முதல்செருகல்
இடைச்செருகல்
கடைச்செருகல்
*
ம. ந. ராமசாமி
ஒரு மரக்கிளையில் இரண்டு கிரௌஞ்ச பட்சிகள் கொஞ்சி விளையாடிக்
கொண்டு இருந்தன. ஆண், பெண் பறவைகள்.
வேடன் அப்பறவைகளைப் பார்த்தான். சட்டென்று அம்பு ஒன்றை எடுத்து,
வில்லில் பூட்டி எய்தான். ஆண் பறவை அடிபட்டு விழுந்தது. பெண் பறவை கதறியபடித் தன் இணையைச்
சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது அங்கு நாரத முனிவர் வருகிறார். வேடனிடம் அவர், “ஆண்
பறவையைக் கொன்றுவிட்டாயே, இது மகாப் பாவம் அல்லவா?” எனக் கூறுகிறார்.
“இதுதான் என் பிழைப்பு. நானும் என் குடும்பத்தினரும் உண்ண
இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது” என்றான் வேடன்.
“அப்படியா?” என்றார் நாரதர். “இப்படிக் கொல்வது பாவம். இந்தப்
பாவம் உன்னை மட்டும் சேராது. உன் குடும்பத்தினரையும் பாதிக்கும்.” என்று கூறீய நாரதர்,
“ஒன்று செய். உன் குடும்ப உறுப்பினர்களிடம் செல். சென்று “விலங்குகளையும் பறவைகளையும்
கொன்று உங்களுக்கு உணவு அளிக்கிறேன். இச்செயல் பாவம். அப்பாவம் என்னைச் சேரும் என்கின்றனர்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேள்,: என்றார் நாரதர்.
நாரதர் சொன்னபடியே தன் குடும்பத்தினரிடம் சென்று வேடன் கேட்டான்.
அவர்கள் “அது எப்படி? குடும்பத்தினருக்கு உணவளிக்க வேண்டியது குடும்பத் தலைவனான உனது
கடமை. நீ பாவம் செய்யாது உணவு அளித்தால் என்ன? எங்களுக்குத் தேவை உணவு. நீ பாவம் செய்து
உணவு தேடி எடுத்து வந்தால் அப் பாவம் உன்னை மட்டுமே சேரும். எங்கள அணுகாது” என்று சொல்லிவிட்டனர்,
என்றான் வேடன் நாரதரிடம்.
“பார்த்தாயா? கொலை செய்த பாவம் முழுவதும் உன்னைச் சேர்கிறது”
என்றார் நாரதர்.
“அதுக்கு என்ன நான் செய்ய?” வேடன் கேட்டான்.
”ஒன்று செய், பாவம் உன்னை விட்டு அகலும். இதோ இப்படி மரத்தின்
அடியில் அமர்ந்து ‘மரா, மரா’ எனச் சொல்லிக்கொண்டு இரு. உன்னை மறந்து சொல்லிக்கொண்டே
அமர்ந்து இரு. பாவம் போய்விடும்” என்று கூறிவிட்டு நாரதர் சென்றார்.
அவர் சின்னபடியே வேடன் செய்தான். அமர்ந்து கண்களை மூடி ‘மரா,
மரா’ என்று ஜபித்தான். அந்த ஜபம் ‘ராம, ராம’ என்பதாக ஒலித்தது.
காலம் செல்ல, நாரதர் திரும்பி வந்தார். வேடன் அமர்ந்திருந்த
மரத்தின் பக்கம் இருந்து ‘ராம, ராம’ என்னும் சொற்கள் வருவதை அவர் கேட்டு உணர்ந்தார்.
அந்த ஒலி ஒரு புற்றிலிருந்து வருவதாகத் தெரிந்தது. புற்றைச் சற்று இடித்துவிட்டுப்
பார்த்தார். வேடன் அமர்ந்து ஜபித்துக்கொண்டு இருப்பதைக் கண்டார்.
புற்றை முழுவதுமாக இடித்து, வேடனை வெளியே கொண்டு வந்தார்.
முழுவதுமாக வேடன் மாறியிருந்தார். முடிவளர்ச்சி, தாடி, மீசை முகத்தில் தேஜஸ். அவன்
ஞானம் பெற்று உள்ளதை நாரதர் புரிந்துகொண்டார். வேடனிடம் ராமனின் கதையைச் சொல்லி இதை
இதிகாசமாக ஆக்க உபதேசம் செய்தார் நாரதர். வல்மீகம் என்றால் புற்று என்பதாகப் பொருள்.
புற்றிலிருந்து அந்த மனிதன் வெளிவந்ததால்;, ‘வான்மீகி’ என்பதான பெயரை நாரதர் அவருக்குச்
சூட்டினார்.
