நன்றி பேசும் புதிய சக்தி • ஆகஸ்டு 2022

நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் – பகுதி 10

 


அதிரடி சரவெடி

ஞானவள்ளல்

 

ரட்டைப் புலவர் பாடல் ஒன்றை சில பகுதிகளுக்கு முன் எடுத்துக் காட்டினேன். என்னதான் காலடி பூமி சரிந்தாலும் சமாளிப்பதும் துவளாமல் கடந்து போகிறதும் நம்மாட்களின் இயல்புதான். இரட்டைப் புலவரில் ஒருவர் கண் பார்வை அற்றவர். அவரது ஆடை நீரில் அமிழ்ந்து காணாமல் போகிறது. அதை அடுத்த புலவர் சொல்கிறார். வேஷ்டி காணாமல் போகிற பெரிய இழப்பைச் சமாளித்துக் கொண்டு. என்னடா பொல்லாத வாழ்க்கை, என்கிற அலட்சிய பாவனை கொண்டாடியபடி, அந்த மனுசர் பாட்டில் பதில் சொல்கிறார்.

“இக்கலிங்கம் போனால் என்,

ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை.”

(கலிங்கம் – ஆடை.)

உதை வாங்கிய வடிவேலு “வலிக்கலயே?” என நடிப்பது போல இருக்கிறது கதை.

வெட்டி சவடால் விடுவதில் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்த பாணியில் கிராமத்துத் திண்ணை உரையாடல்கள் ரொம்பப் பிரசித்தம்.

“ஏண்டா அமெரிக்கா போனியே. அதிபரைப் பார்த்துப் பேசினியா?”

“இல்லை.”

“ஏன்?”

“அவரு போனவாட்டி இந்தியா வந்தப்ப, என்னை வந்து பாத்தாரா என்ன? அதனால எனக்கு அவர்மேல கோபம்.”

மைசூர் காட்டில் சிங்கங்களை வேட்டையாடியவன் நான், என்பார்கள். மைசூர் காட்ல ஏதுய்யா சிங்கம், என்று கேட்டால், எப்பிடிய்யா இருக்கும்? அதான் நான் வேட்டியாடிட்டேன்ல?... என்று பதில் வரும்.

சாருக்குச் சொந்த ஊர் இதா?... என்று கேட்டால், இல்லங்க. நமக்கு சொந்தத்ல வீடுதான் இருக்கு, என்பார்கள்.

வாய்ச் சவடால். இடக்குப் பேச்சு. இது கிராமத்து வாடிக்கை.

வீட்டுக்கு வர்ற நபரை, வாங்க வாங்க… என அழைத்தால், வாங்க வாங்க கடன்தான், என்பார்கள்.

ஒரு விஷயம். நீ கேள்விப்பட்டியா?

இல்லங்க. நான் கோவில்பட்டி.

தெருவில் பார்க்கிறாட்களில் புதுச்சட்டை போட்டபடி ஒருத்தன் வந்தால், இவனுக்கும் உற்சாகம். அவனுக்கும் உற்சாகம்.

மாப்ள, சட்டை புதுசா இருக்கே. தீவாளிக்கு எடுத்தியா?

இல்ல. எனக்கு எடுத்தேன்.

இரண்டு பேருக்குமே காயப்படாத சிரிப்பு.

‘கௌரவம்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். நடிகர் நீலுவைப் பார்த்து நாகேஷ் இப்படிக் கேட்பார்.

பத்து வருஷம் முன்னாடி மெட்ராஸை சுத்திப் பாக்கன்னு வந்தீர். இன்னும் திரும்பிப்போக மாட்டேன்றீரேய்யா?

அதற்கு நீலு பதில் சொல்வார்.

நான் என்ன பண்ணட்டும். சிட்டிதான் டே டுடே டெவலப் ஆயிட்டே இருக்கே?

கவிஞர் கண்ணாதாசன் அடிக்கடி கட்சி மாறுவார். அவரைக் கிண்டலாகச் பேசுகிற ஆட்களிடம் “நான் மாறவில்லை. கட்சிதான் தன் கொள்கைகளை மாத்திக்குது. அதான் நான் வெளியே வந்தேன்” என்று பதில் சொல்வாராம்.

கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவில்லை, என்று பெருமை பாராட்டிக் கொள்கிற ஆசாமிகள் இவர்கள்.

போலி பந்தாவுடன் வேட்டியை டப்பா கட்டு கட்டி தலையில் துண்டை கிரீடம் போலக் கட்டியபடி தெனாவெட்டு நடை நடந்து போவார்கள்.

எனக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் கல்யாணம் பாதி முடிஞ்சா மாதிரி.

அதெப்பிடிறா?

எனக்குப் பூரண சம்மதம். அவ சம்மதம் மாத்திரம்தான் பாக்கி…

இந்த பந்தாவில் இன்னொரு ரகமும் உண்டு.

காந்தி கண்ணாடி என்கிட்ட இருக்கு.

இதுவா?

ஆமாம். முதல்ல ஃப்ரேமை மாத்தினேன். அப்புறம் வில்லையை மாத்தினேன். அவ்ளதான்.

அட இதுக்கு மேல கண்ணாடில மாத்த என்ன இருக்கு?

இதேபோல இன்னொரு இடக்கு. எங்க ஊர் திருநெல்வேலிப் பக்கம் சொல்வார்கள்.

மச்சான், ஏகாதசிக்கு நீ எங்க வீட்டுக்கு வா. அடுத்தநாள் துவாதசிக்கு நான் உங்க வீட்டுக்கு வரேன்.

ஏதாதசியன்று விரதம் இருப்பார்கள். அடுத்தநாள் துவாதசிக்கு பெரிய எடுப்பாய்ச் சாப்பிடுவார்கள் – என்பது இதன் உள்குத்து.

“செத்தப்ப எங்க அய்யா இந்த வீட்டை எனக்கு விட்டுப் போனாரு… உங்கய்யா?” அதற்கு சற்றும் சளைக்காதபடி இவன் பதில் சொல்வான். “அட போடா, எங்கய்யா இந்த உலகத்தை விட்டே போனார்!”

இந்த வெட்டி பந்தா மனிதார்களைப் பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.

எங்கப்பா என்னையும் டாக்டர் ஆக்க ஆசைப் பட்டாரு…என்பார்கள். என்ன, சொல்லவே இல்லியே. உங்கப்பா டாக்டா?... என்று கேட்டால். இல்லல்ல, அவரும் ஆசைப்பட்டார். அவ்வளவுதான், என்று பதில்.

எந்தச் சூழலிலும் தன் முட்டாள்தனத்தை அறியாதவர்கள். அறிந்தாலும் ஒத்துக் கொள்ளாதவர்கள்.

GOD IS LOVE. LOVE IS BLIND.

So God is blind – என்று வியாக்கியானம் பேசுவார்கள்.

ஒரு வெளிநாட்டுக்காரன் இந்தியாவுக்கு வந்து சென்னையைச் சுற்றிப் பார்த்தான். பெரிய சாலைகள் தோறும் ஆங்காங்கே பல பெரிய மனிதர்களின் சிலைகளைக் கண்டான். அவனைச் சுற்றிக் காட்டிய ரிக்ஷாக்காரனிடம் “இந்தச் சிலையை வடிவமைத்தது யார்?” என்று கேட்டுக்கொண்டே வந்தான். ரிக்ஷாக்காரனுக்கு எந்தச் சிலை பற்றியும் எதுவும் தெரியாது. “தெர்லங்க சார், தெர்லங்க சார்” என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

தன் ஊரில் போய் அந்த வெளிநாட்டுக்காரன் சொன்னானாம்.

சென்னையில் அநேகச் சிலைகளை ஒரே சிற்பி செய்திருக்கிறார். அவர் பெயர் ‘தெர்லங்க சார்.’

