குறுந்தொடர்
ராகு கேது ரங்கசாமி
எஸ்.சங்கரநாராயணன்
•
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்கமாய் இருக்கிறது சபேசனுடைய
ஜாகை. சித்திரக் குளம் அருகே மகாதேவ (சாஸ்திரி) தெரு. இப்போது அவர் வெறும் மகாதேவன்.
சாஸ்திரி அல்ல. வால் இழந்த நரி.
மாற்றங்கள். தெருவுக்குப் பழைய அடையாளங்கள் அழிந்து புதிய
அடையாளங்கள் வந்திருக்கின்றன. தெரு துவக்கத்தில் ஆவின் பூத். முன்போ அங்கே மாடுகட்டி
அதிகாலை நாலு நாலரைக்கெல்லாம் நுரைக்க நுரைக்கப் பால் கறப்பார்கள். விடியலின் தளிர்
வெளிச்சத்தையே அவர்கள் இப்படி சர்ர் சர்ரென்று பாத்திரத்திற் பிடிக்கிறாற் போலிருக்கும்.
தெருவில் இப்போது உயரமாய் கட்டடங்கள் எழுந்துவிட்டன. இத்தனை
காலமாய் அவற்றை யாரோ காலால் அழுத்தி பூமிக்கு அடியிலேயே ஒளித்து வைத்திருந்தார்கள்.
அதிரடியாய் மாற்றங்கள். விரல் சொடுக்கும் பொழுதுக்குள் மாற்றங்கள் வருவதைப் பற்றிக்
கூட இல்லை. ஆனால் அது ஆக்கிரமிக்கும் விரைவு, மலைப்பாய் இருக்கிறது.
ஒரு பத்து பதினைந்து வருடம் முன்னே இந்த டேப்-ரிகார்டரும்
சி.டியும் தொலைக்காட்சியும், விசியாரும் இத்தனை பரவலாய்ச் சீரழியும் என்று யாராவது
கனவாவது கண்டோமா? ஆளாளுக்கு இப்படி கம்பியூட்டர் மேனியா வந்து திரிவார்கள், என்று எதிர்பார்த்தோமா?
சொல்லாமல் கொள்ளாமல் மையம் கொண்டது எலெக்ட்ரானிக் புயல். ஊருக்குள் புகுந்த புதுமை
வெள்ளம். நகர்மய மாதல். நவினமய மாதல். இயந்திரமய மாதல். இயந்திரங்கள் உயிர் பெற்றதில்
மனிதர்களே இயந்திரம் ஆகிப் போனார்களே.
என்ன வேகம். என்ன ராட்சச வளர்ச்சி. ஃபேக்ஸ். இ-மெய்ல். இன்டர்நெட்.
தவிர இந்த செலுலர் ஃபோன். உலகமே உள்ளங் கைக்குள், என்பது நிஜமாகி விட்டதே. ஒரேயொரு
அணுகுண்டு. அது அத்தனை இசங்களையும குப்பைத்தொட்டியில் எறிந்து விட்டதே.
தெருவின் இரு மருங்கிலும் இதமான வேப்ப மரங்கள் எங்கே? இப்போது
வெய்யில் வாட்டி யெடுக்கிறது. இரு சக்கர, மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறைய வாசலில்
நிற்கின்றன. சன நடமாட்டம் எப்போதும் இருக்கிறது. மக்களுக்கு பகலுக்கும் ராத்திரிக்கும்
வித்தியாசம் குறைந்து போனது. அந்த வழியே இப்போது பஸ் போகிறது. ஃபேன்சி ஸ்டோர். ஐஸ்கிரீம்
மற்றும் குளிர்பானக் கடை. ஜெராக்ஸ். பிசிஓ. காபிப்பொடி, அப்பள வத்தல் வடகம் கடை. திடீர்க்
கடைகள். அவைகளில் திடீர் சாம்பார் பொடி, புளியோதரைப் பொடி எல்லாமே கிடைக்கிறது. திடீர்
விருந்தாளி வர திடீர் சமாளிப்புகள். தோசைக்கு அரைத்துத் தருகிறார்கள். தோசை மாவு விற்கிறார்கள்.
