நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்
• கட்டுரைத் தொடர்
நிசப்த தீங்காரம்
/ பகுதி 3
அசலைவிட மேலானது நகல்
அது
அசல் அல்லதான். நகல்தான். ஆயினும் நகல்கள் ஒரு நெருக்க பாவனையை வாழ்க்கையை நோக்கிக்
குவிக்கின்றன. நகல் எவ்வளவிலும் அசலின் முழுமையான தன்மையைப் பிரதிபலிக்காது. அது முழுமையின்
ஒரு பகுதியே. முழுமை முப்பரிமாணமானது. நகலோ இரு பரிமாணமானது தான், என்பது உண்மையே.
ஆனால்…
அச்
சிறு அளவில், எழுத்தாளனின் பார்வைத் தேர்வு அடிப்படையில் எழுத்தின் வீர்யம் அல்லது
சுய கவனக் குவிப்பு அங்கே அதிகரிக்கிறது தன்னைப் போல, என்பது ஆச்சர்யமானது.
நகல்களில்
எழுத்தாளனின் இதயமும் ஓர் ஈடுபாட்டுடன் இயங்குகிற போது அந்த நகல் கலை வடிவம் என அமைதல்
காண்க. கலையின் சிறப்பு அது. அந்த நகலை நீங்கள் ஒரு கலைஞனின் கண்வழி பார்க்கிறீர்கள்
இப்போது. அவனது கண்களின் உக்கிர தரிசனத்தை அவ்வளவில் ஒரு கலைஞன் உங்களுக்கு மடை மாற்றுகிறான்.
அசலின்
சிறு பகுதியை வட்டமிட்டு எழுத்தாளன் அடையாளம் காட்டுகிறான். நகல் என்பது அசலைக் காட்டும் சிறிய டார்ச் வெளிச்சம்.
அசல் என்பது நகலின் முழுமை அல்ல. ஒரு சிறு பகுதி. அந்தச் சிறு பகுதியை மாத்திரம் அப்போது
நீங்கள் இன்னும் நெருக்கமாக அறிமுகம் செய்துகொள்ள வாய்க்கிறது.
ஆகவே,
எந்த நகலுக்குமே ஒரு கண்ணோட்டமும் சேர்ந்து கொள்வதை நாம் உணர முடியும். இலக்கணப் படி
சொன்னால், எந்தக் கலைப் படைப்புமே ஒரு தற்குறிப்பேற்றம் தான். பார்க்கிற ஒன்றில் பார்க்க
வேண்டிய ஒன்றை அவன், அதை நகல் எடுத்துக் காட்டியவன் உணர்த்துகிறான். சுட்டிக் காட்டுகிறான்.
அது ஒரு பாடம் எடுக்கிற நிலை அல்லவா?
அப்படி
அதை அவன் அறிவிப்பதன் தாத்பர்யம் என்ன? அந்தப் பார்வையில் ஒரு விமரிசனமும் இருக்கிறது.
விமரிசனம் என்று வந்து விடுகிற போது அது முக் காலத்துக்குமாய் வியாபித்துக் கொள்கிறது.
அந்த விஷயம் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, என விமரிசனம் செய்கிற அது,
எப்படி இருக்க வேண்டும்… என்கிற சிந்தனையையும் வாசக மனதில் கிளர்த்த வல்லதாய் அமைகிறது.
மனதை
சிந்திக்கத் தூண்டுகிறது அந்த நகல். அல்லது அது வெளிப்படுத்தும் கலை வெளி. மனதின் மண்ணை
அது நெகிழ்த்தித் தருகிறது.
சிந்தனை
என்பதே காலத்தின் முப்பரிமாணத்தில் நீச்சல் அடிப்பதுதான்.
எழுத
வந்தபின் எழுதாமல் முடியாது என்று ஆகிப் போகிறது. சிந்திக்கிறவன் எழுத வருகிறான். எழுத்து
என்பது ஓர் ஊற்று போல அவனுள் திறந்து கொண்ட பின் அது வற்றுவது இல்லை. அவனால் அதை வற்றவிட
முடியாது.
இரைத்த
கிணறு ஊறும். இரைக்க இரைக்க ஊறும். அந்த சிந்தனைப் பிரவாகத்தை அவன் மடைமாற்ற வேண்டி
யிருக்கிறது.