அந்த வான்மீகி (வால்மீகி)
ராமாயணத்தைப் படைத்தார் என்பதாக வரலாறு கூறுகிறது. இந்த முன்னுரை வால்மீகி ராமாயணத்தில்
தரப்பட்டு இருக்கிறது. ராமாயணக் கதையை இதிகாசமாகப்
படைத்தவரே தன்னைப் பற்றீய இத்தனை விவரங்களையும் எப்படி மூன்றாம் மனிதராக இருந்து கூறி
இருக்க முடியும்.
இந்த வால்மீகி ராமாயணத்தில் பல இடைச் செருகல்களும், கடைச்
செருகல்களும் உள்ளன.
இது கடைச் செருகல். மனைவி சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புகிறான்.
சீதை பேறுகொண்டு இருந்த காலம் அது. அவளை அழைத்து ஆதரிக்கிறார் வால்மீகி. ராமாயண இதிகாசத்தைப்
படைத்ததாகச் சொல்லப்பட்டு இருக்கும் வேளையில், அந்த இதிகாசத்துள் படைத்தவரே எப்படிப்
புகமுடியும்?.
வால்மீகி எழுதியதாகச் சொல்லப்பட்ட ராமாயணம் நாலாயிரம் ஸ்லோகங்களைக்
கொண்டதாகத் தெரிகிறது. இன்று நமக்குக் கிடைத்து இருப்பது ஏறக்குறைய பத்தாயிரம் ஸ்லோகங்கள்.
கடலைத் தாண்டி ஹனுமார் இலங்கை செல்வதான சுந்தர காண்டம் முழுவதுமே இடைச் செருகல். அயோத்தியா
காண்டம், பால காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், யுத்த காண்டம் ஆகியவை அந்த
அந்த இடங்களில் நடந்த செய்கைகளைச் குறிப்பதாக இருக்கின்றன. ஆனால், சுந்தரகாண்டம் என்னும்
சொல் அப்படிச் செயல்கள் எதையும் தெரிவிப்பதாக இல்லை. சுந்தரம் என்றால், அழகு என்பதாகப்
பொருள். அப்படி எந்த ஒரு அழகையும் அழுத்தமாக சுந்தர காண்டம் தெரிவிப்பதாக இல்லை. இலங்கையை
அடைந்த ஹனுமான் அங்கு மண்டோதரியைக் கண்டு, இவள் தானோ சீதை என்று எண்ணுவதாக ஒரு குறிப்பு
மட்டும் உள்ளது. சீதை அளவுக்கு அழகு கொண்டவள் மண்டோதரி. மயன் என்ற தேவலோகச் சிற்பியின்
மகள் மண்டோதரி. இந்த ஓர் அழகுக் குறிப்பைத் தவிர, சுந்தர காண்டத்தில் அழகு பற்றிய விவரங்கள்
ஏதும் இல்லை.
சுந்தரம் என்னும் சொல் ஹனுமானைக் குறிக்கிறது என்பதாகச் சில
மேடைப் பேச்சாளர்கள் வலிந்து பொருள்கொண்டு கூறுகின்றனர். ஹனுமான் என்னும் குரங்கு எவ்விதம்
அழகாக மனிதர்களுக்குத் தோன்ற முடியும என்னும் வினா நம்முன் எழுகிறது. ஹனுமான் கடல்
தாண்டிச் சென்று திரும்பியதைப் படைத்தவர், அப்பகுதிக்கு ஏதோ ஒரு பெயரைக் கொடுக்க வேண்டும்
என்பதற்காகவே, பொருள் அற்ற சுந்தர காண்டம் என்னும் தலைப்பைச் சூட்டி இருக்கலாம்.
வானரம், கபி என்பதான இரு சொற்களுமே வால்மீகி ராமாயணத்தில்
கையாளப் படுகின்றன. கபி என்றால், குரங்கு என்பதாகப் பொருள். ஆனால், வானரம் என்னும்
சொல்லுக்கு குரங்கு என்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. நரன் என்றால் மனிதன் என்பதாகப்
பொருள். வனதே சரதி இதி வானரஹ என்பது வானரஹ என்ற சொல்லின் பொருள். கிஷ்கிந்தையில் வாழ்ந்த
மனிதர்கள் பழங்குடியினர். அவர்களுக்கும் பெயர்களுண்டு. வாலி, சுக்கீரிவன், ஹனுமன் என்னும்
பெயர்கள் குரங்குகளுக்கு இருக்க முடியாது. ஹனுமன் என்னும் ஆஞ்சனேயனின் தாயின் பெயர்
அஞ்சனா தேவி. வாயுதேவனுடன் அவள் கலந்த காரணத்தால் பெற்ற மகன் ஆஞ்சனேயன். வாயுதேவன்
ஒரு பெண் குரங்குடன் உறவு கொண்டிருக்க முடியமா? வால் பற்றிய விவகாரங்கள் சுந்தர காண்டத்தில்
மட்டுமே உள்ளன.