’குடி தண்ணீர் விற்கிறார்கள்!
சபேசன் வீடு மாத்திரம் தொன்மை மங்காத முக மங்கலுடன் தனித்து
நின்றிருந்தது. அதை யார் யாரோ ரியல்எஸ்டேட் காரர்கள் வந்து வந்து விலைக்குக் கேட்கிறார்கள்.
நல்ல நல்ல கேஷ் டவுன் பார்ட்டிகள். சபேசன் இடங் கொடுக்கவில்லை. இடத்தைக் கொடுக்கவில்லை.
புதையலைப் பூதங் காப்பது மாதிரி இந்த வீட்டுக்கு ஜெகதாம்பாள்.
நார்மடிப் பாட்டி. சபேசனின் மாமியார். பெண்ணைக் கட்டிக்கொடுத்த கையோடு கூடவே வந்தவள்
அவள்.
பெரிய சதுரத்தரையில் முன்பக்க ஒதுக்கமாய்ச் சிறு வீடு. சுற்றிலும்
புதர் மண்டிக் கிடந்தது. மாதம் ஒருமுறை முடி வெட்டிக்கொள்வது போல, தரையையும் ஒழுங்கு
படுத்தினால் நன்றாக இருக்கும். அதற்கு ஐவேஜ் இல்லை. பின்பக்கமாய்த் தள்ளி கிணறு. அருகே
குளியறை. தனியே கழிவறை. காலத்தை அனுசரித்தும் பெண் கீதாவின் சங்கடத்தாலும், சபேசன்
இப்போது வீட்டை ஒட்டிய மாதிரி குளியறை இணைந்த கழிவறை கட்டினான். (ட்டூ இன் ஒன்.) என்றாலும்
அதைப் பயன்படுத்த பாட்டி முகம் சுளித்தாள்.
இந்த வீட்டுக்கு என்று வந்து சேர்ந்ததில் இருந்து, சபேசனுக்கே
இப்போது ஒரு பிள்ளையும் பெண்ணும், இன்றுவரை பாட்டிக்கு ஒரே அபிப்ராயம் தான். சபேசனுக்கு
சமத்து பத்தாது. அதில் மாற்றமே இல்லை.
சமத்து இருந்தால் ஏன் உம் பொண்ணைக் கட்டிக்கறேன், என்று சபேசன்
பதிலடி கொடுக்கிறவன் தான். எத்தனை சண்டை சச்சரவு என்றாலும் அவனுக்கு மாமியாரிடம் வாஞ்சை,
மட்டு மரியாதை உண்டு. வயதானவள். தனக்கு தாயார் ஸ்தானம். இந்த வயதில் இந்த மனோதிடமும்,
குடும்பத்துக்கே பெரியதலையாக இருந்து அரவணைத்துக் கொண்டு போவதும் யாருக்கு வரும்? அவள்
கூட இருந்ததில் தலைமைப் பொறுப்பு தெரியாமல் சபேசன் ஹாயாக இருந்தான்.
உலகத்தில் என்ன களேபரம் வந்தாலும், சபேசனுக்கு காலை எஃப்
எம்மில் இசையரங்கம் கேட்டாக வேண்டும். காலைக் காபி போல அவனுக்கு சங்கீதப் பித்து. செய்தித்தாளைத்
திறந்தால் அவன் முதலில் பார்ப்பது இன்றைக்கு இசையரங்கத்தில் மண்டகப்படி யார் என்பது
தான். அடுத்தது ராசிபலன். இன்று நாள் எப்படி? பிறகு தான் வாஜ்பாயி பற்றியும் கிளின்டன்
பற்றியும் நினைப்பு ஓடும்.
