சிறுகதை - இந்தியா டுடே

பெயரே இல்லாத மனிதன்
எஸ்.சங்கரநாராயணன்

ப்பேர்ப்பட்ட வித்வான் அவர்... ரவிப்பிரகாஷ். என்ன குரல். என்ன குழைவு. என்ன ஜாலம்... இசைக்கருவிகளின் சாகசங்களையும் அநாயாசமாய் எட்டமுடிந்த குரல் அல்லவா அது? குரல் அல்ல, குரல் அலை. குரல் அருவி. குற்றாலக் குளிர் சாரல். பெயர் சொல்லவே வாய் மணக்கும். இசை மணக்கும்.
அவனுக்குக் குரலே இல்லை. பெயரே இல்லை. பெயர் எதற்கு? யார் அவனைக் கூப்பிடப் போகிறார்கள்? கூப்பிட்டாலும் எப்படி அவனால் அதைப் புரிந்துகொள்ள முடியும்?
அவன் ஒரு செவிட்டு ஊமை. தொட்டே அவனைக் கூப்பிட வேண்டி யிருந்தது. மொழி அவனிடம் எடுபடவில்லை. கைகளாலும் சமிக்ஞைகளாலும் அவனோடு பேச வேண்டும்.
லேசாய் மழை தூறிக் கொண்டிருந்த வேளையில் அவன் அவரிடம் வந்து சேர்ந்தான். ஏனோ அவர்வீட்டு வாசலில் வந்து நின்றான் அவன். காத்து நின்றான். அருமையான பொழுது அது. காலையின் சிறு வெளிச்சம். சோம்பல் முறித்து எழுந்துகொள்ளும் குதிரை.  ஒலிகள் இன்னும் திரள ஆரம்பிக்கவில்லை. சிறு மழைக்கு உலகம் இன்னும் சோம்பி ஒடுங்கிக் கிடந்தது.
தாவரத்துப் பசுமையில் அடர்வண்ணம் தீற்றும் மழை. காட்சி துவங்குமுன் அரிதாரம் பூசிக் கொள்கிறது பொழுது. அவருள்ளேயும் அலை புரட்டி யிருந்தது. எழுந்து கொள்ளும் போதே சிறு குளிரை உணர்ந்தார். மண்வாசனை. சட்டென்று திரைச்சீலையைத் திறந்து வெளியே பார்த்தார். ஆகா மழை துவங்கியது. வானத்துக்கும் பூமிக்குமாய்த் திரையிறக்கி யிருந்தது மழை. தத்தக்கா பித்தக்கா என்று நடந்து வந்து மடிமேல் அமர்ந்து கொள்ளும் குழந்தை போன்ற மழை. மனமெங்கும் ஈரம் பரத்துகிற, குளுமை பரத்துகிற மழை. அவர் பார்த்தார். மழைக் கம்பி வழியாக வானிலிருந்து தேவதைகள் வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள்.
தம்புராவை எடுத்து வைத்துக்கொண்டு வாசல் வராந்தாவுக்கு வந்து உட்கார்ந்தார். வாயில் தன்னைப்போல ஸ்வர அடுக்குகள் பூத்துச் சொரிய ஆரம்பித்தன. மல்லாரியும் தில்லானாவுமாக மழைக்கொட்டு. கொட்டும் மழை.
காம்பவுண்டுக்கு வெளியே அவன் அவரையே பார்த்தபடி காத்திருந்தான். சரி யாரோ ரசிகன் என்று நினைத்தார். வெட்டவெளியில் மழையில் நனைந்தபடி அவன் நின்றிருந்தான். நனைவதைப் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவில்லை. சிறு மழையும், நனைந்தால் அவருக்கு ஒத்துக் கொள்ளாது. ஜலதோஷம் சாரீர சத்ரு.
சற்று நேரத்தில் எதுவுமே தெரியவில்லை அவருக்கு. மழையே தெரியவில்லை. காத்திருந்த அவனே தெரியவில்லை. உலகே அழிந்து அவரும் அந்தத் தனிக்குரலும். ஆகா விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பேரவா கொண்டது மழை. அவர் சங்கீதமும் அப்படியே. காற்றிலேறி வித்தைஜாலம் செய்தது. தன்னைப்போல் ஊற்று திறந்து பீரிட்டுத் தெரித்தது. இசை வெள்ளம். என்ன பீரிடல். குபீரிடல். என்ன வேகம். இசை சாதகம். அஸ்வமேத யாகம் தான்.
