உலகச் சிறுகதை / ஹங்கேரி
நன்றி ‘நால்வர்’ சிற்றிதழ்பொய்
இஸ்ட்வன் ஆர்கேனி / ஹங்கேரி

ந்தக் கதை உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடந்திறாத கதைகள், அவையும் நம் கவனத்துக்குரியவை.  ஏனெனில் அவை அந்தமாதிரி, நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் சொல்லப் படுகின்றன. ஒரு ஐந்து வருடம் முன்னால் யாராவது இந்தக் கதையைச் சொல்லியிருந்தால் இந்த மாதிரிதான் சொல்லி யிருப்பார்கள்.
காலில் செருப்பு இல்லாமல் கந்தலாடையுடன் வயசாளி ஒருவன் பலதன் ஊரில் இருந்து வரும் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். சிறிது போனதும் அவன் கையசைக்கிறான். அந்த வழியே ஒரு பெரிய சரக்கு வாகனம் வருகிறதைப் பார்த்துவிட்டு தான் கையசைக்கிறான் அவன். சரக்கு வாகனம் நிற்கிறது. வாகன ஓட்டி கதவைத் திறக்கிறான்.
“எதுக்குக் கைகாட்டினீங்க தோழர்?” அவன் கேட்கிறான்.
“எதுவரைக்கும் போறீங்க?” வயசாளி கேட்கிறான்.
“புதாபெஸ்ட் வரைக்கும்... தோழர்.”
“என்னியும் தயவுசெஞ்சி உங்ககூடச் சேர்த்துக்குவீங்களா?” என்று கேட்கிறான் வயசாளி.
“வண்டில இடம் இல்லையே, தோழர்...” என்கிறான் வாகன ஓட்டி. கதவை அடித்துச் சாத்திக் கொள்கிறான். வண்டியைக் கிளப்புகிறான்.
சூரியன் பிரகாசத்துக்கு வந்திருந்தது. ஏரித் தண்ணீரின் நீலம் மினுங்கிக் கொண்டிருக்கிறது. நாமும் நல்ல நல்ல கதைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். இதே கதை இப்போது திரும்ப வருகிறது, வேற மாதிரியாக.
உடம்பில் கந்தல் துணியும் செருப்பில்லாமலும் ஒரு வயசாளி பலதனில் இருந்து சாலையில் வந்து கொண்டிருக்கிறான். ஒரு பெரிய சரக்கு வாகனம் அந்த வழியே வருகிறது. வாகனம் அவனருகில் நிற்கிறது. வாகன ஓட்டி கதவைத் திறக்கிறான்.

“எங்க.. புதாபெஸ்ட் வரைக்குமா பெரியவரே?”
“ஆமா.”
“உள்ள வாங்க பெரியவரே. நாங்க உங்களைக் கொண்டு விட்டுர்றோம்...” வாகன ஓட்டி புன்னகைக்கிறான்.
ஊர்தியில் வயசாளி ஏறிக்கொள்கிறான். ஜன்னலில் தலையைச் சாய்க்கிறான். பிறகு கேட்கிறான்.
“வண்டில வானொலி இருக்கா?”
இரண்டுமே நல்ல கதைகள். ஆனால் ரெண்டு கதையுமே உண்மையில் நடக்காத கதை. உண்மை என்ன? ஒரு கிழவன். கந்தலாடைக்காரன். காலில் செருப்பு இல்லாதவன். தெருவில் நடந்து போகிறான். அப்போது அந்த வழியாக வரும் ஒரு பெரிய சரக்கு வாகனம். ஆனால் அதைப் பார்த்துக் கைகாட்ட அவனுக்குத் தோன்றவில்லை. அதேபோல அந்த வாகன ஓட்டி, அவனுக்கும் வாகனத்தை நிறுத்தத் தோன்றவில்லை.
இதுதான் உண்மைக்கதை. அதேசமயம், இது... அந்த மற்ற இரு கதைகள், அவை போல நல்ல கதையாக இல்லை.
ஆங்கிலத்தில் ஜுடித் சொல்லோசி
தமிழில் எஸ்.சங்கரநாராயணன்
mob 91 9789987842 / whatsapp 91 94450 16842Comments

Popular posts from this blog