எதுக்கு வெளிநாடு. நம்மூர்க்கார அறிவாளி ஒருத்தனைப் பத்திப் பேசலாம். ரிப்பேராகி நின்றுவிட்ட லாரி ஒன்றைக் கயிறு கட்டி இன்னொரு லாரியால் இழுத்துப் போனார்கள். அதைப் பார்த்துவிட்டு இந்த அறிவாளி சொன்னானாம். “இங்க பாருய்யா, இந்தச் சின்னக் கயிறை எடுத்திட்டுப் போக ரெண்டு லாரி தேவைப் படுது பாரேன்..”

கிராமத்தில் தொலைக்காட்சி பார்த்தபடி கிழவி ஒருத்தி சொன்னாளாம்.

என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தாண்டி. அந்த ஊர்ல வேலைக்காரி கூட இங்கிலீஷ்ல பேசுது.

உலகத்தையே புரிந்து கொள்ளாமல் தன்னை அறிவாளி பாவனைகொண்டு பேசுவார்கள்.

இரவில் ஒருவன் தனது டூ விலரில் போய்க் கொண்டிருந்தான். எதிரே ஒரு லாரி வந்தது. அதன் முன் விளக்கு எரிந்து கொண்டிருந்தாலும் இவன் இரண்டு டூ வீலர்கள் பக்கம் பக்கமாக வருவதாக நினைத்து நடுவில் வண்டியை விட்டான். விபத்தாகி விட்டது.

ஆஸ்பத்திரியில் அவனைப் பார்க்க வந்த ஆட்களிடம் அவன் சொன்னது இதுதான்.

நான் ஒழுங்காதான் போனேன். நடுவால ஒருத்தன்… படுபாவி லைட் போடாம வந்திட்டான்.

கடைசிவரை இவர்கள் தன் பிரச்னை அறியாதவராகவே உதறி எழுந்து போகிறவர்களாக இருக்கிறார்கள்.

மாற்று கருத்து சொன்னால் கேட்டுக்கொள்ள இவர்கள் தயாரில்லை. அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விடுவார்கள்.

கிராமத்துத் திண்ணைகளில் கதைபேச என்று ஒரு கூட்டம் கூடும். காலைமுதல் மாலைவரை சீட்டாட்டம் முதல் வெட்டிப் பொழுது. வாய்க்கு வெற்றிலைக் குதப்பலோடு அதைவிட சுவாரஸ்யமாய் வம்பு. சவடால். எகத்தாளம்.

ஆண்டிகள் நாலுபேர் கூடி மடம் கட்ட என்று திட்டம் போட்டால் என்ன ஆகும்? யாரிட்ட காசு இருக்கிறது. எனக்கு இந்த அறை. உனக்கு அந்த அறை. என் அறையில் இது இதெல்லாம் இருக்கும்… என கனவுப் பேச்சு. பலிக்காத கனவு தானே அது.

அரை வேக்காட்டு யோசனைகள். சில திண்ணைகளில் அன்றைய நாளிதழ், – தினத்தந்தியாக இருக்கலாம், வாசிப்பார்கள். ஒருவர் வாசிக்க, பிறகு அந்தச் செய்தி பற்றிய அரசியல் விமரிசனம் நடக்கும். அரசியல் தலைவர்களுக்கு இங்கிருந்தே யோசனை சொல்வார்கள். இதில் செய்தி பற்றிய கிண்டல்களுக்கும் குறைவு இராது.

“அந்த அரசுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை முறிந்ததJ” என்று ஒருவர் உரக்க செய்தி வாசிக்க, ஒருத்தர் இடைமறித்து “இனிமே அந்தத் தலைவரைச் சந்தித்தால் சட்னு திரும்பி முதுகைக் காட்டிக்குவாங்களோ?” என்று கிண்டல்.

இதில் ஆக அதிரடியான விமரிசனங்களும் வரும்.

திருநெல்வேலியில் முக்கிய பிரமுகர் கைது.

“வயித்து வலின்னு முக்கியிருப்பான். அதுக்கெல்லாம் கைது பண்ணீருவாங்களா?”

இதுல நகைச்சுவை என்று பல அதிரடிகள் பேச்சு வழக்கில் வரும்.

