நன்றி வடக்குவாசல் மாத இதழ்

நிர்த்தாட்சாயணி
எஸ். சங்கரநாராயணன்

யா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா தெரியாது. அதற்கான நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இந்தக் கதை முடியும்போதுதானே எனக்கே புலப்படும்? இப்போதே இதன் கட்டுரை நடை என்னை ஆயாசப் படுத்துவதை உணர்கிறேன். சகித்துக் கொள்ளுங்கள். இத்தனை சீக்கிரம் நான் அலுப்படைந்துவிட முடியாது.
            கதை என்றால் நீதி தேவையா தெரியவில்லை. எதற்கும் நீதி ஒன்று வைத்துக் கொள்வது நல்லது. மழை வராங்காட்டியும் சும்மா குடை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்புவது இல்லையா...
            சரி - இந்தக் கதைக்கு நீதி என்ன? பழைய ஈசாப் ரகமான நீதிதான். அதான் சொன்னேனே நான் பெரிய எழுத்தாளன் ஒன்றும் அல்லன். தவிரவும் இது என் முதல் முயற்சியும் ஆகும்...
            ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ஆட ஆச்சரியம் என்னவென்றால் தோல்வி பயத்திலான ஆண்களைக் கூட வெற்றி நோக்கி உந்தி - football போலத் தள்ளிவிட வல்லவள் அவள்.
            இது நீலகண்டனின் கதை. திடீரென நான் நீலகண்டனைப் பற்றி நினைக்கவும், அட எழுதவும் நேர்ந்து விட்டது. ஆறேழு வருடங்கள் முன்னால் என் வீட்டுக்கு அருகில் குடியிருந்த நீலகண்டன். திடீரென சாதனை நிகழ்த்தி பிரமிக்க வைத்தவன்...
            அவனைப்பற்றி தற்காலங்களில் நான் நினைத்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லாதிருந்தது. ஊர்ப்பக்கம், அவர்கள் இருந்த வீட்டுப் பக்கம் இப்போது நான் போவதற்கான வேலையும் இல்லை. ஒருமுறை தற்செயலாகப் போனபோது வேறொரு தம்பதி இருப்பதை அவதானித்தேன். நான் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்ததைப் பார்த்தபடி நான் நீலகண்டன் இருந்த வீட்டை கவனிக்க தற்செயலாக நேர்ந்து விட்டது.
            தற்செயல்கள்தான் கதையின் ஊற்றுக் கண்கள் என நினைக்கிறேன்.
            அப்போது கூட நீலகண்டனைப் பற்றிய நினைவு சேகரம் என்னிடம் நிகழவில்லை... (சரியான இலக்கியச் சொற்றொடர்கள் உபயோகிக்கிறேனா?) ஆ, அந்த வீட்டின் முகம் மாறினாப் போல எனக்குப் பட்டது. ஏன் அப்படிப் பட்டது? இது இலக்கியக் கதை ஆகும். அதில் இப்படித்தான் சொற்றொடர்கள் அமைக்கிறார்கள்...
            ஆனால் மாறவில்லை. அந்த வீட்டில் இருந்து கணவனும் மனைவியும் பெரிதாய்ச் சண்டையிட்டுக் கொள்ளும் சச்சரவு உரத்து திடீரென ஒலித்தது. அடங்கிக் கிடந்த சத்தம் திடீரென கதவு திறந்தாப் போல உரத்துக் கேட்டது... தொண்டையின் கதவுகள்!
            விரைவில் இலக்கிய நடையை எட்டிப் பிடித்து விடுவேன்.
            சண்டை. உடனே ஆமாம், எனக்கு நீலகண்டனை, குறிப்பாக அவன் மனைவி தாட்சாயணியை, எனக்கு ஞாபகம் வந்தே விட்டது. அந்த வீட்டின் ராசியா அப்படி, என்றும் இருந்தது. யார் அந்த வீட்டுக்குக் குடி வந்தாலும் ஒரே சண்டையாக சச்சரவாகவே இருக்கும் போலும்!