ராமாயண இதிகாசம் எழுதாக் கிளவி. பிராகிருதம் என்னும் மூல
பாமர மொழியில் எழுத்துக்கள் அவசியம் எனப் பாமர மக்கள் கருதி எழுத்துக்களை கண்டபோது,
அப்படி எழுத்துகள் கூடாது என்று பிடிவாதமாக கற்ற குருமார் இருந்தனர். எழுத்துகளில்
படைப்புகள் இருந்தால், சீடர்கள் மனப்பாடம் செய்யும் வலிமையை இழந்துவிடுவர் என்று குருமார்
கருதினார் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அவசியம் கருதி எழுத்துகள்
ஏற்படுத்தப் பட்டன. பத்ரம் என்பதான காய்ந்த இலைகளில் வேதங்கள் , இதிகாசங்கள் எழுதி
வைக்கப்பட்டன.
சுந்தர காண்டம் போல அகலியை கதையும் இடைச் செருகல் என்பதை
நாம் உறுதியாக நம்பலாம். அக்காலத்தில் இந்திரனைக் கொண்டாடும் விதமாக இந்திர விழா என்பதான
திருவிழா பாரத நாடு எங்கும் கொண்டாடப்பட்டது. சிலப்பதிகாரக் காப்பியத்திலும் இந்திர
விழா நிகழ்ச்சி இடம்பெற்று உள்ளது. இந்திரனை இறக்கி, விஷ்ணுவை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே
அகலியை கதை படைக்கப்பட்டு அது ராமாயண இதிகாசத்துள் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்டு
இருக்கிறது. ராமனுக்கு தெய்வ அம்சம் உண்டு என்பது அகலியை கதை வரை ராமாயணத்தில் கிடையாது.
ராமனின் காலடி பட்டு, கல்லாக இருந்த அகலியை உயிர்பெற்று எழுகிறாள் என்பது கதை. இக்கதையைப்
போலவே பாகவதளத்திலும் இந்திரனை இறக்குவதான ஒரு கதை புகுத்தப்பட்டு உள்ளது. கோகுலத்தில்
கண்ணனுடன் யாதவர்கள் நலமாக வாழ்கின்றார்களாம். இது கண்டு பொறாத இந்திரன், வருணனை அழைத்து
பெரும்மழையை கோகுலத்தில் வர்ஷிக்கச் செய்கிறான். யாதவர்களைக் காக்க, கண்ணன், கோவர்த்தனகிரி
என்னும் மலையைப் பெயர்த்து உயர்த்தி மழையிலிருந்து மக்களைக் காக்கின்றான் என்று பாகவதம்
கூறுகிறது. இந்த இரு கதைகளையும் கேட்ட மக்கள் இந்திர விழாவில் அக்கறை காட்டவில்லை.
ஆகவே அவ்விழா மெல்ல மறைந்துவிட்டது.
குரு சொல்லி, சீடர்கள் மனனப் பாடப் செய்தனர். வேதங்கள், இதிகாசங்கள்
தொடர்ந்து இருந்து நம்மிடம் இன்று நூல்கள் வடிவில் வந்துள்ளன. இவ்விதம் சீடர்களுக்குப்
பாடம் நடத்தும்போது திறமை, அறிவு ஆற்றல் காரணமாக குருக்கள் தங்களது சரக்கை அவற்றில்
சேர்த்துப் பாடம் சொல்லித் தந்தனர். ஆகவே, முதல் இடை கடைச் செருகல்கள், வேதங்களில்,
இதிகாசங்களில் நிரம்பின. ஆக, பாட பேதங்கள் அநேகம் உண்டு. அச்சிட்டு ,நூல்கள் வந்த பிறகுதான்
செருகல்கள் நின்றன.
தசரதன், ராமன் வாழ்ந்த காலத்தில் வர்ணாஸ்ரம தர்மம் வெகுவாக
வேர்கொண்டு இருந்தது. தொடக்கத்தில் ரிஷிகள் என்ற பெயரில் பிராமணர்கள் ஆட்சி செய்தனர்.
க்ஷத்திரியர் என்போர் படைத் தலைவர்கள் படைவீரர்கள். இந்தப் படைத் தலைவர்களின் செல்வாக்கு
அதிகரிக்க, அவர்கள் ரிஷிகளை அகற்றிவிட்டு, ஆட்சியைத் தாங்களே மேற்கொண்டனர்.
வசிஷ்டர் பிராமண ரிஷி விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய மன்னர்.
பிராமண ரிஷிகள் க்ஷத்திரிய மன்னர்களை ஆட்சியாளர்களாக அங்கீகரிக்கவில்லை. தன்னை ரிஷியாக
அங்கீகரிக்கும்படி விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் சொல்கிறார். வசிஷ்டர் மறுக்கிறார்.
