நன்றி அக்டோபர் 2021 ஆவநாழி இணைய இருமாதஇதழ் 

கற்றல் கற்பித்தல்

எஸ்.சங்கரநாராயணன்

 காலை விடியல்ரேகையோடு வந்து சேர்ந்துவிட்டான் மணிகண்டன். வாசலில் இருந்தே “குஞ்சுக் குட்டி?” என்று குரல் கொடுத்தான். குழந்தையைத் தேடித்தான் இவ்வளவு ஓடி வந்திருக்கிறான், என்று புன்னகைத்தபடியே சித்ரா வந்து கதவைத் திறந்தாள். “தூங்குது…” என்றாள் அவன் முகத்தைப் பார்த்து. உள்ளே வந்து பையை வைத்தவன் படுக்கையறைக்குப் போனான். பரபரவென்று மின்விசிறி ஓடும் சத்தம். காலண்டர் ஒன்று குளத்துக்கு வந்த புதுத்தண்ணி போல சளப் சளப்பென்று விம்மி வீங்கி எகிறிக் கொண்டிருந்தது. நாலு பக்கமும் தலையணை அணை கட்டி நடுவே குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஷ், என்று உதட்டில் விரல் வைத்து சித்ரா எச்சரிக்கிறாள்.  “எச்சரிக்கை. ஆட்கள் வேலை செய்கிறார்கள்” என்று சாலைகளில் பலகை பார்த்திருக்கிறான். இது, தூங்குவதற்கு இத்தனை பாதுகாப்பா? அவளைக் கேட்க முடியாது. “ராத்திரி பூரா ஒரே கொட்டம். என் தூக்கம் போச்சு. இனி எழுந்துட்டா இருக்கு அடுத்த குருஷேத்திரம்” என்றாள் சித்ரா.

இரண்டு அல்லது மூன்று வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வர முடிகிறது. அலுவலகத்தில் பதவி உயர்வு என்று தந்து ஆனால் ஊர் மாற்றி அனுப்பி விட்டார்கள். “குழந்தை வந்த நேரம் சாருக்கு பிரமோஷன்…” என்று சிரித்தாள் சித்ரா. “நீ வேற. உன்னையும் குழந்தையையும் விட்டுத் தூக்கி யடிச்சிருக்காங்க” என்று பல்லைக் கடித்தான் அவன். “சாருக்கு பிஸ்கெட்டு முழுசாவும் வேணும். அதைக் கடிச்சிச் சாப்பிடவும் வேணும்னா எப்பிடி?” என்று அவள் சிரிக்கிறாள். “பொம்பளைகளுக்கு ஆம்பளையாள் அவஸ்தைன்னா சிரிப்புதான்…” என்று ஆதங்கப் பட்டான் மணிகண்டன். “அப்பிடியா?” என்று அதற்கும் சிரிக்கிறாள். “இருடி. இப்ப உன்னை உங்கம்மா, குழந்தையை விட்டுட்டுப் போ. நான் குழந்தையைப் பாத்துக்கறேன்…னு சொன்னா உனக்கு எப்பிடி இருக்கும்?” என்று கேட்கையிலேயே அவள் முகம் இருள்வதை ரசிக்கிறான். “அப்படித்தான் இருக்கும் எல்லாருக்கும்…” என அவள் நெற்றியில் முத்தம் இட்டான் மணிகண்டன்.

குழந்தைக்கு ஒலிகளை எழுத்துகளாக, வார்த்தைகளாக அறிமுகப் படுத்தி வைக்க அவள் முயற்சி செய்தாள். அவள் ஒவ்வொரு வார்த்தையாய் நிதானமாய் உதட்டைக் குவித்து ஒலி உருவாகிற விதத்தை அதற்குச் சொல்லிக் கொடுத்தாள். எல்லாம் பார்த்துக் கொண்டே யிருந்தது ரம்யா. சிரிக்கிறது. அது சிரித்தால் உதடு கன்னம் எல்லாம் பூரிப்பு ஓடி கண்கள் மலர்ந்து விரிந்தன. கை கால்களை ஒரு ஆவேசத்துடன் ஆட்டி பரவசப் பட்டது குழந்தை. ஆனால் பேசவில்லை. வாயில் அர்த்தமில்லாத ஒலிகள் மாத்திரம் எழுப்பிக் கொண்டிருந்தது. தன் வாயினால் சத்தம் எழுப்ப முடிகிறது என்பதை அது யூகித்து விட்டது. அதில் உணர்ச்சி தேக்க முடியும் என்பதையும் அது அறிந்திருக்கலாம். தினம் தினம் தானே புதுப் புது விஷயங்களை கிரகித்துக் கொள்ள அது இயல்பாகவே ஊக்கப் பட்டது. கிர்ர்ர், டுர்ர்... என்று சத்தம். உதடு அசைத்து ஒலிகளை வார்த்தைகளாக எழுப்ப வேண்டும் என்று அதற்கு இன்னும் புரிபடவில்லை.

பேச்சைப் போலவே மற்ற மாற்றங்களும் அதனில் நிகழ வேண்டும். இந்நாட்களில் தானாகவே அசைந்து உருண்டு அது குப்புறப் படுத்துக் கொண்டது. முதலில் அப்படி குப்புற விழுந்ததும் வயிறு அமுங்கி வயிற்றுப் போக்காகி விட்டது. உடனே பெற்றவளுக்கு அழுகை. “அடியே, இப்பதானே குப்புறிச்சிருக்கு. வயித்துக்கு பலம் வேணும். இரண்டு நாள்ல சரியாயிரும்” என்றாள் அம்மா ஊரில் இருந்து. “முதல் குழந்தை என்பதால் எல்லாத்துக்கும் பயந்துக்கறே நீ” என்றாள். அம்மாவிடம் யோசனை கேட்டால் அவள் கிண்டல் பண்ணுவதாகவே முடிகிறது எல்லாம்.