            ஆமாம், இது நீலகண்டனின் கதை. எளிமையாய், அவர்கள் இருவருக்கும் பெயர்ப் பொருத்தம் இருந்ததை நான் முதல் கவனத்திலேயே புரிந்து கொண்டு மனம் மகிழ்ந்தேன். கலைஞன் அல்லவா? இப்படி விஷயங்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றை முறைப்படி தொகுத்து வரிசைப் படுத்தவும் அவன் மனசு பக்குவப் பட்டிருக்க வேண்டுமே? அவள் தாட்சாயணி என்றால் அவன் ஏன் நீலகண்டன்... விடமுண்ட கண்டன், எனக்கூட நான் ஒரு வேடிக்கைபோல நினைத்துக் கொண்டேன். அவள் தந்த காபி அத்தனை மோசமா என்றிருந்தது. நான் கலைஞன் அல்லவா?
            நான் அவர்கள் வீட்டுக் காபியை, வீட்டுக்குள் சென்று ருசி பார்க்கவில்லை. காரணம் நீலகண்டனே அவனது மனைவியிடம் சதா சண்டையைச் சமாளிக்கிறவனாக இருக்கிறான். எந்நேரமும் வெடிக்கிற பலூன் போல அவர்கள் வீட்டுக்கு உள்ளே நடமாடினாப் போல இருந்தது எனக்கு. தீவிரவாதிகள் போல, கையெறி குண்டுகளுடன் அவர்கள் நடமாடினார்கள். ஆனால் ஒருவர் தாக்குதலுக்கும் ஒருவர் தற்காப்புக்கும் என வைத்திருந்தனர் குண்டுகளை. யார் தாக்க யார் தற்காக்க என விளக்கம் தேவை இல்லை. தற்காத்து, தற்கொண்டாற் பேணாமல், தகைசார்ந்த தன் சொற்காத்து பிடிவாதம் பண்ணினாள் தாடகை, மன்னிக்க - தாரகை.
            அந்த இடமே ஒரு  எல்லை ஸ்தலமாய், கார்கில் போல எனக்குத் தோன்றியது. ஏன் அப்படித் தோன்றியது?... நான் எழுத்தாளன் அல்லவா?
            அப்போதே இப்படியாய் என்னில் எழுத்தின் விதைகள் இருந்திருக்கின்றன. என்றாலும் இப்போது இத்தனை வருட உறக்கங் கழித்து அவை முளைத்தெழுகின்றன. இது நான் எழுதும் முதல் கதை ஆகும். அன்பிற்குரிய பத்திரிகை ஆசிரியர் இதை வெளியிட்டு ஊக்குவிப்பாராக.
            நீலகண்டனும் தாட்சாயணியும் என் வீட்டருகே குடி வந்தார்கள். அந்த வீட்டுக்காரர் ஏனோ பெரும் அதிருப்தி கொண்டவராய் இருந்தார். அவர் யாரையும் தொடர்ந்து அங்கே இருக்க விட்டதே இல்லை. இரவு பத்து மணிக்கு மேல் விளக்கெரிவதோ, அடி பம்பில் தண்ணீர் அடிப்பதோ அவருக்குப் பிடிக்கவில்லை. வயசாளி. மனைவி இறந்தபின் தனியே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு அந்தக் கடைசிப் பகுதியில் - தன் வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் - அவர் இருந்தார். வீட்டு வாடகைப் பணத்தில் அவர் காலம் ஓடிக் கொண்டிருந்தது.
            இரவில் பம்ப் அடிக்கும் சத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. தவிரவும் பொதுவான அமைதி அவருக்கு ஒருவேளை தேவைப் பட்டிருக்கலாம். என்றாலும் ஆச்சர்யகரமாக அவருக்குப் பக்கத்தில் வாடகைக்கு என்று குடியிருக்க வந்தவர்கள் அமைதியாய் இருந்தாலும், சண்டை போட்டாலுமே கூட பிடிக்கவில்லை... பக்கத்து வீட்டுக்காரர்கள் தம்பதியாய் இருப்பதே அவருக்கு ஒருவேளை பிடிக்காமல் இருக்கலாம்.