வாழ்க்கையைப்
பயில சிந்தனை ஒரு பயிற்சிக் களம் என ஆகிறது. உங்களுக்காக அவன் சிந்திக்கிறான். பிறிதின்
நோய் தன் நோய் என உணர்கிறவன் எழுத்தாளன் ஆகிறான். அவன் தனக்கும் பிறர்க்குமாக சிந்திக்க
ஆரம்பித்து விடுகிறான் தன்னைப்போல. நெல்லுக்கும் புல்லுக்குமான பிரவாகம் அது.
நீரின்
அழகு பள்ளத்தை நிரப்புதல். பள்ளங்கள் காத்திருக்கின்றன. நீருக்கு அது தெரியும். தெரிந்தவர்கள்
எழுத்தாளர்கள் ஆகிறார்கள்.
இது
தனக்கே உள்ளே நிகழும் ஓயாத பயிற்சி. ஓய்வு அதற்கு இல்லை. எழுத்தாளனுக்கு ஓய்வு இருக்கிறதா
என்ன? இருப்பதாகத் தெரியவில்லை. அவன் எப்பவுமே எதையாவது சிந்தித்தபடியே இருக்கப் பழகிப்
போகிறான். ஈர நிலம் அவன்.
இதில்
பழகப் பழக நயம் பட உரைத்தல் சித்திக்கிறது. சில பேர் சொல்வதை விளங்கச் சொல்கிறார்கள்.
நயம்பட நகைச்சுவையாக உரைக்கிறார்கள் சிலர். அதன் தத்துவ தரிசனத்தை விளக்க வந்தார் பலர்.
ஒன்றைக் கண்டடைந்தவன் அதை உடனே மௌனமாக எல்லார்க்கும் அறிவிக்கிறான்.
யாம்
பெற்ற இன்பம், பெறுக வையகம்.
துன்பமும்
பெறுக.
இதிலும்
சில கேணிகளின் நீர் தித்திப்பாய் அமைகிறது போல, பாற்கடலில் சுனாமி போல ஒரு பக்குவப்பட்ட
எழுத்தாளன் தான் அறிந்த அல்லது விளக்கிச் சொல்லிக்கொண்டு வந்த யதார்த்த நிலையை ஒரு
படி தாண்டி தன் மனதின் தரிசனத்தோடு வாழ்க்கையையே, அதன் யதார்த்தத்தையே செம்மைப் படுத்தி
எடுத்துக் காட்டும் போது, வாழ்வின் விஸ்வரூபத்தை வாசகன் கண்டடைய வாய்க்கிறது.
புல்லில்
பனி. பனியில் பனை…
உலகளாவிய
தளத்தில் அது ஒட்டுமொத்த மானுடத்தை வாரியணைத்து விம்மி விகசித்து நிற்கிறது. அதாவது
யதார்த்தத்தை எழுத வந்த ஓர் எழுத்தாளனுக்கு அதன் மனக் குழைவில் தன்னைப்போல ஓர் பரிணாம
உச்சம் சில சமயம் வாய்க்கிறது.
ஆமாம்.
பரிணாம உச்சம் தான்.
ஏற்கனவே
வேறு பகுதிகளில் சொன்னதுதான். என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்ல எனக்குப் பிடிக்கிறது.
தமிழின்
முதல் இலக்கியத் தரமான நாவல் தந்தவர் ராஜம் ஐயர். அவரது நாவல் ‘கமலாம்பாள் சரித்திரம்.’ கதாநாயகர் குப்புசாமி ஐயர் வீட்டில் திருடு போய்விடும்.
இரவில் அவன் திருட வந்தபோது வீட்டில் விழித்துக் கொள்வார்கள். திருடன் அவர்களிடம் மாட்டிக்
கொள்ளாமல் தப்பித்து பின்கட்டு வழியே வெளியே ஓடுகிறான். பின்கட்டில் வைக்கோல் புடைப்பு
இருக்கும். தன்னைத் துரத்தி வந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்ப அந்தத் திருடன் தான்
வைத்திருந்த தீப்பந்தத்தை அந்த வைக்கோல் புடைப்பில் எறிந்துவிட்டு ஓடுவான். எல்லாரும்
உடனே வைக்கோல் புடைப்பின் தீயை அணைக்கப் பரபரப்பார்கள். திருடன் தப்பி ஓடி விடுவான்.
பிறகு
நாலைந்து நாளில் அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள். கோர்ட்டில் கேஸ் நடக்கும்.
அந்த விசாரணையைப் பார்க்க அந்த வீட்டுச் சொந்தக்காரர் குப்புசாமி ஐயரும் கோர்ட்டுக்குப்
போயிருப்பார்.