குப்புற விழுந்தது பழகியதும் தானாகவே தரையில் நீந்த ஆரம்பித்திருந்தது. வயிற்றை எக்கி எக்கி நீந்தும் போது திரும்பத் திரும்ப வயிறு அமுங்கி மறுபடியும் வயிற்றுப் போக்கு. இம்முறை அவள் கலவரப் படவில்லை. அம்மாவிடமும் கேட்கவில்லை. கொஞ்ச காலம், ஒரு நாலைந்து மாதம் வரை அவள் அம்மாவுடன் தான் இருந்தாள். இவருக்குதான் இங்கே தனியே ஓடவில்லை. “பேசாம இங்க வந்துரு. நாம குழந்தையைப் பார்த்துக்கலாம் இவளே” என இவர்தான் யோசனை சொன்னது. குழந்தையைக் கூடஅழைத்துக் கொள்ளவா, என்னை அழைத்துக் கொள்ளவா, என்று நினைக்கச் சிரிப்பு வந்தது அவளுக்கு. “அடி இல்லடி. குழந்தை வளர்றதை நாம ரெண்டு பேருமா பார்த்து ரசிக்க வேண்டாமா?” என்றான் அவன். அவள் அவனைப் பார்த்தாள். “அப்படியே குழந்தையை ரசிக்கிற உன்னையும்…” என்று மோப்பம் பிடிக்கிற மாதிரி கிட்ட வந்தாகிறது.

“தனியா எப்படி சமாளிச்சிப்பேடி?” என்று அம்மா கவலைப் பட்டாள். “கூட இவர் இருக்கார்ம்மா. தினசரி குழந்தை துணியை ஈரமாக்கி துவைக்க விழுந்துக்கிட்டே இருக்கும். டெட்டால் போட்டு வாஷ் பண்ணணும். ராத்திரி அது தூங்கல்லேன்னா நீங்கதான் வேடிக்கை காட்டி சமாதானப் படுத்தணும். ராத்திரி தூங்க லேட் ஆனால் காலைல நீங்க காபி போட என்னை எழுப்பக் கூடாது…ன்னு எல்லா கண்டிஷனும் போட்டுக்கிட்டுதான் நான் கிளம்பறேம்மா” என்று புன்னகை செய்தாள் சித்ரா.

மணிகண்டன் நல்ல பையன்தான். பிரசவம் என்று அழைத்துக்கொண்டு வருமுன்னால், சீமந்தம் கழியும் வரை அம்மா கூடவந்து இருந்தாள். மாப்பிள்ளை எல்லா உதவியும் செய்தான். அவளது துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு எடுத்து மாடியில் கொண்டு காயப்போட்டான். சமையல் அறையில் தோசை வார்த்தான். குக்கர் வைத்தான். அவன் குளித்துவிட்டு மனைவிக்கு கீசரில் வெந்நீருக்கு ஆன் செய்துவிட்டு வந்தான்… அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனியே எப்படி கழித்தான் தெரியவில்லை.

ஒருநாள் உருண்டு உருண்டு போய் மூலையில் கிடந்தது குழந்தை. தரையை படு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டி யிருந்தது. வெறும் தரையின் ட்டைல்ஸ் ஜில்லிப்புக்கு ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க வேண்டுமே என்று கவலையாய் இருந்தது. உருளத் தெரிந்ததுமே அது படுக்கை விரிப்பை விட்டு வெளியே நகர்ந்து வந்து விடுகிறது. உருண்ட பின்தான் குப்புற விழத் தெரிந்தது அதற்கு. உருண்டு சுவர் வரை போய் முட்டிக் கொண்டதில் எப்படியோ திரும்ப முயற்சித்து குப்புற விழுந்திருக்க வேண்டும். அன்றைக்கான புதுப் பாடம் இது.

இதையெல்லாம் கிட்ட இருந்து, அதன் குறும்பையெல்லாம், ஆட்டத்தை யெல்லாம் பார்க்க ஆசைப்பட்டுதான் சித்ராவைக் கூட்டி வந்தான் மணிகண்டன். அடுத்த ரெண்டே வாரத்தில் வேலைமாற்றம், ஊர்மாற்றம் என்று வந்து தொலைத்தது. அவளைத் திரும்ப மாமியாருடன் அனுப்பவும் மனசில்லை. தவிரவும் சித்ராவுக்கும் திரும்பி அங்கே உதவி என்று போக விருப்பம் இல்லை. நம்ம விஷயம், நம்ம பாத்துக்கலாம், என்று இருந்தது. அம்மாவால் முடிந்த உதவியை அவள் செய்து விட்டாள். அது போதும்.

அண்ணன் வீட்டில் அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள். அங்கே இவள் போய் ஒண்டிக் கொண்டாற் போல இருந்தது அவளுக்கு. அண்ணி படுத்துகிற அலட்டலில் அம்மாவே அங்கே ஒண்டிக் கொண்டுதான் இருந்தாள். அண்ணி வாய்நிறைய வா என்று கூப்பிட மாட்டாள். வராதே, என்றும் விரட்ட மாட்டாள். ஆனால் அம்மா அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள். பிள்ளையை விட்டுத்தர மாட்டாள். அம்மா அந்தக் காலத்து மனுஷி. என்ன இருந்தாலும் ஆண்பிள்ளை போல வருமா, என்கிற யோசனை உள்ளவள். அப்பா போனபின் அவள் பையனை அதிகமாக மதிப்பதாக அவளுக்குப் பட்டது.