ரமணிக்கு தொலைக்காட்சியில் விளையாட்டு பார்க்க வேண்டும்.
கால்பந்தோ கிரிக்கெட்டோ. இந்தியா விளையாடும் போது ஊரே இரவானாலும் முழித்துக் கொண்டு
பார்த்து, அவன் டக் அடித்தால் ஊரே ச் கொட்டியது. தெரூவில் இளைய பட்டாளம் கிடைத்த கட்டையை
வைத்துக்கொண்டு கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்தது, பாம்பு அடிக்கக் கிளம்பினாற் போல.
பெண் கீதாவுக்கு சினிமா. கதாநாயகியின் புதிய புதிய டிசைன்
உடைகள் அவளுக்குப் பார்க்க பார்க்க அலுக்கவே இல்லை. அவளுகள் போட்டுக்கொண்டு வரும் உடைகளும்,
அதன் கிளர்ச்சியூட்டும் வடிவமைப்பும்... அவற்றைப் போட்டுக்கொண்டு தெருவில் நடமாட முடியுமா?
பாக்கியலெட்சுமிக்கு சீரியல். கதை புரியுதோ, தொடர்ச்சி புரியுதோ
அதைப் பத்தியில்லை. பார்த்துக் கொண்டிருப்பாள். அடிக்கடி ச் கொட்டிக் கொண்டிருப்பாள்.
அட சீரியல்லியாவது ஏழை... கஷ்டப்பட்டவள் உழைச்சி பிறகு முன்னுக்கு வந்தாப்ல காட்டப்டாதா,
என்று வருத்தப் படுவாளாய் இருக்கும். எங்க இங்க ஜாண் ஏறினா முழம் சறுக்குது வாழ்க்கை.
சீரியல் பெண்களில் ஒருத்தி முழியை உருட்டி ஆத்திரப் பட்டுக்கொண்டே இருக்கிறாள். இன்னொருத்தி
அழுது பெருக்குகிறாள். அதிலும் வயதான அம்மா அப்பாவை இந்தப் பிள்ளைகள் மதித்து நடத்தினால்
தான் என்ன? கூட வைத்துக்கொண்டால் தான் எனன?... என்ன டி.வியோ போ, என்பாள் பாட்டி அலட்சியத்துடன்.
எப்பவாவது சாமி படம் வந்தால் வந்து உட்கார்வாள். திடீர் திடீரென்று டி.வியைப் பார்த்து,
மஹாப்ரபோ, நாராயண நாராயண, என்று கன்னத்தில் போட்டுக் கொள்வாள். தலையில் குட்டிக் கொள்வாள்.
என்னவோ வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை வாத்தியார் தண்டித்த மாதிரி.
அதிகாலையின் பரபரப்புகளில் அம்மா சமையலறைக்கும் வெளியேயும்
ஒடியாடித் திரிவது கால்பந்து ஆடுவதாகவே காணும். அம்மாதான் கால்பந்து. வீட்டில் ஆளாளுக்கு
அவளை உதைத்து அனுப்புகிறார்கள். வாசலில் கீதாவை நிற்கச் சொல்லி தலைபின்னி விட்டுக்
கொண்டிருப்பாள். திடீரென்று ‘இரு. உள்ள பருப்பு தீயற வாசனை வர்றாப்ல இருக்கு. குக்கர்ல
தண்ணி தீர்ந்துட்டதோ பாக்கறேன்’ என்று ஓடுவாள். அதற்குள் ‘வெந்நீர் விளாவி வெச்சிட்டியாம்மா?’
என்று கேள்வியால் இயக்குகிற ரமணி. நேரமாகிறது, என்று குளிக்காமலாவது ஓடுவானேயொழிய ஒருநாள்
கூட பச்சைத் தண்ணீரில் குளித்ததில்லை. அப்பாவுக்கு காபி அடுப்பில் இருந்து எடுத்த ஜோரில்
தொண்டைக்குள் இறங்க வேண்டும். நெருப்புக்கோழி. பின்கட்டில் கனகாம்பரம் புதராய் மண்டிக்
கிடக்கிறது. பாட்டி பூஜைக்கு என்று உட்காருமுன் அதைப் பறித்து தயாராய் வைக்க வேண்டும்.