அவன் காம்பவுண்டுக்கு வெளியே நின்றிருந்தான். மழை இப்போது உக்கிரம் பெற்றிருந்தது. மழையின் சிரிப்பு. ஆக்கிரமிப்பு. கொக்கரிப்பு. சொறிந்துவிடச் சொல்லி கழுத்தை நீட்டும் பசுப்போல் குதிரைபோல் முகத்தைக் காட்டிக்கொண்டு அவன் நின்றிருந்தான். தன்னை மறந்திருந்தான். நெற்றி தலை முகம் கண்கள் உதடுகள்... எங்கும் எங்கெங்கும் மழை அவனை முத்தமிட்டது.
மேலே சட்டை கூட அணியாத அவன்.
மழை அவருக்கு ஒத்துக்கொள்ளாது. அடாடா நனைகிறானே என்று சட்டென்று உணர்ந்தார் அவர். அவனோ அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அட நனைகிறானே என நினைத்தார். சற்றே பொறாமையாய் இருந்தது அவனைப் பார்க்க. தனக்குள் புன்னகைத்தபடி அவர் தம்புராவை மடியில் கிடத்திக் கொண்டார்.
அதற்கே காத்திருந்தாற் போல காபியும் பலகாரமும் கொண்டு வந்தாள் நர்மதா. அவர் மனைவி.
நர்மதா கவனித்தாள். அவர் பார்வை வாசலில் நிலைத்திருந்தது. காம்பவுண்டுக்கு வெளியே அவன் இன்றும் நின்றிருந்தான். யாரவன் அவளுக்குத் தெரியாது. அவனுக்கு என்ன வேண்டும் தெரியவில்லை. அது அவன் கண்டுகொண்ட இடமாய் இருந்தது. சில மிருகங்கள் சில இடங்களைப் பரிச்சயம் செய்து கொள்கின்றன. பதிவு செய்து கொள்கின்றன. ஆடுகள் மாடுகள் நாய்கள் பூனைகள்... சில இடங்களை எப்படியோ தங்கள் இடங்களாக அடையாளங் கண்டு கொள்கின்றன. பிறகு எப்படி விரட்டினாலும் அவை அதைவிட்டுப் போகப் பிரியப்படுவதே யில்லை. அவனது பார்வையில் அந்த அடையாளம் அவளுக்குத் தெரிந்தது.
“நாலைஞ்சு நாளா அவன் இங்கயே சுத்தி சுத்தி வந்து நிக்கறான்” என்றாள் நர்மதா.
“உள்ளே கூப்பிடு” என்றார் ரவிப்பிரகாஷ்.
நல்ல திடகாத்திரமான உடல். தலையில் முண்டாசு. மீசையும் தாடியுமான முகம். அந்தக் கண்கள்... ஆகாவென இருந்தன. அதன் உள்ளொளி, தீட்சண்யம்... அவரைத் திகைக்க வைத்தது.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று அவர் அவனைக் கேட்டார்.
அவன் அவரைப் பார்த்தபடி நின்றிருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை.
“யார் நீ? உன் பேர் என்ன?” என்று கேட்டவர் உடனே தனக்குள் மண்ணாங்கட்டி என்பதுபோல் ஒரு பெயரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதற்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை. அவனிடம் அவரைச் சந்திக்கிற நெகிழ்ச்சி இல்லை.  பணிவு இல்லை. நெஞ்சு நிமிர்த்தி அவன் நின்றிருந்தான். இசையுலகின் சக்கரவர்த்தி அவர். அவர்முன் அப்படி யார் இதுவரை நின்றிருக்கிறார்கள். அதுவும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்...
சரிதான். இன்றைய காலையில் அவரது முதல் கோபம் அவனிடம் என்று நர்மதா தனக்குள் பதறினாள். எத்தனை கோபம் வரும் அவருக்கு. மனசின் சுருதி சிதறுண்ட போதெல்லாம் அவரால் சகித்துக் கொள்ள முடிவதே யில்லை.