பக்கத்து அடுக்ககத்து மங்களம் மாமி அவ்வப்போது வந்து உதவிகள் செய்கிறாள். “ஒரு அஞ்சு நிமிஷம் குழந்தையைப் பாத்துக்கங்க மாமி. தூங்கறது. குளிச்சிட்டு ஓடி வந்திர்றேன். இன்னிக்கு வெள்ளிக் கிழமை… சுவாமி விளக்கேத்துவேன்” என்பாள். கைக்குழந்தையாய் இருந்த புதிதில் சிலநாள் அந்த மாமி குழந்தையை வாங்கிக் குளிப்பாட்டித் தந்திருக்கிறாள். கை பொறுக்கிற சூட்டில் எண்ணெய் தேய்த்து, இதமான வெந்நீர்க் குளியல். தலைக்கு சாம்பிராணி போட்டால் அப்படியொரு தூக்கம் சொக்கும் குழந்தைக்கு. தலையை மெல்ல வருடிக் கொடுத்தால் சொர்க்க மயக்கம்தான். சாப்பிட தூங்க, என்று வளரும் குழந்தை. பிறகு கண்ணோட்டம் நின்று பார்வை நிலைக்க ஆரம்பித்தபின் சிரிக்க ஆரம்பித்து… அதன்பின் ஒரே வேகம்தான் அதன் வாழ்க்கையில். “அது உடல் அதிரச் சிரிக்கச் சிரிக்க குடல் விரிந்து கொடுத்து, ஜீரண சக்தி அதிகமாகும். நிறைய நிறையச் சாப்பிடும். அதற்கேற்ற தேக வளர்ச்சி வரும்…” என்று மாமிதான் சொல்லித் தந்தாள். அதற்காகவே குழந்தைக்கு அடிக்கடி சிரிப்பு மூட்டி விளையாட்டுக் காட்டினாள் சித்ரா.

குப்புற விழுந்த பின் அப்படியே நீந்துதல். அதற்குப் பிறகு முட்டிகளால் எம்பி நாலு காலில் நிற்றல் என ஒரு நிலை. நீச்சல் பயணம் தாண்டி இப்போது தவழ்தல் ஆரம்பித்தது. அதற்கு முட்டி வலிக்குமே என்றிருந்தது. அதுவும் பழகியபின் ரம்யா டங்கு டங்கென்று முட்டியைத் தரையில் அதிர அதிர மோதிக்கொண்டு விறுவிறுவென்று தவழ ஆரம்பித்தது. இதன் நடுவே அதற்கு எப்போதோ அதன் பெயர் ரம்யா என்று தெரிந்து கொண்டது. எங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் அவள் எட்டிப் பார்த்து “ரம்யாக்குட்டி?” என்று கூப்பிட்டால் உடனே திரும்பிச் சிரித்தது. “அச்சோ… ரம்யாக்குட்டி நீதானா? நம்ம வீட்டு சமத்துக் குடம் நீதானா?” என்று சித்ரா ஒடிவந்து தூக்கி முத்தம் கொடுத்தாள்.

சில இரவுகளில், மதியங்களில் அவள் தூங்கி விட்டாலும், பக்கத்தில் படுத்தபடி கிர்ர் கிர்ர் என்று காலை உதைத்துக்கொண்டு சப்தம் எழுப்பிக் கொண்டிருக்கும், லாரி ஓட்டுகிற பாவனையில். அவளுக்கு முழிப்பு வந்தால் அல்லது அவளது புடவையைப் பிடித்து அது இழுத்து அவள் பார்த்தால், முகம் பார்த்துச் சிரிக்கும். ஒரு அழுகை இல்லை. வாயில் விரல் சப்பல் இல்லவே இல்லை. கொழுக் மொழுக் என்று இருந்தது குழந்தை. “ஏய் பப்ளிமாஸ், என்ன தூக்கம் வரலியா?” என்று அதன் தொப்பையை அமுக்கினாள் சித்ரா. கெக் கெக் எனச் சிரித்தது குழந்தை. வயிறு குழைந்து கிடந்தது. இந்நாட்களில் பால்குடி தாண்டி செரிலாக் ஆரம்பித்திருந்தாள். அவளிடம் பால் சுரப்பும் தன்னைப்போல வற்றி விட்டிருந்தது.

எழுந்து போனவளைப் பார்த்துக் கொண்டிருந்தது ரம்யா. அவள் சமையல் அறைக்குப் போய் செரிலாக் கரைக்குமுன் முட்டிகளால் தவழ்ந்து கிடுகிடுவென்று சமையல் அறைக்கு வந்து அவள் காலைத் தழுவி “ஊங்…” என்கிறாற் போல சப்தம் எழுப்பி அவள் பார்ப்பதைப் பார்த்துவிட்டு சிரித்தது. “வந்துட்டேண்டி கண்மணி… உனக்குதான் கரைக்கறேன்…” என்றபடி அவள் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டாள். இனி அதை வாசல் பக்கம் போய்க் காக்கை கோழி நாய் என்று வேடிக்கை காட்டி ஊட்ட வேண்டி யிருக்கும்.

சில உற்சாக நேரங்களில் அவள் வாயைக் குவித்து ஒலி உருவாகும் விதத்தை விளக்க முற்பட்டாள். அதற்குப் புரிந்ததா தெரியவில்லை. அவளையே பார்த்தது. பின் மூக்கைத் தேய்த்துக் கொண்டபடி சிரித்தது. அதற்கு அவள்மாதிரி ஒலி எழுப்பத் தெரியாதபோது முதல் கட்டமாய் அவள் குழந்தை என்னென்ன ஒலிகளை எழுப்புகிறதோ அவற்றையே அவளும் சொல்லிக் காட்டினாள். ரம்யாவுக்கு தான் ரொம்ப அம்மாவுடன் பேசிக் கொண்டிருகிற பாவனை வந்தது. உதடுகளை ஒன்றாய் அழுத்தி ஒரு ம் சொல்லி, பிறகு வாயை விரித்தாள் சித்ரா. ம்ம்… மா. குழந்தை ஒருவிநாடி பார்த்தது. பிறகு திரும்ப உற்சாகமாய்ச் சிரித்தது. அதற்கு அம்மா என்ற வார்த்தை தெரியும். ம்ம்…என்று தனியே இப்போது சொன்னாள். பிறகு ம்ம்…மா… என பிரித்து வாயை விரித்துச் சொல்லிக் காட்டினாள்.