தானே பறிக்கிறேன் பேர்வழி, என்று அங்கங்கே முள் கீய்ச்சிக் கொண்டு விடுவாள். அவளைப்
பறிக்க விடுவதில்லை பாக்கியலெட்சுமி. குளித்து முடித்து ஈரப்புடவையைச் சுற்றிக் கொண்டு
குளிர் நடுங்க உள்ளே வருவாள் பாட்டி. குளிருக்கு உடலும், வாயும், வாயில் புரளும் சுலோகங்களும்
நடுங்கும். காஹக்க காஹக்க கனஹவேல் காஹக்க.
சபேசனுக்கு இன்ன வேலை என்றில்லை. சமையல் வேலைக்கு என்று துணையாளாய்ப்
போய்வருவான். வேலை தெரியாது. சமையல்கார சாம்புவையர் லிஸ்ட் தந்தால் போய்ப் பலசரக்குக்
கடையில் கேட்டு வாங்கி வருதல், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு எடுத்து சரிபார்த்து
வாங்கி வைத்தல் - இத்தியாதி சுற்று வேலைகள். ஆனாலும் மயில்க்கண் வேஷ்டியும் ஜபர்தஸ்துமாய்
வந்து நின்றால் ஆளை அசத்திப்பிடும். வாயில் வெற்றிலை பன்னீர்ப் புகையிலையுடன் மணக்க
மணக்க “அண்ணா அண்ணா” என்று பழகுவான். யாருமே அவனுக்கு அண்ணாதான். லேசான ரோஸ் பவுடர்,
கண்ணுக்கு, சிறிது வெளியே தெரியாத பவிஷில் மை தீட்டிக் கொண்டிருப்பான் - அந்தக்கால
நம்பியார், வீரப்பா, எம்ஜியார் எல்லாரும் மை போட்டுக் கொண்டவர்கள் தானே? நெற்றியில்
சிறு சந்தன குங்கும திலகம்.
இந்த லட்சணத்தில் மயங்கிப் போய்த்தான் ஜெகதாம்பாள் தன் பெண்ணுக்கு
அவனை மாப்பிள்ளை ஆக்கினாள். இவன்தான் ஹெட் குக் என அவள் நினைத்திருந்தாள். சபேசனால்
வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வேறு எந்த வேலைக்கும் துப்பு கிடையாது. ஆனால்
மனுசன் நல்ல சங்கீத ரசிகன். ஓரளவு மகாராஜபுரம் பாணியில் பாடவும் செய்வான். மூடு வந்துவிட்டால்
வாயில் புகையிலையோடு ‘நகுமோ’ மணக்கும். துக்கமாய் நகுமோ... என்று தியாகையர் பாட இவன்
அதை அர்த்தம் தெரியாமல் சிரித்தபடி பாடுவான். பெரிய கல்யாணங்களில் நல்ல நல்ல வித்வான்களின்
கச்சேரி வைத்தார்கள். அதில் கிறுக்கு பிடித்தே சமையல்காரரை சிநேகம் பிடித்துக் கொண்டு
கூடப் புறப்பட்டு விடுவான்.
பாத்தியதைப் பட்ட பழைய வீடு இருந்தது. பாட்டன் முப்பாட்டன்
என்று அவன் கையில் வந்து சேர்ந்த சொத்து. வசிப்பிடம் கவலை இல்லை. கோவில் வாசலில் ஓய்ந்த
நாளில் பூணூல், திருமாங்கல்யச் சரடு, குங்குமம், விபூதி, சுலோகப் புத்தகம் என்று விற்றால்
பொழுது ஒடிவிடும். ஒருமுறை சின்னப் பையன் ஒருவன் அவனிடம் வந்து காதில் கெட்ட புஸ்தகம்
இருக்கா, என்று கேட்டு கலவரப் படுத்தி விட்டான். சில சமயம் பிராமணார்த்தம் என்று வந்து
கூட்டிப் போவார்கள். சரியாக எந்த இடம் என்று பார்த்து ‘ததாஸ்து’ சொல்லத் தெரிந்திருந்தது.