நீதிபதி
தீர்ப்பு வழங்குமுன் ஓர் ஆச்சர்யமான காரியம் செய்வார். எந்தக் கோர்ட்டிலும் அப்படி
நடந்திருக்க வாய்ப்பு இல்லை. யதார்த்தத்தை மீறி நாவல் ஆசிரியர் ராஜம் ஐயரின் கனிந்த
மனது இப்போது எழுதிச் செல்கிறது.
நீதிபதி
குப்புசாமி ஐயரைப் பார்த்து, “நீங்கள் குற்றவாளியிடம் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?”
என்று கேட்பார்.
ஆச்சர்யமான
கேள்வி, ஆச்சர்யமான நிகழ்வு அல்லவா?
குப்புசாமி
ஐயர் எழுந்துகொண்டு திருடனைப் பார்த்துச் சொல்வார். அதுதான் நாவலின் உச்சம், என நான்
நினைக்கிறேன்.
“என்
வீட்டில் நீ திருட வந்தாய் அப்பா. நகை, பணம், பாத்திர பண்டங்கள் திருடிப் போனாய். இதுநாள்
வரை அது எனக்குப் பயன்பட்டது. இனி அது உன்னிடம் இருப்பதால் உனக்குப் பயன்படும். ஆனால்
வைக்கோல் போர் மீது தீவட்டி வீசி வைக்கோல் போரையே எரித்துவிட்டுப் போனாயே? அதை உனக்கும்
இல்லாமல், எனக்கும் இல்லாமல், யாருக்குமே உபயோகம் இல்லாமல் வீணாக்கி விட்டாயே? அதுதான்
எனக்கு வருத்தம்” என்பார்.
எழுதும்போது
மானுடனாக அந்த எழுத்தாளனே ஒரு தேவதூதனாய் எழுதல் காண்க.
நல்ல
எழுத்து ஒரு பயற்சியில் அந்த எழுத்தாளனை, பிறகு அவனால் மற்றவர்களை ஓர் உன்னத உயரத்துக்கு
உயர்த்தி விட்டுவிடும், என்று சொல்ல முடிகிறது.
புதுமைப்பித்தனின்
ஒரு சிறுகதை நினைவு வருகிறது. அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சுதேசமித்திரன் இதழுக்கு என்று திடீரென ஒரு சிறுகதை மாலைக்குள் எழுதித்தரச்
சொல்லிக் கேட்கிறார்கள். பத்திரிகையில் திடீர் இடைவெளிகள் ஏற்படும்போது அச்சிட்டு நிரப்ப
வேண்டிய நெருக்கடி என்பது எல்லாப் பத்திரிகைகளிலும் இயல்புதான்.
அலுவலகத்தில்
தலைக்கு மேல் கடகடத்து ஓடும் மின் விசிறியின் வெக்கை. உள்ளே டிரெடில் ஓடும் நாராச ஓசை.
இதன் நடுவே புதுமைப்பித்தன் கதை யோசிக்கிறார். மதியத்துக்குள் கதை தந்து அது அச்சாகவும்
வேண்டும்.
அவர்
எழுதுகிற கதையில் ஒரு காட்சி. தாமிரவருணி நதியின் ஒரு துவைகல். அதில் சின்னப் பெண்
ஒருத்தி அமர்ந்து கால்களைத் தண்ணீருக்குள் வைத்திருக்கிறாள். மெல்ல அவள் காலை வெளியே
எடுக்கிறாள். பளீரென்ற அந்தக் கால்களில் வெள்ளி கொலுசு சூரிய ஒளியில் தகதகவென்று மினுங்குகிறது.
திரும்ப அந்தச் சிறுமி கால்களைத் தண்ணீருக்குள் அமிழ்த்திக் கொள்கிறாள். சூரியனுக்கு
அந்தப் பளீர்க் கால்களையும் அதில் மினுமினுக்கும் அந்தக் கொலுசையும் இன்னொரு தரம் பார்க்க
ஆசையாய் இருக்கிறது.. என எழுதுகிறார் புதுமைப்பித்தன்.
அதன்
அடுத்த வரி இன்னும் உச்சம் – சூரியனே யானலும் என்ன? குழந்தை காலைத் தூக்க காத்திருக்கத்தானே
வேண்டும்?
எங்கோ
ஊரில் இருக்கும் தன் பெண் குழந்தையை (தினகரி) நினைத்தபடி அவர் கைகள் தன்னைப்போல இப்படி
கொண்டாட்டமாய் எழுதிச் செல்கின்றன என்று தெரிகிறது.