மணிகண்டன் அலுவலகத்தில் வேலை மும்முரத்தில் இருந்தான். வேலை மாற்றல் ஆகிப்போய் ஒன்றிரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. எப்பவுமே குழந்தையைப் பிரிந்து வருவது அவனுக்கு ரொம்பச் சங்கடமாய் இருந்தது. அடிக்கடி அவனது வாட்சப் எண்ணுக்கு அவள் ரம்யாவின் படங்களை அனுப்பிய படியே இருந்தாள். முதன் முதலில் குழந்தை குப்புறப் படுத்து நெஞ்சு நிமிர்த்தி அம்மாவைப் பார்த்து கைகளே சிறகுகள் போல உயர்த்தி விரித்துப் பறக்கிற பாவனை கொண்டாடுகிற படம். அடுத்து முட்டியில் தவழ்கிற படம். திடீரென்று பரபரப்பான வேலை மத்தியில் சித்ராவிடமிருந்து அலைபேசி அழைப்பு. எடுத்தால் சித்ராவுக்கு ஒரே பரபரப்பு. “என்ன விஷயம் சித்ரா?” என்று கேட்டான். “இப்பதாங்க… ரம்யாக்குட்டி… என்னை அம்மான்னு கூப்பிட்டது…” என்றாள் முகமெல்லாம் பல்லாக. “அப்பிடியா? அப்பிடியா?” என்றான் அவன் தலை கிறுகிறுக்க. “ஆமாம். இங்க பாருங்க…” என வீடியோ காலில் குழந்தையைக் காட்டினாள். “குட்டி…. அ ம் மா… சொல்லு?” என்றாள் கண்விரிந்த சிரிப்புடன். அ… தனியே வரவில்லை. அ… என்றால் வாய் திறத்தல், அவ்வளவுதான். “ம்ம்…” என இழுத்தபடி வாய் திறந்தது குழந்தை. ம் ஒலியின் நீட்சியாக ஒலி சேரும்போது, மா வந்துவிட்டது.

“உங்க அம்மா கிட்ட காட்டினியா?”

“இல்ல. இனிதான். இப்பதான் அதுக்கு அம்மான்ற வார்த்தை வந்திருக்கு. முதல்ல உங்களுக்குதான்…” என்றது பிடித்திருந்தது. “அடுத்து அம்மாகூடப் பேசணும்” என்றாள் சித்ரா. பிறகு “சாப்பிட்டாச்சா?” என்று  விசாரித்தாள். “இல்ல. கூட ரமணி வருவான். அவனுக்கு இன்னும் கைவேலை முடியல்ல…” என்றபடி குரலைத் தாழ்த்தி “ஒரு முத்தங் குடுடி…” என்றான். “இவளுக்கு நீங்க குடுங்க…” என்று அலைபேசியில் குழந்தையைக் காட்டினாள். அப்படியே முத்தம் கொடுத்துவிட்டு, “அப்றம் பாக்கலாம்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

ஒரு பெண் முத்தத்தை விட்டுக் கொடுக்கிறாள் என்றால் அது அவளது குழந்தைக்காகத்தான் இருக்கும், என நினைத்துப் புன்னகை செய்துகொண்டான். குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் விளையாட்டுக்கள் தெரிந்தன. கண்ணைத் திறந்திருக்கும் தோறும் அது எதையாவது கற்றுக் கொள்ள ஆவேசப் பட்டது. அதன் துறுதுறுப்பும் பரபரப்பான ஓட்டமும் அவளுக்குத் திகைப்பாய் இருந்தது.

தனியே ஒரு மேன்ஷனில் தங்கி யிருந்தான் மணிகண்டன். இன்னும் ஒரு வருட அளவில் திரும்ப சொந்த ஊருக்கே மாற்றல் கேட்டிருந்தான். அது பலிதமாகா விட்டால், பெண்டாட்டி பிள்ளையை இங்கே கூட்டி வந்துவிட வேண்டியதுதான். இராத்திரி எட்டரை ஒன்பது வாக்கில் ரம்யா முழித்துக் கொண்டிருந்தால் வீடியோ காலில் பேசுவான். அதற்கு அப்பா முகம் மறந்து போகாமல் இருக்க வேண்டும், அதற்காக.

இரண்டு மூன்று வாரம் ஒருதரம் ஊருக்குப் போனால் முதல் கொஞ்ச நேரம், ஒரு ஒருமணி நேரம் வரை, ரம்யா கிட்ட வராது. “அப்பா…டி” என்று அவள் குழந்தையை நீட்டினால் முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிக் கொள்ளும். அப்போதெல்லாம் அவனுக்கு தனக்கு மாற்றல் அளித்த மேனேஜர் மீது ஆத்திரம் பொங்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் எதும் பொம்மை புதிதாய் அவன் வாங்கி வருவான். டிங் டாங் என ஒலியெழுப்பியபடி தள்ளாடி குழந்தையை நோக்கி வரும் பொம்மை. பஞ்சில் கரடி பொம்மை. பிளாஸ்டிக் ரயில்… அதைப் பார்த்து மெல்ல குழந்தை கிட்ட வரும். பிறகு குழந்தை அவனுடன் சகஜப்படும்.