            நான் எழுத்தாளன் அல்லவா? - இப்போது நினைத்துப் பார்க்கையில் இரவில் அவர் மாத்திரம் தூக்கங் கெட்டு நடமாடினார், நடமாட விரும்பினார் என்று தோணுகிறது. ஒடுகலான சிற்றறைகளில் தம்பதிகளின் சப்த முயக்கங்களை அவர் இருளுக்குள் பிடித்தும் பிடிக்காமலும் எதிர்கொண்டாரா? அந்த பம்ப் அடிக்கிற விஷயம்... சீச்சீ, அதை அத்தனை ஆபாசமாகப் புரிந்து கொள்ள வேண்டியது இல்லைதான்.
            ஓனர் கதை வேணாம். அது வீணர் கதை. நம்ம நீலகண்டன்... பணிந்து போக அவன் எப்போதும் தயார் நிலையில் இருந்தான். எப்பவாவது என்னைக் கடை கண்ணிகளிலோ பொது இடங்களிலோ சந்தித்தால் அபார அமைதியுடனான வதனத்துடன் புன்னகை செய்தான். அந்த முகத்தில் பெரும் சாந்தம் எப்படி அமைந்தது?... பெரிய அளவில் அவன் வீட்டில் சண்டை நிகழ்ந்திருக்கும். போர் உக்கிரம் முடிந்து கந்தக வாசனையும் கரிப்புகை மிதப்பும் உட் புலன்களுக்கு எட்டும்... என்றாலும், ஒரு பதட்டத்துடன் செருப்பை மாட்டிக் கொண்டபடி அவன் வெளியேறி யிருப்பான் என்றாலும்...
            தெரு தாண்டியதுமே அவன் புதிய காற்றை உணர்கிறவனாய் அனுபவிக்கிறவனாய் இருந்தான். சிற்றறைக்குள் அவன் உலகம் இல்லை போலத் தோணியது. வீடு அல்ல அது கூடு. கூட கூட அல்ல கூண்டு!
            மாப்ள இதாண்டா இலக்கியம்! அதிலும் கதாநாயகன் சாதனையாளன்!... சூப்பர்.
            எங்கேயும் நிலையாக அவன் வேலையில் தங்கினான் என்றில்லை. சமையல் வேலை தெரியும். பதவிசான குமாஸ்தா உத்தியோகங்கள் அறியாதவன். பிடிக்காதவன். இவனைப் போன்ற அமைதிசாலிகள் குமாஸ்தாவாக இருக்கலாம். அவன் மனைவியும் ஒருவேளை அதை அங்கீகரித்திருக்கக் கூடும்.
            என்னைப் பற்றிச் சொல்லாமல் என்ன கதை? அதும் முதல் கதை.
            நான் - அட நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் - நான் ஒரு குமாஸ்தா.
            என்னவோ அவளுக்கு அவனையிட்டு அதிருப்தி. உலகத்தில் யாரையும் பற்றி - தன்னைத் தவிர! - அவளுக்கு அத்தனை நல்லபிப்ராயம் கிடையாது போலிருந்தது. கல்யாணத்தின் போதே அம்மி மிதிக்கிற சமயம் அவன் சுண்டு விரலை மிதித்து அலற வைத்தாளா என நான் கற்பனை செய்து கொள்கிறேன்.
            நீலகண்டனை எதிர்கொண்டு அ வ ள் ஆடினாள் ஊழிக் கூத்து.
            கண்ணொடு கண் இணை நோக்கி, வாய்ச் சொற்கள் பயனிலாது போகும் என்று, ஆயுதங்கள் ஏந்துகிறவளாய் இருந்தாள் அவள். வாதமாடினாள் அவள், பிடிவாதமாடினாள், நடமாடினாள், நா நடனமாடினாள்...
            தமிழ் வாழ்க!
            அவன் பெரும்பாலும் பொறுத்துக் கொண்டு மௌனமாய் இருந்தது கூட அவளால் பொறுத்துக் கொள்ள இயலாது போனதில் அந்தப் பின்னிரவில் அவன் வீட்டைவிட்டு வெளியேற வேண்டி நேர்கிறது.