என்ன தோன்றியதோ அவர் நர்மதா கொண்டுவந்த காலை உணவை அவனைநோக்கி நகர்த்தினார். “சாப்பிடு” என்றார் ரவிப்பிரகாஷ். அப்போதும் அவன் பேசவில்லை. அந்த உணவை மறுக்கவும் இல்லை. மெல்ல அவரைநோக்கி வந்தபோது அவன் உடம்பிலிருந்து ஈரம் சொட்டியது. தரையெங்கும் ஈரம். அழுக்கு. நர்மதா நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
சாப்பிடும்போது அவனிடம் அந்த அவசரம் இல்லை. பசி ருசியறியாது என்கிற ஆவேசம் இல்லை. அவன் ருசியறிந்தவனாய் இருந்தான். தட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் சப்பிட்டான்.
மொட்டைமாடியில் இருந்து சொட்டிக் கொண்டிந்தது மழைத் தண்ணீர். அதில் தட்டைக் கழுவி வைத்தான். அவரைப் பார்த்துச் சிரித்தான். பளீரென்று பற்கள் ஜொலித்தன அப்போது. அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை.
“நீ யாரப்பா?” என்று கேட்டார் ரவிப்பிரகாஷ்.
அவர் உதடுகள் அசைவதை அவன் பார்த்தான். காதைக் காட்டி தனக்குக் காது கேட்காது என்று சைகையில் தெரிவித்தான். தன் சங்கீதத்தை ரசித்தபடி அவன் நின்றிருந்ததாக அவர் நினைத்தது ஞாபகம் வந்தது. எத்தகைய இறுமாப்பு என்னுள்... தனக்குள் நகைத்துக் கொண்டார். பேசுவாயா?... என்று கேட்க நினைத்தவர் சட்டென்று புரிந்து கொண்டார். அவன் செவிட்டூமை.
பரந்த வாசல் வெளியாய் காம்பவுண்டுச் சுவரும்... உள்ளே சந்தடிகளை விலக்கிய அமைதியான வீடு அது. அமைதிக்கு ஏங்கியவர் அவர். சப்தம் வேண்டாம் என்பதல்ல. அவர் சப்த ஒழுங்குகளை விரும்புகிறவர். சப்தச் சிதறல் அல்ல, சப்த அடுக்குகள்... அவனுலகம் இன்னும் சிரேஷ்டம். சப்தங்களே இல்லாதிருந்தது. அமைதி என்றால் என்ன என்று அவனால் பேச முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்... என நினைத்துக் கொண்டார். கண்டவர் விண்டிலர்... என்கிறதாக நின்றிருந்தான் அவன். பெயரே இல்லாத மனிதன்.
வாசல் பராமரிக்கப் படாமல் கிடந்தது.  வீட்டு வேலைக்காரர்கள் கார் ஓடுகிற நடு சிமின்ட் வளாகம் வரை பெருக்கி சுத்தம் செய்கிறவர்களாய் இருந்தார்கள். தோட்டத்தை புல்தரையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவன் புற்களைக் காட்டினான். தன்னோடு கொண்டுவந்திருந்த மண்வெட்டியைக் காட்டினான்.
“சரி” என்றார் அவர். தலையாட்டினார் பிறகு.
அங்கேயே பின்புறத் தொழுவத்தில் அவன் தங்கிக் கொண்டான். உடை என்று மாற்றுடை கூட அவனிடம் இல்லை. எங்கிருந்து வந்திருக்கிறான், யாருக்குத் தெரியும்? மழைக்கு வானத்தில் இருந்து கீழிறங்கி வந்தானோ... கார் டிரைவரிடம் சொல்லி அவனுக்கு வீட்டின் பின்புறம் தோது பண்ணிக் கொடுத்தபோது அவருக்கே மன நிறைவாய் இருந்தது அவன் வந்தது. சில நாட்களில் சில பாடல்கள் கச்சேரியில் சோபித்து விடும். பாடி முடிக்கையில் கரகோஷம் பெரும் அலையென மேடைநோக்கித் தாவியேறி வந்து ஆளையே நனைத்து விடும். (அவருக்கோவெனில் ‘சாமஜ வரகமனா...’)