கல்யாண சீசனும், இழவு சீசனும் பூமி சுழலும் வரை ஓயப் போவதில்லை. அவனுக்கும் கிராக்கிக்குப்
பஞ்சமில்லை.
வீட்டு நிர்வாகம் பற்றிக் கவலை ஒன்றுமில்லை. பாட்டி இருக்கிறாள்.
பார்த்துக் கொள்ளுகிறாள். இந்த வயதிலும் பாட்டி உட்கார்ந்து சாப்பிட மனதில்லாதவள்.
அவளும் பெண்ணுமாய் சமையல் வேலை என்று போய்வந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை, சீமந்தம்
என்று வீட்டு வைபவங்கள். திவசச் சமையல். தவிர தீபாவளி பட்சண வகையறாக்களும் நன்றாகச்
செய்து, வரும்போது வீட்டுக்கும் கொண்டு வருவார்கள், சபேசனுக்காகவும் குழந்தைகளுக்காகவும்.
இன்னிக்குத் தேதிக்கு சமையல்காரப் பெண்களுக்குப் போல கிராக்கி வேறு எந்த வேலைக்கும்
இல்லை. குழந்தைகள் படிப்பு உட்பட சபேசனுக்கு சிரமம் தெரியவில்லை. அவனுக்குத் தெரிய
வேண்டியதும் இல்லை. குழந்தைகள் அம்மாவின், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்கள்.
உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், என்று சபேசன் கோவில்காளை யாட்டம் திரிந்தான்.
உலகம் பற்றிய் விசாரம் போதுமானதாய் இருந்தது அவனுக்கு. என்ன
கிளின்டன் இப்பிடிப் பண்ணிட்டாரு?... என்று அவனுக்கு ரொம்ப வருத்தம். டில்லியில் வெங்காயம்
எக்குத்தப்பா விலை யேறிட்டதாமே? சனங்க என்ன பொழைக்கிறதா சாகிறதா... என அவனுக்கு ஆத்திரம்.
அதுவும் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்து விட்டால், கபாலீஸ்வரர் குளத்தங் கரையில் விலாவாரியாய்
விமரிசனம் தூள் கிளப்புவான். உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு அரசியல். செய்தித்தாள்
வாசிக்கறம் இல்ல?
உங்க வீட்ல, முடிவு எடுக்கற தெல்லாம்... நீங்களா, உங்க மனைவியா?...
என்று கேட்டபோது கணவன் பதில் சொன்னானாம். சின்ன முடிவுகள் எல்லாம் அவ எடுப்பா. பெரிய
முடிவுகள் என்னிது... பெண்ணுக்கு வரன் பாக்கறது, எந்தப் படிப்புல பசங்களைச் சேக்கறது...