            சம்பளம் என்று கூலி கொணரும் தினங்களில் கூட அவள் சிநேகம் பாராட்டினாள் இல்லை. அது சார்ந்த நெகிழ்ந்த கணங்கள் அவனுக்கு வழங்கப் பட வில்லை என்றே தோணுகிறது.
            நீலகண்டன் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது அவளை, என நினைத்தேன். ஆனால் இப்படி முடிவுகளுக்கு வர அவன் கல்யாணம் செய்து கொண்டதே காரணம், என்பதையும் மறுக்க முடியவில்லை.
            ஒழுங்கான தேதியில் வீட்டு வாடகை தர அவனால் முடியவில்லை... என்றாலும் ஏனோ அவர்களை - அவர்களை மாத்திரம் - வீட்டுக்காரர் தொடர்ந்து வாழ அனுமதித்ததில் ஓர் வக்ர திருப்தி அவருக்கு ஏற்பட்டிருந்ததா... இரவு கிளம்பும் அந்த சம்சார சம்காரக் கூத்தைக் கூட அவர் எப்படியோ - அவர் இயல்பையும் மீறி அனுமதிக்க அங்கீகரிக்க வேண்டியிருந்தது.
            உள்ளே திருப்தி கண்டாலும் சம்பிரதாய அளவில் அவர் அவர்களிடம் சமாதானமாகிப் போங்கள் என்று சொல்கிறவராய் இருந்தார்.
            அவர்கள் சமாதானமாகிப் போயிருந்தால், வீட்டை விட்டு வெளியே போங்கள், என்றிருப்பார்!
            நீலகண்டன் பதற்றம் காட்டாத ஆள். லேசில் அவனைப் பதட்டப் படுத்திவிட முடியாது. எங்கள் தெரு நாய்களுக்குப் பயப்படாத ஆளே அந்த வட்டாரத்தில் இல்லை. இரவில் சதா குரைத்து தூக்கங் கெடுத்தன அவை. அதனாலேயே, நீலகண்டன் வீட்டு ஓனர் விரும்பியபடி ஜனங்கள் இருட்டு முற்று முன்னரே வீடு திரும்புகிறவர்களாக இருந்தனர்.
            தாட்சாயணிக்கே அந்த நாய்களிடம் பயம் உண்டு. ஆச்சர்யமான விஷயம் கணவனிடம் சிறிதும் பயங் கொள்ளாத தாட்சாயணி கரப்பான் பூச்சியிடமும் எலியிடமும் அபார பயமும் அருவருப்பும் கொண்டவளாய் இருந்தாள். ஒருமுறை ஆத்திர உச்சத்தில் அவள் வீசிய சாமான் பின் அரிசி டின்னில் ணங்கென மோதி அதன் பின்னில் இருந்து பாய்ந்து துள்ளிய சுண்டெலி அவளை பயத்தில் மூர்ச்சையடையச் செய்து விட்டதாக நீலகண்டன் என்னிடம் சொன்னான், சிரிக்காமல்.
            சண்டை இவ்விதமாக முடிவுக்கு வந்தது ஒரு வழியாய்.
            நீலகண்டனுக்கு மிருகங்களையிட்டு - தெருநாய்களை யிட்டு பயம்... கலவரம் கிடையாது. பிராணிகளிடம் கூச்சம் அருவருப்பு அறவே கிடையாது. நல்ல சிநேகத்துடன் வீட்டில் அவன் ஒரு கிளி வளர்த்தான். அதைக் கூண்டில் கூட அவன் வைத்துக் கொள்ளவில்லை. சுதந்திரமாய்ப் பறந்து திரிகிறது கிளி. இரவில் அதைக் கூண்டுக்குள் உறங்கப் பணிக்கும் வரை வீட்டில் மின்விசிறி கூட சுழல விடாமல் பார்த்துக் கொள்வான். அவன் மனைவி எப்படி அந்தக் கிளியை அனுமதித்தாள் என்பதும் இன்றுவரை எனக்கு விளங்காத ஆச்சர்யம்.