என்ன இது, எழுத்தறிவு கூட இல்லாத ஒருவனை நான் வியக்கிறேன். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்கிறார்கள். கல்லானைப் பார்த்து நான் வியக்கிறேன். அவனிடம் எப்படியோ என் ஆளுமைத்தினவு - ஈகோ - மண்டியிடுகிறது தன்னைப்போல. அவருக்கே அது புது அனுபவமாய் இருந்தது. அவனது வாழ்க்கை, அதன் எளிமை, சட்டையுரித்த நிலை, நேரடித்தன்மை... பூச்சும் சுகமும் பாவனையுமற்ற தன்மை அவருக்குத் திகைப்பாய் இருந்தது. அதற்கேற்பவே அவன் கணந்தோறும் ஆச்சர்யங்களை வைரப் பொறிகளாய்த் தூவி நிறைத்துக் கொண்டிருந்தான் அவருக்குள்.
வந்த சின்னாட்களிலேயே அவனது விரல்களால் தரையை வசியம் செய்திருந்தான் அவன். வையகம் அவன் வசப்பட்டது. அவனது வியர்வை சிந்தி நிலமென்னும் நல்லாள் நகைத்துப் பூரித்தது. புற்கள் அளவாகக் கத்தரிக்கப்பட்டு தோட்டம் குப்பையற்று ஒழுங்குசெய்யப் பட்டிருந்தது. வாசலை நோக்கி தோட்ட நடுவில் செல்லும் சிமெண்டுச் சிறுவழி. அதன் இரு மருங்கிலும் குற்றுமரப் புதர்களை முழங்கையில் உரசாத அளவில் சீராக வெட்டி யிருந்தான். அரளிச் செடிகளைச் சுற்றிப் பாத்தி யெடுத்து நீர் பாய்ச்சிய ஈரம். பால் குடித்த குழந்தை உதடுகளாய் அவருக்குத் தென்பட்டது. தோட்டம்... அவரது தோட்டம்... பார்க்கவே கர்வம் வந்தது. புல்தரையில் ஜமக்காளத்தை விரித்து அதிகாலை சாதகம் செய்யலாம் என்றிருந்தது. மனசில் ஒத்தடம் தந்தாற் போலிருந்தது தோட்டத்தைப் பார்க்க.
அவனும் தோட்டத்தில் தனக்கென ஓரிடம் வைத்துக் கொண்டிருந்தான்.
தோட்டத்து மூலையில் தானாகவே எழும்பி யிருந்தது மூங்கில் புதர் ஒன்று. பாம்பு அடையும், வெட்டி விடுங்கள், என நண்பர்கள் பார்க்கும் தோறும் எச்சரித்த இடம். அதன் அருகே போனாலே உள்ளே யிருந்து சரசரப்பு கேட்கும். ஓணானோ பல்லியோ கீரியோ... இல்லை பாம்பே தானோ.
புதரைச் சீரமைத்து ஆள் நுழைகிற அளவில் வழி யேற்படுத்திக் கொண்டு அதன் உள்ளே ஓய்வெடுத்தான் அவன். எத்தனை மழைக்கும் உள்ளே நனையாமல் கிடந்தது. வெளிச்சம் ஊடாடி ஒளியும் இருளமாய்க் கைகுலுக்கிக் கிடந்தது. அவர் வெளிச்சம். அவன்தான் இருளாம்... என நினைத்து அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அடாடா, இன்னும் அந்த அதிகார போதை அடங்கவில்லையே எனக்கு...
அந்த சாதனையங்கிகாரம், சால்வைகள், மாலைகள், மேடைகள், பட்டங்கள், பரிசுகள், பேர், புகழ்... இவை சித்திக்கா விட்டால் இவனை என்னால் புரிந்து கொண்டிருக்க முடியாது. நர்மதா... அவரது அன்பான மனைவி. அருமை மனைவி. அவளால் அவனது அருமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கள் மௌன நட்பின் வியூகத்தை கற்பனையே செய்ய முடியவில்லை...
நான் எண்களில் ஒன்று. முதல். அவனிடம் பூஜ்யத்தின் பிரம்மாண்டம் இருந்தது. அவன் வானத்தில் இருந்து, இயற்கையில் இருந்து சிதறிய ஒரு துளி. மழைத்துளி. நான்?... நான் ஒரு விருட்சத்தின் விதை.
நான் விதை. அவன் அதனுள் உறங்கும் உயிர்.