இதெல்லாம் அவ பொறுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, அயோத்தி பிரச்னை இதெல்லாம் நான்
முடிவு பண்ணுவேன்.. என்றானாம். அந்தக் கதை இந்த வீட்டிலு
பசித்தால் வீடு திரும்பினால் போதும். பழைய சாதத்துக்குத்
தண்ணியூத்தி வெச்சிருந்தாலும் சரி. கூட மாவடுன்னா யதேஷ்டம். டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு
மாடிக்குப் போவான். பெண்கள் பேசிக் கொண்டே யிருப்பார்கள். இந்த டிரான்-சிஸ்டரும் விடாமல்
பேசுகிறது. ரேடியோவைக் கண்டுபிடித்தவன் தன் சிஸ்டர் பெயரையே அதற்கு வைத்து விட்டான்
போல... சபேசன் பழைய பாடல்களின் ரசிகன். ரேடியோ நிகழ்ச்சி நிரல், எந்தெந்த நாளில் என்னென்ன,
அத்துப்படி அவனுக்கு. பாடல் மாற மாற, இசை யார், ட்டி.சலபதிராவா, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவா,
ஆதி நாராயணராவா என்றெல்லாம் யோசனை ஓடும். தன் மனைவி அஞ்சலிதேவிக்குத் தவிர ஆதி நாராயணராவ்
வேறு படங்களுக்கு இசை யமைத்ததே இல்லை... என்பது ஆச்சர்யமான விஷயம். பாடகர்களில் அவன்
கண்டசாலா அபிமானி. ராஜசேகரா!... என்ன பாடல்! என்ன பாடல்!
கீதா இப்போது பிளஸ் ட்டூ. அடுத்து அவளைக் கல்லூரிக்கு அனுப்புவதா?
எந்தப் பாடம் எடுப்பது? அடுத்து அவள் வேலைக்குப் போகட்டுமா வேண்டாமா? சரின்னு எதாவது
மாப்பிள்ளை பார்த்து ‘தள்ளி’ விட்றலாமா?... அவனுள் ஊடே ஊடே இப்படிக் கேள்விகள் வரும்.
இதுவரை குழந்தைகள் சார்ந்த எந்த முடிவையும் அவன் எடுக்கவில்லை.
பள்ளிக்கூடத்தில் அம்மா போய்ச் சேர்த்தபின், அப்பா என்று போய்க் கையெழுத்துப் போடப்
போனான். மயில்க்கண் வேஷ்டியை முன்தினமே திவ்யமாய் மடிப்பு கலையாமல் இஸ்திரி போட்டு
எடுத்துக் கட்டிக் கொண்டான் என்று தனியே சொல்ல வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் பெயர் கூட
அவன் கவனிக்கவில்லை. அதுகளும் நன்றாய்ப் படித்தன. அதையும சொல்ல வேண்டும். பாட்டி மேற்பார்வை
சும்மா சொல்லக் கூடாது. கீதா வீடு திரும்பத் தாமதமானால் வாசலுக்கும் உள்ளுக்குமாய்
அவள் அலை பாய்வாள், பிரசவ வலி வந்தாப் போல. அதைப் பார்க்க சபேசனுக்குச் சிரிப்பாய்
இருக்கும். அப்பா கவலைப்பட பாட்டி சிரிக்க வேண்டும்... இங்கே எல்லாம் தலைகீழாய் இருந்தது.
ஜெகதாம்பாளுக்கு சபேசனும் ஒரு குழந்தைதான். சில நெகிழ்ந்த
நாட்களில், பௌர்ணமி என்று நிலாப்பால் கொட்டிக் கொண்டிருக்கிற வேளைகளில், பாட்டி கற்சட்டியில்
குழையக் குழைய தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வருவாள். துளி மாங்காய்த்
தொக்கும் வைத்துக்கொண்டு அவரவர் கையில் போடுவாள். வயிறு திறக்க எல்லாரும் திருப்தியாகச்
சாப்பிடுவார்கள். இதில் சபேசன் ரமணி இடையே, அப்பா பிள்ளை என்ற வித்தியாசமே அடிபட்டுப்
போகும். அங்கே யாவரும் பாட்டியின் குழந்தைகள்.
சுற்றிலும் பெரிய பெரிய சலவைக்கல் கட்டடங்கள். நடுவே திருஷ்டிப்
பரிகாரம் போல இருந்தது அந்த வீடு. அழகான ஹாலில் ஒருபக்கம் சாணாச்சுருணைத் துணிபோல.
