நன்றி - ‘காணி நிலம்’
(பெயல் – நாவல். ஆசிரியர் சைலபதி.
பக். 190 விலை ரூ. 180/-
வெளியீடு யாவரும் பதிப்பகம்.)


 நில் எனப் 
பெய்யும் மழை2004 திசம்பர் வாக்கில் சுனாமி சென்னையைத் தாக்கியது. அதற்கு அடுத்த பெரு நிகழ்வாக 2015 திசம்பரில் சென்னை கண்ட பெருமழையும் அதைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கும். பிறகு 2016 ல் அதுவும் திசம்பர் மாதம்தான், சென்னையைத் தாக்கியது வார்தா புயல். இவற்றைப் பற்றியெல்லாம் போதுமான அளவில் படைப்புகள் எழும்பி வரவில்லை என்பது ஆதங்கமான விஷயம் தான். அரசியல் ரீதியான பெரும் சட்டாம்பிள்ளைத் தனங்களில் தமிழ் சிக்கி, அடங்கிக் கிடக்கிறது. ஆனால் ஆவணங்களுக்கு நடுவே, புனைவுகள் தான் அந்த அவலங்களை மேலும் காத்திரமாக, உக்கிரமாக பிற்கால சந்ததிக்கு எடுத்துரைக்க வல்லவை.
சைலபதி 2015 சென்னைமழை பற்றிய தன் அவதானிப்பை மனசிலேயே விளைவித்து நாவல் என அறுவடையாக்கி யிருக்கிறார். ‘பெயல்’ என்கிற அவரது சமீபத்திய நாவல் அந்த நிகழ்வைச் சுற்றியும் நேராகவும் தொட்டுப் படர்ந்து பரவுகிறது. நேரடிப் பாத்திரங்களே அவருக்கு இதில் உதவிகள் அதிக அளவில் செய்திருக்கின்றன. பெருமழை பற்றி முன்பே தனிநபர் வானிலை ஆய்வாளர் சிலர் எச்சரித்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. பிரச்னையைக் கையாள்வதில் அரசு தரப்பில் நிகழ்ந்த குளறுபடிகள் அலலது அலட்சியம். பொதுமக்கள் நலனைப் பற்றிய அக்கறையின்மை என இவற்றையெல்லாம் பதிவிடாமல் முடியாது. அந்தச் சூழல்தான் சைலபதியை நாவலை எழுத இயக்கியிருக்கிறது. அவற்றை தான் உணர்ந்த அல்லது அனுபவித்தபடி கேட்டபடி சைலபதி எழுதாமல், அந்தப் படைப்பில் நம்பகத் தன்மை இராது, இந்த நாவலை வாசிக்கிற வாசகன் இந்த நிகழ்வைப் பற்றி ஒரு சுய அபிப்ராயம் ஏற்கனவே வைத்தபடிதான் இந்தப் படைப்புடன் கூட நடந்து வருவான். அது சைலபதிக்குத் தெரிந்திருக்கிறது. என்றாலும் இது புனைவு, ஆவணம் அல்ல இது. வாசகனை அதன் உயிர்த்துடிப்புக்கு சைலபதி உள்ளிழுக்க தன் புனைவு சுதந்திரத்தை அழகாகப் பயன்படுத்தி யிருக்கிறார்.
சமுதாயத்தின் பலமட்ட மனிதர்களை, நிதியாதாரத்தில் பல தரப்பட்ட பாத்திரங்களை எல்லாரையும், யார் ஒருவரையும் இந்த மழை விட்டு வைக்கவில்லை. இந்த நிகழ்வில் அரசின் குளறுபடிகள் தவிர மனிதனின், நம் தவறுகள் என்னென்ன, அவற்றையும் சைலபதி வெளிப் படுத்தி அடையாளங் காட்டும் போது தான் நாவல் ஒரு முழு சுற்றுக்கு வருகிறது. நதித்தடத்தில், ஏரிகளில் வீடுகட்டி வழியடைத்துக் குடியேறிய மக்கள். மழைப்பெருக்கில் நதி தன் தடத்தைக் கண்டடைய முயற்சி செய்கிறபோது தம் வாழ்க்கைக்கு வழி தெரியாமல் மக்கள் திகைத்துப் போன கதையை அவர் சொல்கிறார்.
என்றாலும் இது ஒரு அழிவின் கதை அல்ல, என்பதுதான் நமக்கு ஆசுவாசம். வாழ்க்கை மிச்சம் இருக்கிறது. மனிதன்…. அவனுடன் மனிதம் மிச்சம் இருக்கிறது. இப்படி நெருக்கடி காலங்களில் சின்னவன் பெரியவன், ஏழை பணக்காரன், சாதி, மதம் என்கிற வேறுபாடுகள் சிறுத்துப் போகின்றன. அவை சிறியவையே என்று கண்டுகொள்கிற நேரமாக அது இருக்கிறது. இளைஞர்கள், யாரும் சொல்லாமலேயே இந்தப் பேரிடரில் மீட்புப் பணி என தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அதைப் பற்றிய ஆரோக்கியமான பதிவுகள் இதில் உள்ளன.