ஆம்பளைங்க வலது கைல வாட்ச் கட்டறாங்க. பெண்கள் இடது கைல வாட்ச் கட்டறாங்க. ஏன்?

நம்மை யோசிக்க வைத்து பின் வெறுப்பேத்துகிற விதமாக “மணி பார்க்கத்தான்” என்று பதில் சொல்வார்கள்.

என் தந்தை எனது குழந்தை வயதில் “வெத்திலைஙுயம் பாக்குமா?” என்று கேள்வி  போடுவார். “பாக்காது” என்று பதில் சொல்ல வேண்டும்.

“தலையணையும் பாயுமா?” என அடுத்த கேள்வி.

சில பெரியவர்கள் உருப்படியாக இப்படி விடுகதைகள் குழந்தைகளிடம் போடுவார்கள்.

காய் ஆனபின் பூ ஆகும் காய் எது?

தேங்காய். அதைத் துருவினால் கிடைப்பது தேங்காய்ப் பூ அல்லவா?

அடுத்த கேள்வி. பழம் ஆனபின் காய் ஆகும் பழம் எது?

எலுமிச்சம் பழம். அதை நறுக்கிதான் ஊறு-‘காய்’ போடுவார்கள்.

கேள்வி பதில் பாணியில் ஆணும் பெண்ணும் மாறி மாறி கேள்வி போட்டு பதில் தரும் வகை ‘கவ்வாலி’ வகைப் பாடல் ஒன்று. யார் எழுதியது தெரியவில்லை. கண்ணதாசனாக இருக்கலாம். அது கிராமத்தில் வழங்கும் ஒரு கேள்விதான்.

அக்காளை ஒருவனும், அப்பாவை ஒருத்தியும் மணம் செய்துகொள்ள முடியுமா?

முடியும், என்று ஒரு பதில் சொல்வார்கள். அக் ‘காளை’ ஒருவனும், அப் ‘பாவை’ ஒருத்தியும் திருமணம் செய்து கொள்ளத் தடையேது?

சவடால்தனமோ, அதிரடி பதிலோ, கிண்டலோ.. மனதின் உற்சாகத்தை வெளிப்படுத்துவதை மறுக்க முடியாது. நமது மொழியிலேயே, நமது கலாச்சாரத்திலேயே கதைகளும் கிளைக்கதைகளுமான ராமாயண, மகாபாரத காவியங்கள் உண்டு. கற்பனையின் உச்சம் தொட்ட கற்பனைகள் அவை. இவற்றை விஸ்தரித்து கதாகாலட்சேபங்கள், உரைகள்… அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷங்கள் அல்லவா? நமது ஆன்மிக குருநாதர்கள் சொல்லும் குட்டிக் கதைகள் மிக சுவாரஸ்யமானவை. கருத்துத் தெறிப்புகள் கொண்டவை.

கிராமத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு வேடிக்கைக் கதை நினைவு வருகிறது.

எச்சில் கையால் காக்காய் ஓட்டாத ஒரு கஞ்சன். அவன் நிறையப் பணம் சேர்த்து வைத்திருந்தான். தான்கூட சாப்பிடாமல் பெரும் பணம் சேர்த்திருந்தான். அது திருடு போய்விடுமோ என்று பயம் இருந்தது. அதை வீட்டில் வைத்துக்கொள்ள பயமாய் இருந்தது அவனுக்கு.

அவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. இரவில் ஊர் அடங்கியதும் யாரும் அறியாமல் அவன் தோட்டத்துக்குப் போய் அத்தனை பணத்தையும் ஒரு மூட்டையாக்கிப் புதைத்து விட்டு வந்தான். பத்துநாளுக்கு ஒருதரம் ஒருவரும் அறியாமல் தோட்டத்துக்குப் போய் அந்தப் புதையலைத் தோண்டி யெடுத்து பணம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான்.

ஒருநாள் அப்படித் தோட்டத்துக்குப் போய்ப் பார்த்தபோது அந்தப் புதையல் தோண்டப் பட்டிருந்தது. பணம் இல்லை. அங்கேயே உட்கார்ந்து ஓவென்று அழுதான்.

