the old man and the sea - tamil translation
பெரியவர் மற்றும் கடல் / பின்னுரை
ரசிகன்
மொழிபெயர்ப்பாளன்
உரையாசிரியன்
ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர்.
அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 'ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ' நாவலை
நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச
சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது.
தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே
பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார்
ஜெயிக்கப் போகிறார்கள்?... என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு.
எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல்.
சாதனைத் தினவு.
கிழவன் மற்றும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே
பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம்
இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது... இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப்
பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது. ஹெமிங்வே என் ஆசான்.
*
நான் தற்செயலாக கவனித்தேன். தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம்
போன்றவர்கள் மொழிபெயர்ப்பைப் பொறுப்பாய்க் கையில் எடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள்.
எழுதக் கிடைக்கிற நேரத்தை தங்கள் படைப்புகளுக்காக அல்லாமல், மொழிபெயர்ப்புக்கு என இப்படி
அவர்கள் செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் அனுபவித்த படைப்பை மொழிபெயர்ப்பாக
தாம்தான் செய்ய முடியும் என்கிற மாதிரி எதோ உணர்ச்சி உந்தப் பட்டிருக்க வேண்டும். யாம்
பெற்றேம் இன்பம். பெறுக வையகம். ஒரு படைப்பு உருவாவதைப் போலவே மொழிபெயர்ப்பும் ஒரு
'கிரியேடிவிடி', புனைவுத்திறன் வேண்டிநிற்கிற விஷயம் என அவர்கள் கண்டுகொண்டார்கள்.
நானும்.
மொழிபெயர்ப்பு என்பது 'டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்'. இதைப்
பலமுறை நான் அனுபவித்திருக்கிறேன். இராமானுசராய் பகிரங்கப் படுத்தியும் இருக்கிறேன்.
மூலத்தை உள்வாங்கிக் கொள்ள மொழிபெயர்ப்பாளனாக ஒரு புனைவுஎழுத்தாளனின் வாசிப்பு அனுபவம்
என்பது ஆகாவென்று அமைகிறது. மொழிபெயர்க்கையில் அவன் மூல எழுத்தாளனோடு இன்னும் நெருங்கி
அமர்கிறான். மகா அனுபவம் அது. தன் பார்வை தீட்சண்யத்தை அந்த மொழிபெயர்ப்புப் புனைவாளன்
இன்னும் தீர்க்கமாக்கிக் கொள்ள வாய்க்கிறது. இந்துவாகப் பிறந்தால் சாவதற்குள் காசி
போய்வர வேண்டும், என்கிறாப் போல, ஒரு ருசிகொண்ட எழுத்தாளன் மொழிபெயர்ப்பதில் தானாகவே
ஆர்வப் படுவான், என்றே எனக்குத் தோன்றுகிறது.
*
ஹெமிங்வேயின் இந்த நாவலுக்கு, கடலும் கிழவனும், கிழவனும்
கடலும், என மொழிபெயர்ப்புகள் தமிழிலேயே கிடைக்கின்றன. ஆயின் தலைப்பிலேயே அதன் வீர்யம்
இன்னும் பொலிவு பெற வேண்டும் என்று இருக்கிறது எனக்கு. ஆங்கிலப் படங்கள், கடல் சார்ந்த
திரைப்படங்கள் பார்க்கிற போது, கப்பலின் தலைவனை, அவன் எவ்வளவு இளையவனாய் இருந்தாலும்
கூட, மரியாதையாய் எல்லாரும் 'ஓல்ட் மேன்' என்று அழைப்பதை கவனிக்க முடியும். 'ஓல்ட்
மேன்' என்பது ஒரு மங்கல வழக்கு. ஆங்கிலேய ஆட்சியில் கூட இளம் வயது நீதிபதிகளை, தீர்ப்பு
வழங்கும் போது, தலையில் வெண்நரை முடியாலான 'விக்' வைத்துக் கொண்டு பதவியாற்றியதைப்
பார்த்திருக்கலாம். வெகுகாலமாய் நட்புடன் இருக்கிற ஒரு நண்பனைக் கூட, வயதுக்கு சம்பந்தம்
இல்லாமல், “எங்கே உன்னோட ஓல்ட் மேன்?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம்.
கடலை நன்கு அறிந்தவன் இந்த நாவலின் கதாநாயகன். அவனை உயர்த்திப்
பிடிக்கிற அளவிலேயே ஹெமிங்வே அவனை 'ஓல்ட் மேன்' என்று குறிப்பிடுகிறார். அந்த அளவில்
கடலும் கிழவனும், அல்லது கிழவனும் கடலும் என்கிற தலைப்புகள் எனக்கு உவப்பாய், போதுமானதாய்,
ஒட்டுறவாய் இல்லை.
