
2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 6 ப ள்ளிக்கூடச்சீருடை கூடக் கழற்றாமல் ஓடிவந்து அப்பாமேல் உட்கார்ந்திருந்தாள். ரெட்டைப் பின்னலை மீறி சிறு மயிர்கள் வெளிச் சிதறியிருந்தன. பின் வெளிச்சத்தில் கம்பிகளாய்த் தெரிகின்றன. உற்சாகப் பந்தாய் இருந்தாள். வந்து விழுந்தால் அடங்காமல் திரும்பத் திரும்ப கொந்தளிக்கும் பந்து. வாழ்க்கையை ஆனந்தக் கிறுகிறுப்புடன் உணரும் பருவம் குழந்தைப் பருவம். உலகில் எல்லாமே ஆச்சர்யம் அவற்றுக்கு. எல்லாமே சந்தோஷம். நேத்துப் பாத்தேனே அப்பா. அந்த மரத்துல பூவே இல்லப்பா. இன்னிக்கு மாத்திரம் எங்கேர்ந்து வந்தது. அந்தா இருக்கு பாருட்டி குட்டி... அந்தப் பறவை... அது கொண்டு வந்து குடுத்தது எல்லாப் பூவையும்! இளவயதில் துயரங்கள் துன்பங்கள் இன்றி வாழ்க்கை அமைவது, வாழ்க்கை இன்பமயமானது என்கிற நம்பிக்கையை ஊட்ட வல்லதாய் இருக்கிறது. சிவாஜி பார்த்த காட்சிகள் வேறானவை... பிறந்தபோதே உயிர்ப் பிண்டமாய் வெளியே வந்த தக்கணமே அவன் தன் அம்மாவின் சாவுக்காக அழ நேர்ந்தது! அழுகை கூட அல்ல. அது கூக்குரல். ஒப்பாரி! விஷம் கொடிது. சாவு கொடிது என்பர் ...