முட்டிபோட்டு தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை எப்படி சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றது தெரியவில்லை. காலில் பலம் இல்லாமல் நிற்கத் தெரியாமல் அதன் முட்டி துவண்டது. கிடுகிடுவென்று அதன் உடம்பு நடுங்கியது. சுவரைப் பற்றிக் கொண்டிருந்த கையினால் தான் தன்னால் நிற்க முடிகிறது… என்பது மாத்திரம் தெரிந்தது அதற்கு. கையை விட்ட ஜோரில் சப்பென உட்கார்ந்தது அது. அதுவரை உட்கார அறியாத குழந்தை. ஒன்றிரண்டு நாளில் அது தன்னைப் போல எழுந்து கொண்டு உருண்டு கையால் அழுத்தங் கொடுத்து எழுந்து உட்கார்ந்து கொண்டது. அந்த வயதில்தான் குழந்தையை அம்மா மடியில் போட்டுக் கொண்டு ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயக்கிளியே சாய்ந்தாடு…’ பாடுவாள். மடியில் அமர்ந்தபடியே குழந்தை அவள் மேல் சாய்ந்திருக்கும் நேரே நிமிர்ந்து உட்காரத் தெரியாது. துவளும் அது. அப்படியே கையை வீசி வீசிப் பழக்குவாள் அம்மா.

வீடியோ காலில் அது உட்கார்ந்து கொள்ளும் படத்தைப் பார்த்தான் மணிகண்டன். ரம்யா நன்றாக உயரம் கொடுத்திருந்தது. அதன் தொடைகள் பெருகி தூண்களாட்டம் இருந்தன. அம்மா நன்றாகத்தான் ரம்யாவைக் கவனித்துக் கொள்கிறாள் என்று நினைத்தான். இனி ஒரு வாரத்தில் அது எழுந்து நின்று விடும். நிற்கத் தெரியாத ரம்யா சுவர் வரை தவழ்ந்து போய் சுவரைப் பிடித்துக் கொண்டபடி எழுந்து நின்றது. இப்போது கால்களில் அந்த நடுக்கம் வரவில்லை. அடுத்து நடைதான். அம்மா அதற்கு ஒத்தாசை செய்தாள்.

அம்மா சுவரைப் பிடித்து நிற்கிற குழந்தையிடம் போய் அதைப் பிடித்துக் கொண்டாள். பின் மெல்ல அதை நடத்தி… கால்களில் அந்த அழுத்தமான நிற்றலை அது அறிந்திருக்கவில்லை. கால்களில் பலமற்று தொங்கினாற் போல கூடவே இழுபட்டது ரம்யா. பிறகு ரெண்டு அடி அதை காலைப் பிடித்து நகர்த்திக் காட்டினாள். அதற்கு மேல் அது சப்பென உட்கார்ந்து விட்டது. தனக்கே அதைச்செய்ய முடியவில்லை என்று புரிகிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அது புரிந்து கொண்டாற் போலத்தான் இருந்தது…

இக்காலங்களில் சைகை மூலம் நிறைய அது வெளிப்படுத்தக் கற்றுக் கொண்டது. வேண்டாம் என தலையாட்டத் தெரிந்து கொண்டிருந்தது அதற்கு. ம்மா?... என்று பெரிய குரலில் கூப்பிட்டு, கை விரல்களை அசைத்து வா, என்று கூப்பிட்டது. தகவல் பரிமாற்றத்தின் ஆக உக்கிரப் பயன்பாடாகத் தெரிந்தது அது. குழந்தை வா என அழைத்தால் அது மந்திரம் போல் இருந்தது. மாயக் கயிறுகளால் தான் இழுபட்டது போல அவள் உணர்ந்தாள்.

சுவரைப் பிடித்துக் கொண்டபடி எழுந்து நின்றதும் கையை விட்டு நிற்கப் பார்த்தது குழந்தை. கால்கள் தள்ளாடாமல் நிற்க முடிகிறது. சட்டென இடது காலை முன்னகர்த்தி சிறு நடை. அடுத்து வலது கால்… சீராக எடுத்து வைக்கத் தெரியவில்லை. ஒழுங்கற்ற வேகத்தில் இரண்டு எட்டில் கீழே விழ… இல்லை. விழவில்லை. அப்படியே முன் சரிந்த குழந்தை மீண்டும் சமாளித்துக் கொண்டு அப்படியே நின்றபடி அம்மாவைப் பார்த்து தள்ளாட்டத்துடன் புன்னகை செய்தது. “சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம், கொட்டுமேளம் கொட்டுச்சாம், குழலூதச் சொல்லுச்சாம்… சங்கு சக்கர…” என கை கொட்டிப் பாடினாள் சித்ரா. ரம்யா சிரித்தது. “வா வா வா வா” என்றபடி முன் குனிந்து அதற்குக் கை நீட்டினாள். அவள் கைக்குள் தஞ்சம் அடைவதைப் போல தத்தக்கா பித்தக்கா என்று தடுமாறிப் பாய்ந்தது ரம்யா.

அந்த முறை ஒரு நடை வண்டி வாங்கி வந்திருந்தான் மணிகண்டன். குழந்தைக்கு வாசலில் நின்றபடி சாதம் ஊட்டுகையில் ஐஸ்வண்டி காட்டித் தந்திருக்கிறாள் சித்ரா. ஸ், என்னும் குழந்தை. ஐஸ் என்றால் என்ன தெரியாது. நடைவண்டியை அது ஓட்டி வரும்போது, ஐஸ்… ஐஸ்… என்று வியாபாரி போல கத்தினாள் சித்ரா. அதற்கு அது புரிந்தது. “ஸ்” என்று சிரித்தது ரம்யா. “ஆமாண்டி” என அம்மாவும் சிரித்தாள்.