பெரியவர் மற்றும் கடல், என்பதே என் தேர்வு.
என்னைப் பொறுத்தவரை ஒரு மொழிபெயர்ப்பாளன். மூல ஆசிரியனைத்
தெள்ளத் தெளிவாக முன்னிறுத்த உந்தப்படுகிறான். ரசனையின் பாற்பட்டு தான் கண்டடைந்த முத்துகளை
எடுத்து வெளியே காட்ட அவன் தவறிவிடக் கூடாது.
மொழிபெயர்ப்பாளன் அவ்வகையில் உரையாசிரியனாகவும் செயலாற்ற
நேர்ந்து விடுகிறது. அது மூல ஆசிரியரின் படைப்பு வீர்யத்தை அடக்கி விடும் என்று சொல்லக்
கூடாது. மொழிபெயர்ப்பு அத்தகைய விவரங்களைக் கோரி நிற்கவும் செய்கிறது, என நான் நம்புகிறேன்.
இந்த நாவல் ஏன் பேரிலக்கியம் என்று அறியப்படுகிறது... என்பதை
விளக்கு முகமாகவும் இதைப் பகிர நான் விரும்பினேன்.
நாவலின் முதல் பக்கங்களில் சாண்டியாகோவை அறிமுகம் செய்கையில்
அவனுக்கு 'தோல் புற்றுநோய்' (ஸ்கின் கான்சர்) என்கிறதாக ஹெமிங்வே தகவல் சொல்லித் தாண்டிச்
செல்கிறார். கடைசிப் பகுதியில் படகிலேயே திடீரென்று நெஞ்சு நொறுங்கினாப் ¢போல கிறுகிறுத்து
ஒருவித திரவத்தைக் கக்குகிறான். அவனது சிநேகிதப் பையன் மனோலினுடன் அதைப் பகிர்ந்து
கொள்ளவும் செய்கிறான். மூன்று நாட்கள் முழு வெயிலையும், இரவின் வெட்டவெளிப் பனியையும்
அனுபவிக்க நேர்ந்ததில் அவனது வியாதி முற்றியிருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள ஹெமிங்வே
கோடி காட்டுகிறார்.
இரண்டாவது, பருவம் பற்றிய மீனவனின் கணிப்பு. கடலில் இருந்தபடி
மேகங்களையும், கடலில் சுழன்றடிக்கும் காற்றையும் வைத்து மீனவன் இரண்டு மூணு நாளில்
சுழற்காற்று உக்கிரப்படும் என்று சரியாகக் கணித்து விடுவான், என்று விவரித்துச் செல்கிறார்
ஹெமிங்வே. புயல் மாதங்களில் புயல் நிலை உருவாகா விட்டால் அப்படி நாட்கள் அந்த ஆண்டிலேயே
சிறப்பான பருவநிலையைத் தரும், என்றும் சாண்டியாகோ நினைக்கிறான்.
கடலில் அவன் கழித்த அந்த மூன்று நாட்கள் நல்ல பருவநிலையில்
கழிந்தன. படகில் இருந்தபடியே அவன் மேகத் திரளலைப் பார்க்கிறான். காற்று முழு நாளும்
நன்கு வீசும் என்றும், இரண்டு நாளில் காற்று உக்கிரப் படும் என்றும் கணிக்கிறான். ஒண்ணரை
நாளில் அவன் கரை திரும்புகிறான். அவன் வந்துசேர்ந்த மறுநாள் காலை சுழற்காற்று துவங்கி
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம், என்று எச்சரிக்கை விடப்படுகிறது. சாண்டியாகோ
எப்படி பருவநிலையை அனுசரித்து தனது திட்டங்களை வகுக்கிறான், என்று கதையில் பக்கங்கள்
இடையே பூடகமாய் ஒரு சரடை உருவாக்கி விடுகிறார் ஹெமிங்வே.
செப்டம்பர் மாதங்களில் தான் பெரிய மீன்கள் சிக்கும்... என்று
ஒரு தகவல். அவர் பெரிய மீனைத் தேடி கடலின் உள்ளே வெகுதூரம் போகிறார். பெரிய மார்லினை
வேட்டையாடுகிறார், என்பது கவனமான தெளிவான கதையமைப்பு தானே?
பேரிலக்கியம் என்றால் தேடத் தேட அபாரமான அநேக விஷயங்கள் தட்டுப்படும்.
மீண்டும் மீண்டும் வாசிக்கலாம் இந்த நாவலை. நவில்தொறும் நூல் நயம் பெறலாம்.
நன்றி.
எஸ். சங்கரநாராயணன்
91 97899 87842
storysankar@gmail.com
Comments
Post a Comment