அன்றைக்குக் காலை கதவைத் திறந்து பார்க்கிறார். ஹாவென்று பிரமிப்பாய் இருந்தது. அந்தத் தங்கரளி உடம்பெங்கும் நகையாய் பூச்சுமந்து சிரிக்கிறது. எத்தனை பூக்கள்... பூக்களை முகர்ந்தால் தெரிகிறது அவன் வியர்வையின் மணம்.
மரத்துக்குள் உறங்கிக் கிடந்த ரகசியங்களை யெல்லாம் தோண்டி யெடுத்து உலகுக்கு, மாயாஜாலம் செய்தாற் போல, மந்திரக் கம்பளத்தை மூடி சட்டென்று விரித்துக் காண்பித்தாற் போல, சமர்ப்பித்திருந்தான் அவன். பெயரே இல்லாத மனிதன்.
மனிதன் என்பதே அவன் பெயர். எப்பெரும் பெயர் அது. மண்ணின் ரகசியங்கள் அறிந்தவன். தாவரத்தோடு சிநேகிதம் கொண்டாடுகிறவன். ஆ, தனக்கென ரகசியங்களே இல்லாதவன்! பூஜ்யன். பூஜ்யம் என்பதே வட்டம் அல்லவா? வட்டங்களோவெனில் ஆரம்பம் ஏது? முடிவேது?... எப்பெரும் நிலை அது...
நர்மதாவை மெல்ல உலுக்கி யெழுப்பி, காதில் கூப்பிட்டு அவர் தோட்ட வெளியைக் காட்டினார். தூக்கக் கலக்கத்தில் இருந்தாள் நர்மதா. வெளியே பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் முகம். அவர் இத்தனை சந்தோஷப்பட்டு அவள் பார்த்ததே யில்லை. அவளும் புன்னகைத்தாள் அவரைப் பார்த்து. “தோட்டக்காரனுக்குப் போடற சோறு வீண் போகல இல்லையா?” என்றாள் புன்னகையுடன்.
அவர் ஹோ ஹோவென்று சிரிக்கிறார்.
சாம்பவுண்டுச் சுவரோரம் புதிதாய்ச் சில பூச்செடிகள் வைத்திருந்தான் அவன். அதில் ஒரு ரோஜாப்பூ பூத்திருக்கிறது. அவர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தான் அவள் அந்த விஷயம் சொன்னாள். அவர் மார்பு மேல் சாய்ந்து கொண்டு காதோடு ரகசியம் போலச் சொன்னாள். “நாள் தள்ளிப் போயிருக்கு” என்றாள் அவள்.
அவருக்குப் புரியவில்லை.
“என்னது?”
“அட இதெல்லாம் திரும்பச் சொல்வாங்களா?” என்கிறாள் வெட்கம் தாளாமல்.
“ஓகோ...”
“என்ன ஓகோ.”
“ஏய், நீ அம்மா ஆகப் போறியா?”
“ஆமாம். நீங்க அப்பா ஆகப் போறீங்க.”
“அட ஆமாம்” என்றபடி அவளை அழுத்தி முத்தமிடுகிறார்.
வெளியே அந்தத் தங்கரளிச் செடியின் உச்சியில் புதிதாய் ஒரு பறவை... வெண்ணிறக் கொக்கு வந்தமர்ந்து சிறகை அலகால் கோதிக் கொண்டிருந்தது.
கருச் சுமத்தல் பெண்மையை எத்தனை வசிகரமாக்கி விடுகிறது... மனோகரமாக்கி விடுகிறது. அவள் உதடுகள் கனிந்து விட்டன. முகமெங்கும் உடலெங்கும் ஒரு பூசித் திரண்ட ஒளி. கண்களில் புதிய கனவுகள். கனவுகளைக் கண்வளர்தல் என்று தமிழில் எத்தனை அழகாய்ச் சொல்கிறார்கள்.
