உலகச் சிறுகதை
நன்றி - சங்கு சிற்றிதழ்


ஓர் இரவுநேர வருகை
*
ஷெய்கா ஹுசைன் ஹெலவி (அரபி)
தமிழில் எஸ்.சங்கரநாராயணன்

ல்லறையிலிருந்து எங்கள் வீட்டுக்கு வரும் பாதை ஒன்று. ஒவ்வொர் இரவிலும் அப்பா அந்தப் பாதையில் கல்லறையில் இருந்து வீட்டுக்கு வருவார். அவர் தோட்டத்தில் வரும்போதே எனக்கு அவர் வரும் காலடிச் சத்தம் கேட்கும். நான் தூங்குவது போல பாசாங்கு செய்தபடி இருப்பேன். அப்பா உள்ளே வந்து அவரது கழியைத் தேடுவார். எனது அலமாரியில் தான் அதை அவர் பொதுவாக மறைத்து வைத்திருப்பார். அவர் வருவார் என்றுதான் நான் அறைக்கதவைத் திறந்து போட்டிருந்தேன். அவர் வரும்போதான இப்படியான விளையாட்டு எனக்கு வேடிக்கை. அவர் தன் கண்களைக் கல்லறையிலேயே விட்டுவிட்டு வந்தார். ஒவ்வொரு முறை அவர் வருகிறபோதும் நான் அவரது கழியை வேறு வேறு இடங்களில் ஒளித்து வைத்தேன்.
அரைக்கண்ணால் அவரை வேடிக்கை பார்த்தேன் நான். கழியைத் தேடித் தேடி அவர் சோர்வடைந்தார். அப்படியே தரையில் பரிதாபமாக, அலுத்துச் சுருண்டு படுத்துவிட்டார். படுக்கையில் இருந்து எழுந்துகொண்டு அவர் கைகளை நான் பற்றிக் கொண்டேன். வீட்டில் மற்றவர்கள் விழித்துக் கொள்ளுமுன் அவரோடு வெளியே இறங்கி கல்லறைப் படல் வரை கூடப் போனேன். குழப்பமில்லாமல் அவர் படலைத் தாண்டி உள்ளே போனார். வழி தடுமாறுகிறாரா என்று இங்கிருந்தே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கல்லறைகளுக்குள் அவர் உருவம் மறைந்து காணாமல் போயிற்று.
ஆனால் அந்தக் கழியை ஆற்றில் தூக்கிப் போட்டு விடலாம் என்றோ, தோட்டச் சுவரில் மோதி உடைத்தெறிந்து விடலாம் என்றோ எனக்கு யோசனையே எழவில்லை. அதற்கு மாறாக, அப்பா இரவுகளில் இங்கே வர ஆரம்பித்தது முதல் அந்தக் கழி மீது எனது அக்கறை அதிகமாகத்தான் ஆயிற்று. அவரது ஒவ்வொரு வருகைக்குப் பின்னும் அந்தக் கழியால் அவர் என்னிடம் ஏற்படுத்திய காயத் தழும்புகளை ஆற்றிக்கொண்டேன். எனது வலது தோளில் ஒரு காயம் இருந்தது. இடது காலில் ஒன்று. இங்கே அங்கே என்று உடலின் பல பகுதிகளில் சில கீறல்கள். சில வெளியே. சில தோலுக்கு உள்ளேயான ஊமைக்காயங்கள்.
இந்தக் காயங்களின் பட்டியலில், அந்தக் கடைசிக் காயம்... அது தவிர மற்ற எல்லா காயங்களும் ஆறி பொறுக்குதிர்ந்து விட்டன. அந்தக் கடைசிக் காயம் தோலின் மேலே தெரிகிறதா அல்லது உள்ளூறப் பட்டிருக்கிறதா, தெரியவில்லை. அந்த அவரது கடைசி வருகை... அத்தோடு எல்லாக் கதையும் முடிந்துவிடும். அத்துடன் எல்லா தழும்புகளையும் நான் ஒழித்துக் கட்டிவிடுவேன். இந்த வாட்டி அவரை அப்படியே அறை மூலையில் பரிதாபகரமாக சுருண்டு படுத்துக் கிடக்க அதிக நேரம் விட்டு தண்ணி காட்டிருவேன். பொழுது விடியும் வரை நான் அவரை வெளியே விடப் போவது இல்லை. அல்லது அவர் திமிர் அடங்கட்டும்... விடியறதுக்குள்ள என்னை என் கல்லறைக்கு அழைச்சிட்டுப் போய் விட்ரு... என்று அவர் கெஞ்சட்டும்.
ஆனால் ஒரு மூணு மாசமாக அப்பா வரவே இல்லை... ஏன் வரவில்லை, என்று எனக்குக் கவலையாய் இருந்தது. இந்த விளையாட்டை அவர் புரிந்துகொண்டு விட்டாரா? அல்லது அவரது கழி... அது கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் இழந்து விட்டாரா?