கோவில் பிராகாரத்தில் ஜமா சேர்ந்தவர்கள் பாதி ஏக்கமும் பாதி பொறாமையுமாய், “அவனுக்கென்னப்பா,
குடுத்துவெச்ச ஆத்மா. இப்பிடி ஒரு ஏரியாவுல வீடும் நிலமும்...” என்பார்கள். சபேசனுக்கே
அதில் பெருமை. ஒரு கிறுகிறுப்பு உண்டு. “இன்னிக்கு இங்கத்த ரேட் தெரியுமாவே, நாற்பது!”
என்பான் உற்சாகத்துடன்.
பின்பக்க மரத்தோடு கயிறு கட்டி துணி காயப் போட்டிருப்பார்கள்.
சுற்றி ஒரே காடு. எப்போது பாம்போ தேளோ வீட்டுக்குள்ளே புகப் போகிறதோ... பாட்டி இன்றைக்கும்
கிணற்றடியும், அந்தப் பக்க குளியறை கழிவறை என்றுதான் பயன்படுத்துகிறாள். வீட்டில் டார்ச்
கிடையாது. பின்கட்டு விளக்கு அழுது வழியும். ராத்திரி பாட்டி எழுந்து பின்கட்டுக்குப்
போனால், கவனித்து சபேசனும் எழுந்து கூடத் துணைக்குப் போவான். பாட்டி வரும்வரை அந்த
இரவில் தனியே காத்திருக்க அவனுக்கே பயமாய்த் தான் இருக்கும்.
எத்தனையோ பேர் வந்து அந்த இடத்தைக் கேட்கிறார்கள். காரில்
எல்லாம் வந்து உட்கார்ந்து ‘எவ்வளவு எதிர்பார்க்கறீங்க, நாற்பது தானே? ஒரே பேமென்ட்.
இந்தாங்க பிடிங்க. ரெடி கேஷ். நாளைக்கே பத்திரம் பதிஞ்சிறலாம்’ என்று புன்னகைத்தார்கள்.
நல்ல பார்ட்டிதான், தெரிகிறது...
அவர்களிடம் ஒரு சிரிப்புடன், தான் விற்பதாக இல்லை, என்று
சொல்லவே அவனுக்குப் பெருமிதம். சபேசன் ஏமாளி அல்ல. அவனிடம் யார் பருப்பும் வேகாது.
‘தலையைக் கிலையை ஆட்டிப்பிடாதடா, பாவி. என் தலை இங்கதான் சாயணும். புரிஞ்சதா?’ என்பாள்
பாட்டி. ‘நான் விக்கவும் போறதில்லை. உன் தலை சாயவும் வேணாம்’ என்றான் சபேசன். பாட்டி
தலை சாய்ந்தால் வீடே குடை சாய்ஞ்சிறாதா என்ன?
கீதா பள்ளிக்கூடம் போய்வர, ரமணி கம்பியூட்டர் கிளாஸ் போக
இந்த இடம் நல்ல வசதி. நாலு வீடு தள்ளினாற்போல பஸ் நின்று ஏற்றிக்கொண்டு, இறக்கி விட்டுப்
போகிறது. சபேசன் வீடு நிறுத்தம், என்பான் அவன் சிரிப்புடன்.
சதா ஜன நடமாட்டம். பயம் இல்லை. தெரு ஆரம்பத்தில் அரசியல்
கூட்டம் நடந்தால் சபேசன் தவறாமல் ஆஜர்.
ரமணியை விட கீதா நன்றாகப் படித்தாள். ரமணி பி.எஸ்சி. விவேகாநந்தா.
முடித்து ஒரு வருடமாகிறது. வேலைக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான். எழுத்துத் தேர்வுகள்
எழுதுகிறான். வீட்டில் சபேசன் நாட்டு நடப்புகள் அறிய என்று தினமணியும், ரமணி வேலைக்குப்
போட என்று இந்துவும் வாங்கினார்கள்.
ரமணியின் கையெழுத்து, ஆங்கிலமும் தமிழும் அத்தனை அழகாய் இருக்கும்.