            சிறகு கூட வளராத நிலையில் அந்தக் கிளியை அவன் வழியில் கண்டபோது நாய் குதறாமல் காப்பாற்றி வீட்டுக்கு அவன் கொணர்ந்ததாக என்னிடம் தெரிவித்தான். இந்நாட்களில் நாங்கள் ஓரளவு பேச்சு வார்த்தை சகஜப் பட்டிருந்தோம். அவன் கண்கள் அந்த அமைதி... நான் திடீரென, என்ன தோணியதோ, அவனிடம் சொன்னேன் - நல்ல நிதானமும், கண்ணியமும், கவன ஒழுங்கும் உன்னிடம் இருக்கு நீலகண்டன்... எதாவது பெரிசா சாதிக்கணும் நீ...
            நானா, ஒரு சமையற் காரனா?
            ஆமாம். சமையல் வேலை கேவலமானதுன்னா நீ நினைக்கிறே?
            தெரியல. எனக்கு வேற வேலை எதுந் தெரியாது.
            வேலைல உயர்ந்தது தாழ்ந்தது இல்லை - என்றேன் நான் சற்று விரைப்புடன். எழுத்தாள பந்தா அப்போதே எனக்கு வந்திருந்தது. ஆனால் என் முதல் கதை அவனைப் பற்றி அமையும் என்று எனக்கே தெரியாது.
            கின்னஸ் சாதனை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். கண்டபடி யெல்லாம் சாதிக்கிறார்கள். உலகத்தின் மிகப் பெரிய குறட்டை யார் விட்டது, என்றெல்லாங் கூட அதில் ஏராளமாய்த் தகவல்கள் இருக்குமாம். நீளமான நகங்கள் கொண்டவன் ஒரு இந்தியன். அதிக நீளமான சடைமுடி, தலைமுடிச் சாமியார் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
            அதெல்லாம் சாதனையா? - நீலகண்டன் சிரிக்கிறான். அதெல்லாம் ஓர் அமைப்பு... இவர்கள் சாதித்தது என்ன?
            வெறும் பல்லால் பெரிய லாரி, அது நிறைய பாரம் வைத்து இழுக்கிறார்கள். தலைமுடியால் இழுக்கிறார்கள்...
            அதற்கும் சிரிக்கிறான். எல்லாத்துக்கும் பின்னணி உண்டுதான்... என்கிறான் பிறகு.
            பெரும் பேய்க்கதைகள் கேட்டவன், சுய பயத்தில் நகத்தை வளர்க்கப் பிரியங் காட்டி யிருக்கலாம்!
            அப்பாவின் ரெண்டாம் மனைவி - சின்னம்மா கொடுமைக்கு ஆளான எவளாவது எவனாவது, அந்த மயிரை பலப்படுத்தி லாரிப் பாரத்தை இழுத்திருக்கலாம்!
            அந்த நெருக்கடியான சுய வாழ்க்கை சோகத்திலும் அவனிடம் ஒரு மந்தகாசம் இருப்பதை நம்ப வேண்டியிருந்தது...
            நீ வாழ்க்கையில் எதையாவது சாதிப்பே பாரேன்...
            எனக்கு என்ன தெரியும்னு நான் சாதிப்பேன், என்கிறாய், என்று நீலகண்டன் என்னைக் கேட்டான்.
            உன் வாழ்க்கை - உன் அனுபவம்... அதுரீதியாகவே அது சாத்தியம்... அவன் அப்படிக் கேட்டது, என்னை அங்கீகரித்தது எனக்கு உற்சாகமாய் இருந்தது.
            விளையாட்டுக்குச் சொல்றி சங்கர்?
            இல்லையில்லை... நிஜமாத்தான். ஏன்?
            உதாரணமா?
            உதாரணமா ஒரு கப்பல் ஊழியர் குழு பதினைந்து விநாடிகளில் 1000 சப்பாத்திகள் பண்ணினார்கள்... something like that - நான் படிச்சிருக்கேன். உனக்குத் தெரிந்த அளவில்...