அந்த நாலாவது இரவில் நான் அவர் எப்படியும் தேடிவந்துவிடுவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒருவேளை அவர் வழிதவறி வேறெங்கோ போயிருக்கலாம். அல்லது தன் கல்லறையில் நெடுந்துயில் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் வந்தால் இதுவே அவரது கடைசி வருகையாக இருக்கும். அடுத்து நான் அந்தக் கழியை அவரது கல்லறை மேலேயே கொண்டு வைத்து விடுகிறேன். அதற்கு அப்புறம் அவர் சடலமாகவோ பார்வையற்றோ நடந்து திரிய சிரமப்பட வேண்டியிராது.
அதிகாலை இரண்டு மணிக்கு நான் வீட்டைவிட்டு சந்தடியில்லாமல் வெளியேறினேன். அம்மாவை எழுப்பி விட்டுவிடக் கூடாது நான். அம்மாவின் படுக்கையறைக் கதவு எப்போதுமே திறந்தே கிடக்கும். பிறகு வரவேற்பறை, தோட்டம்... கடந்து கல்லறை நோக்கிப் போனேன். அப்பாவை கட்டக் கடேசியாக ஒருமுறை வீட்டுக்கு வரும்படி எப்படி வேண்டிக் கொள்வது... மனசில் அதுபற்றி பெரிய யோசனை, திட்டம் எல்லாம் இல்லாமல் நான் பாட்டுக்கு நடந்து போனேன். ஒரு இறந்த மனிதர்... வெளியே சிறு உலா வருவதையும், குளிர்ந்த புத்துணர்ச்சி தருகிற காற்றோட்டத்தை சுவாசிப்பதையும் விரும்பவே செய்வார் அவர். அதற்காக தனியே அவரை யாரும் அழைக்க அவர் எதிர்பார்க்கவும் மாட்டார்.
கல்லறைப் படல் வாசலில் இருந்தே தூரத்தில் இரண்டு நிழல்களை என்னால் அடையாளங் காண முடிந்தது. அந்த இருட்டில் அவர்களின் உருவ அமைப்புகள் புலப்படவில்லை. மெல்ல அவர்களை நோக்கி நெருங்கினேன். ஒரு பெரிய விருட்சத்தின் பின்னாலிருந்து அவர்களை நோட்டமிட்டேன். அது என் அம்மா. கையில் கழியுடன் அப்பா பக்கமாகக் குனிந்த வாக்கில்... அவளது அடிகளுக்குத் தப்பிக்கும் விதமாக இப்படி அப்படி அசையும் அப்பா. ஆனால் இருந்த இடத்தில் இருந்து அவர் நகரவும் இல்லை. சப்தம் எழுப்பவும் இல்லை.
அம்மாவின் குரல் இங்கேயே கேட்டது. “அட கேடு கெட்டவனே, அவனைத் தலையில் அடிக்காதே அடிக்காதேன்னு சொன்னேனா இல்லியா உன்னிடம்? அவனைத் தலைல அடிச்சே நீ கொன்னுருவே பொலுக்கே...”
என் தலையைத் தடவிப் பார்த்தேன். இரத்தம் உறைந்த ஓர் ஆழமான காயத்தைக் கை நிரடியது.
சில நிமிடங்கள் கழித்து அந்த இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். அலுத்த கனமான தப்படிகள்.
கல்லறைத் தோட்ட வாசல் வழியாக உள்ளே நுழைந்து கல்லறைகளின் இருளுக்குள் மறைந்து போனேன்.
---
A NIGHT VISIT -
SHEIKHA HUSSEIN HELAWY
 
- FROM:ARABIC
trs. in English - Jonathan Wright

ஹைஃபா நகரத்தில் 1968ல் பிறந்தவர் ஷெய்கா ஹுசைன் ஹெலவி. மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு கவிதைத் தொகுதியும் வெளியிட்டுள்ளார். டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில் அரபி மற்றும் ஹிப்ரு இலக்கியம் எம்.ஏ. பயின்றவர். ஆசிரியப் பயிற்சி வகுப்புகள் சார்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

*
storysankar@gmail.com
91 9789987842


Comments

Popular posts from this blog