சக மனித ரகசியங்களை ஊடாடி உட்புகுந்து மண்புழுவென அவன் பண்படுத்தி விட்டாற் போலிருந்தது. பெயரே இல்லாத மனிதன். அவர் முந்நாட்களில் குழந்தை இல்லை என மனதில் ஏங்கித் தவித்து கோவில் என தீர்த்தங்களில் முங்கி யெழுந்தவர் தான். அப்போதெல்லாம் நிகழாத நிகழ்ச்சி. நெகிழ்ச்சி... தன்னைப்போல அவரவருள் கவிதைகளைக் கண்டுபிடிக்க வைப்பது  அவனால் சாத்தியப் பட்டிருக்கிறது. அதை அவன் அறிவானா? அதை அவனுக்கு அவரால் எடுத்துச் சொல்ல முடியுமா? எப்படி? எப்படி அதை அவனுக்குச் சொல்வது எனத் திகட்டலாய் திகைப்பாய் இருந்தது அவருக்கு. கன்றுக்குட்டி முட்டி முட்டிப் பால் குடிக்கையில் தாய்ப்பசு திகைக்குமே, அதைப் போன்றதொரு திகைப்பு...
எங்கிருந்தோ வந்தான்... என மனசில் தன்னைப் போல பாடல் உருள்கிறது.
என்னவோ ஆகிவிட்டது அவருக்கு என்று புரிந்து கொண்டாள் நர்மதா. அவரும் அவளுமான உடலிசைவில் ஓர் இணக்கம், அன்பின் நெருக்கத்தை அவள் உணர ஆரம்பித்திருந்தாள். புதுவெள்ளம் வந்தாற் போல உள்ளே இளமை வெளிச்சப் பாலைக் கரைத்திருந்தது. நுரையாய்ச் சிரிப்பாய் அவர் உடம்பில் லயம் கூடி யிருந்தது. அந்தப் பரிவானதோர் முதுகு வருடல். அதில் பௌருஷ ஆளுமை விலகி கனிந்த மரம் குனிந்த குளுமை வந்திருந்தது. ஒரு மூடிதிறந்த காற்றின் ஆசுவாசம். மொட்டு வெடித்து விரிய வாய் திறக்கிறது. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து வாயைத் திறந்து காட்டும் மீன். உள்வாயின் சிவப்பு அவருக்குத் தெரிகிறது. தயங்கித் தயங்கிப் பேசுவாள் அவருடன். இப்போது அவளே இயல்பாய் தான் அவரோடு பேசுவதை உணர்ந்தாள்  நர்மதா. மண்முகடுகளைப் புதுமழை நெகிழ்த்திய மாதிரி...
அவரை அவள் புரிந்துகொண்ட மாதிரி, அவர் அவளைப் புரிந்து கொண்டாரா தெரியவில்லை.
தன்னுள் விளைந்த மாற்றங்கள் அவளையே திணறடிக்கின்றன. தாய்மை பெண்மையின் பரிபூரணம் தான். உயிருக்குள் உயிர் என்பதே எத்தனை அற்புதமான விஷயம். தாவரங்களோவெனில் அதை இன்னும் இன்னுமாக அனுபவிக்கின்றன. தினம் ஒரு பூ பூத்தல்... எத்தனை மகத்துவமான விஷயம். ஜன்னல் வழியே பார்த்தால் அந்த ரோஜாச் செடியில் தினம் தினம் புதியதாய் ஒரு பூ தலைநீட்டித் தலையாட்டுகிறது. சிரித்துக் கிடந்தது வாசல். ஒரு வேடிக்கை போல அவள் இங்கிருந்தே வாசனையை உள்ளிழுத்து அது தனக்கு எட்டுகிறதா என்று பார்க்கிறாள். எட்டுகிறதா எட்டவில்லையா என்றே புரியாமல், உள்ளே நிறைகிறது மனசின் வாசனை.
அவளுள் பச்சைப்புல் வளர்ந்து வளர்ந்து இப்போது நெற்கதிராய்ப் பால் பிடித்து உட்திரண்டு குனிந்து அசைகிறது. அடிவயிற்றில் கைவைத்தால் உயிரின் அசைவு. அவருள் இசையின் அசைவு போல அவளுள் உயிரின் அசைவு. இசைவு...
அவன் அந்த வீட்டின் இயக்கங்களுக்கு சுவாதினப் பட்டிருந்தான்.  அந்த எல்லைக்குள் சகஜமாக வளையவரத் துவங்கி யிருந்தான். தான் பாட்டுக்கு இருந்தான். யாரும் அவனோடு பேசவில்லை. பழகவில்லை. எப்பவாவது அவர் அவன்எதிரே வந்தால் சிறு சிரிப்பு ஒன்றைச் சிரிப்பான்.