வெளியே போய்வர என்று வீட்டு ஹெர்குலிஸ் சைக்கிளை எடுத்துப் போகிறான். சபேசனின் தாத்தாவிடமிருந்து
கை மாறி கை மாறி, இப்போதும் எண்ணெய்ப் பொலிவுடன் அதைப் பார்க்க நன்றாய்த் தான் இருக்கிறது.
உயரம் அதிகம். ராஜபாளையம் நாய்... பாவம் அவன் சகாக்கள் எல்லாரும் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள்.
அப்பாவிடம் கேட்டால், ‘அம்மாட்ட கேட்டுக்க’ என்றுவிட்டார். பிராமாணார்த்தம் பார்த்து
அவர் கையில் புரளும் காசில் பொடிமட்டை வாங்கலாம். அப்பாவை அழைத்துப்போகும் வாத்தியாருக்கு
கமிஷன் உண்டு. யாராவது நல்லாத்மா செத்து, கோதானம் பூதானம் மாதிரி பைக் தானம் செய்யக்
கூடாதா, காலத்தை அனுசரித்து யதா சௌகர்யம் பண்ணக் கூடாதா... வீட்டில் ட்டூ வீலர் இல்லை
யென்றாலும் ரமணி எப்படியோ ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டான்... ஸ்கூட்டர் பைக் என்று
நண்பர்களின் வாகனத்தை ஓட்டி ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான்... அகோரப் பசிக்கு ஏதோ கொஞ்சம்
நீர்மோர் போல. நன்றாகத்தான் ஓட்டுகிறான்.
ரமணி எந்த ஊரில் என்ன வேலையில் உட்காரப் போகிறானோ? அதற்கு
ஒருவேளை லஞ்சம் கிஞ்சம் என்று எவ்வளவு ஆகுமோ தெரியாது. திடுதிப்பென்று கீதாவுக்கு என்று
வரன் எதுவும் குதிர்ந்தால் என்ன செய்யப் போகிறான் தெரியாது. குழந்தைகள் இரண்டு பேரும்
மொட்டாய் நிற்கிறார்கள். மாலையைத் தொடரும் இரவு மாதிரி, திடுதிப்பென்று அவர்கள் வாழ்க்கை
முகமே மாறிவிடும். அதைப்பற்றிய யோசனை சபேசனுக்கும் உண்டு. இருந்தும் வெளி மனிதன் போல
அதை அவன் வேடிக்கையான எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நம்பக்கூட முடியவில்லை. எப்படி யெல்லாமோ ஊர்சுற்றி கடலில்
துரும்பு போல மிதந்து திரிந்தாகி விட்டது. எந்த ஊரில் எந்தக் கோவில் திருவிழா என்றாலும்
பஸ்சோ ரயிலோ பிடித்துப் போய்விடுவான். கிடைத்த இடத்தில் கிடைத்த சாப்பாடு. வஞ்சகம்
இல்லாத எளிமையான வாழ்க்கை. சாம்புவையரோடு ஒருதடவை சமையல் பார்ட்டி என்று காசிக்கே போய்ப்
பார்த்தாயிற்று. நல்ல இடத்தில் கல்யாணமும் ஆகி, ரெண்டு பெற்று, வளர்த்து (!) இப்போது
வயது நாற்பதையும் கடந்தாகி விட்டது. ஓடிவிட வில்லயா என்ன? இனி சொச்ச வருடமும் ஓடிவிடும்,
என்கிற அசட்டு நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. இதுவே சாஸ்வதம் என்று நினைத்தான்.
ஆனால் அவன் வாழ்விலும் நிகழ்ந்தது மாற்றம். அதிரடி மாற்றம்.
நிலைமையை அப்படியே புரட்டிப் போட்ட தலைகீழ் மாற்றம்.
•
வெள்ளிதோறும் தொ ட ர் கி ற து
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842
Comments
Post a Comment