வேறு நிறைய வார்த்தைகள் வர ஆரம்பித்திருந்தன இப்போது. திரவ உணவு தாண்டி இப்போது ஓரளவு கெட்டியான உணவுகள், பருப்பு சாதம், இட்லி என்று சாப்பிட ஆரம்பித்திருந்தது ரம்யா. உடம்பில் அதன் ஆட்டத்துக்கும் ஓட்டத்க்கும் ஏற்ப தெம்பு வேண்டி யிருந்தது.  பிஸ்கெட்டை அப்படியே கடிக்க பல் இல்லை. எனவே அதைத் தண்ணீரில் நனைத்துக் கொடுத்தாள் சித்ரா.

நல்ல உயரம் வந்திருந்தது இப்போது. அத்தோடு கடுகுப் பூ போல இளம் சோழிப் பற்கள் வர ஆரம்பித்திருந்தன இப்போது. முன்னே மூன்று பற்கள். அது மூக்கையும் கண்ணையும் சுருக்கிச் சிரித்தால் ஒரு அணிலின் சாயல் இருந்தது. எதைக் கண்டாலும் கடித்துப் பார்க்கிற ஆவேசம். சுவை மற்றும் ருசிக்கிற தினவு வந்திருந்தது அதற்கு. ஐம்புலன்களுக்குமான வேலை கொடுப்பதை அது தானறியாமல் அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்தது.  ஏ/சி இல்லாமல் தூங்குவேனா என்றது. “ம்மா? ஏ/சி?” என்று படுத்துக் கொண்டு அது குளிர்சாதன சுவிட்சைக் காண்பித்தது.

நடைவண்டி தேவையில்லாமல் நடக்கத் தெரிந்து கொண்டிருந்தது குழந்தை. இனி நாலைந்து மாதத்தில் அதற்கு குட்டி மூன்றுசக்கர சைக்கிள் தேவைப் படும் என்று தோன்றியது. இப்போது காலையில் எழுந்துகொண்டபின் ரம்யாவை பாத்ரூம் கொண்டுபோய் நிறுத்தினால் தானே புரிந்துகொண்டு ஒன் பாத்ரூம், ட்டூ பாத்ரூம் போனது. “பாத்தூம் ஆச்சிம்மா” என்று அம்மவைக் கூப்பிட்டது.

அம்மா அப்பா என வார்த்தைகள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது அதற்கு. படத்தைக் காட்டினால், பாட்டி சொல்லும். “பாட்டி எப்ப வருவா?” என்று கேட்கும். காலையில் பசும் பால் கொண்டு வந்து ஊற்றும் கனகா, வீட்டு வேலைகளுக்கு வரும் ராசாத்தி, பக்கத்து வீட்டு மங்களம் மாமி, அவர்கள் வீட்டுப் பையன் ராம்பிரசாத்… என்று நிறையப்பேரை அதற்குத் தெரியும் இப்போது. வீடியோ காலில், அப்பாவிடம் நிறையப் பேசும் அது. “அப்பா நீ…” என்று யோசித்து “வரும்போது… எனக்கு என்ன வாங்கிட்டு வரே?” என்று கேட்கும். தனக்கு இது வேண்டும், என்று கேட்கத் தெரியாத வயது.

அடுக்கக மாடியில் முதல் தளத்தில் அவர்கள் வீடு. சிட் அவுட் வழியே வெளியே பார்த்தபடி தெருவில் வருகிற போகிற ஆட்களை வேடிக்கை பார்க்கும். எதும் நாய் தட்டுப்பட்டால், தோத்தோ… என்று கூப்பிடும். இங்க வா, என்று கை காட்டும். அந்த வீட்டை முழுசாகத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்தது ரம்யா. அது தூங்கினால் வீடே நிசப்தமாகி விடும். அது விழித்திருந்தால் ஒரே சப்த களேபரம்தான்.

இனிப்பை விட காரம் அதிகம் விரும்பியது குழந்தை. பக்கத்து வீட்டுக்கு என்று சித்ரா போனால் அதையும் தூக்கிக்கொண்டு போகவேண்டும். ரம்யாதான் காலிங் பெல் அடிக்கும். கதவைத் திறக்கும் மாமியைப் பார்த்து ரம்யா அழகாக கையைக் குவித்து வணக்கம் சொல்லும். எல்லாம் நல்லாதான் இருக்கும். என்றால் உள்ளே வந்ததும் அதை இதை இழுத்துப்போட்டு, விளையாடக் கூப்பிட்டு அமர்க்களப் படுத்தும்.

அதை வைத்துக் கொண்டு டிவி பார்க்க முடியாது. டிவியில் வரும் ரிக்ஷா, (டுர்ர்) பஸ் (பொப்பாய்ங்), மாடு (ம்மாஆஆஆ), பள்ளிக்கூடம் போகும் குழந்தை…(அக்கா) என்று அவள் முகத்தைத் திருப்பித் திருப்பி கதை சொல்லிக் கொண்டே யிருக்கும். ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒரு பெண்மணி அழுது கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ரம்யா அம்மா முகத்தைத் திருப்பி, “ஏம்மா அவ அழறா? பசிக்கறதா?” என்று கேட்டது.

வீட்டில் அம்மாவின் அலைபேசியை வைத்துக் கொண்டு அப்பாவுடன் பேசுகிற பாவனையில் என்னவாவது பேசியது ரம்யா. அதற்கு இது ஒரு விளையாட்டு. “பாருப்பா, அம்மா திட்டறா…” என்று அது உடனே அப்பாவிடம் டயல் செய்யாமல் பேசி முறையிட்டது. அதைப் பார்த்ததுமே அம்மாவின் கோபம் எல்லாம் பறந்து விடும். பறவைகள், மிருகங்கள் என்று விதவிதமான படங்கள் போட்ட சார்ட்களை, தடித்த அட்டைப் புத்தகங்களை யெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தான் மணிகண்டன். தினசரி தூங்குமுன் சிறிது பாடம் படித்து விட்டு ரம்யா ஒரு தம்ளர் பால் குடித்துவிட்டு தூங்கி விடும்.