வழியில் போன யாரோ வந்து அவனிடம் என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். என் பணம்… என் பணம்… அத்தனையும் போய்விட்டது, என்று அழுதான் அவன்.

அப்போது அந்த மனிதன் அவனை ஆறுதல படுத்தினான். “கவலைப்படாதே. உன் பணம் அங்கேயேதான் இருக்கு.” எங்க, எங்க… என அவன் பரபரப்பாய்க் கேட்டான்.

“அந்தப் பணம் கிடைச்சால் நீ அதைச் செலவழிக்கப் போறியா?”

“இல்லை. பத்திரமா வெச்சிக்குவேன்.”

“அதான் சொல்றென். அது உன்கிட்ட இருந்தா என்ன, தொலைஞ்சி போனா என்ன? உனக்கு நஷ்டம் இல்லை…” என்றுவிட்டுப் போனானாம் அந்த மனிதன்.

எத்தனை அதிர்ஷ்டம் வந்தாலும், வசதி வந்தாலும் அதை அனுபவிக்க அறிவு பேண்டும். தமிழில் வேடிக்கையாய் ஒரு பழமொழி உண்டு.

பிச்சைக்காரன் கனவில் கடவுள் வந்தாலும், அவன் தங்கத்தில் ‘திருவோடு’ கேப்பானாம்.

பழமொழி என்றும் குட்டிக்கதைகள் என்றும் நம்ம மனிதர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பேன். புராண காலத்தில் இருந்து எத்தனை விதவிதமான கற்பனைகள்… 

மண்ணைத் தின்ற கண்ணனின் வாயைத் திறக்கச் சொல்லி யசோதா அவனது வாய்க்குள் முழு பூமியையும் பார்த்தாளாம்.

கிருஷ்ணன் அங்கே இங்கே திரிகிறான் என்று தாய் அவனை உரலில் கட்டிப் போடுகிறாள். கிருஷ்ணனைக் கொல்ல இரு அரக்கியர்கள் மரமாக நின்று கிருஷ்ணன் தவழ்ந்து வரும் வழியில் காத்திருக்கிறார்கள். இதை அறிந்த கிருஷ்ணன் உரலை இழுத்துக் கொண்டு அந்த இரு மரங்களின் நடுவே புகுந்து போகிறான். உரல் இரு மரங்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு, கிருஷ்ணன் இழுக்க அந்த மரங்கள் சரிந்து விழுகின்றன.

தன்னைத் தூக்கிப் பால் கொடுத்த அரக்கியிடம் பால் குடிப்பது போல உயிரையே உறிஞ்சி விடுகிறான் கண்ணன்.

எத்தனை விதமான கற்பனைகள்.

அதன் உச்சம் அல்லவா இரண்யகசிபு அழிந்த கதை.

பிரம்மாவை நோக்கித் தவம் இருந்த இரண்யன் மிக அரிதான வரம் ஒன்றைப் பெறுகிறான்.

தனக்கு மனிதர்களாலோ மிருகங்களாலோ பறவைகளாலோ, பகலிலோ இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, உயிர் உள்ள அல்லது உயிர் அற்ற எதனாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது!

எத்தனை சாமர்த்தியமான வரம். இத்தனைக்கும் பிறகு அவனது மரணம் சம்பவிக்கிறது.

விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்கிறார். மனித உடல் ஆனால் சிம்மத்தின் தலை கொண்ட அவதாரம். பகலுமற்ற இரவுமற்ற அந்தி நேரம் அவன் சம்கரிக்கப் படுகிறான். வீட்டின் உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வீட்டு நிலைவாசல் படியில் அவனை வதம் செய்கிறார் கடவுள். தன் விரல் நகங்களால் அவனைக் கீறி அவனை மாய்க்கிறார். நகம் உயிர் உள்ள பொருளா உயிர் அற்ற பொருளா, என்று எப்படி முடிவு செய்ய முடியும்.

இத்தனை காத்திரமான கதைக் கட்டமைப்பு நம் பெருமை அல்லவா?

•••

 

Comments

Popular posts from this blog