            ச், வேற வேலை இல்லை, என எழுந்து போய்விட்டான், நீலகண்டன்.
            ஏன் அவரை இப்பிடி தேவையில்லாமல் பம்பரச் சுத்து சுத்தி விடறீங்க? - என என் சகஅதர்மிணி - சிம்ஹவாகினி அவள் பேர். வாயில்லாப் பூச்சி. பெண்டாட்டி சாந்தசொரூபமாய் அமைவது பூர்வ ஜென்ம புண்ணியங்களில் ஒன்று.
            1. எங்கள் பூர்விக, பழைய வீடு இது. 2. எங்களை நீலகண்டன் வீட்டு ஓனருக்குப் பிடிக்காது!
            எப்படியோ ஒருநாள் ஒரு மழைப் பொழுதில் எங்கள் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்து விட்டதை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஆ என நான் பதறி, யாராவது ஆம்பளை ஓடி வாங்களேன்... என அலறினேன். நீலகண்டன் ஓனர் சட்டென உள்ளோடி தன் கதவைச் சார்த்திக் கொள்கிறார். அவர் தான் ஆண் என்கிற சவாலை ஏற்க முன்வரவில்லை. நானும்! - என்று பிற்பாடுதான் உணர்ந்தேன் வெட்கத்துடன். நான் ஒரு குமாஸ்தா, என முன்பே சொல்லியிருக்கிறேன். முதலாளி பற்றியே கற்பனையே எங்களைப் பாம்பாகக் கொத்த வல்லவை.
            அட வந்தான் நீலகண்டன். துள்ளி வந்தான், எங்க, எங்க... சார் விலகுங்க விலகுங்க... தரையெங்கும் பரபரப்புடன் தேடினான். பாத்திர அடுக்குகளை சரசரவென விலக்கினான். சிறு பாத்திரங்கள் உருண்டன. கோரமான சப்தக் கலவரம். பார்சல் பாதி பிரித்த துவரம் பருப்பு, தண்ணீர்க்குடம் அசைந்து சிதறிச் சிந்தி... நீலகண்டன் பரபரப்புடன் தேடி, சட்டென்று அந்தப் பாம்பை...
            ஆமாம், கையில் பிடித்தான்.
            உஸ்ஸென அது சீறுமுன் பாயுமுன் எப்படியோ அதன் கழுத்தை அவன் பற்றி யிருந்தான். கடும் விஷங் கொண்ட கட்டு விரியன். அவன் கைத் தண்டில் பஸ் ஸ்டாண்டுப் பூக்காரியின் கைப்பூவாய்ச் சுற்றிக் கொண்டது கட்டு விரியன்...
            வெளியே தெருவில் போய் சாக்கடையைத் திறந்து அதை எறிகிறான் நீலகண்டன்.
            என்ன நீலு, அடிச்சிருக்க வேணாமா?
            ஐய போயிட்டுப் போவுது. நாம பதறாதவரை அது நம்மைத் தாக்காது.
            அப்பிடியா?
            ஊர்த் திருவிழா. சமையல் முடிச்சி ஆசுவாசமா, எங்க ஊர்த் தோப்புல நான் படுத்திட்டிருந்தேன். மரத்து மேலருந்து... பொத்துனு எம் மேல...
            பாம்பு!
            ஆமா.
            ஐயோ.
            நான் பாத்திட்டே இருந்தேன். என்னைத் தலையைத் து£க்கி அது பாத்தது...
            சிம்ஹவாகினி ஈஸ்வரா, என்றாள்.
            பிறகு தானே கீழயிறங்கிப் போயிட்டது...
            சமையல் வேலை நிரந்தரமானது அல்ல. கல்யாண மண்டபத்தில், வெளியிடங்களில் கோவில் சமாராதனைகள், திருவிழாக்கள் என அவன் சமையல் செய்கிறவன். வெளிவட்டாரங்களில் ஜனங்கள் உற்சாகங் கொப்பளிக்க நடமாடுவதைப் பார்க்க அவனுக்குப் பிரியமாய் இருந்தது.
