு அவ்வளவு தூரம் போகவேண்டாம். 
நிலக்கரியில் வளர்ந்த ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஒரு கோடி மக்கள் உலகப் பரப்பில் பாதியைக் கைப்பற்றி ஆளமுடிந்ததற்கு முக்கியக் காரணம் கார்பனின் சக்தியில் இயங்கிய தொழிற்சாலைகள், கப்பல்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் நிலக்கரியின் முக்கியத்துவம் குறைந்து ஹைட்ரோகார்பன்கள் (பெட்ரோலியம்) தற்போது உலகை ஆட்டிப் படைக்கின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோலில் அடங்கியுள்ள சக்தி ஏறக்குறைய நூறு மனிதமணிகளுக்கு சமம். அதாவது, எழுபத்தியைந்து ரூபாயில் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள வேலை நடக்கிறது. அதுமட்டுமல்ல, அந்தவொரு லிட்டர் பெட்ரோலுக்கும் பூமாதேவியின் அருளால் நாம் செலவழித்தது ஐந்து ரூபாய்க்கும் குறைவான சக்தி. அற்புதம் அதிசயம் என்கிற வார்த்தைகள் ஹைட்ரோகார்பனுக்குத் தான் பொருந்தும். அதன் தயவில் பயிர் விளைவிக்கிறோம், பறக்கிறோம், படம் பார்க்கிறோம், பேசுகிறோம்... இயந்திர நாகரிகத்தில் ஹைட்ரோகார்பன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. 
புட்டியில் இருந்து வெளிப்பட்ட பூதத்தைப்போல கார்பனும்  ஹைட்ரோகார்பனும் நம் அளவுகடந்த ஆசைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடவில்லை. பூமியைச் சுடுகின்றன, கடல்மட்டத்தை உயர்த்துகின்றன, வயல்வெளிகளைப் பாலைவனம் ஆக்குகின்றன, அற்ப காரணத்துக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை ஒரு நிமிடத்தில் அவை அழித்துவிடுகின்றன.
மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சூரியசக்தியால் உருவான இந்த எரிபொருள்கள் உலகெங்கும் பெருகிய அதே காலக்கட்டத்தில் மனிதநிலை உயர்ந்ததே என்ற வாதமும் உண்மை.  அடிமைகள் செய்த பலவேலைகளை (பருத்தி பறித்தல், வீட்டு சுத்தம்) இயந்திரங்கள் செய்யத் தொடங்கியதால் அவர்களுக்கு உரிமை வழங்க வெள்ளை மக்கள் தயங்கவில்லை. நம் நாட்டிலும் என்.எஸ். கிருஷ்ணன் சொன்னதுபோல் ஜாதிவித்தியாசங்களைக் குறைத்த பெருமை (நிலக்கரியில் ஓடிய) ரயில்வண்டியின் மரக்கட்டைகளுக்கு உண்டு.
உலகெங்கும் மனித உடல் உழைப்பின் தேவை குறைந்ததால் பெண்களுக்கு வாய்ப்புகள் பெருகின…
மற்ற அதிசயங்களைப்போல இந்த அதிசயத்துக்கும் ஒரு முடிவு. அது தொடுவானத்தில் தென்படும் அபாய அறிவிப்பு.
அகழ்ந்தெடுக்கும் எரிபொருளுக்கு முந்தைய காலத்தின் சமுதாயத் தீங்குகளை ஒதுக்கிவிட்டு, சூரியசக்தியில் இயங்கும் சமத்துவ சமூக அமைப்பை நாம் எதிர்காலத்தில் உருவாக்க முடியுமா? 
இது தான் நம் பேரக் குழந்தைகளின் பூரண வாழ்வையோ இல்லை அற்பாயுசையோ நிர்ணயிக்கும் கேள்வி. 
பிற விலங்குகளில் இருந்து பிரிந்து மனிதகுலம் தோன்றித் தழைத்திருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் பண்பாடு. புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் டிஎன்ஏயில் வேதியியல் மொழியில் எழுதப்பட்ட கட்டளைகள் மட்டும் போதாது. பண்பாட்டின் வழிகாட்டலும் அவசியம்.
பண்பாட்டின் அங்கங்கள்... கலை, தத்துவம், மதம். இறுதியில் குறிப்பிட்ட சமயம் என்பது கடவுள் வழிபாடு மட்டுமல்ல, அது ஒழுக்கத்தையும் மனித உறவுகளையும் சமுதாய உணர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பார்த்த மதங்களின் எந்தக் கொள்கைகளை, எந்தப் பகுதிகளை நாம் வரும் தலைமுறைகளுக்கு சேமித்துத்தர வேண்டும்?
சமயவியலாளர்கள் சிந்தித்து நமக்குத் தரவேண்டிய பதில்.

ஒரு முக்கியமான விஷயம். (ஐபிஎம்) வாட்சனை இயக்கவும் குளிரவைக்கவும் தேவையான மின்சாரம் எதிர்காலத்தில் இராது. 

Comments

Popular posts from this blog