மேலே ஏழெட்டு மாடிகள் தவிர தரைமட்டத்துக்கு அடியில் இரண்டு மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரு நிறுவனத்தில் மழை நீர் புகுந்தபோது தப்பிக்க வழியில்லாமல் அந்த நீரில் அமுங்கி இறந்து போனவர்களைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டுவிட்டன. சைலபதியை அந்தச் சூழல் தான் பெரிதும் வாட்டுகிறது. வெறும் யதார்த்த பாணி விவரிப்பாக அல்லாமல் சற்று அமானுஷ்யம் சார்ந்து சைலபதி இப்போது தன் புனைவு வெளியில் வளைய வருகிறார். எனில் இது மாய யதார்த்த வாதம் அல்ல. இந்தப் பெருமழையை மொட்டைமாடிக்கு வந்து மழையில் நனைந்தபடி தரிசனப்பட்ட ஒருவன் விக்கித்து நா உள்ளிழுக்கப் பட்டுப் போகிறான். அவனை மீண்டும் சீராக்கப் போராடும் அவன் மனைவி. மருத்துவர்கள், பிறகு சாமியார்கள் என அவள் அலைகிறாள். பரமபதத்தில் பாம்பிடம் சிக்கியவள் அவள்.
இந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்துபோன ஒரு காவல்காரனும், ஐ ட்டி காதலன் ஒருவனும் இறந்தபின்னும் கதையில் வந்து போகிறார்கள். இளம் இந்தக் காதல் ஜோடி தவிர, சிறிய வீட்டில் குழந்தையுடன் கணவனுக்கு இணக்கம் காட்டும் ஒரு மனைவியின் காதல் ஒரு ருசிகர வசிகரம். இன்னும் வசதி அளவில் மேம்பட்ட அடுக்ககக் காதல் என வாழ்க்கை அதன் இயல்பான வேட்கைகளுடன் கதை நெடுகிலும் நடமாகிறது. மகனை மருமகளுடன் விட்டுவிட்டு, தான் படுக்க என வெளியே கோவில் திண்ணை எனப் போகும் பெரியவர். பெரியவரின் இருமல் பற்றிக் கவலை காட்டும் மருமகள். வாழ்க்கை எடுத்துக் கொள்ளுதலும் விட்டுக் கொடுத்தலுமாக, இரண்டுமாகத் தான் இருக்கிறது எல்லாருக்கும்.
வெள்ளம் என வந்தாலும் வாழ்க்கை பற்றிப் பேச சைலபதிக்கு விஷயங்கள் ஊற்றாய் வந்தபடி யிருக்கின்றன. நுட்பமான அவதானங்களாக அவையே கதையை அற்புதமாக கடைசிவரை நகர்த்திச் செல்கின்றன. நாவலில் சைலபதி நிகழ்த்திக் காட்டும் பல்வேறு வாழ்க்கைகள், ஏழைகள், பணக்காரன் என்கிற பேதங்களைத் தாண்டி, இளையவன் முதியவன் என்கிற அம்சங்களையும் சொல்லிக் கடந்து அதுவே பெரு நதியாய் தடம் பதித்துச் செல்வதுதான் கதையின் வெற்றி. மனிதர்கள் எல்லாரையும் ரெண்டு கையும் விரித்து நேசித்துக் கட்டியணைத்துக் கொள்ளும் மனம் சைலபதியுடையது. பாத்திரங்களில் நாம் ஆசிரியரையே காண வாய்க்கிறது.
ஒரு மனைவி. கணவன் அவளை உடல்வேட்கை ததும்ப அருகே அழைக்கிறான். அவரது தவிப்பு அடங்கியதும் அவருக்குப் பசிக்குமே, என்று சமையலை சிரத்தையாக முடித்துவிட்டு வருகிறாள் மனைவி. பெண் என்பவள் தாய்மையின் அம்சம் என்கிறார் சைலபதி. எழுத்தாளனே அப்படித்தான் என்பதாக நாம் உணர்கிறோம். மானுட மேன்மையை நோக்கி நகரும் எழுத்துக்கு எப்போதுமே தனி ஈரப்பு சக்தி உண்டு. கடைசிவரை கீழே வைக்க முடியாத சுவாரஸ்யம் நாவலுக்கு உண்டு. வாசிப்பவர் அதிர்ஷ்டசாலிகள்.

Comments

Popular posts from this blog