குழலினிது
யாழினிது, என்றும், சிறு கை அளாவிய கூழ், என்றும் வள்ளுவர் ஒர் உன்மத்த நிலையில்தானே
எழுதி யிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
சக
உயிர்களை நேசிக்கும் பாங்கு, அதுவும் தனக்குப் பிறந்த குழந்தையை நினைத்தபடி மனசை மீட்டும்
பாங்கு, அதைப் புன்னகையோடு வாசகனுக்குக் கைமாற்றும் அற்புதம், எத்தனை பேருக்கு இத்தகைய
தருணங்கள் வாய்க்கும்?
அன்பின்
உயர்நிலையை எழுத்தாளர் சைலபதி தமது ‘பெயல்’ நாவலில் இப்படி எழுதிக் காட்டுகிறார். சென்னையின்
பெருமழைக் காலத்தில், அந்த ஊழிப் பேராட்டத்தில் மனசின் தன்வயம் இழந்துவிட்ட ஒரு பாத்திரம்.
பேச்சே ஒடுங்கி தன்னுள் அதிர்வுகளால் பள்ளமாகிப் போனவன் அவன். அவனைத் திரும்ப மீட்கப்
போராடும் அவன் மனைவி. மெல்ல அவன் தன்னிலை மீள ஆரம்பிக்கையில் அவளுடன் கலவி சுகம் காண
என்று லகிரியுடன் அவள் கையைப் பற்றுகிறான்.
கலவி
முடிந்ததும் இவருக்குப் பசிக்குமே, என்று அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அடுப்பில்
குக்கர் வைத்து சோறு ஆனதும் அணைத்து விட்டு, அவன் அணைக்க அவன் அருகில் வந்தாள், என
எழுதிக் காட்டுகிறார். பெண் என்பவள் தாயின் பேரன்பின் பிரதி அல்லவா? எத்தனை உயர்வான
சித்தரிப்பு பெண்ணைப் பற்றி…
ஒரு
யதார்த்தச் சித்திரத்தில் சட்டென பறவையாய் ஒரு தேர்ந்த எழுத்தாளன் உயர்ந்து பறக்க ஆரம்பிப்பதை
வாசகன் கண்டடைவது பேரனுபவம் தான்.
தமிழின்
முதல் நாவலாசிரியர்களில் மற்றொருவரான அ. மாதவையா தமது ஒரு நாவலில் இப்படியொரு காட்சி
அமைக்கிறார்.
பெண்
பார்க்க வந்திருக்கிறார்கள். இரு சாராருக்கும் பிடித்து விடுகிறது. உடனே தாம்பூலம்
மாற்றி உறுதி செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். வெற்றிலை மாற்றிக் கொள்கிற அந்த நேரம்
பார்த்து மின்சாரம் துண்டிக்கப் பட்டு இருட்டாகி விடுகிறது. அப்போது ஒருவர் சொல்கிறார்.
“பக்கத்து வீட்டில் விளக்கு எரிகிறது. எதிர் வீட்டில் எரிகிறது. உலகம் பூராவும் வெளிச்சமாய்த்தான்
இருக்கிறது. நல்ல சகுனம் தான். தட்டு மாற்றிக் கொள்ளலாம்…”
அப
சகுனம், சுப சகுனம் என்றெல்லாம் கிண்டல் வைக்காமல் படிக்கிற வாசகரும் ஏற்றுக் கொள்கிற
அளவில் எப்படி நைச்சியமான உரையாடலை ஆசிரியர் முன் வைக்கிறார் பாருங்கள்.
சைலபதி
எழுதிய இன்னொரு கதை ‘மாயச்சேலை.’ இந்தக் கதை வாய்வழிக் கதையாக முற் காலத்தில் சுற்றி
வந்ததா தெரியாது. நான் கேள்விப்பட்டது இல்லை. திரௌபதியின் துகில் உரி படலத்தைப் பற்றி,
அரசை எதிர்க்க முடியாத மக்கள் மத்தியில் உலவி வந்த சிறுகதையாக வடிவமைக்கப் பட்ட கதை
இது.
திரௌபதியை
துச்சாதனன் துகில் உரிய வரும்போது சபையே அதிர்ந்துபோய் எதிர்க்கத் திராணி யில்லாமல்
மௌனமாய் விக்கித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திரௌபதியின் ஐந்து கண்வன்மார்களும்
பேசாமல் தான் அமர்ந்திருக்கிறார்கள். அதே அரங்கத்தில் நூறு கௌரவர்களின் மனைவிமாரும்
திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரௌபதியின்
அண்ணனாக கோவிந்தன் என்ற பாத்திரம் வருகிற.து. கோவிந்தனுக்குத் தன் தங்கை மேல் கொள்ளைப்
பிரியம். அவன் அவளிடம் உனக்கு எப்ப என்ன ஆபத்து வந்தாலும் என்னைக் கூப்பிடு, எப்படியாவது
நான் வந்து உன்னைக் காப்பாற்றுவேன், என்று சொல்லி யிருக்கிறான்.