ஆகவே இருவருக்கும் இடையே போர் நிகழ்கிறது. போரில் விஸ்வாமித்திரர் வெற்றி பெறுகிறார்.
தோல்வி உற்ற வசிஷ்டர் விஸ்வாமித்திரரை ரிஷி என அங்கீகரிக்கிறார். ஆட்சி அவருடைய கையை
விட்டு அகல்கிறது. தோல்வி கண்ட வசிஷடர் கோசல நாட்டு க்ஷத்திரிய மன்னன் தசரதனிடம் குருவாக
அமர்கிறார். இது யூகிக்கத்தக்க வரலாறு. ஆனால், கதையில் வசிஷடர் வெற்றி பெற்றதாகவும்,
இருந்தாலும் விஸ்வாமித்திரரை ரிஷியாக அங்கீகரித்த்தாகவும் சொல்லப்படுகிறது.
கார்த்த வீர்யார்ஜூனன் என்பதான ஒரு க்ஷத்திரிய மன்னன் . அவன்
ஜமதக்னி என்ற ரிஷியைக் கொலை செய்து விடுகிறான். ஜமதக்னி பிராமண ரிஷி. பரசுராமரின் தந்தை.
தன் தந்தை ஒரு க்ஷத்திரிய மன்னணால் கொலைசெய்யப்பட்டதைக் கண்ட பரசுராமர் க்ஷத்திரிய
பூண்டையே அழித்துவிடுவதாகக் கிளம்புகிறார். போரில் ஒரு சில க்ஷத்திரிய மன்னர்களை அவர்
கொலை செய்து இருக்கவும் கூடும். முடிவாக தசரதனிடம் வர, இளைஞனான ராமனுடன் போர் தொடுக்கிறார்.
ராமன் வெற்றி பெறுகின்றான் என்று ராமாயாணம் கூறுகிறது.
விதேக நாட்டு மன்னரான ஜனக ரிஷி பிராமணர். பிற்பாடு இவர் ராஜரிஷி
என்பதான பெயரைப் பெறுகின்றார். இந்த ஜனகர் என்ற பிரமண ரிஷியின் மகள் சீதையை ராமன் என்னும்
க்ஷத்திரியன் மணக்கிறான்
ராவணன் என்னும் இலங்காபுரி மன்னன் பிராமணன். வர்ணாஸரம தர்மத்தைப்
பேணிக் காப்பது மன்னர்களின் கடமை. சீதை என்ற பிராமணப் பெண்னை க்ஷத்திரியனான ராமன் திருமணம்
செய்து கொண்டதை ராவணன் ஏற்கவில்லை.
சாம வேதம் கற்றவன் ராவணன் சங்கீதத்தில் நிபுணன். அவனது கொடியில்
வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்ததாக ராமாயணம் கூறுகிறது. சீதையைக் கவர்ந்து சென்றது
தவிர, வேறு எந்த ஒரு குற்றமும் அவன் செய்த்தாக ராமாயணம் கூறவில்லை. அவனது ஆட்சியில்
மக்கள் சிறப்பாகவே வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. காமத்தில் அல்லாமல், வர்ணாஸரம் தர்மத்தைக்
காப்பதற்கான தன் கடமையைச் செய்வதற்காகவே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். சீதையை
அவன் தொடவில்லை என்பதில் இருந்தே ராவணனின் சிறந்த பண்பாட்டை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் ராமனின் வீரத்தை உணர்ந்தவன் ராவணன். ஆகவே தான் மாரீச்சனை
அனுப்பி, குடிலை விட்டு ராமனையும் லட்சுமணனையும் அகலச் செய்து, தனிமையில் இருக்கும்
சீதையை அவன் கவர்ந்து செல்கிறான்.
வர்ணாஸரம் தர்மத்தைக் காப்பதற்கான போர்தான் ராம ராவணப்போர்.
ராமாயணத்தின் இந்த வரலாற்று உண்மைகளை ஒரு சில தமிழ்நாட்டுப் பேரறிவும், பகுத்தறிவுகளும்
அறிந்து கொள்ள முயலவில்லை. கம்பரசம், ராவணாயணம் நூல்கள் வெளிவந்தன. இதுதான் பேறு அறிவு
பகுத்து அறிவு என்றால், அவை நமக்கு வேண்டாம்.
மேலும் ஒரு விவரம் தசரதன் கோசல நாட்டுக் குறுநில மன்னன் பேரரசன்
அல்லன். அவனை சக்கரவர்த்தி ஆக்கி வால்மிகி ராமாயணத்தை சக்கரவர்த்தித் திருமகன் என்ற
பெயரில் ராஜாஜி அவர்கள் தமிழில் தந்துள்ளார். அந்நூலும் சாகித்திய அகாதமி விருது பெற்றது.
Comments
Post a Comment