மணிகண்டனுக்கு இரண்டு வருடங்களாக திரும்ப சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கவில்லை. எப்போதெல்லாம் அவன் வீடு வருகிறானோ அப்பதான் அவனால் ரம்யாவோடு விளையாட முடிந்தது. அதன் முதல் பிறந்தநாளுக்குப் பெரிய அளவில் அவர்கள் நட்சத்திர விடுதியில் கேக் எல்லாம் வெட்டினார்கள். அmப்போதுதான் குழந்தைக்கு குன்னக்குடியில் மொட்டை போட்டு காது குத்தினார்கள். அஸ்ஸோ, மொட்டைக் குழந்தைகள் என்ன அழகு! அதன் முதல் பிறந்த நாளுக்கு உள்ளூர் மேனேஜரும் வந்திருந்தார். அவரிடம் சித்ராவே மாற்றல் பற்றி ஒரு வார்த்தை கேட்டாள். பதில் எதுவும் சொல்லாமல் மையமாகச் சிரித்தார் அவர்.

இரவு எட்டு மணி வாக்கில் கிளம்பி பஸ் ஏறினால் காலை இருட்டு விலகுமுன் வந்து விடுவான் மண்கண்டன். வந்திறங்கிய நேரம் முதல் திரும்பிக் கிளம்பும் வரை அவனுக்குப் பொழுது றெக்கை கட்டிப் பறந்தது. மெத்தையில் ரம்யாவோடு குட்டிக் கரணம் அடித்தான். அதை முதுகில் ஏற்றிக் கொண்டு யானைச்சவாரி விளையாடினான். ”நீங்க போனதும் என்னையும் அப்படி முதுகில் ஏற்றிக்கொண்டு நடக்கச் சொல்லறது இது… முட்டியெல்லாம் தேய்ந்து போகுது” என்றாள் சித்ரா.

“குழந்தைகளைப் பத்தி தாகூர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?” என்று கேட்டான்.

“என்ன?”

“குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது… அப்டிங்கறார்.”

“அது சரி” என சிரித்தாள் சித்ரா.

திரும்ப குழந்தைக்குத் தெரியாமல் அதை ஏமாற்றி விட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. லுங்கியை மாற்றி பேன்ட் சட்டை போட்டுக் கொண்டாலே அது சுதாரிக்கும். “அப்பா நானும் வரேன்…” என வந்து கையை நீட்டும். தூக்கிக் கொள்ளச் சொல்லும். அதன் கவனத்தைத் திருப்பி சிட் அவ்ட்டில் இருந்து வெளியே எதையாவது சித்ரா காட்டிக் கொண்டிருப்பாள். சத்தம் இல்லாமல் அவன் வெளியேறுவான். அவன் வெளியேறியவுடன் சித்ரா திரும்ப உள்ளே வந்துவிட வேண்டும். சிட் அவ்ட் வழியே பெட்டியுடன் அவன் வெளியே போவதைக் குழந்தை பார்த்துவிடக் கூடாது.

அவன் இராத்திரி அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டு அதற்கு வேடிக்கையான பல கதைகள் சொன்னான். ஒரு ஊர்ல ஒரு சிங்கம். அதற்குமேல சொன்னா? “அசிங்கம்” என்று சொல்லி குழந்தை சிரிக்கும். மழை பெய்கிற சமயத்தில் வெளி வாசலுக்கு இறங்கிப் போய், காகிதத்தில் கப்பல் செய்து அவனும் ரம்யாவுமாய் கப்பல் விட்டார்கள். துண்டால் அவன் தன் முகத்தை மூடிக் கொண்டு ரம்யா அதைத் திறக்கும்போது “பே…” என பயமுறுத்தி விளையாடினார்கள். அதேபோல ரம்யா செய்யும் போது அவனும் பயப்பட வேண்டும்.

குழந்தையை பாலகர் பள்ளி எதிலாவது சேர்த்து விட வேண்டி வந்தது. இதுவரை நாம், நமது சூழல் என்று வளர்ந்த குழந்தை. இனி அதற்கு வெளி உலகம் தெரிய ஆரம்பிக்க பயிற்சி அளிக்க வேண்டும். தானே வெளி உலகத்தை அது இனி அறிந்துகொள்ளப் பழக வேண்டும். ஒரு தெரு தள்ளி ஒரு பிளேஸ்கூல் இருந்தது. ஒரு நல்ல நாள் பார்த்து ரம்யாவை அந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று சித்ரா சொன்னாள்.

அதற்காக குழந்தைக்கு தனி ஸ்நாக்ஸ் டப்பா, புது டிரஸ், ஷு, சாக்ஸ் எல்லாம் கொண்டாட்டமாக வாங்கினார்கள். “ஸ்கூலுக்குப் போவியாடி?” என்று சித்ரா ரம்யாவைக் கேட்டாள். ம் ம், என்று தலையாட்டியது உற்சாகமாக. மணிகண்டனும் இந்தப் பெரிய மனுஷி பள்ளி செல்லும் நாளில் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தான். காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து சுவாமி விளக்கேற்றி நமஸ்கரித்து இருவரும் பிறகு ரம்யாவை எழுப்பினார்கள். குழந்தையை விட அவர்கள் பரபரப்பாய் இருந்தார்கள்.

