
நன்றி பேசும் புதிய சக்தி • ஆகஸ்டு 2022 நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் – பகுதி 10 அதிரடி சரவெடி ஞானவள்ளல் இ ரட்டைப் புலவர் பாடல் ஒன்றை சில பகுதிகளுக்கு முன் எடுத்துக் காட்டினேன். என்னதான் காலடி பூமி சரிந்தாலும் சமாளிப்பதும் துவளாமல் கடந்து போகிறதும் நம்மாட்களின் இயல்புதான். இரட்டைப் புலவரில் ஒருவர் கண் பார்வை அற்றவர். அவரது ஆடை நீரில் அமிழ்ந்து காணாமல் போகிறது. அதை அடுத்த புலவர் சொல்கிறார். வேஷ்டி காணாமல் போகிற பெரிய இழப்பைச் சமாளித்துக் கொண்டு. என்னடா பொல்லாத வாழ்க்கை, என்கிற அலட்சிய பாவனை கொண்டாடியபடி, அந்த மனுசர் பாட்டில் பதில் சொல்கிறார். “இக்கலிங்கம் போனால் என், ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை.” (கலிங்கம் – ஆடை.) உதை வாங்கிய வடிவேலு “வலிக்கலயே?” என நடிப்பது போல இருக்கிறது கதை. வெட்டி சவடால் விடுவதில் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்த பாணியில் கிராமத்துத் திண்ணை உரையாடல்கள் ரொம்பப் பிரசித்தம். “ஏண்டா அமெரிக்கா போனியே. அதிபரைப் பார்த்துப் பேசினியா?” “இல்லை.” “ஏன்?” “அவரு போனவாட்டி இந்தியா வந்தப்ப, என்னை வந்து பாத்...