உட்பக்கம் வராண்டா தாண்டி வரவேற்பறை. அவரது பட்டங்களும் புத்தகங்களும் நிறைந்த அறை அது. என்ன நினைத்தானோ ஒருநாள் அவனுக்காய்த் தோன்றி அவன் வீட்டுக்குள் நுழைந்தான். இங்கிருந்தே தெரிகிறது அவர்களுக்கு. அழுக்குக் கால்கள். கழுவாத கைகள். அவளுக்கு அவர் கோபப்பட்டு விடுவாரோ என்று பதட்டமாய் இருந்தது.
அவரது பட்டங்கள் படங்கள் எதையும் அவன் பார்க்கவில்லை. உள்ளே நுழைந்ததுமே பெரிதாய்த் தெரியும் அந்த மிகைப் புகைப்படம் - ஜனாதிபதியிடம் அவர் பரிசு வாங்கும் படம்... எதையும் அவன் நின்று ஊன்றிக் கவனித்தானில்லை. அவன் உள்ளே நுழைகிறான். சரி, அவன் எதை கவனிக்கிறான் என்று பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டது.
மாடியில் இருந்து அவர் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் அவரைப் பார்த்துக் கொடிருந்தாள்.
இடப்பக்கம் அவரது தனியறை. அவரது தம்புராவும் மூதாதையர் படங்களும் குருவும் தியாகையரும்... அந்த அறைக்குள் அவளே நுழையத் தயங்குவாள். அவன்... குளிக்கிற நியதி நியமங் கூட இல்லாத அவன் எத்தனை சுதந்திர உணர்வுடன் அந்த அறைக்குள் நுழைகிறான்... அவளுக்குப் பதட்டமாய் இருந்தது.
அவன் அவரது தம்புராவை எடுத்தது தெரிகிறது. ஒரு துணிகொண்டு அவன் அதைத் துடைத்தபோது ரும்ம்ம்மென்று சருதி நாதம் அதிர்வாய் அந்த அறையெங்கும் நிறைகிறது. அந்த ஒலியை அவன் அறிய மாட்டான். அவர் உடம்பே அந்த ஒலியில் அதிர்கிறது அந்த சுருதி மீட்டலில். அந்த நெருக்கத்தில் அவள் உடம்புக்கு அது பரவுகிறது.
அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவன்பாட்டுக்குத் துடைத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போனான். ஆ, தியாகையர் படத்தைத் துடைக்க ஆரம்பித்தான் அவன். பெயரே இல்லாத மனிதன். வியர்வை மனிதன். அவர் பதறவேயில்லை என்பது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
அந்த பூஜாடியில் பூக்கள் அவனை ஏமாற்றி விட்டன. பிளாஸ்டிக் பூக்கள் அவை. அவன் போலிகளை அறியாதவன். பொய்களை அறியாதவன். அரிதாரம் அறியாதவன். அந்தப் பூக்களைப் பார்த்ததும் அவன் கண்கள் விளக்கேற்றிக் கொண்டிருக்கக் கூடும். முத்தமிடுகிறாற் போல, வாசனை பிடிக்கிறாற் போல அவன் அந்தப் பூக்களை நோக்கிக் குனிகிறான். அவருக்குச் சிரிப்பு. அவற்றில் வாசனை இல்லை என்று அவன் நம்பவில்லை. முதல் பார்வையிலேயே அந்த வாசனை அவனை எட்டாமல் போனதில் அவன் தன்னுள் ஆச்சர்யப்பட்டு, அனாலேயே அந்த அறைக்குள் நுழைந்தும் இருக்கலாம்.
அதற்கப்புறம் தான் அவன் ஆச்சர்யமானதோர் காரியம் செய்தான். அந்த செயற்கைப் பூக்களை எடுத்துவந்து வாசலில் குப்பைத் தொட்டியில் வீசினான். தோட்டத்தில் மலர்ந்திருந்த வண்ண வண்ணப் பூக்களைப் பறித்துக் கொண்டான். ஒருதரம் ஆழ்ந்து அவன் கூட்டு வாசனையை சுவாசித்தான். பின் எடுத்துவந்து அந்த பூஜாடியில் செருகினான்.

•••
storysankar@gmail.com
91 9789987842 / 91 9445016842 whatsapp   

Comments

Popular posts from this blog