துச்சாதனன்
அவளது சேலைத் தலைப்பைப் பிடித்து இழுக்கிறான். தன்னைக் காப்பாற்ற அண்ணன் ஒருவனால்தான்
முடியும் என்று தோன்றவே “கோவிந்தா…” என்று கதறுகிறாள் திரௌபதி.
கோவிந்தன்
எப்ப எந்த ஊர், எந்த நாடு போனாலும் அங்கங்கே கிடைக்கிற வித விதமான சேலைகளைத் தன் தங்கைக்கு
என்று ஆசையுடன் வாங்கி வாங்கிச் சேர்ப்பான். திடீரென்று அவனுக்கு தனது தங்கை ‘கோவிந்தா..
கோவிந்தா..” என்று ஆபத்தில் அலறும் சத்தம் அவன் மனசில் கேட்கிறது.
கோவிந்தன்
தான் தங்கைக்கு என்று வாங்கிச் சேர்த்து வைத்திருந்த புடவைகளை ஒவ்வொன்றாக அவளுக்கு
அனுப்ப ஆரம்பித்தான். வண்ண வண்ணமான விதவிதமான புடவைகள் திரௌபதி உடம்பின் மேல் வந்து
அவளை மூடிக்கொண்டே இருக்கின்றன.
வண்ண
வண்ணமான விதவிதமான புடவைகள். எத்தனை வகையான புடவைகள் அவை. வெவ்வேறு ஊர்களின் அடையாளங்கள்
அவை. எத்தனை யெத்தனை புடவைகள்…
கௌரவர்
நூறு பேரின் மனைவிமார்கள் எல்லாம் அதைப் பார்த்து ஆச்சர்யமும் திகைப்பும் அடைகிறார்கள்.
அவர்களுக்கு அந்தப் புடவைகளைத் தாங்கள் கட்டிக்கொண்டு அழகு பார்க்க ஆசை வருகிறது.
புடவைகளை
உரித்து எறிந்தபடி இருக்கிறான் துச்சாதனன். கௌரவர்களின் மனைவிமார் பாய்ந்து வந்து ஆளுக்கு
ஒரு புடவையாக எடுத்துக் கொண்டு தாங்கள் அணிந்து பார்க்க உள்ளே ஓடுகிறார்கள். நூறு பேரும்
விதவிதமான நூறு புடவைகளைக் கட்டிக்கொண்டு திரும்ப அந்த சபைக்கு வருகிறார்கள். மற்றவர்கள்
முன் காட்டி பெருமைப்படஅவர்களுக்கு ஆசை.
புடவைகளை
அவிழ்க்க அவிழ்க்க வந்துகொண்டே யிருந்ததில் துச்சாதனன் களைத்துப் போய் அப்படியே தன்
முயற்சியைக் கை விடுகிறான்.
அத்தனைபேர்
முன்னால் தன் மானம் பறி போகாமல் காக்கப் பட்டு விட்டதை நினைத்ததும் திரௌபதிமுறையிLவதை
நிறுத்தி விடுகிறாள்.
அவளிடம்
இருந்து பிரார்த்தனைக் குரல் நின்று போனதும் அவளது அண்ணன் புடவை அனுப்புவதை நிறுத்தி
விடுகிறான்.
அவன்
நிறுத்திய கணம் அந்த மாயக் காட்சி கரைந்து போகிறது. இப்போது அந்த நூறு மனைவிமார்… புதுப்புடவை
கட்டி சபைக்கு அழகு காட்ட வந்தவங்க, அவங்க சேலையும் மறைஞ்சி போய், அத்தனை பேரும் நிர்வாணமா
நின்னாங்க…
சபை
நடுவில் கௌரவர்கள் ஒரு பெண்ணைக் களங்கப் படுத்த நினைத்தால், இப்போது அவர்கள் அத்தனை
பேரின் மனைவிமார்களுமே சபை நடுவில் நிர்வாணமாக நிற்க சேர்ந்து விடுகிறது.
பொது
சனத்தின் குரலாக இப்படி கதையை முடிக்கிறார் சைலபதி.
•••
Comments
Post a Comment