            வேலை என இருந்தாலும் இல்லா விட்டாலும் அவன் வெளியிடங்களில் திரிகிறவனாகவும் தங்குகிறவனாகவும் இருந்தான். வெளியிடங்களில் தங்குவதால் அவனுக்கு வீட்டில் மேலும் சண்டை வலுத்தது. ஆகவே அவன் திரும்பவும் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேறி, கடை கண்ணிகளிலோ, பொது இடங்களிலோ என்னைப் பார்க்க நேர்ந்தால் புன்னகை செய்தான்.
            அவன் புன்னகை அபார அமைதியாய் இருந்தால், அன்றைக்கு வீட்டில் பெரும் புயல் என்று நான் எண்ணினேன். புயலுக்குப் பின்னே...
            பின்னிரவில் நீலகண்டன் வீடு திரும்புவது அதிசயம் அல்ல. நாய்கள் பற்றிய பயமும் அவனிடம் இல்லை. இப்படி நேரங் கெட்டு... ராத்திரி சப்த எடுப்புகளைத் தொந்தரவுகளை வீட்டுக்காரர் விரும்புவது இல்லைதான். அவனுக்கு வேறு வழியில்லை.
            நேரங் காலம் இல்லாதது அவன் வேலை. ஊரே து£ங்கிக் கொண்டிருக்கும். அதிகாலை மூணு மூணரை. நாலு மணிக்கு மாப்ளைப் பார்ட்டி எழுந்து கொள்கையில் சூடா காபி, வெந்நீர் என்று கேட்டு ஆள் வந்து நிற்பார்கள். முந்தைய இரவே தேங்காய் துருவ, காய்கறி நறுக்க, இனிப்பு - பலகாரங்கள் செய்ய... என சமையல் வேலைகள் இரா முழுக்க இருக்கும்.
            சற்றே குடித்திருந்தான் அன்றைக்கு. எனக்கு ஆச்சர்யம், தற்காலங்களில் வாழ அலுத்திருந்தானோ? குடி அதுவரை அவனிடம் இல்லை.
            குடிகாரர்கள் குடித்த பின் சற்று ஆவேச எடுப்பு எடுக்கிற தெம்படைவதாக ஐதிகம். மரத்தை மட்டையை சுவர்களைப் பார்த்தெல்லாம் அவர்கள் ஆவேசப் படுகிறார்கள். சிலர் இதன் எதிர்வினையாக தெருநாயைக் கட்டிக் கொண்டு அழுதல் போன்ற மென்மையின் அம்சங்களுக்கு, இதன் எதிர்த் திசைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
            டீய் கதவைத் தொறடி... எனக் கூப்பாடு போட்டான் நீலகண்டன்.
            எனக்கு ஆச்சர்யம். என்ன ஆச்சி நீலகண்டனுக்கு. சிம்ஹவாகினிக்கு பயம். நீங்க உள்ள வாங்கோன்னா...
            எனக்கும் பயம்தான். என்றாலும் மனைவி முன்னால் நான் தைரியசாலிதான்.
            ஆம்பிளைதான்!
            ஜன்னல் கதவு திடீரெனத் திறந்தது. திகைக்கக் கூட முடியாத வேகத்தில் அவன் மீது ஒரு விளக்குமாத்து அடியும், செருப்பும் விழுந்ததைப் பார்த்தேன்.
            திரும்ப ஜன்னல் சார்த்திக் கொண்டது.
            நிகழ்ச்சியின் விபரீதத்தையும் மீறி நான் சிரித்தேன். கடகடவென, அடக்க முடியாமல், பொங்கிப் பொங்கி நான் சிரித்தேன். ச்சீ, பாவம்... என்றபடி என் மனைவியும்... சிரித்தாள்.
            நீலகண்டன் என்னைப் பார்த்தான். எங்களைப் பார்த்தான். என் சிரிப்பு நிற்கவில்லை. ச்சீ பாவம் என நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.
            தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி அவன் வெளியேறினான். அப்புறம் அவன் வீடு திரும்பவே யில்லை. தாட்சாயணியைப் பார்க்க வரவே யில்லை. நாங்கள் அவர்களை மறந்து போனோம். நாங்கள் என் பையன் படிப்பு இத்யாதி மும்முரங்களில் நகரம் வந்தோம். இடையில் தாட்சாயணி என்ன ஆனாள், எப்படி வாழ்க்கைப் போக்கைச் சமாளித்தாள், எதுவும் தெரியாது. அதைப் பற்றி கவலையோ ஞாபகமோ எங்களிடம் இல்லை...
            இப்போது கூட எங்களுக்கு தாட்சாயணி ஞாபகம் வரவில்லை. நீலகண்டனின் ஞாபகம்தான் வந்தது. ஆனால் அவனை ஞாபகப் படுத்தியவள் தாட்சாயணி!
            மார்க்கெட் பக்கம் நான் தாட்சாயணியைப் பார்க்க நேர்ந்தது.
            வணக்கம் சார்.
            அட.
            பாவம். மெலிந்திருந்தாள். உடைகள் சோபையற்று இருந்தன. நீலகண்டன் அவளை நன்றாகவே வைத்துக் கொண்டிருந்தான். நல்லுடைகள், அலங்கார சாதனங்கள்... என அவனையிட்டு அவள் செலவுகளை அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அபரிமிதமான திமிர். கெடுத்துக் கொண்டிருக்கிறாள்...
            எப்படி இருக்கேம்மா? - என்றேன் பொதுவான குரலில்.
            ச் - என்றாள்.
            இந்தப் பக்கமா வந்தாச்சாக்கும்?...
            உங்க வீட்ல பத்து பாத்திரம் தேய்க்கறா மாதிரி சின்ன உத்யோகம் கிடைச்சாக் கூடத் தேவலை. ரொம்பக் கஷ்டம் மாமா... என்றாள்.
            நான் பேச்சை மாற்ற விரும்பினேன். அவளுடன் அதிகம் பேசியதில்லை நான். நீலகண்டன்தான் எப்பவாவது என்னுடன் பேசிக் கொண்டே சிறிது தூரம் நடந்து வருவான். காலையில் பால் வாங்க வைகறை இருளில் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வான்.
            நீலகண்டன்...
            அவர் வரவே இல்லை சார். நான் தனிதான்... என்றவள் நான் எதிர்பாராத விஷயம் சொன்னாள்.
            அவரைப் பத்தி பேப்பர்ல வந்திருந்தது, மாவு சலிக்கறச்ச அந்தப் பேப்பர்ல பார்த்தேன்.
            ம்... என்று திரும்பிப் பார்த்தேன். ஜாக்கெட்டுக்குள்ளிருந்து பர்ஸ் எடுத்து, அந்தச் செய்தித் துண்டுத் தாளைக் காட்டினாள்...
            நீலகண்டன். அதி வீரிய விஷப் பாம்புகளுடன் 60 மணி நேரம் ஒரே கூண்டில்...
            நம்ம நீலகண்டனா?
            தனியே புறப்பட்டவனுக்கு எத்தனை விதமான அனுபவங்கள் நிகழ்ந்தனவோ. கைவசம் தொழில் இருக்கிறது. வெளியிடம் சுற்றித் திரிகிற ஆர்வமும், நிறைய நேரமும் இருந்தது... எதையாவது செய்ய உள் ஆவேசம் வந்திருந்தது போலும்...
            இது... நம்ம நீலகண்டனா... என்றேன் நம்ப முடியாமல்.
            அவராத்தான் இருக்கும்... நீங்கதானே சாதனை பண்ணு, சாதனை பண்ணுன்னு சொல்லுவீங்க... என்றாள்.
            இது சாதனைதானே? - என்றாள்.
            சாதனை இது அல்ல... என நினைத்துக் கொண்டேன். உன்னுடன் வாழ்ந்தானே அது. அதுதான், என்று சொல்ல முடியுமா?
*
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842

Comments

Popular posts from this blog