மறுநாளில் இருந்து குழந்தையைச் சேர்ப்பதாக முன்பே பள்ளியில் சொல்லியாகி விட்டது. டீச்சர் சின்னப் பெண். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அழகாக இருந்தாள். சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிற பெண் டீச்சர்கள் அழகாய் அமைவது முக்கியம். இல்லாவிட்டால் குழந்தைகள் ஒட்டிப் பழகாது. மணிகண்டனுக்கு டீச்சரின் சிரிப்பு பிடித்திருந்தது. ஆரம்ப நிலையில் ஒண்ணரை மணி நேரம்தான் குழந்தை அங்கே இருக்க வேண்டும். பிறகு அடுத்த வருடம் எல்கேஜி வரும்போது அரைநாள் பள்ளி இருக்கும். யூகேஜி வயதில் குழந்தை பள்ளிக்குப் பழகி விடும். மாலை மூணு மூணரை வரை பிள்ளைகள் பள்ளியில் தங்க முரண்டு பண்ணாது.

சின்ன டப்பாவில் கேக், பிஸ்கெட், ஒரு புட்டியில் பால். ஒரு பாட்டிலில் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர், சட்டையில் குத்திய கர்ச்சிஃப். சாளவாயோ, மூக்கோ ஒழுகினால் மிஸ் துடைத்து விட சௌகர்யம். காலில் ஷு போட்டதும் ரம்யாவுக்கு ஒரே உற்சாகம். வண்ண வண்ணப் புத்தகம் வைத்த சிறு பை முதுகில். பள்ளி வாசல் வரை உற்சாகமாய்ப் போன ரம்யா, அம்மா அவளை விட்டுவிட்டுக் கிளம்புகிறாள் என்றதும் ஒரே அழுகை. பெத்தவளுக்குப் பதறியது. மிஸ் சிரித்தபடி வந்து குழந்தையை “ரம்யா… கம் ஹியர். நீ நல்ல பொண்ணுதானே?” என்று கையை விரித்துக் கூப்பிடுகிறாள். மாட்டவே மாட்டேன், என்று திரும்ப வந்து அம்மாமேல் ஏறிக் கொண்டது குழந்தை.

ச்… இப்ப என்னங்க பண்றது… என்றாள் சித்ரா துக்கமாய். மணிண்டன் சிரித்தான். நீ இல்லாமல் பள்ளிக்கூடத்தில் குழந்தை தனியா இருக்குமான்றது ஒரு பக்கம். குழந்தையை விட்டுவிட்டு நீ தனியா இருப்பியா தெரியல்லியே?... என்றான்.  “நான் எங்கயும் போகலடி. உன் கூடத்தான் இருக்கேன்…” என்று பள்ளியிலேயே உட்கார்ந்தாள் சித்ரா. “பாரு. எத்தனை பிள்ளைங்க விளையாடறாங்க. நீயும் போயி விளையாடு” என்றாள். இடுப்பு உயர சறுக்கு மரம், ஆடு குதிரை, மேலே விழுந்தால் வலிக்காத பந்துகள் என வண்ண வண்ணமாய் நிறைய விளையாட்டு சாமான்கள் இருந்தன அங்கே. அம்மாவை விட்டுவிட்டால் எழுந்து போய்விடுவாளோ என்று அம்மாகூடவே இருந்தது குழந்தை.

மற்ற குழந்தைகளின் மத்தியில் ஒரு பையன் இருந்தான். அவன் எழுந்து வந்து ரம்யாவின் தலையைத் தொட்டான். ரம்யா அவனைப் பார்த்து விட்டு விலகி ஒடுங்கி அம்மாவோடு தன்னை இறுக்கிக் கொண்டது.“உம் பேர் என்ன?” என்று அவனைக் கேட்டாள் சித்ரா. “ஹரிஷ்” என்றான் அவன். “நீ… எங்க ரம்யாவுக்குக் குதிரை ஏறச் சொல்லித் தரியா?” என்று கேட்டாள்.

“வா…” என்று ரம்யாவைப் பிடித்து இழுத்தான் ஹரிஷ். அது வர மறுத்தது. “ஹரிஷுக்கு ஷேக் ஹேன்ட்ஸ் பண்ணு…” என்று அதன் கையை எடுத்து ஹரிஷ் பக்கம் நீட்டினாள் சித்ரா. ரம்யா சற்று தயங்கி பிறகு ஷேக் ஹேன்ட்ஸ் செய்தது. ஹரிஷ் போய் அந்த ஆடுகுதிரையில் உட்கார்ந்து விறுவிறுவென்று ஆட ஆரம்பித்தான். ரம்யாவின் புருவங்கள் விரிந்ததை அம்மா பார்த்தாள். “வா ரம்யா…” என்று அங்கிருந்தே ஹரிஷ் அவளைக் கூப்பிட்டான். “போ” என்றாள் அம்மா. ஹரிஷைப் பார்த்து மெல்ல தயங்கி ரம்யா போனாள்.

“நீங்க போங்க. குழந்தை பழகிரும்…” என்று புன்னகை செய்தாள் மிஸ். சித்ராவுக்குதான் குழந்தையை விட்டுவிட்டு வர மனசே இல்லை. “நல்லவேளை நீங்க கூட இருந்தீங்க… இல்லாட்டி நான் அழுதிருப்பேன்…” என்றபடி சித்ரா அவனைப் பார்த்தாள். அவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்தாள். அவனும் சிரித்தான். பதினொண்ணரைக்குத் திரும்ப அவர்கள் வர வேண்டும். “இன்னிக்கு நான் மட்டும் வந்து கூட்டிட்டு வரேன் குழந்தையை…” என்றான் மணிகண்டன். சித்ரா ஸ்கூட்டரில் அவன் பின் ஏறி அமர்ந்து கொண்டாள்.

•••

Comments

  1. ஒரு குறுநாவலை அற்புதமான சிறுகதையாக வடித்துள்ளார். குழந்தை வளரும் விதம் அற்புதம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog